மூன்று குருட்டு எலி

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

அ.முத்துலிங்கம்


இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். ஓர் இரவு தொலைபேசி வந்தது. நண்பர் தமிழ் மழலைப் பாடல்கள் (nursery rhymes) புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை. மனைவியைக் கேட்டேன். எல்லாம் தெரிந்த அவளுக்கும் தெரியவில்லை. அடுத்த நாள் நாங்கள் மூவரும் கனடாவின் கடைகளில் ஏறி இறங்கினோம். ஆங்கிலத்தில் nursery rhymes இருந்தன. ஆனால் தமிழில் அப்படி ஒன்றும் இல்லை என்று கையை விரித்துவிட்டார்கள்.

எனக்கு தமிழ் நாட்டில் ஒரு நண்பர் இருந்தார். பெரிய எழுத்தாளர். பெயர் பாவண்ணன். அவரிடம் விசாரித்து எழுதினேன். அவர் தானே இயற்றிய இருபது குழந்தைப் பாடல்களை எனக்கு அனுப்பி வைத்தார். அருமையான பாடல்கள். நண்பரும் மனைவியும் இந்தப் பாடல்களுக்கு தாங்களாகவே மெட்டமைத்து பாடினார்கள். இளையராஜாவே பொறாமைப்படும் மெட்டுகள். ஆனால் ஒரு பிரச்சினை. அவர்களுடைய மெட்டுகள் அவர்களுக்கே மறந்துவிடும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மெட்டில் பாட்டுகள் வெளிவந்தன. அவர்களுடைய குழந்தைக்கு பொறுக்க முடியவில்லை. இவர்கள் தமிழ் பாடல் புத்தகத்தை தூக்கியவுடனேயே அது சோடியைத் தொலைத்துவிட்ட அடைப்புக்குறிபோல சுருண்டுபோய் தூங்கிவிடும். புத்திசாலிப் பிள்ளை. எங்களுடைய தமிழ் மழலைப் பாடல்கள் வேட்டை இப்படி தோல்வியில் முடிந்தது.

என்னுடைய மச்சான் ஒருத்தர் அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் வசிக்கிறார். பல் வைத்தியர். அவருடைய மனைவி நாகர்கோயில் பக்கம். அவரும் பல் வைத்தியர். இருவருமாகச் சேர்ந்து அந்த நகரத்திலுள்ள பற்களையெல்லாம் தங்களுக்குள் சமமாக பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. தளர் நடைப் பருவம். பெயர் ப்ரியா. இதன் சொக்கைகளின் இயற்கையான சிவப்பு ஆட்கள் கிள்ளிக் கிள்ளி இன்னும் சிவந்துபோய் இருக்கும். தலை மயிர் பின்னுக்கு குறைந்தும், முன்னுக்கு கூடியும் இருப்பதால் இந்த அம்மா குழந்தையை தன்னுடைய தொடைகளுக்குள் இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு நீண்ட நேரம் தலை வாருவார். ப்ரியாவுக்கு போக்குகாட்ட nursery rhymes ம் பாடுவார். இவருக்கு காளமேகப் புலவர் வர்ணித்த ‘வாழ்த்த திருநாகை வாகான ‘ பெண்மணியின் குரல் வளம். அத்தோடு அவருடைய ஆங்கிலச் சொற்கள் அவர் நாக்கிலே உருண்டு அவர் சொல்வதற்கு முன்பாக வெளியே விழுந்துவிடும். அப்படியும் சோர்வடையமாட்டார். பூமி உருண்டு மறுபக்கம் போகும் வரைக்கும் இந்த இம்சை தொடரும். குழந்தையும் இரட்டிப்பு வலியில் நெளியும்.

ப்ரியாவின் புத்தகத்தில் கொடுத்திருந்த பாடல்களைப் பார்த்தபோது அவை எனக்கு வித்தியாசமாகப் பட்டன. எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் பிரபலமான குழந்தைப் பாடல் ஒன்றே ஒன்றுதான். அதைத்தான் முழு ஊரும் வைத்து சமாளித்தது.

அம்மா சுட்ட தோசை

அப்பா முறுக்கிய மீசை

தின்னத் தின்ன ஆசை

விளக்கு மாத்துப் பூசை.

இப்படியான பாடல்களில் ஓசை நயம்தான் முக்கியம். கருத்து அல்ல. அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆங்கிலப் பாடல்களை பார்த்தபோது என் அபிப்பிராயம் மாறியது.

முதலாவது பாடல் Three Blind Mice. உங்கள் எல்லாருக்கும் தெரிந்த பாடல்.

மூன்று குருட்டு எலி

ஓடுவதைப் பார்

கமக்காரன் பெண்டாட்டி பின்னால்

அவள் கத்தியை எடுத்து வாலை வெட்டினாள்.

இப்படி அது போனது. எலிகளோ குருடு. அவை கமக்காரன் பெண்டாட்டியை தொடர்ந்து ஓடினவாம். அது எப்படி சாத்தியம் ? போகட்டும், அதற்கு தண்டனை வாலை வெட்டுவதா ? கேட்கவே ஒரு மாதிரி இருந்தது. அடுத்த பாடலுக்கு தாவினேன்.

Peter Peter Pumpkin Eater.

பீட்டர்,பீட்டர்

பூசணிக்காய் சாப்பாட்டுக்காரன்

பெண்டாட்டி ஒருத்தியை வாங்கினான்

கட்டுபடியாகவில்லை.

ஆகவே பூசணிக்காய் ஓட்டுக்குள்

அவளை பூட்டிவைத்தான்.

பெண்டாட்டிகள் அந்தக் காலத்தில் இருந்தே கட்டுபடியாவதில்லை. அதில் கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால் இந்த சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்கு அதைப் புகட்டவேண்டுமா ? அவர்களாகவே வெகு சீக்கிரத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு இருக்கவேண்டும் அல்லவா ?

அடுத்த பாடல் Rock A Bye Baby என்று தொடங்குகிறது. இந்தப் பாடலிலாவது ஏதாவது நல்ல விஷயம் சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது பிள்ளைகளுக்கு பயம் காட்டும் பாடலாக அமைந்திருந்தது.

காற்றடித்தால் கொப்பு முறியும்

கொப்பு முறிந்தால்

தொட்டிலும் பிள்ளையும்

கீழே விழும்.

இன்னொரு பாடல் இப்படி தொடங்கியது. Sing A Song of Six Pence. இதில் கூசாமல் ’24 கறுப்பு பட்சிகளை அப்பத்தில் போட்டு பொசுக்கு ‘ என்று வந்தது. இந்த இடத்தில் சிறுவர் சிறுமியர் கைகளைத் தட்டி ஆரவாரமாகப் குதிப்பார்கள். அந்தப் புத்தகத்தில் அப்படித்தான் படம் போட்டிருந்தது.

ஆனால் கடைசிப் பாடலைப்போல உற்சாகம் தரும் பாடலை இந்த உலகத்தில் காண முடியாது. Goosey Goosey Gander என்று தொடங்கும் பாடல்.

மேல் மாடிப்படியில் ஒரு கிழவனைக் கண்டேன்

அவன் தோத்திரம் சொல்லவில்லை.

அவன் இடது காலைப்பிடித்து சுழற்றி

கீழ் மாடிக்கு எறிந்தேன்.

இந்த குழந்தைப் பாடலில் தோத்திரம் சொல்லாத கிழவர்களுக்கு எல்லாம் ஆபத்து இருந்தது.

அந்தப் புத்தகத்தின் 15 பாடல்களில் ஐந்து இப்படி இருந்தன. மீதியைப் பற்றி பேச வேண்டாம். என்னுடைய மச்சான் ஓசை நயத்துக்காக எழுதும் பாடல்களில் கருத்தைப் பார்க்கக் கூடாது என்றார். எலிவாலை வெட்டுவதில் இருந்து, பட்சிகளை சுடுவதிலிருந்து, மனைவியை அடைத்து வைப்பதிலிருந்து, கிழவனை சுழற்றி எறிவது வரை வன்முறை மெள்ள மெள்ள பரவுகிறது என்பது என் கட்சி.

அப்படி பெரிய சண்டை என்று சொல்லமுடியாது. காற்றின் இறுக்கத்தை தவிர்க்க என் மச்சான் கிழக்குப் பக்கம் பார்த்து புன்னகைத்தார். நானும் சளைக்காமல் மேற்குப் பக்கம் பார்த்து புன்னகைத்தேன். எங்கள் இரண்டு புன்னகைகளும் சந்திக்கவே இல்லை.

எங்கள் சமரசத்துக்கான காரணம் வெகு சீக்கிரமே கனடாவில் இருந்து வந்தது. நண்பர் ஒருவர் மச்சானுக்கு மழலைப்பாடல்கள் குறுந்தகடு ஒன்று பரிசாக அனுப்பியிருந்தார். அழகாக இசை அமைந்த தமிழ்ப் பாடல்கள். குரு அரவிந்தன் தயாரிப்பில் முல்லையூர் பாஸ்கரன் இசையமைத்தது.

பாடல்கள் அழகான கருத்தோடு இயற்றப்பட்டிருந்தன. சிறுவர்களுக்கு ஏற்ற எளிய இனிய மெட்டுகள். ‘சின்ன சின்ன பூனை ‘ என்று ஒரு பாட்டு பூனையைப் பற்றி சொல்கிறது. சிறுவர் சிறுமிகள் சேர்ந்துபாடும் இந்தப் பாடல் எந்தக் குழந்தைக்கும் பிடிக்கும். ‘அணிலும் ஆடும் அ, ஆ ‘ என்று ஒரு பாட்டு. இதுவும் நல்ல இசையமைப்பு கொண்டது. தமிழ் உயிரெழுத்துக்கள் எல்லாம் இதில் ஒழுங்காக வரும். இன்னொன்று வாரத்தில் உள்ள நாட்களையும், வருடத்தில் உள்ள மாதங்களையும் சொல்லும். குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள பாட்டு.

இந்த இசைத்தட்டில் மிகவும் சிறந்தது என்றால் அது இந்தப் பாட்டுத்தான்.

குவா குவா வாத்து

நீ எங்கே போனாய் நேத்து

பாத்து பாத்து பாத்து

கண்ணும் பூத்து போச்சு.

இந்தப் பாட்டு வரும்போது ஒவ்வொரு முறையும் ப்ரியா கைகளை தட்டியபடி ஒரு சொக்ஸ் போட்ட காலில் எழும்பி நிற்பாள். மிருகக் காட்சிசாலை குட்டி விலங்குபோல தடுப்புக்கு அங்கால் நின்று தன் சிறிய பின்பாகத்தை பெண்டுலம்போல ஆட்டுவாள். அவளுடைய சந்தோஷம் சொல்லமுடியாது. முழு உடம்பும் குலுங்க சிரிப்பாள். மச்சான் சொன்னார் இந்தப் பாடலை மாத்திரம் ப்ரியா ஒரு நூறுமுறையாவது ரசித்திருப்பாள் என்று. இசைத் தட்டின் இறுதியில் கனடாவின் தேசிய கீதம். ஆங்கில மெட்டுக்கு ஒருவித பழுதும் இல்லாமல் தமிழில் செய்யப்பட்டிருந்தது.

‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ‘ என்கிறார் திருவள்ளுவர். ஆங்கில மழலைச் சந்தங்கள் சிலதில் கருத்துக்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவற்றில் மறைந்திருக்கும் வன்முறை மறுப்பதற்கில்லை. மாறாக இந்த இசைத்தட்டில் என்ன இனிமையான தமிழ்ப் பாடல்கள். மனதைக் கவரும் இசைவேறு.

இந்த மழலைப் பாடல்கள் குறுந்தகடு பல இடங்களில் கிடைக்கிறது. இதைத் தயாரித்தவரையும், இசை அமைத்தவரையும், பாடியவர்களையும் மழலை உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.

அமெரிக்கா மச்சானுக்கு இந்த குறுந்தகடு பரிசாகக் கிடைத்தது. இதை கனடாவில் வாங்கியதாக அவர்கள் சொன்னார்கள். ஒரு மழலையருக்கு இதைவிட வேறு சிறந்த பரிசு என்ன ? அப்பொழுது கனடாவில் கடை கடையாக நாங்கள் மூன்றுபேர் மினெக்கெட்டு ஏறி இறங்கியதை நினைத்துப்பார்த்தேன். சிலவேளைகளில் கண்கள் திறந்திருந்தாலும் அவை பார்ப்பதில்லை.

மூன்று குருட்டு எலி.

***

muttu@earthlink.net

Series Navigation