உனக்கும் எனக்கும்:எட்டு கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

நட்சத்ரன்


1.

நீயும் நானும்

வெறும் விசிறிகளாயிருக்கிறோம்:

நம்மால்

உண்டாக்கமுடிவதில்லை

ஒரு

புயலை.

2.

உனக்குள் என்னையும்

எனக்குள் உன்னையுமாக

தேடித்திரிகிறோம்-

நம்மை நாம் தொலைத்துவிட்டு.

3.

எந்த க்ஷணத்தில்

எங்கு தொலைகிறோம்

சுவடுகள் ஏதுமற்று-

நீயும் நானும் ?

4.

ஒழுங்காக்கிச்

சிதறடிப்போம்

நம் சூதாட்டக் காய்களை,

மீண்டும் ஒழுங்காக்க!

5.

நீ என்னையும்

நான் உன்னையுமாக

சதா புசித்துக்கொண்டிருக்கிறோம்

நம்

ஆதிப்பசிதீர்க்க.

6.

அவரவர் கண்ணாடியில்

அவரவர் முகம்

அவரவர்க்கு அழகாய்.

7.

என் கவிதை உனக்கும்

உன் கவிதை எனக்கும்

புரிந்துவிடும்-

உன் பிம்பம் எனக்கும்,

என் பிம்பம் உனக்கும்

புரிந்தபிறகு.

8.

யுகங்களையுண்டு

நிச்சலனமாய்க் கிடக்குது

உனக்கும் எனக்குமான

விஷக்கேணி-

நம்மை விழுங்க.

***

natchatran@yahoo.com

Series Navigation

நட்சத்ரன்

நட்சத்ரன்