ரூமி கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

தமிழாக்கம் – செந்தில்


‘ரூமியின் கவிதைகள் அனைத்து வகை காதல் (மோகம், ஆன்மிகம், மற்றும், தெய்வீக காதல்களின்) ஏக்கத்தையும், தவிப்பையும், அதன் புதிர்களையும் வெளிப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ளது. இந்த கவிதைகள் ஒரு உண்மையான காதல் மூலம் கிட்டும் ‘முழுமையிலிருந்து ‘, ஒரு காதலை இழப்பதால் கிட்டும் ‘சோகம் ‘ வரையும், இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள நிலைகளையும் அழகாக வெளிப்படுத்துகின்றன. இக்கவிதைகள் திடார் காதலின் பித்தநிலையையும், காதல் மூலம் தோன்றும் ஆழமான நட்பையும், தெய்வீகக்காதலில் மூழ்கித் திழைத்தலையும் ஓவியமாகச் சித்தரிக்கின்றன. ரூமி தனது கவிதைகள் மூலம் இதயத்தின் மிகச்சிறந்த நிலங்களில் பயணிக்கிறார். இவருடைய கவிதைகள் இருப்பின் மையத்தில் வாழும் அனுபவத்தின் ஆவணங்கள் ‘ என்கிறார் கோல்மான் பார்க்ஸ்(Coleman Barks).

1) எதுவும் என் காதுகளுக்கு கேட்பதில்லை, உன் குரலோசை தவிர;
இதயம் அறிவின் மொழித்திறனை கொள்ளையடித்துச் சென்றுவிட்டது;
வெற்றுத்தாளில் எனது ஆன்மா படித்து அசைபோடும்படிக்கு,
ஒளிஊடுறுவும் ஓவியத்தை வரைந்து செல்கிறது காதல்.

2) நமது எச்சங்களை ஏற்று அழகை விளைவிப்பது மண்ணின் கொடை; இந்த மண்ணைப்
போல இருக்க முயன்றுபார்.

நல்லதையே திரும்பிக் கொடு, இந்த ஒழுங்கற்ற முகில்கூட்டம் ஒரு சோளக்கதிரையும்,
ஒருகைப்பிடி நெல்மணிகளையும், நமக்குத் தருவது போல.

3) புகையும் நெருப்பும்

நான் சொல்வது எதையும் கேட்காதே;
நான் நெருப்பின் மையத்துள் நுழைய விழைகிறேன்.

தீ எனது குழந்தைதான், ஆயினும் தீக்குணவாகி,
நானும் தீயாக வேண்டும்.

ஏன் இன்னும் இரைச்சலும் புகையும் ?
ஏனெனில் இந்தக்கரிக்கட்டையும் தீப்பிழம்பும்
இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன;

‘நீ மிகவும் இருக்கமாகவும் அடர்த்தியாகவும் இருக்கிறாய் ‘, அப்புறம் செல்!
‘நீ நிலையற்று திண்டாடுகிறாய் ‘. நானொரு திடப்பொருளாக்கும்!

முகமில்லாது அலைந்து திரிபவனைப் போல, திண்ணையில் அமர்ந்து கொண்டு நகர மறுக்கும் ஒரு மூர்க்கப்
பறவை போல, கரும் இருட்டில் அந்த நண்பர்களின் விவாதம் தொடர்கிறது,

4) இந்த சொற்களை என் உதடுகளில் இருந்து உதிர்ப்பது யார் ?

என் கண்களின் மூலம் காண்பது யார் ? எது ஆன்மா ? என்னால் கேள்விகளை நிறுத்த இயலவில்லை.
ஒரு துளி பதிலை சுவைக்க நேர்ந்தால் போதும், மதுவுக்கு அடிமையானவர்களுக்கான இந்த
சிறையிலிருந்து என்னால் தப்பிக்க இயலும்;
நானாக விரும்பி இங்கு வரவில்லையே, நானாக திரும்பிச் செல்லவும் முடியாது.
என்னை இங்கு அழைத்து வந்தவரே என் இல்லத்தில் என்னை சேர்ப்பிக்க வேண்டும்.

இந்த கவிதை. நான் சொல்லப் போவது எதுவும் எனக்கு தெரியாது.
நான் திட்டமிடுவதேயில்லை. சொற்களுக்கு வெளியில் நான் இருக்கையில்
பேச்சற்று மிகவும் அமைதியாகிறேன்.

5) பெரும்பீப்பாய்கள் நிறைய மது உண்டு எங்களிடம், ஆனால் மதுக்குப்பிகள் இல்லை.
அதனால் என்ன ? ஒவ்வொரு காலையும் ஒளிர்கிறோம், திரும்பவும் மாலைகளிலும்.
அவர்கள் சொல்கிறார்கள் எங்களுக்கு எதிர்காலம் இல்லையென. அவர்கள் சொல்வது சரிதான்.
எங்களுக்கும் அதில் விருப்பம்தான்.

6) கற்பனை செய், ஒரு குன்றின் உச்சியில் இருந்து ஒரு கழுகைப் போல
நீ மிதந்திறங்குவதாக. நினைத்துப் பார் ஒரு புலியை போல
நீ தன்னிச்சையாக திரிவதாக.
இரைதேடி திரிகையில்தான் நீ மிகவும் அழகு.

msenthi@yahoo.com

Series Navigation

செந்தில்

செந்தில்