எஸ் ஜெயலட்சுமி
மார்கழி மாதத்திற்கே உரிய குளிரும் வெயிலுமாக இருந்தது. அம்மாவும் நானும் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் படுத்திருந்தோம். போன் மணி ஒலித்தது. அம்மா தான் எடுத்தாள்.”யார் என்று கேட்டேன்.”ராஜத்தின் பிள்ளை குமார், சித்தி இருக்காளான்னு கேட்டான். இருக்கான்னு சொன்னேன். அதுக்குள்ள, ‘’இன்னொரு கால் வரது அப்பறம் பேசறேன்னு சொல்லி போனைவெச்சுட்டான்” சொல்லி விட்டு அம்மா பாத்ரூம் போய் விட்டாள். குமார் எதுக்காகக் கூப்பிட்டானோ தெரியலையே, சரி, அவனே கூப்பிடட்டும் என்று காத்திருந்தேன்.
குமாருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தனியார் கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவாக இருக்கிறான். பொறுப்பான பையன் அவனுடைய திறமையால் கம்பெனியில் நல்ல பெயர்.அவனுடைய நல்ல பெயரால் நாலைந்து பையன்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறான். நிதானமும் பொறுமையும் அதிகம். இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு பொறுப்பும் பொறுமையும்
விவேகமும் இருப்பதைப்பார்த்து நானே ஆச்சர்யப்படுவேன். ‘’இவனுடைய நல்ல குணத்துக்கு ஏத்தபொண் வரணுமே என்று அம்மாவும் நானும் பேசிக்கொள்வோம்.’’குமார் யார் என்று சொல்லவேயில்லையே? என் ஒன்றுவிட்ட அக்கா பையன். என் பெரியப்பாவின் பெண் வயிற்றுப் பேரன். என் அப்பாவின் சதாபிஷேகத்திற்கு என் சகோதரர்கள் வருமுன் அவ்வளவு எற்பாடுகளையும் அவனே பார்த்துப் பர்த்துச் செய்தான். இன்னொரு அக்காவின் மூன்று பெண்கள் கல்யாணங்களையும் அவனும் அவனுடைய நண்பர்களுமாக ஜமாய்த்து விட்டார்கள். சமையல் காரர்கள் முதல் சம்பந்திகள் வரை எல்லோரையும்
நன்கு கவனித்துத் தேவையானால் பறிமாறவும் செய்தான். ‘சித்தி, இனிமேல் நாமே கல்யாண காண்டிராக்ட் எடுத்துக் கலக்கி விடலாம் என்பான். எல்லா விஷயங்களும் அவனுக்கு அத்துபடி. இப்ப எதுக்குக் கூப்பிட்டானோ தெரியலையே, என்று யோசிப்பதற்குள் மறுபடியும் போன் ஒலித்தது.குமார் தான்.
”சித்தி நான் குமார் பேசறேன். பெரிய சித்திகிட்ட சொல்ல வேண்டாங்கறதனால அப்ப சொல்லலை. அம்மா போயிட்டா ‘’ என்றான். ‘’என்னடா குமார்? எப்படி,?எப்படி? எப்போ? என்று பதறினேன். மத்யானம் தான். என்னன்னு எங்களுக்கே ஒண்ணும் புரியலை. ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணிண்டே யிருக்கேன்.” என்றான். அதற்குள் அம்மா,” என்னடி, என்னது, என்றாள்.” குமார் நாங்கள் வருகிறோம் என்று போனை வைத்துவிட்டேன்.அம்மாவிடம் மெதுவாக விஷயத்தைச் சொன்னேன். ”என்ன அநியாயமா இருக்கு. வயசானவா நாங்கள்ளாம் குத்துக்கல் மாதிரியிருக்க சின்னக் குழந்தைகளெல்லாம் போறாளே என்று அம்மா அழ ஆரம்பித்தாள். அம்மா போட்டு வைத்திருந்த காபியைக் குடித்து விட்டு உடனே நாங்கள் இருவரும் கல்லிடைக் குரிச்சிக்குப் புறப்பட்டோம். நான் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தேன். அம்மா வழியெல்லாம் புலாம்பிக் கொண்டே யிருந்தாள். கட்டுப் படுத்த முடியாமல் பொங்கி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே யிருந்தாள். ‘’ஆலமரம் போல அவ்வளவு பேரையும் தாங்கினாளே என்று புலம்பிக் கொண்டேயிருந்தாள்.
அம்மா ராஜத்தை ஆலமரம் என்று சொன்னது எவ்வளவு பொருத்தமான வார்த்தை? நான் யோசிக்க ஆரம்பித்தேன். ராஜம் என் அக்கா மட்டுமல்ல. என் க்ளாஸ்மேட்டும் கூட.பெரியப்பா இருந்த கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லை என்பதால் ராஜம் எங்கள் வீட்டிலிருந்து படிக்க வந்தாள். நானும் அவளும் ஒரே வகுப்பு. நாங்கள் இருவரும் ஒன்றாக ஆத்தங்கரைக்குப் போவோம்.
குடத்தைக் கவிழ்த்துப்போட்டுக் கொண்டு நீச்சல் அடிப்போம். சாயங்காலம் ஸ்கூலிலிருந்து வந்து கோவில் கிணற்றிலிருந்து குடிக்கத் தண்ணீர் குடத்தில் கொண்டு வருவோம். ராஜம் நன்றாகக் கோலம் போடுவாள். ரெட்டை இழைக் கோலம் போட அவள் தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தாள்.
ராஜம் என்னை விட நல்ல கலராக இருப்பாள். டார்க் கலர்
சட்டை போட்டுக் கொண்டால் அவளுக்கு ரொம்ப எடுப்பாக இருக்கும். அம்மா எங்கள் இருவருக்கும் தாழம்பூ வைத்து தைத்து விடுவாள். அவளுக்கு தலைமயிர் நீளமாகயிருக்கும். எனக்கோ குட்டை முடி.சுருட்டையாக இருக்கும். எனக்கு சவுரி வைத்தால் தான் தலைமுடி நீளும்.அவளைப் போல் நீளமாக இல்லையே
என்று எனக்கு ஏக்கமாக இருக்கும். பரீ¨க்ஷகள் முடிந்து லீவு விட்டதும் நானும் அவளுடன் சேர்ந்து பெரியப்பா ஊருக்குப் போவேன்.பெரியப்பா வீட்டிற்குப் பின்னால் தாமிரபரணி ஆறு. அங்கே குளிக்கப் போனால் நேரம் போவதே தெரியாது. சாயங்காலம் சாதம் பிசைந்து ஒரு கும்பாக் கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு போவோம். ஆத்தங்கரைப் படியில் உட்கார்ந்து கால்களைத் தன்ணீரில் நனைத்துக்
கொண்டு சாப்பிடுவோம். அவள் எங்கள் வீட்டில் இருந்த நாட்கள் என்றுமே மறக்க முடியாதவை!
நாங்கள் பெரியவர்கள் ஆன பிறகும் கூட எங்கள் குழந்தை களிடம். அந்த நாட்களைப் பற்றிச் சொல்லிச்சொல்லி அனுபவித்திருக்கிறோம். ராஜத்தின் அண்ணாவுக்குக் கல்யாணம் ஆனதும் அவள் அவனுடனிருந்து படிக்கச் சென்று விட்டாள். அவள் போன பின் வெகு நாட்கள் வரை அவளில்லாமல்
எப்படியோ இருந்தது. பள்ளியிறுதிப் படிப்பு முடிந்தவுடனேயே ராஜத்திற்குத் திருமணம் ! நெருங்கிய உறவிலேயே மாப்பிள்ளை.மாமியார் இல்லை. மாமனாருக்கும் உடல் நிலை சரியில்லை. வயதான பாட்டி வேறு. கல்யாணமாக வேண்டிய ஒரு நாத்தனார். வீட்டை நிர்வாகம் செய்ய ஒரு நல்ல பெண் வேண்டும் என்பதற்காகவே மாப்பிளை வீட்டிலிருந்து வலிய வந்து பெண் கேட்டுத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பை ராஜம் நன்கு நிறைவேற்றி
னாள். நாத்தனாரின் கல்யாணம் நன்கு நடந்தது. அவளுக்கு மூன்று பிரசவங்களும் பார்த்து அனுப்பினாள். அதற்குள் ராஜத்திற்கும் நாலு குழந்தைகள் ஆகியிருந்தது.
வயதான பாட்டியின் காலமும் கழிந்தது. மாமனார் டிமென்ஷியா என்ற நோயால் பாதிக்கப்பட்டதால் வெளியே போனால் வீட்டிற்கு வரத்தெரியாமல் திண்டாடுவார். அவரையும் எப்படியோ கடைசிக் காலம் வரை காப்பாற்றி விட்டாள்.
ராஜத்தின் கணவருக்கு மாற்றலாகிவிடவே அவர்கள் மதுரை போய் விட்டார்கள். கல்லிடைக்குறிச்சி வந்துவிடவே என் நினைவுகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு நனவுலகத்திற்கு வந்தேன். ராஜத்தின் வீட்டு வாசலில் ஒரே கூட்டம். மதுரையிலிருந்து வந்தபின் கடந்த இருபது வருஷங்களாக அங்கே இருப்பதால் நிறையப் பெண்கள் கூடியிருந்தார்கள்.அவர்கள்
பேசிக் கொண்டதிலிருந்து ராஜம் அந்த ஊர்ப்பெண்களுக்கு எவ்வளவு தூரம் உதவி செய்திருக்கிறாள் என்று தெரிய வந்தது. ஒரு மாமி சொல்லிக் கொண்டிருந்தாள், ”தனக்கு,வயசான ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கும் போது அக்கா பொண்ணுக்குத் தன்வீட்டு வாசலிலேயே பந்தல் போட்டுக் கல்யாணம் பண்ண எத்தன பேருக்கு மனசு வரும்? ராஜம் மாமியப்போல யாரு செய்வா?”என்று
அழுதாள். அதைக் கேட்டதும் அந்த அக்கா பாலா, ”எம்பொண்ணுக்கு எப்படி யெல்லாம் பாத்துப் பாத்துக் கல்யாணம் பண்ணினே. நா ஒனக்கு ஒண்ணுமே பண்ணலியே. என்று குமுறிக் குமுறி அழுதாள். குமாரின் நண்பர்கள் பலரும் ”மாமீ, மாமி, எங்களுக்கெல்லாம் இனிமே யாரு மொகம் பார்த்துச் சாப்பாடு போடுவா? காபி,குடிக்கிறயா? டிபன் சாப்பிடறயான்னு யாரு கேக்கப் போறா?”என்று
அழுதார்கள்.
‘’சித்திக்கு உதவிக்கு யாரும் இல்லைனு, மாமி தான் கண் ஆபரேஷன் செஞ்சு கூட்டிண்டு வந்து ஒரு மாசமா இங்க ஆத்திலவெச்சுப் பாத்துண்டா. நான் தான் அடுத்தாத்தில இருந்து பார்த்திருக்கிறேனே என்றாள் ஒருத்தி. இன்னொருத்தி.”தெருவிலே யார் வீட்டிலேயும் கல்யாணம் என்றாலும்
பிரசவம் என்றாலும் சாவு என்றாலும் மாமியின் பங்கு இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது என்றாள். மாமாவுக்கும்,உடம்பு சரியில்லாமல் போனபோதெல்லாம் மாமி கொஞ்சமா அலஞ்சிருக்கா என்றும் பேசிக் கொண்டார்கள்.
அவர்கள் சொன்னது உண்மை தான். ராஜத்தின் கணவர் ஷ¤கர் பேஷண்ட். முதலில் அவர் காலில் தான் பிரச்சனை ஆரம்பித்தது. ஒரு காலில் நாலு விரல்களையும் எடுக்கும் படி ஆச்சு. ஷ¤கர் பேஷண்டுக்கு காலில் பிரச்சனை வந்தாலே கஷ்டம் தானே? காரட்டில் அழுகல் வந்து விட்டால் வெட்ட வெட்ட அழுகல் உள்ளே போவது போல் கொஞ்சம் கொஞ்சமாக காலை மேலே
மேலே எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது. ஒவ்வொரு தடவையும் நாள் கணக்கிலும் மாசக் கணக்கிலும் ஆஸ்பத்திரி வாசம். அலைச்சல் பணச்செலவு! பணம் தண்ணீராகச் செலவழிந்ததே தவிர அவர் முழங்கால்வரை எடுத்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம். செயற்கைக் கால் பொருத்தினார்கள். இதற்கு நடுவில் பெண்ணுக்குக் கல்யாணம், பையனுக்குக் கல்யாணம் வேறு. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னால் ராஜத்தைப் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனேன்.
அவளுடைய தாழம்பூ நிறம்எங்கே? முகமெல்லாம் திட்டுத்திட்டா கறுப்பாக யிருந்தது. ஒட்டி உலர்ந்து போயிருந்தாள். உள்ளங்கையெல்லாம் கூட கருப்பாக இருந்தது ”என்ன ராஜம்? அடயாளமே தெரியலையே? ஒன் கலரெல்லாம் எங்க போச்சு?என்ன பிரச்சனை? டாக்டரிடம் காட்டக் கூடாதா? என்று கேட்டேன்.
டாக்டர் வீட்டுக்குத்தான் படையெடுத்துண்டே இருக்கேனே.! என்னவோ தெரியலை அடிக்கடி வயித்துவலி வரது. ரொம்ப டயர்டா இருக்கு” என்றாள். அவள் சொல்வதும் வாஸ்தவம் தான். எப்பவும் ஆஸ்பத்திரி வாசம் என்றால் யாருக்குமே அலுப்பாகத்தான் இருக்கும். ‘’ஆனா அப்படி விட்டு விட முடியுமா? நீ ஒன் ஒடம்ப பாத்துண்டாத் தானே ஒங்கொழந்தைகளையும் அத்திம்பேபேரையும் கவனிக்க முடியும்? என்று உரிமையுடன் கடிந்து கொண்டேன்.ஆனால் நான் சொன்னபடி அவளால் தன்னை கனித்துக் கொள்ள முடியவில்லை.அவள் கணவர் ஷங்கருக்கு ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே யிருந்ததால் தன்னைக் கவனித்து சரியான சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் போய் விட்டது. ஒரு வாரமாக உடம்பு ரொம்பவே முடியாமல் ஆகி விட்டதாம்
‘’ சங்கரா, இப்படி மோசம் பண்ணிட்டுப் போயிட்டாளேடா? என்று அம்மா போய் அத்திபேரிடம் அழுதாள். குமாரிடம் நின்று கூடப் பேச முடியவில்லை எங்களைக் கண்டதும் ஹோவென்று அழுதான். நான் அம்மாவ சரியா கவனிக்காம விட்டுட்டேனோ சித்தி?” என்று அழுதான். பாவம்,
அவன் தான் தன்னுடைய தாத்தா, சின்னத்தாத்தா, அத்தைப் பாட்டி என்று எத்தனை பேர்களைக் கூட்டிக் கொண்டு போய் அவர்களுக்கு கண் ஆபரேஷன், ஹெர்னியா ஆபரேஷன் எல்லாம் செய்து நல்ல படியாக அவர்களை அனுப்பி வைத்திருக் கிறான்! ஏன்? சமீபத்தில் கூட அவன் அக்கா மாமனார் மாமியார் இருவரையும் சென்னைக்குக் கூட்டிக் கொண்டு போய் அப்பல்லோவில் போய் காட்டி விட்டு வந்தானே! அம்மாவை கனிக்காமல் விட்டு விட்டோமோ என்ற ஆதங்கம். ராஜத்தைச் சுற்றி எத்தனை
மாலைகள்! ”மவராசி, பூவும் பொட்டுமா போயிட்டாங்களே என்று பால்காரி வந்து பெரிய குரலில் அழுதாள். வீட்டு வேலை செய்பவள் ”யம்மா இந்தப் புள்ளங்களையும் ஐயாவையும் யாரு பாத்துக்கப் போறாங்களோ தெரியலயே?” என்று ஓலமிட்டாள். திடீரென்று வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்றதும் எல்லோர் கவனமும் அங்கு திரும்பியது.
‘’ எல்லாரும் கொஞ்சம் தள்ளிப் போங்கள்’’, என்று
சொல்லிக் கொண்டே டாக்டர்கள் வந்தார்கள். அரவிந்த் கண் ஆஸ்பத்திரி யிலிருந்து டாக்டர்கள் வந்திருந்தனர். அத்திம்பேர் சொன்னார். ராஜம் எற்கெனவே சொல்லியிருந்தாளாம். நம்மால் முடிந்த வரையில் அடுத்தவாளுக்கு உதவணும். அவளோட சித்தி சித்தப்பாவுக்கு கண் ஆபரேஷன் நடந்த போதே அவளுக்குத் தோன்றியதாம். தன்னுடைய கண்களையும் தானம் செய்ய வேண்டுமென்று. குமார்
தான் ஞாபகமாக போன் பண்ணி அவர்களை வரச்சொன்னான்”என்றார்.
ஒரு ஆலமரம் வீழ்ந்தாலும் அதன் விழுதுகளிலிருந்து இன்னொரு ஆலமரம் தழைக்கும் என்று நினைத்துக் கொண்டே.ன்.
- செவி மட்டும் செயல் படட்டும் .
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது -2009
- புதுவகை நோய்: இமி-4
- ‘‘பண்டிதமணியின் திருவெம்பாவை உரைத்திறன்’’
- முறிந்த பனை: சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம்
- இது பெரிய எழுத்து மற்றும் மலையாளக் கதைகள்
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 5)
- யாவரும் அறிவர்.
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-6 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் விருட்சம் 67
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) < ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -3
- நீ விட்டுச் சென்ற மழை
- முள்பாதை 12
- ஒற்றைக் காலுடன் நிற்கிறது கடவுள்
- வயிறு
- தூண்டிற்புழு
- பட்டாம்பூச்சிகள் சுதந்திரமானவை
- நினைவுகளின் தடத்தில் – (41)
- ஆலமரம்
- வேதக்கோவில் (முடிவு)
- வேதக்கோவில்
- நெனச்சது ஒண்ணு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -5
- எக்கியின் குடும்பம்