விளையாடாத பிள்ளை – உரைவெண்பா

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


எப்போதும் பூட்டிக் கிடக்கிற சாஸ்வத நிதி ஃபண்ட் ஆப்பீஸ் சுவரில் கோணல் மாணலாக மூணு கரிக்கோடு. பெருச்சாளி அடிக்கிற கட்டை மாதிரி ஒன்றைப் பிடித்துக்கொண்டு நான் நிற்கிறேன். சத்தியமூர்த்தி தெரு என்ற இரட்டை அக்ரஹாரம் பளிச்சென்ற தார்ச் சாலையும், வீடு வீடாக அழகாகப் பெருக்கித் தெளித்த வாசலுமாக முன்னால் நீள நெடுக விரிந்திருக்கிறது.

தெருவுக்குக் குறுக்காக, எனக்கு எதிர்ப்பக்கம் இருந்து சீதரன் ரப்பர் பந்தை வீசுகிறான். நிறைய ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டிய காரியம் இது. கொஞ்சம் தவறினால், எனக்கு இடது புறத்தில் மாதவன் வக்கீல் ஆபீசில் விழுந்து வாசலில் குட்டை மேஜை வைத்து சதா எழுதிக்கொண்டிருக்கிற அவர் குமஸ்தாவுடைய மூக்குக் கண்ணாடியைப் பதம் பார்த்துவிடும். மாதவன் வக்கீல், மாதவன் வக்கீலாக மட்டும் இருந்தார் அப்போது. பக்தவத்சலம் கட்டக்கடேசி காங்கிரஸ் முதல்மந்திரியாக இந்தியைத் திணித்து பலபேர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு வெளியேறி அறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்து மாதவன் வக்கீல் சட்ட அமைச்சர் மாதவனாக இன்னும் நாலைந்து வருடம் பாக்கி இருந்தது.

‘டேய் நம்ப ஆராமுது அய்யங்கார் வீட்டுக்கு அந்தப் பையன் வராண்டா இன்னிக்கு ‘

கிரி கொஞ்சம் தாமதமாகச் செய்தியை அறிவித்தபோது துரைசிங்கம் மன்னர் கல்லூரி வாத்தியார்கள் வரிசையாக சைக்கிளில் மணி அடித்துக் கொண்டு கடந்து போனார்கள். அவர்கள் எல்லோரும் காலேஜ் வாத்தியார்கள் என்று மட்டும் எனக்குத் தெரியும். கவிஞர் மீரா, தோழர் நா.தர்மராஜன், இளம்பாரதி என்ற ருத்ர துளசிதாஸ் என்ற தமிழ்-ஆங்கில-மலையாள-தெலுங்கு இலக்கியப் பெரும்புள்ளிகள் என்று நான் அவர்களை அடையாளம் காண இன்னும் பத்து வருடமாவது பாக்கி இருந்தது.

சீதரன் ரெண்டு அடி ஒப்புக்கு ஓடி – அதுக்கு மேலே ஓடினால் தெருவில் வரும் சைக்கிளில் முட்டிக் கொள்ள வேண்டும் – அடுத்த பந்தை எறிந்தது என் மட்டையில் பட்டதா ஃபண்ட் ஆப்பீஸ் சுவர் கரிக்கோட்டிலா என்ற சர்ச்சையில் நாங்கள் மூழ்கியிருக்கும்போது சர்ரென்று அம்பாசிடர் கார் ஒன்று ஆராவமுது அய்யங்கார் வீட்டு வாசலில் நிற்கிறது.

‘வந்துட்டாண்டா.. ‘

பவுலர் செம்மண் அப்பிய ரப்பர் பந்தை டிராயர் பையில் திணித்துக் கொண்டு ஓடுகிறான். எல்லோரும் ஓடுகிறார்கள். கதாயுதம் மாதிரி மட்டையைத் தோளில் உயர்த்திப் பிடித்துக் கொண்டு நானும்.

காரின் பின் சீட்டில் இருந்து அந்தப் பையன் இறங்குகிறான். என்னைப் போல், சீதரன் போல், கிரி போல்தான் சோனியாக இருக்கிறான். என்னை மாதிரியே மிஷின் போட்டு ஒட்ட வெட்டிய தலைமுடி. காது ரெண்டும் தலைக்கு அரை இஞ்ச் தள்ளி நீட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த மாதிரி முடி வெட்டிக் கொண்டால் எல்லோருக்குமே அப்படித்தான் தெரியும் போல – என்னையும் சேர்த்து.

‘மாமாவோட சித்தியா பேரன்.. ‘

ஆராவமுது அய்யங்கார் அகத்து மாமி சொல்கிற போது முகம் முழுக்கப் பெருமை. (அய்யங்கார் குடும்பங்களில் இந்தச் சித்தியா என்பது என்ன மாதிரி உறவு என்று இன்னும் எனக்குச் சரியாகப் புரியவில்லை).

வந்த பையன் எங்களை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு அய்யங்கார் வீட்டுக்குள் நடக்கிறான். கூட அவன் அம்மாவும் அப்பாவும் என்று தோன்றும் இரண்டு பெரியவர்கள்.

‘இவனும் டிராயர் தான் போட்டிருக்கான் ‘

சீதரன் சொல்கிறான். சின்னப் பையன்கள் பேண்ட் போடுவதில்லைதான். ஆனால் இவன் சாதாரணமான பையன் இல்லையே..

ஐயங்கார் வீட்டில் ஏதோ வளைகாப்போ, சீமந்தமோ, சத்யநாராயண பூஜையோ.

நாங்கள் கலைந்துபோக மனம் இல்லாமல் வாசலிலேயே நிற்கிறோம்.

‘உள்ளே போய்ப் பார்க்கலாமா ? ‘

சங்கர் சொல்வதற்குள் அய்யங்கார் வீட்டில் இருந்து யாரோ வாசல் கம்பிக்கதவைச் சாத்திக் கொக்கி போடுகிறார்கள். இருக்கட்டும். வாத்தியார் தீபாவளி சமயத்தில் வீட்டு வாசல் திண்ணையில் பட்டாசுக் கடை போடும்போது சம்பளம் வாங்காத கவுரவ சேல்ஸ்மென்களாக நாங்க தானே போகணும் .. அப்ப வைச்சுக்கலாம்..

பத்து நிமிஷம் கழித்து அந்தப் பையனும் கூட வந்தவர்களும் திரும்ப அம்பாசிடரில் ஏறி உட்கார, நான் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவனை இன்னொரு தடவை பார்க்கிறேன்.

‘உன் பேரு என்ன ? ‘ அவன் கேட்கவில்லை.

நானும் கேட்கவில்லை. ஏன் என்றால் எனக்கு அவன் பெயர் தெரியும்.

கார் கிளம்ப மக்கர் செய்கிறது. புர் புர் என்று கருப்புப் புகை எழும்பிக் கொண்டிருக்கும்போது, கண்ணபுரம் மாமி வீட்டிலிருந்து வந்து அந்தப் பையன் கையில் ஒரு ஆப்பிள் பழத்தை ஜன்னல் வழியாகக் கொடுக்கிறாள்.

நாங்களும் வருடாவருடம் சரஸ்வதிபூஜைக்கு மாமி வீட்டில் ஆஜராகும்போதெல்லாம் எங்களுக்குக் கொய்யாப்பழம் தான் தருவாள். இவனுக்கு மட்டும் ஸ்பெஷலாக ஆப்பிள்.

அவன் கூட இருந்த பெரியவர்களை ஒரு வினாடி பார்த்து விட்டு அவர்கள் தலையசைக்க, பழத்தை வாங்கி மடியில் வைத்துக்கொள்கிறான்.

கார் கிளம்பி விட்டது.

‘அடிக்கடி வந்து போயிண்டு இருங்கோ .. நீயும் தாண்டா.. ‘

ஆராவமுது வாத்தியார் அகத்து மாமி சொல்கிறார்.

‘பரமக்குடியிலேயே இருந்தா வரலாம் .. மெட்ராஸுக்கும் பரமக்குடிக்கும் போய்ட்டு வந்துண்டு இருக்கோமே ‘

கார் நகர்கிறபோது அந்தப் பையன் என் தோளில் சார்த்திய மட்டையைப் பார்க்கிறான். அப்புறம் உள்ளே பார்த்துத் திரும்பிக் கொள்கிறான்.

‘வாங்கடா .. விளையாடப் போகலாம் ‘

சீதரன் சொல்கிறான்.

இருட்டுக் கவிந்து கொண்டிருக்கிறது.

‘நாளைக்கு வச்சுக்கலாம்டா ‘.

விளையாட்டு ஒத்தி வைக்கப்பட்டு வீட்டுக்கு நடக்கிறோம்.

கட்.

எத்தனையோ வருஷம் கழித்து, அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இதைச் சொல்லிச் சிரிக்கிறேன். வங்கி அதிகாரியாக இருந்து அவர் ஓய்வு பெற்று ஈசிச்சேரில் சாய்ந்து என் மூன்றாம் சிறுகதைத் தொகுப்பையோ அதற்கு அடுத்ததையோ புரட்டிக் கொண்டிந்த நேரம். அவர் காலமாக இன்னும் இரண்டு மாதம் பாக்கி இருந்தது.

அப்பா சத்தமே இல்லாமல், வழக்கம் போல் சிரிக்கிறார்.

‘எனக்கும் இதே போல் அனுபவப்பட்டிருக்குடா .. நான் சின்னப்பையனா பம்பரக்குத்து விளையாடிட்டு இருந்தபோது இதே மாதிரி இன்னொரு பையன் இந்தத் தெருவுக்கு வந்தான் .. நாடகக் கம்பெனியில் நடிக்கறவன் .. இங்கே இருந்தவரை, தினசரி எங்களோடு பம்பரம் விளையாட வந்துடுவான் .. அவன் அப்புறம் தமிழ் சினிமாவிலே பெரிய ஆளா இருந்தான் .. ‘

‘தியாகராஜ பாகவதரா ? ‘ நான் கேட்டேன்.

‘இல்லே. டி.ஆர்.மகாலிங்கம் ‘.

ஃபண்ட் ஆப்பீஸ் சுவரில் கிறுக்கிய கரிக்கோட்டுக்கு முன்னால் நின்று மட்டை பிடிக்க கமலஹாசன் காரில் இருந்து இறங்கி இருப்பாரா என்று தெரியவில்லை.

பழைய மரமட்டை பாதமெலாம் செம்மண்
தழைய உடுத்த டவுசர் – அழைத்திருக்கும்
ஓரோர் விழியும் ஒருநொடி பார்த்தேங்கிக்
காரேறிப் போன கமல்.

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்
eramurug@yahoo.com

Series Navigation