இந்திவாலா மட்டும்தான் இந்தியனா ?

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

ஜோதிர்லதா கிரிஜா


‘நாம் அனைவரும் இந்தியர்கள் ‘ எனும் பரந்த பார்வை தமிழர்க்கு என்று வருகிறதோ அன்றுதான் ஒரு தமிழன் இந்தியாவின் பிரதம மந்திரியாவதற்குரிய வாய்ப்பு

வரும் என்பதைச் சாரமாய்க்கொண்டு எழுதப்பட்ட கட்டுரை யொன்றை வெகு நாள் முன்பு ஒரு நாளிதழில் படிக்கவாய்த்தது.

‘தேசிய நோக்கு ‘ என்பது என்ன ? குறிப்பிட்ட ஒரு மொழியை மட்டும் அரியணையில் ஏற்றிக் கவுரவிப்பதன்று. 1981 ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களின் விழுக்காடு 22.5 மட்டுமே. (உருது பேசுகிறவர்களையும் கணக்கில் சேர்த்தால் இது 24.5 ஆக உயர்கிறது. ஆனால், உருது மொழியின் எழுத்து – லிபி – அறவே வித்தியாசமானது. பேசப்படும் உருதுவுக்கும் பேசப்படும் இந்திக்கும் ஒற்றுமையுண்டு என்பது தவிர இவ்விரு மொழிகளுக்குமிடையே ‘ஸ்நாப் பிராப்தி ‘ கூட இல்லை.)இந்த இருபத்துச் சொச்ச ஆண்டுகளில் இந்த விழுக்காட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் விளைந்திருக்கப் போவதில்லை. எனவே, கால்வாசி மக்கள் பேசுகின்ற ஒரு மொழியை மீதமுள்ள முக்கால்வாசிப்பேர் மீது திணிக்கப் பார்க்கிற – மறைமுக நடவடிக்கைகளால் திணித்தும் வருகிற – இந்திக்காரர்களுக்குத் தேசியப் பார்வை கொஞ்சமேனும் இருக்கிறதா என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா ? இந்தியா எனும் இந்தப் பரந்த நாடு இந்தியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களுக்கு மட்டுமே சொந்தமானதா!

அந்த நாளில் சேலம் விஜயராகவாச்சாரியார் கங்கிரஸ் பேரவையின் தலைவரானது அவரது இந்தி அறிவினாலா ? இல்லையே. இத்தியப் பிரதமர் பதவி அமரர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களைத் தேடி வந்ததும் இந்தியால் அன்றே! இந்தத் தலைவர்கள் கொண்டிருந்த தேசிய உணர்வினாலன்றோ! அந்தக் காலத்து வட இந்தியக் காங்கிரஸ்காரர்களுக்கும் தேசியப் பார்வை இருந்ததால்தான் இது சாத்தியமாயிற்று. ஆனால், தமிழர்களில் ஒரு சாரார் பிரிவினை வாதத்தைக் கிளப்பியதால்தான், வட இந்தியா தமிழ்நாட்டைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கிய தென்பது உண்மையே யானாலும் கூட, இந்திக்காரர்களின் மொழிவெறியும் மறைமுக மொழித்திணிப்புச் செயல்களும் இந்தச் சீர்கேட்டை மேலும் தீவிரப்படுத்தாவே முற்பட்டுள்ளன என்பதில் என்ன சந்தேகம் ?

யூ.பி.எஸ்.சி. (Union Public Service Commission) தேர்வுகளை ஆங்கிலம் தவிர இந்தியிலும் (இந்தியில் மட்டும்) எழுதலாமென்று இந்திக்காரரளுக்கு மட்டும் ஆதரவாகவும் ஆதாயமாகவும் சட்டம் கொண்டுவந்தது தேசியப் பார்வையா! அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இந்த வசதி செய்துகொடுக்கப் படுவதன்றோ தேசியப் பார்வை! செப்பு மொழி பதினெட்டு இருப்பினும் சிந்தனை மட்டும் ஒன்றாக இருக்கவேண்டுமாயின் அது இந்தியின் வாயிலாக மட்டும்தான் சாாத்தியம் என்பதில் என்ன தேசிய நோக்கு இருக்க முடியும் ? இது அகில இந்தியப் பார்வை யன்று. அகில இந்திப் பார்வை!

ஒரு நாட்டில், அதன் மொழிதான் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் எனும் ஆசை இயல்பானதுதான்; நியாயமானதும்தான். ஆனால் பதினான்கு தலையாய மொழிகளும், பத்து லட்சத்துக்கு மேல் இருபது லட்சத்துக்கு உட்பட்டவர்கள் பேசும் பத்தொன்பது மொழிகளும் (இவை தவிர சிறு சிறு எண்ணிக்கையினர் பேசும் பல்வேறு மொழிகளும்) புழக்கத்தில் உள்ள இந்தியாவில் 22.5% மக்களே பேசுகின்ற மொழிக்கு மட்டும் அந்த அந்தஸ்தை அளிப்பது சரிதானா ?

இந்தி மொழித்திணிப்பு என்பது ஓர் அநியாயம் என்பதைத் தமிழகத்துக் காங்கிரஸ்காரர்களே கூட அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளனர். வட இந்தியக் காங்கிரஸ் அரசியல்வாதிகள் இந்தி அரியணை ஏறுதல் அநீதி என்று இந்தி பேசும் வடநாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டியதே நியாயமாகும். எந்த நாட்டிலும் மக்கள் நல்லவர்களே. இந்த அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தான் அவர்களை உசுப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா என்பதாய் ஒரு நாடு எப்பொழுது ஏற்பட்டது ? வெள்ளைக்காரனின் ஆட்சிக்குப் பிறகுதானே ? அகில இந்தியாவும் ஒருங்கிணைய வழி வகுத்தது ஆங்கிலமே யன்றோ! ‘இந்தியம் ‘ என்பதைவிடவும், ‘உலகியம் ‘ அதிக உன்னதமும் சிறப்பும் வாய்ந்தது. ஆங்கிலம் இன்று அனைத்துலக இணைப்புமொழி என்னும் அந்தஸ்தைப் பெற்றுள்ள நிலையில் ‘ஆங்கிலோ-இந்தியர் ‘ எனும் இந்திய மக்களின் தாய்மொழி என்கிற முறையில் அதனையும் தேசிய மொழிகளுள் ஒன்றாக ஏற்றுக்கொள்ளுதலே சரி. (இந்தக் கருத்தை ராஜாஜி கூறியுள்ளார்.) எனவே, இன்றளவும் நம் நாட்டை இணைத்து வந்துள்ள ஆங்கிலமே என்றென்றும் ஆட்சி (இணைப்பு) மொழியாகத் தொடர்தல் ஒன்றே அனைத்து மொழியினர்க்கும் நியாயம் வழங்கும் ஏற்பாடாக இருக்க முடியும். இதற்கு ஈடான மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. கவிஞர் கண்ணதாசன், மகாகவி பாரதியார், தந்தை பெரியார், கல்கி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், இவர்கள் அனைவருமே நொபேல் பரிசைப் (Nobel prize) பெற்றிருந்திருப்பார்கள்

தானே ?

ஆங்கிலேயரின் ஆட்சியால் என்ன தீங்குகள் விளைந்திருப்பினும், அதனால் நாம் அடைந்த பெரும்பேறு ஆங்கிலமொழியறிவாகும். ஆங்கிலத்தின் உதவியின்றி விஞ்ஞானத்தில் முன்னேறியுள்ள ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் கூட இப்போது ஆங்கிலத்தின் தேவையை உணர்ந்து அந்நாட்டு மக்கள் அதைக் கற்கத் தொடங்கியுள்ள நிலையில் நாம் அதைப் புறக்கணிக்க முயல்வது வடிகட்டின அசட்டுத்தனமேயாகும். வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுவது போன்றதுதான். பல்வேறு துறைகளிலும் உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தப்போகிற ஆங்கிலத்தை நாம் அந்நியர் பால் வெறுப்பு எனும் முட்டாள்தனத்தால் -அல்லது தன்மொழியின்பாற்பட்ட வெறி என்பதால் – இழந்துவிடலாகாது.

இந்தியை வேறு காரணங்களுக்காகக் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படின், எந்த மாநிலத்து மக்களும் தாங்களாகவே அதைக் கற்பார்கள். திணிக்கவேண்டிய தேவை இருக்காது. இந்தியின் வளர்ச்சிக்காகக் கோடிக் கணக்கில் செலவு செய்துவரும் மைய அரசு இதைப் புரிந்துகொள்ளவேண்டும். மைய அரசு இலாகாக்களில் பணி புரிந்தவர்கள் இந்தியின் பொருட்டு நம் அரசு எத்தனை கோடிகளை வீணாக்குகிறது என்பதை நன்கு அறிவார்கள். அரசு வெளியிடும் அத்தனை சுற்றறிக்கைகளும் ஆங்கிலத்தில் மட்டுமுன்றி இந்தியிலும் அச்சடிக்கப் படுகின்றன. ஆங்கிலத்தில் ஒரு பக்கத்துள் அடங்கும் விஷயம் இந்தியில் அடங்க இரண்டு பக்கங்கள் தேவைப்படுகின்றன. எவ்வளவு எழுது பொருள்கள் வீணடிக்கப் படுகின்றன! இவற்றை யார் படிக்கிறார்கள்! அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பல இருக்க, இந்திக்கு மட்டும் இத்தகைய முக்கியத்துவம் அளித்து அரசுப் பணத்தை எந்தப் பயனும் இன்றி வீணடித்தல் முறையா ? இது ஓரவஞ்சனைதானே ?

‘இந்தியை எதிர்ப்பவர்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் ‘ என்னும் தவறான கருத்திலிருந்து வடநாட்டவரை விடுவித்தல் அரசியல் தலைவர்களின் கடமை. இந்தி அரியணை ஏறுவதன் நியாயமின்மையையும், ஆங்கிலத்தின் இன்றியமையாமையையும் வடநாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டியதும் அரசியல்வாதிகளின் கடமையாகும். 22.5% மக்களின் மொழியை 77.5% மக்களின் மீது திணித்தல் முறையன்று என்பதையும், 100% மக்களுமே ஆங்கிலத்தில் பயிற்சி பெறுவதே எல்லாருக்கும் நியாயம் வழங்கத்தக்க நிலை என்பதையும் எடுத்துச் சொல்லுகிற விதமாக எடுத்துச் சொன்னால், மக்கள் புரிந்துகொள்ளுவார்கள். மொழிவெறி, மதவெறி ஆகியவை யற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள்தான் இதைச் செய்ய வேண்டும். இந்தியா உடையாமல் இருக்க வேண்டுமானால், அது இவர்கள் கைகளில்தான் இருக்கிறது.

‘நான் இந்தியன், நான் இந்தியன் ‘ என்று ஒவ்வொரு தமிழனும் நினைக்க வேண்டும்தான். இந்திக்காரர்களும், ‘ இந்தியர்கள் என்போர் இந்திக்காரர்கள் மட்டும் அல்லர். இந்தியாவிலுள்ள பிற மொழிக்காரர்களும் கூடத்தான் ‘ என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும் என்பது அதைவிட அதிக முக்கியமானது!

முரசொலி மாறன் சொன்னதுபோல் ஆங்கிலம் சரஸ்வதி தேவியின் அருட்கொடை! அதை நமது முட்டாள்தனத்தால் நாம் பறிகொடுத்துவிடலாகாது!

*********

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா