இருப்பினைப் பருகும் மொழி

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

தேனு



நான் நானாக இருப்பதில்லை..
உணர்வுச் செதில்களில்
உதிரத்தின் சுவை
நிரம்பிடும் வேளைகளில்
நான் மறக்கப்படுகிறேன்..

மிச்சம் வைத்திருக்கும்
சுவை நரம்புகள்
பசியின் எச்சிலை
திரட்டி விழுங்கத்
துவங்கி விட்டன..

எண்ணச் சாளரங்கள் வழி
உட்புகுத்த சதைபடிந்த
கூரிய நகங்கள்
மட்டுமே இருக்க என்னை மீறிய
ஒரு தாகத்தில் தத்தளிக்கிறேன்..

பின்னிருந்து என் கழுத்து
இழுக்கப்படுவதாய்
சந்தேகித்து உணர்வதற்குள்
கொல்லப்படுகிறேன் நான்..

என் சடலம் முன்னமர்ந்து கோடரியுடன்
விம்மி அழுபவளை
ஒன்றும் செய்யாதீர்கள்…
அவள் பெயர் தமிழ்..
சில சமயங்களில் நான்
நானாக இருப்பதில்லை..

– தேனு

Series Navigation

தேனு

தேனு