பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

அரவிந்தன் நீலகண்டன்


65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நர்மதை நதிப்பகுதிகளில் வாழ்ந்த டைனோசார் ஒன்றின் தொல்லெச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாரதத்தின் தொல்லுயிர் ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் மூலம் டைனோசாரின் வடிவத்தை ஊகித்தறிந்துள்ளனர். முப்பதடி உயர சிறுகொம்புடைய புதுவகை டைனோசாரான இது மாமிச பட்சிணியாகும். இந்த ஆராய்ச்சிகளில் அமெரிக்காவினைச் சார்ந்த நேஷனல் ஜியாக்ராபிக் அமைப்பினர் பெரும் ஒத்துழைப்பினையும் உதவியையும் நல்கினர். இந்த மாமிச பட்சிணி டைனோசாரின் அறிவியல் பகுப்பு பெயர் ராஜாஸாரஸ்நர்மதென்ஸிஸ் என்பதாகும். 65 மில்லியன் வருடங்களுக்கு முன் எனும் போது இந்திய நிலப்பரப்பு இன்று அது இணைந்திருக்கும் ஆசிய நிலப்பரப்பிலிருந்து பிரிந்திருந்தது. இப்பெரும் டைனோசார்கள் உலாவிய காலகட்டத்தில் இன்று பாரதம் ஒட்டியிருக்கும் ஆசிய நிலப்பரப்புக்கும் பாரத நிலப்பரப்பிற்குமிடையே தெதைஸ் எனும் பெரும் கடல் இருந்தது. இன்றைய ஆசிய நிலப்பரப்பினை நோக்கி பாரதம் வருடத்திற்க்கு 15 செமீ என்கிற வேகத்தில் வந்து பின் இணைந்த போது இப்பெரும்கடல் மறைந்து போய்விட்டது. இந்த நிலப்பரப்பு இணைவில் எழும்பியதே ஹிமாலய மலைத்தொடர். இந்த நில இணைவு மற்றும் மலைத்தொடர் உருவாக்கம் ஆகிய நிலவியல் நிகழ்வுகள் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே முழு நிறைவு அடைந்ததாக கருதப்படுகிறது. எனவே நர்மதை நதியோர காடுகளில் டைனோசார்கள் உலாவிய போது இன்றைய ஹிமாலயம் இருந்திருக்க முடியாது. 18 வருட ஆராய்ச்சியின் நிறைவில் அடைந்துள்ள இவ்வெற்றி டைனோசர்களின் பரிணாம வரலாற்றை குறித்தும் நாம் வாழும் தேச நிலப்பரப்பின் ஆதிப்புவியியல் வரலாற்றையும் நமக்கு தெளிவு படுத்தும். பாரதத்தில் முதன்முதலாக டைனோசார் தொல்லெச்சங்கள் கேப்டன் வில்லியம் ஸ்லீமென்னால் ஜபல்பூர் அருகே பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டெடுக்கப்பட்டன. அதன் பின்னர் மத்திய பாரதத்திலும் குஜராத்திலும் பல டைனோசார் எலும்புகள், முட்டைகள் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது கண்டறியப்பட்டுள்ள ராஜாஸாரஸ் நர்மதென்ஸிஸின் தொல்-எலும்பெச்சங்கள் இந்திய புவியியல் அமைப்பின் சுரேஷ் ஸ்ரீவஸ்தவாவாலும், பஞ்சாப் பல்கலைக்கழக தொல்லுயிரியலாளர் அசோக் ஸாக்னியாலும் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும் இது குறித்த மிகத்தெளிவான புவியியல் தகவல்கள் ஸ்ரீவஸ்தவாவினால் தயாரிக்கப்பட்டன. பின்னர் அமெரிக்க தொல்லுயிர் ஆய்வாளர்களான பவுல் ஸெரினோ மற்றும் ஜெப் வில்ஸன் ஆகியோரால் இது ஆராயப்பட்டது. மடகாஸ்கரில் காணப்படும் டைனோசார் தலையோடுகளில் காணப்படுவதுபோன்ற தலைச் சிற்றெலும்பு இந்திய கண்டுபிடிப்பிலும் இருப்பதை இவர்கள் ஆவலை அதிகப்படுத்தியது. தங்கள் சக இந்திய ஆய்வாளர்களின் களப்பதிவுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவரை அறியப்படாத ஒரு புதிய டைனோசர் உயிர்வகை என்பதனை அவர்கள் அறிந்து கொண்டனர். அதன் பின்னர் மத்திய பாரதத்திலும் குஜராத்திலும் பல டைனோசார் எலும்புகள், முட்டைகள் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அறியப்பட்ட இந்திய க்ரிடேஸியஸ் கால டைனோசார்களாவன இந்தோஸாரஸ் டைனோசார்களும் தற்போது அறியப்பட்டுள்ள ராஜாஸாரஸும், அபெலிஸாரிடே குடும்பத்தையும் ஸிரெடோஸாராய்டியா பெரும் குடும்பத்தையும் சார்ந்தவை. இவையாவுமே தெரோபோடா பெருவகைக்கிளையை சார்ந்தவையாகும். ஆரம்ப ஜுராஸிக் கால கட்டத்தில் உருவான அபெலிஸாரிடே குடும்பத்தைச் சார்ந்த டைனோசார்களில் பாரத பகுதிகளில் கிடைப்பவையோ பொதுவாக பிந்திய க்ரிடேஸியஸ் காலத்தை சார்ந்தவையாக உள்ளன (இன்றிலிருந்து எழுபது முதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இவையே டைனோசார்களின் இக்குடும்ப கிளையில் இறுதிப்பெரும் ராட்சதப்பல்லிகள். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஏதோவொரு நிகழ்வு இவற்றை முழுமையாக அழித்தது. இன்று நர்மதையையும் அதையொட்டிய பகுதிகளிலும் அன்று ராஜாஸாரஸ் நடமாடிய காலகட்டத்தில் நாமறிந்த நிலப்பரப்பாக பாரதம் இருக்கவில்லை. அது பாரதம் மடகாஸ்கர் ஆப்ரிக்கா தென் அமெரிக்கா ஆகியவை இணைந்ததோர் நிலப்பரப்பாக இருந்ததிலிருந்து முன் குறிப்பிட்ட படி ஆசியா நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. நாற்பதிலிருந்து இருபது மில்லியன் வருடங்களுக்கு முன் பாரதம் (என நாம் இன்றறியும் நிலபரப்பு) ஆசிய நிலப்பரப்புக்குள் நுழைந்தது. ஆனால் அச்சமயத்தில் ராட்சத பல்லிகளின் சகாப்தம் முடிந்து போய் பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சி வேகமடைய தொடங்கிவிட்டது. ஆக நாமறியும் நிலப்பரப்பாக பாரதம் விளங்கிய எக்கால கட்டத்தையும் சார்ந்து நாம் நமக்கு கிடைக்கும் டைனோசார் தொல்-எச்சங்களை காணமுடியாது. ‘டைனோசார்கள் மட்டுமே கண்டங்களின் நகர்வுக்கு முன்னான பெரும் நிலப்பரப்பில் வாழ்ந்த பேருயிரினங்கள் என்பதை நாம் கணக்கில் கொள்வது முக்கியமானது” என்கிறார் பவுல் ஸெரினோ.

இந்த ஆராய்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகித்தது அமெரிக்காவின் நேஷனல் ஜியாக்ராபிக் அமைப்பு. நம் நாட்டில் தேவையற்ற திரைப்பட கூத்தடிப்பில் பணத்தை முடக்கும் தயாரிப்பாளர்கள் தயாரித்த குப்பைகள் போதுமென்று திரைப்படங்களை முழுமையாக நிறுத்திவிட்டு அடுத்த பத்தாண்டுகளுக்கு பாரதத்தின் உயிரியல் வளங்களை அதன் பழம் நிலவியல் என சிறந்த விவரணப்படங்களை எடுக்கலாம். கிராமங்கள் தோறும் அவற்றை இலாபகரமாகவே திரையிடும் அமைப்புகளை உருவாக்கலாம். இலாபமும் புண்ணியமும் கிடைப்பதாக இது அமையும். எங்கிருந்தோ வந்து ஒரு நேஷனல் ஜியாக்ராபிக்காரனால் நமது அறிவியலாளர்களுக்கு உதவி இலாபமும் சம்பாதிக்க முடிகிறது. ஏதாவது ஒரு தமிழ்படத்தின் பட்ஜெட்டைஇந்தமாதிரி விஷயங்களுக்கு செலவிட்டால் நம்மாலேயே இதை சாதித்திருக்க முடியுமே!

மேலதிக விவரங்களுக்கு காண்க:

http://news.nationalgeographic.com/news/2003/08/0812_030812_indiadinosaur.html

http://www.ias.ac.in/meeting/myrmeet/14mym_talks/asahni.htm

infidel_hindu@rediffmail.com

Series Navigation