மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

நிக்கோலஸ் க்ரிஸ்டாஃப் (தமிழில்: ஆசாரகீனன்)


சூடான் – சாட்(Chad) எல்லை வழியே — நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஒரு மிக மோசமான இனத் தூய்மையாக்கல், இங்கு சஹாரா பாலைவனத்தின் தென்கிழக்கு விளிம்புகளில் பரவலாகிக் கொண்டிருக்கிறது. சூடானின் அரபு ஆட்சியாளர்களால் கொலை, பாலியல் வன்முறை மற்றும் சூறையாடல்களின் வடிவத்தில் நடத்தப்படும் இது இதுவரை ஏழு லட்சம் ஆப்பிரிக்க சூடானிய கறுப்பினத்தவரை தங்கள் கிராமங்களை விட்டுத் தப்பி ஓடும்படி செய்திருக்கிறது.

இப் பாலைவனமெங்கும் ஆடு, மாடுகளின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன; காட்டு விலங்குகள் தோண்டி எடுத்து விடாதபடி, அடக்கம் செய்யப்பட்ட பல அகதிகளின் உடல்கள் காட்டுச் செடிகளால் மூடப்பட்ட புதிய புதைகுழிகளில் கிடக்கின்றன. அளவு கடந்த உபயோகத்தால் வறண்டு கொண்டிருக்கும் கிணறுகளைச் சுற்றி எப்போதும் அகதிகளின் கூட்டம். தங்கள் உறவினர்களின் உடல்களைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் அழுது கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

இதில் மேலை நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளும் அவசரமாகத் தலையிட வேண்டி இருக்கிறது. விமான நிலையங்களோ, மின்சாரமோ, சரியான சாலை வசதிகளோ இல்லாத வறிய பகுதிகளில் வசிப்பவர்களைத் தாக்கிக் கொல்லும் சாமர்த்தியம் இருப்பதால், இத்தகைய பெருந்திரளான மக்களைக் கொன்று விட்டு, சூடானின் தலைவர்கள் தப்பித்து விடுவது சாத்தியமாகி விடக் கூடாது. .

உலகின் மிகக் கொடூரமான அரசுகளுள் ஒன்றான சூடானின் அரசே இங்கு குற்றவாளி. இதன் அரபுத் தலைவர்கள், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தெற்குப் பகுதியைச் சேர்ந்த ஆப்பிரிக்க கறுப்பினத்தவருக்கு எதிரான ஓர் உள்நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இந்த அரசு, ஜஞ்ஜாவீத் எனப்படும் வெளிர்-நிற அரேபியர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, சாட் நாட்டுக்கு அருகிலுள்ள டார்பர் பகுதியில் இருக்கும் கறுப்பினத்தவரைக் கொன்றும் விரட்டியும் வருகிறார்கள்.

‘அதிகாலை நான்கு மணிக்கு, இரண்டு ஹெலிகாப்டர்கள் மேலே வட்டமிட குதிரைகளிலும், ஒட்டகங்களிலும், வாகனங்களிலும் அவர்கள் வந்தார்கள். என்னுடைய கிராமத்தில் 50 பேரைக் கொன்றார்கள். என் அப்பா, பாட்டி, மாமா, இரு சகோதர்கள் ஆகிய அனைவரும் கொல்லப்பட்டனர் ‘ என்று நினைவுகூர்கிறார் சூடானின் விவசாயியான 26-வயதான இத்ரிஸ் அபு மவுஸா.

‘எந்தக் கறுப்பரும் மிஞ்சுவதை அவர்கள் விரும்பவில்லை ‘, என்கிறார் அவர்.

இதைப் போன்றதே பல அகதிகளின் கதையும். ‘அவர்கள் ஆடு மாடுகளையும், குதிரைகளையும் எடுத்துக் கொண்டார்கள், ஆண்களைக் கொன்றார்கள். பெண்களைக் கற்பழித்தார்கள், பின்னர் ஊரையே கொளுத்தினார்கள் ‘ என்கிறார் தப்பிப் பிழைத்த 60-வயதாகும் அகதி அபுபக்கர் அஹ்மத் அப்தல்லா. இவர் சாட் நாட்டில் டெளகெளல்டெளகெளலி என்ற ஊருக்குத் தப்பி ஓடியவர்.

‘கறுப்பர்களாகிய எங்களை பூண்டோடு அழிப்பதே அவர்களது ஆசை ‘, என்கிறார் ஹலிமி அலி சவுஃப். இவரது கணவர் கொல்லப்படவே, தன் கைக்குழந்தையுடன் சாடுக்குத் தப்பி ஓடியவர் இவர்.

ஹலிமி போன்றவர்கள் சாடுக்குத் தப்பிச் சென்றாலும், அவர்களுடைய இன்னல் தீரவில்லை. எல்லையோர கிராமங்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வது வாடி எனப்படும் அங்கு ஓடும் நதியே. இது இரு நாடுகளுக்கும் இடையே ஓடுவது. ஆற்றில் நீர் மொள்பவர்களையும், அங்கு விறகு பொறுக்குபவர்களையும் அக்கரையிலிருந்தபடி சுடுவது ஜஞ்ஜாவீத்களின் வாடிக்கை.

சில நாட்களுக்கு முன் ஜகாரியா இப்ராஹிம் என்பவர் இதே போல சுட்டுக் கொல்லப்பட்டார். ‘குடிசை கட்ட குச்சிகளைக் கொண்டுவரப் போனவர்தான் ‘ என்கிறார் பரிதாபகரமான தோற்றத்திலிருக்கும் அவரது மனைவி ஹவாய் அப்துல்லா. இவருக்கு ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள்.

ஆடு மாடுகளைக் கொள்ளை அடிக்கவும், சுடானிய அகதிகளைத் தாக்கும் பொருட்டும் ஜஞ்ஜாவீத்கள் தொடர்ந்து சாடினுள் நுழைந்து வருகிறார்கள். போதாக் குறைக்கு சூடானின் படைகளும் டினா மற்றும் பேஸா போன்ற சாடின் கிராமங்கள் மீது குண்டு வீசியுள்ளது.

மணல் பரப்பாகவும், புதர்களாகவும், ஆங்காங்கு காணப்படும் பாலைவனச் சோலைகளாகவும் இருக்கும், மக்கள் தொகை அதிகமில்லாத இடங்களிலேயே இந்த அராஜகங்கள் நடத்தப்படுகின்றன. இங்கிருக்கும் சாலைகளோ நான்கு சக்கர வாகனங்களால் எளிதில் கடக்க முடியாத படி புழுதியால் ஆனவையே. (ஆப்பிரிக்கா பற்றிய ஒலி-ஒளிக் காட்சியைக் காண: www.nytimes.com/kristof)

அளவில் ஒத்ததாக இல்லாவிட்டாலும், 1994-ல் ருவாண்டில் நடந்த இனப்படுகொலை போன்றதே இது என்று பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் விவரித்தார் சூடானுக்கான ஐ.நா. ஓருங்கிணைப்பாளர் முகேஷ் கபிலா. ‘இது ஓர் இனத் தூய்மைப்படுத்தலே, இதுவே இன்று உலகின் முன்னுள்ள பெரும் மனிதாபிமானப் பிரச்சினை, ஆனால் உலகம் ஏன் இது பற்றி அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை ‘, என்கிறார் அவர்.

கணக்கிடப்பட முடியாத, பல்லாயிரக் கணக்கான சூடானின் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டுள்ளனர். இனத் தூய்மைப்படுத்தலால் பாதிக்கப்பட்டு சூடானின் பிற பகுதிகளுக்கு தப்பியோடிய ஆறு லட்சம் பேர்கள் பட்டினியாலும், நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாடுக்கு தப்பிச் சென்ற ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேர்களின் நிலை சாட் பாமரர்களின் கருணையினால் சற்றுப் பரவாயில்லாமல் இருக்கிறது. சாடியர்களும் ஏழைகள்தான் என்றாலும், தங்களுக்குக் கிடைக்கும் எளிய உணவையும் தண்ணீரையும் சூடானிய அகதிகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சாடின் பாமரர்களுள் ஒருவரான ஆடம் இஸக் அபுபகர் சொல்கிறார், ‘எங்களுக்கு உணவோ தண்ணீரோ கிடைத்தால், அதை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், அவர்களை அப்படியே விட்டு விடமுடியாது. ‘

இதே போன்ற கருணையையும், முன் முயற்சியையும் அமெரிக்கர்களும் காட்ட வேண்டும். ஐ.நா. பாதுகாப்புக் குழு மற்றும் உலகின் முன் சூடானை நிறுத்தி, இத்தகைய இனப் படுகொலையை நிறுத்தச் செய்ய வேண்டும். அதிபர் புஷ், சூடானில் அமைதி நிலவ ஏற்கனவே முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இது முந்தைய அதிபர்கள் அனைவரும் அமைதியை ஏற்படுத்த செய்த முயற்சிகளை விட அதிகமானதே. தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலை எதிர்கொள்ளவும் அவர் அத்தகைய உறுதியைக் காட்ட வேண்டும்.

இந்த 21-ஆம் நூற்றாண்டில் எந்த ஓர் அரசாங்கமும் இனத் தூய்மைப்படுத்தலை மேற்கொண்டு, ஏழு லட்சம் பேர்களை தங்கள் இடத்திலிருந்து விரட்ட அனுமதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்படுபவர்கள் ஆங்கிலம் பேச முடியாத, தொலைபேசி வசதி இல்லாத, உலகின் ஒரு கோடியில் வசிக்கும் துரதிஷ்டம் மிக்க ஆப்பிரிக்கப் பழங்குடியினர் என்பதால் அவர்களைப் பற்றிக் கவலைப்படாத பட்சத்தில், நாம் வெட்கித் தலைகுனிய வேண்டி வரும்.

நன்றி: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் – மார்ச் 24, 2004.

Nicholas D. Kristof – ஒரு பிரபலமான கட்டுரையாளர். நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் தொடர்ந்து எழுதி வருபவர். டைம்ஸ் பத்திரிகையில் இணை நிர்வாக ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். இவரது மனைவியான ஷெரிலும் ஒரு பத்திரிகையாளர். இவர்கள் இருவரும் இணைந்து, சீனாவின் தியான்மன் சதுக்கத்தில் நடந்த ஜனநாயகத்துக்கான போராட்டங்களைப் பற்றி எழுதிய நேரடிச் செய்திகளுக்காக 1990-ம் ஆண்டு புலிட்சர்(Pulitzer) பரிசு பெற்றனர். ஜப்பானிய மற்றும் சீன மொழிகளையும் அறிந்தவர் இவர்.

aacharakeen@yahoo.com

சூடான் பற்றிய பிற கட்டுரைகள்:

சூடானின் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை

சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்