மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தடா! (மதிவண்ணன் கவிதைகளைப் பற்றி ஒரு கடிந்துரை)

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

சி. ஜெயபாரதன், கனடா


[இக்கட்டுரை சென்ற வாரம் (ஆகஸ்டு 18, 2005) திருமதி லதா ராமகிருஷ்ணன் இலக்கியப் பகுதியில் எழுதிய மதிவண்ணன் கவிதைகளைப் பற்றியது]

போற்றுபவர் போற்றட்டும்! புழுதி வாரித்

தூற்றுபவர் தூற்றட்டும்! தொடர்ந்து சொல்வேன்!

ஏற்றதொரு கருத்தை என்னுள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன்! அஞ்சேன்!

கவிஞர் கண்ணதாசன் [தென்றல் இதழ்]

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான், நம்மைப் பேணி வளர்த்திடும் ஈசன். மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார். பாரதியார் சில மூடர் என்று கூறியதைப் பல மூடர் என்று நான் சொல்ல விழைகிறேன். பெண்களின் தன்மானத்தைத் தகர்த்து அவமரியாதை செய்யும் சுயமரியாதைக் கவிராயர் மதிவண்ணனையும் அந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். பெண்ணைக் காலால் எட்டி உதைத்தால் என்ன, கவிதை எழுத்தாணிக் கொடுக்கால் கொட்டினால் என்ன இரண்டு ஒரே புண்ணைத்தான் உண்டாக்குகின்றன! வரமிருந்து, தவமிருந்து, பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற அவரது தாய் மதிவண்ணன் கவிதை நயத்தைப் படித்தால் ஒன்று தற்கொலை செய்து கொள்வாள்; அல்லது வீடு பெருக்கும் வெஞ்சாமரையால் அவர் முதுகை ஆறுமுறை விலாசி விடுவாள்! கட்டிய தாரம் படித்தால், கணவன் என்னும் கொள்ளிக் கட்டைக்குச் சாகும்வரை தன் கையால் அன்னமிட மாட்டாள்! பெண்களைத் துச்சமாகவும், எச்சமாகவும் மதித்துத் துப்பும் மதிவண்ணனை மனதாரச் சபிக்காது, வாயாரக் வாழ்த்தித் தொட்டிலில் தாலாட்டும் ஒரு பெண் மேதையை எந்த வகையில் பாராட்டுவது என்பது எனக்குத் தெரியவில்லை!

ஆண் போக்கிரிகள் பஸ்ஸில் போகும் பெண்ணின் பின்புறத்தைக் கிள்ளுவதும், இரயில் தூங்கும் பெண்ணின் மார்பைத் தடவுவதும், தெருவில் நடக்கும் பெண்ணின் சடையை இழுப்பதும், கண்ணடிப்பதும், கவனத்தைக் கவர விசில் அடிப்பதும், கவிதைகளில் மதிவண்ணன் போல் பெண்மையை அவதூறாய், ஆவேசமாய் எழுதுவதும் பெண்மனதில் அழியாத கோலங்களாய் ஓரே காயத்தைத்தான் உண்டு பண்ணுகின்றன. அத்தனைப் பெண்பாலியல் குற்றங்களும் ‘பெண் சீற்றத் தீண்டல் ‘ [Harasment of Women] என்னும் தலைப்பில் சட்டப்படித் தண்டிக்கப்பட வேண்டிய மனிதத் தவறுகளே! இது சில ஆணாதிக்க களிமண் தலையர்களுக்குப் புரிவதில்லை. ஆனால் சில பெண் மேதை எழுத்தாளருக்கு ஏன் தெரியவில்லை என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது!

ஆதாமும், ஈவாளும் காஞ்சீபுரம் பட்டுப் புடவை கண்டுபிடிப்பதற்கு முன்னர் அமண நிலையில் பூமியில் நடமாடி வந்தார்கள்! ஆனால் ஆகாவென்று எழுந்த நாகரீக யுகத்தில் ஆண், பெண் இருவரும் தம்தம் அந்தரங்க அங்கங்களை ஆடைகளில் மூடி நாட்டில் நடமாடி வருவது பார்ப்பதற்குப் பூரிப்பாக இருக்கிறது. விடுதலை நாட்டில் பூரண அமண நிலையில் ஆண், பெண் உடம்புகளை தெரிசிக்க விரும்புவோர் தனிப்பார்வையில் தமது அந்தரங்க அறைகளில் பார்த்துக் கொள்வதை யாரும் தடுக்க வில்லை! ஆனால் கார்த்திகைப் பட்டைபோல் நெற்றியில் வெள்ளை நாமத்தை இட்டுக்கொண்டு ஆயிரம், ஆயிரம் அமண மகரிஷிகள் மதத்தின் பேரில் கும்பமேளாவை ஆண்டாண்டு தோறும் திறந்த கண்காட்சியாக வட இந்தியாவில் நடத்தி வருவது நமது அநாகரீகக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது! இவ்விதம்தான் கணவன் இறந்தவுடன், மனைவியை உயிரோடு எரிக்கும் உடன் கட்டை ஏறுதல் போன்ற நமது ஆணாதிக்க அநாகரீகப் பழக்கங்கள் கடைப்பிடிக்கப் பட்டன! உடன் கட்டை ஏறுதலை அரசாங்கம் சட்டமிட்டு ஒழித்ததுபோல், எங்கும் இல்லாத இந்த கும்பமேளா என்னும் அமண விழாவையும் பாரதத்தில் தடை செய்தால், பண்புள்ள நாகரீகமாக இருக்கும். சம உரிமைக் கொடி தூக்கும் சில ஆண், பெண் தீவிரவாதிகள், ஆண்களைப் போல் பெண்களும் ஏன் கும்பமேளா நடத்தக் கூடாது என்று கூக்குரல் இட்டால் மதச்சார்பற்ற அரசாங்கம் அதற்கும் தலை சாய்க்க வேண்டியதிருக்கலாம். பாரத நாட்டுத் தீவிரவாதிகள் காட்டுமிராண்டிகளாக கற்காலம் நோக்கிப் போகிறாரா ? அல்லது ஆண், பெண் ஒருவருக்கொருவர் சம உரிமை, சம மதிப்பளித்துக் கண்ணியமாக வாழும் பொற்காலத்தைப் போகிறாரா என்பதுதான் எனது கேள்வி!

ஈவேரா பெரியாரின் சீடரான மதிவண்ணன் கவிதைகளை மணியம்மை படித்தால், அவருக்கு என்ன மாதிரி வெகுமதி கொடுப்பார் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை! பெரியாரின் காலத்தில் வாழ்ந்த சுயமரியாதைக் கவிஞர்களான பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற கண்ணியக் கவிவாணர் வாழ்ந்த காலத்தில் பெண்ணை அவமானம் செய்யும் போக்கிரிக் கவிராயர் மதிவண்ணனும் வாழ்ந்து வந்திருப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. மதிவண்ணன் கவிதைகளில் காமரசம் இல்லை! கம்பரசம் இல்லை! காளிதாசனின் இன்பரசம் இல்லை! ரசம் இன்றி வெறும் விஷம் உள்ளது, பெண்கள் மீது, பெண்களின் அந்தரங்க உறுப்புக்கள் மீது, பெண்களின் இயற்கையான உயிரியல் இயக்கங்கள் மீது! ஆனால் அவருக்கு ஆண் உறுப்புகள் மீது ஏனோ அவ்வித வெறுப்பில்லை, அருவருப்பு இல்லை, அவமதிப்பு இல்லை! இரண்டு கண்களில் ஒரு கண்ணை மட்டும் குத்தும் இவரது ஓரவஞ்சகச் கோர தாண்டவம் ஆச்சரியமாக இல்லையா!

இலக்கிய உலகிலும் கட்டுப்பாடில்லாத விடுதலை நம்மை மீண்டும் காட்டுமிராண்டி யுகத்துக்குக் கொண்டு போய்விடும்! ஜாதி, மதம், பாலினத்தின் பேரால் நடக்கும் பல்வேறு நாட்டுக் கலவரங்கள், கொலைகள், குற்றங்களைத் தவிர்க்க மதச்சார்பற்ற நடுநிலை அரசாங்கம் பாரதத்தில் அரசியல் சட்டம் உள்ளது. மக்கள் பாதுகாப்புக்கு நாட்டில் நீதி மன்றங்களும், காவல் துறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை நெறியுடன் பணிபுரிவதற்கு அரசாங்கம், மக்கள் இருவருமே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். திரைப்படங்களுக்கு ஓரளவு தணிக்கை உள்ளதுபோல், படைப்பு இலக்கியங்களுக்கும் சீரான கட்டுப்பாடுகள் இருப்பது நாகரீகக் கலாச்சாரத்தை வளர்க்கும். அவ்விதம் சட்டங்கள் இல்லாவிட்டால் மதிவண்ணன் போன்ற காட்டுமிராண்டிக் கவிஞர்களின் தேள் நாக்கை அறுக்கவும், வாள் எழுத்தாணியை உடைக்கவும் வலுவற்ற பெண்களால் முடியாது.

இந்தியா ‘பெண்சீற்றச் சீண்டல் ‘ [Eve Teasing] குற்றத்தில் உலக அரங்கில் ஆறாவது இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு பில்லியன் மக்கள் தொகை மீறிய பாரதத்தில் எத்தனை குற்றங்கள் அனுதினமும் நிகழ்கின்றன என்பது பதிவாகப் படுவதில்லை! திரைப்படங்கள், வார மாத இதழ்கள் ஆகியவற்றில் பெண்சீண்டல்களை ஊக்குவிப்பதுப் போல், மதிவண்ணன் கவிதைப் பிம்ப்பிலக்கியங்களும் அக்குற்றங்கள் பெருக நிச்சயம் உதவி செய்யப் போகின்றன. மதிவண்ணன் கவிதைப் போதை சிரசில் ஏறி மதம்பிடித்த காளைகள் நாளைக்கு அவரது புதல்வியின் புடவையைப் பிடித்துத் துச்சாதனன் போல் உருவினால், கண்ண பெருமான் வந்து காப்பாற்ற மாட்டார்!

மதிவண்ணன் கவிதைகள் ஆபாசக் கவிதைகளா, அருவருப்பான கவிதைகளா, அற்புதக் கவிதைகளா, இலக்கியக் கவிதைகளா, புழுதி வாரி அடிக்கும் புயல் கவிதைகளா எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவை என்பது எனது கேள்விகளில் ஒன்று. ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு ‘ என்று திருக்குறள் கூறுகிறது. அவரவர் தமது உள்ளத்தின் உயர்வு, தாழ்வுக்கு ஏற்றபடி மதிவண்ணன் படைப்புகளை எந்த வகுப்பில் மேண்டுமானாலும் புகுத்தி வைத்துக் கொள்ளட்டும். என்னுடைய கருத்து இதுதான்: சிவப்பு விளக்கு இல்லங்களில் அபலைப் பெண்களை அடிமையாக்கி புழுதியில் புரட்டி எடுக்கும் ஓர் ஆணாதிக்கக் கவிஞனின் அருவருப்புப் பிம்பிலக்கியம் [Pimp Literature] என்பது. சமூகத்தின் மீது அவருக்கு ஆங்காரமும், ஆத்திரமும், ஆவேசமும் எழும் போது ஏன் பெண்களை அவமானப் படுத்தி அவர் சங்கை ஊதுகிறார் என்பது எனக்குப் புரிய வில்லை! அவர் சவுக்கால் அடிப்பது அவரை மிதிக்கும் சமூகத் திமிங்கங்களை அல்ல! அவர் தன் காலடியில் அமுக்கி மிதித்துக் கொண்டிருக்கும் தாயை, தாரத்தை, தங்கையை, தமக்கையைப் போன்ற பெண்களைத்தான்!

மதிவண்ணன் கவிதையைப் பற்றி விமரிசனம் செய்த பெண் எழுத்தாளர் அவரது ஜாதியையும், பிறந்த குலத்தையும் ஏன் குறிப்பிட்டார் என்பது எனக்குத் தெரியவில்லை. அவரது கவிதைகளில் வரும் அருவருப்பான உதாரணங்களைக் கக்கியதற்கு, அவரது தாழ்ந்த வகுப்பைக் காரணம் காட்டுகிறாரா அல்லது தாழ்ந்த வகுப்பிலிருந்து உன்னத கலைத்துவப் பீடத்தைத் தொட்டுவிட்டார் என்பதைப் பாராட்டுகிறாரா என்பது தெரியவில்லை. மதிவண்ணன் தாழ்ந்த சமூகத்தில் இன்னல்கள் அடைந்து, அவற்றைக் கவிதைப் பாம்புகளாகப் படைத்துத் தமிழ் அன்னையின் கழுத்தில் கட்டுகிறார் என்பது என் கருத்து! மதிவண்ணன் கவிதைகளில் தனிப்படக் கூறும் அமங்கலப் பெண்ணியல் உதாரணங்களில் தவறு எதுவும் இல்லை என்று தகுதி அளிக்கும் பெண்ணெழுத்தாளரும் தன்னினத்தை அவமானம் செய்வதற்கு மறைமுகமாகத் தூண்டுகிறார் என்பது எனது அழுத்தமான கருத்து.

அவரது கவிதை வரிகள் துப்பும் உதாரணங்கள் வயிற்றைக் குமட்டுவதால் அதில் இருப்பதாகத் தெரியும் சிறிது கவித்துவமும், கலைத்துவமும் ஆவியாகிப் போய் விடுகின்றன. வெறுப்புக் கனல் பொங்கி அருவருப்பு உதாரணங்களைக் கக்கும் போது, மதிவண்ணன் மனித நிலையிலிருந்து மிருக யுகத்துக்குத் தாவி விடுகிறார். திரும்பத் திரும்ப பெண்ணின் அந்தரங்க உறுப்புகளையும், அவளது இயற்கையான உயிரின இயக்கங்களையும் அவமதித்து எழுதுவது அவரது கருத்தை அழுத்தமாகக் காட்டவில்லை! அவருக்குத் தனது தாய், தாரம், தங்கை, தமக்கை, புதல்வி மீதிருந்த அமில வெறுப்பையும், இகழ்ச்சியையும் பளிச்செனக் காட்டுகிறது. வார்த்தைகளைக் காரசாரமாய் கொட்டிச் சமுகத்தின் நெஞ்சைக் கவரக் கையேந்தும் மதிவண்ணனின் வெறி பிடித்தக் கவிதைகளைப் படிக்கும் போது, அவரது அரக்கத்தனத்தின் மீது எவருக்கும் சிறிதளவு இரக்கம் கூட உண்டாவதில்லை.

மதிவண்ணன் பெண்ணினத்தை மற்றுமின்றித் தன்னினத்தையும் தாக்குவது வியப்பாக இருக்கிறது. ‘தினந்தோறும் நரகலைத் தின்று கொண்டிருக்கிறது என் ஜனம், தெரிந்து பாதி, தெரியாமல் பாதி! ‘ இவ்விதம் தன் குலத்தைச் சாடும் கவிஞர் திலகம், எந்தப் பாதையில் தன்னினம் செல்ல வேண்டு மென்று எதிர்காலத்துக்கு வழிகாட்டுகிறார் ? பிரச்சனைகளைச் சமூகத்துக்கு எடுத்துக் காட்டும் கவிஞர் பிறர் உதவியை நாடுகிறாரா ? அல்லது வேண்டாம் என்று சொல்கிறாரா ? நடுத்தெருவில் இவற்றை எல்லாம் பிள்ளையார் முன்பு போட்டு உடைத்து விட்டு, எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் என்று நழுவிச் சாமர்த்தியமாக ஓடி விடுகிறார்.

விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய சிறுகதையில் மீனவக் குடியினர் சிலரைப் பெரியவர் ஒருவர், நாற்றமுள்ள மீன் தளத்திலிருந்து மீட்டு, பூமணம் கமழும் நந்த வனத்தின் குடிசையில் கொண்டு போய் தங்க வைத்தாராம். ஒருநாள் தங்கிய மீனவர் அனைவரும் குடிலின் வாசனை தாங்க முடியவில்லை என்று புகார் செய்து, மீண்டும் தமது பழைய மீன் குடிசைகளுக்கே ஓடிவிட்டார்களாம். இந்த கதை சொல்லும் பாடம் என்ன ? பெண்ணை அவமதிக்கும் படைப்புகளிலே என்றும் புரண்டு கொண்டு வந்தவர்கள், கண்ணியப் படைப்புகளைச் சுவைத்துக் காலந்தள்ள மாட்டார்கள் என்பதே! மதிவண்ணனின் கவிதை வரிகளுக்குத் திண்ணையில் ஓரளவு கண்டனம் கூட தெரிவிக்காத பெண் எழுத்தாளர், அவரது அமங்கல உதாரணங்கள் மிகுந்த கவிதைகளைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் அச்சிட்டு வெளியிட்டால், எத்தனைப் பெற்றோர் அதிர்ச்சியும், அருவருப்பும் அடைந்து அதைக் குப்பையில் எறிவார் என்று எண்ணிப் பார்க்கட்டும்!

****

S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 21, 2005)]

Series Navigation

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

பவளமணி பிரகாசம்


புது மில்லினியத்தில், மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொடர்பு யுகத்தில், தூரங்கள் சுருங்கி, உலகம் சிறிய கிராமம் போலாகி விட்டது. ராட்சஸ அளவில் மாறுதல்கள் ஏற்படும் போது மக்கள் வாழ்க்கைத்தரமும், கண்ணோட்டங்களும், குறிக்கோள்களும் மாறிப்போவது எதிர்பார்க்க வேண்டிய ஒரு விளைவு. ஆனால் அந்த மாற்றங்கள் அத்தனையும் நல்லவையாக இருக்குமென்றோ, அவற்றை அனுமதித்து ஆற்றோடு அடித்துச் செல்லப் படும் மரக்கட்டைபோல் நாம் வாழ்க்கை பயணத்தைத் தொடரலாம் என்றோ கூற முடியாது.

மனதை சஞ்சலப்படுத்துகின்ற, புதுமை என்ற பெயரில் அபத்தமான, ஆபத்தான விஷயங்கள் அரங்கேறுவதை பொறுப்புள்ள சிந்தனையாளர்களும், சமூகநலம் விரும்புபவர்களும் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியாது, கூடாது. குறிப்பாக என்றும் இல்லாத வகையில் மாதரை இழிவு செய்யும் மடமையை இன்று அதிக அளவில் காண்கிறோம். பொழுதுபோக்கிற்கும், அறிவு வளர்ச்சிக்கும் உதவுகின்ற அற்புத சாதனங்களான திரைப்படங்கள், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் ஆகிய மூன்றிலும் இன்று பெண் சித்தரிக்கப்படும் விதம் மிகவும் ஆத்திரமூட்டுவதாகவும், கவலைப்பட வைப்பதாகவும் இருக்கிறது.

புற அழகு ஒன்றே பிரதானம் என்று புதிய வேதம் ஓதப்படுகிறது. பல நாட்டு நிறுவனங்களின் வியாபாரம் பெருக, ஒப்பனை பொருட்களின்பால் அபரிதமான, ஆடம்பரமான மோகம் ஏற்படும் வகையில் 24 மணி நேரமும் விளம்பரங்கள் வீடு தேடி வந்து தாக்குகின்றன. அழகுணர்ச்சிக்கும், பாலின கவர்ச்சிக்கும் வேறுபாடு தெரியவில்லை. அரைகுறை ஆடையில், அங்கங்களை ஆபாசமாக குலுக்கி ஆடுகின்ற மங்கையரை வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் காணும் போது மதிப்பும், பெருமையும் நிறைந்த பெண்மை இழிவு படுத்தப்பட்டு, வக்கிர உணர்வுகளுக்கு இரையாவதைத் தடுப்பது எங்ஙனம் என்ற ஒரு ஆற்றாமை எழுகிறது.

மூலைக்கு மூலை அழகிப்போட்டி, தேசத்தின் தலைநகரிலேயே சொல்ல நாக்கூசும் வகையில் நடத்தப்படும் ஆடை அலங்கார அணிவகுப்பு இவை இன்றைய தலைமுறைக்கோ, அடுத்த தலைமுறைக்கோ நன்மை பயப்பனவேயல்ல. கண்ணியமான, சக்தி வடிவான, ஆரோக்கியமான சமுதாயத்தை சிருஷ்டிக்கும் பொறுப்புள்ள மாதரை காமக்கேளிக்கைக்கான வெறும் சதைப் பிண்டங்களாய் பாவிப்பது நியாயமேயில்லை.

இது ஒரு புறமிருக்க மற்றொரு அநியாயமும் நடக்கிறது. மேலே கூறிய 3 மக்கள் தொடர்பு சாதனங்களிலும் பெண் பாத்திரங்கள் சித்தரிக்கப்படும் விதமும் சரியேயில்லை. முக்காலே மூணு வீசம் அவர்கள் சிந்தனைகளும், செயல்களும் பாராட்டும் விதத்தில் இருப்பதேயில்லை- வக்கிர புத்தி உள்ள கொடுமைக்காரிகளாய், எதேச்சாதாரிகளாய், சுயகெளரவமற்ற கோழைகளாய், பிறர் பொருளுக்கு ஆசைப்படும் பேராசைக்காரிகளாய், நயவஞ்சகிகளாய், ஒழுக்கமில்லாத குடிகேடிகளாய், கையாலாகாமல் அழுகின்ற அபலைகளாய்- இப்படிப்பட்ட பெண்களைத்தான் 24 மணி நேரமும் சந்திக்கிறோம். இயற்கைக்கு புறம்பான உணர்ச்சிகள், சம்பவங்கள் இவை இன்றைய படைப்பாளிகளின் வறண்ட, விபரீதமான கற்பனையைக் காட்டுகின்றன. யதார்த்தமான மேடு, பள்ளம் நிறைந்த மனித ஜீவிதத்தை, அதிலுள்ள இன்ப துன்பங்களை அழகான கற்பனைக் கதைகளில் காட்டி பார்ப்போரை வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை தாங்கி முன்னேறச் செய்யும் வழிகாட்டிகளாய் அமைப்பது அன்றோ அறிபுடைமை!

சட்டப்படியும், பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமடைந்து, அறிவு தாகத்துடன், ஆளுமைத்திறனுடன், தன்னம்பிக்கையுடன், மனித நாகரிக சிகரத்தை நோக்கி நடை போட சாதகமான சூழ்நிலையிலுள்ள இன்றைய பெண்களை கடிவாளமிடாத காட்டுக்குதிரைகளாய் தறிகெட்டு ஓடி அழிவைக் கொணரத்தூண்டும் அனைத்து போக்குகளையும் எதிர்த்து போராடுவோமாக!

Series Navigation