ஆட்டோகிராஃப் 12:கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இதில் வருமோ ?

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

சித்ரா ரமேஷ்


‘இது என்ன தண்ணி கலங்கலா ? தாமிரபரணி தண்ணியைப் பாக்கணும் ஸ்படிகம் மாதிரி இருக்கும். தங்கச் செயின் கழண்டு விழுந்தா தேடி எடுத்துடலாம். அப்படியே கண்ணுக்குத் தெரியும் ‘ இது என் தாத்தா காவேரியில் குளிக்கும் போது காவேரித்தண்ணீரைப் பற்றி சொல்லும் வர்ணனை. காவேரித் தண்ணீரில் வளர்ந்தவர்கள் சென்னையில் கூவம் என்ற நதியைப் பார்த்துக் கேவலமாகச் சிரிப்பதைப் போல் என் தாத்தா காவேரியைப் பார்த்து சிரிப்பார். கூவம் என்ற ஆறு படகுப் போக்குவரத்தும், குளிக்கும் படித்துறைகளும் கொண்டதாக சென்ற நூற்றாண்டுக் குறிப்புகள் கூறுகின்றன. ஹூம்! பட்டணத்து மக்களின் நாகரிகம் பெருகி நல்லா ஓடிட்டு இருந்த ஆற்றை குப்பைத் தொட்டியாக்கி சாக்கடையாக்கி விட்டார்கள். மேலும் அந்த ஊர் உற்சவம்,திருவிழா போன்ற விஷயங்களிலும் ரொம்ப பட்டுக்காம தாமரை இலை தண்ணீர் போல இருப்பார்.எல்லோர் வீட்டிலும் அக்கம் பக்கத்து ஊர்களில் உறவினர்கள் இருந்தார்கள். ஏதாவது விசேஷம் என்று கிளம்பி போய் விட்டு வருவார்கள். ‘மாயவரத்தில் எங்க அத்தங்கா வீட்டில் சீமந்தம், குத்தாலத்தில் (குற்றாலம் இல்லை) மாமா பையனுக்கு தாம்பூலம் மாத்திக்கறா ‘ என்று தஞ்சாவூர், மாயவரம், வைதீஸ்வரன் கோவில் போய்விட்டு வருவார்கள். நமக்கு மட்டும் ஏன் யாரும் இல்லை என்ற மர்மத்துக்கு விடை கிடைத்தது. தாத்தா உண்மையிலேயே தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் கிடையாது. ரிடையர் ஆன பிறகு சொந்த ஊரான திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கும் குக்கிராமத்துக்குப் போகாமல், சொத்து வேண்டாம் என்று விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்து, அப்பா அம்மாவும் இல்லை என்றான பிறகு அங்கே என்னயிருக்கு என்ற விரக்தியில் இந்த ஊருக்கு வந்து விட்டார். விவேக் மாதிரி காதலுக்காக ஸ்டேட் மாறியது போல் தாத்தா ஜில்லா மாறவில்லை.மனதளவில் திருநெல்வேலிகாரராகவே இருந்தார். பட்சணவகைகள், சுட்ட அப்பளத்திலிருந்து அருவி, அம்பாசமுத்திரம், தாமிரபரணி ஆறு வரை திருநெல்வேலி மாவட்டத்தை அவரிடமிருந்து பிரிக்க முடியவில்லை. காவேரிக்கரையில் நின்று கொண்டு தாமிரபரணியை ரசித்த ஒரே மனிதர் அவராகத்தான் இருக்க முடியும். வேர்ப்பற்று! தஞ்சாவூர்காரர்கள் என்றால் சாமர்த்தியம் ஜாஸ்தி என்பதால் யாருடனும் அதிகம் பழக மாட்டார். பாட்டியையும் பழக விட மாட்டார். அவரது வளர்ப்பு மகளான என் சித்திக்கும் ஏகப்பட்ட கட்டளைகள். இந்த சட்ட திட்டங்களையெல்லாம் மதிக்காமல் கூட்டை உடைத்துக் கொண்டு பறந்தது ஒரே ஒரு வண்ணத்துப் பூச்சிதான்!

என் அம்மா தாத்தாவுக்கு திருமணமாகி பத்து வருடங்கள் கழித்துப் பிறந்த தவப் புதல்வி. அதனால் ஏகப்பட்ட கெடுபிடிகள், கட்டுப்பாடுகளோடு பொத்தி பொத்தி வளர்த்திருக்கிறார். கூட விளையாடுவதற்கு தம்பி தங்கைகள் யாருமில்லாத தனிமையில் இருந்தது இதெல்லாம் ரிவர்ஸ் சைக்காலஜியாக மாறி, நாங்கள் வீட்டில் என்ன விஷமம் செய்தாலும் கண்டுக்காமல் விட்டு விடுவாள். நண்பர்கள் எத்தனை பேர் வீட்டுக்கு வந்து கொட்டமடிச்சாலும் தலையிடவே மாட்டாள். அதே மாதிரி என்னையும் வளர்க்கும் முயற்சியில் பத்துக் கட்டளைகள் போடுவார். அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் நான் பாட்டுக்கு என்னுடைய வழக்கமான குணத்துடன் இருந்தது தாத்தாவுக்கு அடிக்கடி கோபத்தைக் கிளறி விடும். யார் வீட்டுக்கு வேண்டுமானாலும் சுதந்திரத்துடன் உள்ளே நுழைந்து விளையாடிக் கொண்டிருப்பேன். எதிர் வீட்டில் பெரிய கண்ணாடிப் பாட்டி, சின்னக் கண்ணாடிப் பாட்டி என்று இரண்டு பாட்டிகள். இந்தப் பெயரைக் கேட்டதுமே காரணப்பெயர் என்பது புரிந்திருக்கும். ஆனால் ‘பெரிய கண்ணாடி ‘ என்பது பெரியக் கண்ணாடியைக் குறிப்பது இல்லை. உயரமாகக் கண்ணாடிப் போட்டுக் கொண்டிருக்கும் பாட்டி ‘பெரிய கண்ணாடிப் பாட்டி ‘. சற்றுக் குள்ளமாக கண்ணாடிப் போட்டுக் கொண்டிருக்கும் பாட்டி ‘சின்னக் கண்ணாடிப் பாட்டி. இவர்களுக்கு ஒரே பிள்ளை. ‘ஒரு தாய்க்கு இரு பிள்ளை பிறப்பதுண்டு. இரு தாய்க்கு ஒரு பிள்ளை இருப்பதுண்டோ ? ‘ இதைப் போன்ற பாலச்சந்தர்தனமான கேள்விகளுக்கு விடையுண்டு. ஒரு பாட்டி அந்த மாமாவை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட அம்மா. இன்னொரு பாட்டி சொந்த அம்மா. காலச் சுழற்சியில் சொந்த அம்மாவும் இந்த பிள்ளையிடமே வந்து சேர்ந்து விட அந்த மாமிக்குத்தான் திண்டாட்டம். ஒன்றுக்கு இரண்டு மாமியார். பானுமதி, செளகார் ஜானகி மாதிரி இரண்டு அம்மாக்கள் சேர்ந்து பிள்ளைக்கு சாதம் போடுவதிலிருந்து தோசை வார்த்து போடுவது எல்லாவற்றிலும் மும்முனைப் போட்டிதான்! என்னதான் அர்விந்த் சாமி மாதிரி கணவன் இருந்தாலும் இரண்டு மாமியார்களையும் சாமர்த்தியமாக சமாளிப்பாள். இதில் அரவிந்த் சாமி எங்கே வந்தார் ? (அரவிந்த் சாமிக்கு இரண்டு அம்மா! நம்ப சிதம்பரம் மாமாதான் சொந்த அப்பா! ‘சாமி ‘ ஸ்வீகார அப்பா. அதே போல் அன்னை சினிமா கதை போல் இரண்டு அம்மா. இந்த கிசுகிசு நம்ப ‘திண்ணை ‘ வட்டாரத்திலேயே இருக்கட்டும். ) டெல்லி கனகாம்பரம் உதிரிப் பூ வாங்கி நெருக்கமாகத் தொடுத்து ஒரு மாமியார் கொடுப்பாள். எனக்கு கனகாம்பரமே பிடிக்காது என்று அதை சீந்தக் கூட மாட்டாள். டெல்லி கனகாம்பரப்பூ நல்ல அரக்குச் சிவப்பாக அழகாகத்தான் இருக்கும் விலையும் அதிகம். மூன்று நாளானாலும் வாடாது. ராத்திரியானா பூவை எடுத்து வச்சியான்னு கேப்பா! என்று எரிச்சல் பட்டுக்கொண்டு கோபத்தை பூவிடம் காட்டுவாள். ஒரு பெண் குழந்தையிருந்தது. அதற்கு இன்னிக்கு விளக்கெண்ணெய் கொடுத்தியா ? வசம்பு கொடுத்தியா என்று விசாரித்துக் கொண்டேயிருப்பார்கள். மாமி இதற்கெல்லாம் அசரவே மாட்டாள். ஒன்றுக்கு இரண்டு மாமியார் இருந்து கொண்டு காலையிலிருந்து இரவு வரை எல்லா விஷயத்திலும் தலையிடுவது யாருக்குப் பிடிக்கும் ? இரண்டு மாமியார்களும் அன்பாக இருப்பார்கள். வருஷா வருஷம் தீபாவளி, பொங்கல், புது வருஷம் என்று எல்லாப் பண்டிகைக்கும் பட்டுப் புடைவைகள்! நகை. தினமும் இரண்டு வேளை தலை வாரிப் பின்னி விடுவது! மாமி மாமியார் கொடுமை என்று யாரிடமும் போய் சொல்லக் கூட முடியாது. இவர்களின் தொணதொணப்பும் அன்புத் தொல்லையும் தாங்க முடியாத அன்று முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு தலையில் ஒரு துண்டை இறுக்கிக் கட்டிக் கொண்டு தலைவலி என்று படுத்துக் கொண்டு விடுவாள். ‘சும்மா தொணதொணங்காதீங்கோ ‘ என்று உரிமையுடன் சொல்லி விடுவாள். ‘சும்மா இவா பேச்சையே கேட்டுண்டு இருந்தா பைத்தியம் புடிச்சுடும். நீ வேற எதுக்குடி இவாக் கிட்ட மாட்டிண்டு. போ விளையாடு ‘என்று இந்த நாடகத்தைக் கண்டு களிக்கும் ஒரே ரசிகையான என்னையும் துரத்தி விடுவாள்.

என்றாவது ஒரு நாள் இரண்டு பாட்டிகளும் வெளியூருக்கு போய் விட்டால் டாம் இல்லாத வீட்டில் ஜெரி துள்ளி விளையாடுவதைப் போல் மாமி ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசத்துடன் வளைய வருவாள். காலைச் சமையலுக்கு சின்ன வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு ரோஸ்ட், மத்தியானம் வெங்காயப் பக்கோடா பூரி மாசாலா என்று அமர்க்களப் படுத்துவாள். அது என்னவோ! அநேகமாக நிறைய பேர் வீட்டில் வெங்காயம், பூண்டு, முருங்கை, முள்ளங்கி போன்ற காய்களை வாங்கவே மாட்டார்கள். ‘சின்னவா ‘ இருக்கிற வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வெங்காயம், முள்ளங்கி, முருங்கை போட்டு சாம்பார், உருளைக் கிழங்கு கறி என்று விசேஷமான சமையல். ஞாயிற்றுக்கிழமை சிக்கன், மட்டன் வாங்கி சமைப்பது போல் இதுவும் ஒரு பழக்கம். இப்பக் கூட நிறைய பேர் வீட்டில் ‘சண்டே ‘ ஸ்பெஷல் இந்த சமையல்தானே! இரண்டு பாட்டிகளும் இல்லாத திருநாளில் மத்யானமா மாமா வெங்காயப் பக்கோடா தின்று கொண்டிருந்தார். எனக்கும் கிடைத்தது. ‘இன்னிக்கி காலையில் மாமி பண்ணின வெங்காயச் சாம்பாரும் உருளைக் கிழங்கும் நீ சாப்பிட்டிருக்கணும் ‘ என்று மாமி சமையலை வெகுவாக சிலாகித்துப் பேச மாமி முகத்தைப் பார்த்தாலே பரவசம்! ‘ஐயோ அவக் கிட்டப் இதையெல்லாம் சொல்லிண்டு! அமாவாசையும் அதுவுமா வெங்காயத்தைச் சாப்பிட்டாச்சே! ‘ என்று மாமி செல்லமாக மாமாவைக் கோபித்துக் கொண்டு ‘ டா! இங்க வெங்காயப் பக்கோடா தின்னதைப் போய் உங்க பாட்டிகிட்ட சொல்லி வைக்காதே! ‘ என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டுதான் அனுப்பினாள். நான் அந்த சத்தியத்தை கடைசி வரை மீறவே இல்லை. அமாவாசையாவது! வெங்காயமாவது! அவங்களுக்கு அன்னிக்குத்தான் பெளர்ணமி!

அக்ரஹார அமைப்பை மீறாத அந்தத் தெருவில் இதைப் போன்ற ஆசாரங்களும் ரகசியமாய் மீறல்களும் (அனாசாரம்) நடந்து கொண்டுதான் இருந்தன. ஹோட்டல்களில் சாப்பிடுவது கூட ஆசார மீறல்தான். கும்பகோணம் போனால் ஹோட்டலில் நுழைந்து காபி டிபன் சாப்பிட்டு விட்டு வருவதை ரகசியமாகத்தான் செய்வார்கள். கணவனும் மனைவியுமாக ஜோடியாக போய்ச் சாப்பிட்டு வந்து விட்டால் தொலைந்தார்கள். ‘பெரியவான்னா ஒரு பயம் மரியாதைக் கிடையாது. அவன்தான் கூப்பிடறான்னா இவளும்னா ஜோடி கட்டிண்டு போயாறது எங்க காலத்திலே இந்த மாதிரி கூத்துல்லாம் நடந்ததே கிடையாது ‘ என்று புலம்பி கொண்டிருப்பார்கள். அது சரி ‘குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா ? ‘ பாட்டைக் கேட்டிருக்கீங்களா ? அந்தப் பாட்டில் எம் ஜி ஆரும் ராஜசுலோச்சனாவும் கிணற்றடியில் ஜாலியாகப் பாடிக் கொண்டிருப்பார்கள். ராஜசுலோச்சனா தண்ணியெல்லாம் தலையில் விட்டு எம்ஜிஆரோட சட்டையெல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டு உல்லாசமாக பாடிக் கொண்டிருப்பாங்க. ஜன்னல் வழியா கண்ணாம்பா பாத்து முறைச்சுக்கிட்டு நிப்பாங்க! ஒரு கெட்டிக்காரியான புது மருமகள் தன் மாமியார் மாமனாரோடு இந்த சீனைப் பார்த்து விட்டு யதார்த்தமா ஒரு கேள்வி தன் மாமியாரிடம் கேட்டாள். அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி தானே ? மாமியாரும் ஆமாம் என்று பதில் சொன்னவுடன் ‘ அதுக்கு ஏன் அவங்க மாமியார் இப்படி முறைக்கணும் ? அந்தக் காலத்தில் கணவன் மனைவி என்றால் இப்படியெல்லாம் சந்தோஷமாக இருக்கக் கூடாதா ? பாவம் அவரு இவங்கிட்ட இப்படியெல்லாம் இல்லாமல் வேறு யார் கிட்ட இருக்க முடியும் ? ‘ என்று கேட்டதும் அந்த அருமையான மாமானார் மாமியார் அந்தப் பெண்ணைக் கொஞ்சம் கூட தப்பாவே நினைக்கவில்லை. ‘என்னமோ அந்த நாள்லே மாமியர்ன்னா அப்படித்தான் இருப்பாங்கன்னு சிரிச்சுக்கிட்டே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்புறம் அந்த பெண்ணின் கணவரிடம் போய் உனக்கு ஒரு நல்ல பெண்ணை கல்யானம் பண்ணி வெச்சிருக்கேன் என்று பெருமைப் பட்டுக் கொண்டார்கள். அந்தக் கணவர் பெயர் ரமேஷ்! இப்படி மாமியார் மெச்சிய மருமகளாய் நடந்து கொள்ள நிறைய புரட்சிகரமான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றால் இன்னும் கூட நிறைய சொல்லியிருப்பேனே!

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்