மனமா ? மத்தளமா ?

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

கரு.திருவரசு


மனமென்பது மத்தளமாய் மாறிவிட்டது – அது
வலம்இடமாய் அடிவாங்கித் தேறிவிட்டது!
குணமென்பது ஊஞ்சல்போல ஆடுகின்றது – அதில்
கொள்கைகளும் மேல்கீழாய் ஆடுகின்றது!

அருளென்பது அகவாழ்வினை அழகுசெய்வது – அது
அணியாய்வெறும் இலக்கியத்தில் அழகுசெய்யுது!
பொருள்சொல்வது கேட்டிரவும் புலருகின்றது – பணப்
போர்வையிலே வியர்வைபாவம் உலருகின்றது!

அறமென்பது தரம்விட்டுயிர்க்(கு) அஞ்சுகின்றது – அது
அதிகாரத்தையும் பணவீரத்தையும் கெஞ்சுகின்றது!
திறமென்பது திசைமாறியே திணறுகின்றது – பொருள்
தருவோர்களின் உறவாடலில் உளறுகின்றது!

பணமென்பது படைத்தவனை வென்றுவிட்டது – அதில்
பத்தியொடு முத்தியெலாம் நின்றுவிட்டது!
கனமென்பதும் திருவென்பதும் கனம்இழந்தது – நாலு
காசிருந்தால் கழுதைகூட இசைவழங்குது!

மனமென்பது மத்தளமாய் மாறிவிட்டது – அது
வலம்இடமாய் அடிவாங்கித் தேறிவிட்டது!
குணமென்பது ஊஞ்சல்போல ஆடுகின்றது – அதில்
கொள்கைகளும் மேல்கீழாய் ஆடுகின்றது!

thiruv@streamyx.com

Series Navigation