பாசிச பூதமும் குட்டித்தேவதையும்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

மண்ணாந்தை


ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் குறித்து சிலர் செய்யும் அபத்த வியாக்கியானங்களை அண்மையில் திண்ணையில் காண நேரிட்டது. தம் அறியாமையை வெளியிட செயற்கையான, மிக வருந்தி உருவாக்கப்பட்ட மென்மைத்தன்மையை ஒரு உக்தியாகவே பயன்படுத்தியபடி, விஷம் கொட்டுபவர்கள் மற்றவர்களை பாம்பு என விவரிப்பது ஒரு அவலச்சுவையுடன் கூடிய அபத்த அழகாகத்தான் இருக்கிறது. சிலந்தி முதல் டைனோசர் ஈறாக அனைத்து மிருகங்களையும் தன்னை எதிர்ப்பவர்களை வர்ணிக்க பயன்படுத்தியாயிற்று. அவ்வப்போது யாரோ அப்போஸ்தலரோ வேறொவரோ பார்த்ததாக கூறுவார்களே, அது போல தனக்கு – தனக்கு மட்டுமே- தெரியும் காட்சிகளையும், வர்ணித்தாயிற்று. அந்த காட்சிகளில்தான் என்னவொரு அட்டகாசமான கூட்டுக்கலவை!- குட்டித்தேவதை, ஹிட்லரின் அணிவகுப்பு என்று! விரைவில் குமரி மாவட்ட ஊர்ப்புறங்களில் நடக்கும் ‘கன்வென்ஷன்களில் ‘ (அதுதான் அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள்) மேற்படி ஆசாமி, இந்த காட்சிகள் தெரிவதைச் சொல்லி தேவ ஊழியம் செய்யலாம் (கொழுத்த பணம் கிடைக்கும்); அல்லது அடிக்கடி இப்படி ‘காட்சிகள் ‘ தெரிவது தொடர்பாக நல்ல தொழில்முறை சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணலாம் (கொழுத்த பணம் செலவாகும்). எல்லாவற்றிற்கும் மேலாக தன் எதிரிகளின் பாசிச உண்மைத்தோற்றத்தை வெளிப்படுத்தியாயிற்று. அதில் பாருங்கள்!பாசிச எதிர்ப்பு என்கிற விஷயத்தில் ஈடுபட்டுவிட்டால் அப்புறம் என்ன, என்ன கப்சா விட்டாலும் அந்த கப்சாவுக்கு பின்னால் ஒரு முற்போக்கு ஒளிவட்டமும், அன்னாருக்கு தெரியும் காட்சிகளில் கூடுதலாக விரைவில் சேரும், என நம்புவோம். ( ‘ஹலோ டாக்கடை மாஸ்டர்! ஏங்கண்ணா உங்ககிட்டயிருக்கிற ஊசிப்போன வடையெல்லாம் போணியாகணுங்காட்டி, அதை ‘ஹிந்துத்வ பாசிச எதிர்ப்பு வடைகள் ‘ அப்படின்னு ஒரு தட்டி கட்டி வச்சீங்கன்னா நல்லா வேகமா வித்துப் போகுங்கண்ணா! ‘)

ஆனாலும் இந்த கட்டுரைகளையும் ‘எதிர்வினையாடியதையும் ‘ படித்த போது பல தெளிவுகள் ஏற்பட்டன. இந்த ஆர்.எஸ்.எஸ் என்கிற பாசிச இயக்கத்தைப் போல ஒரு கீழ்த்தரமான இயக்கம் உலகத்தில் உண்டா! நம் பெண்ணிய ஷெர்லக் கோம்ஸ் பயங்கர உண்மைகளை வெளிப்படுத்துகிறார், ‘உயர்சாதி ஆண் இந்துக்களுக்காக ஜெயேந்திர வகையறாக்களின் இயங்குமுறையில் அமைந்த செயல்களுக்காக காஞ்சி மடத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் கொடுக்கப்படும் அதிதீவிர முக்கியத்துவம் ‘. ஆகா எத்தனையோ தடவை எத்தனையோ முக்கிய விழாக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸில் பெளத்த, ஜைன, சீக்கிய ஏன் கிறிஸ்தவ தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நம் பெண்ணிய ஷெர்லக்கின் மேதமையை என்னவென்று நினைத்தீர்கள். சரியாக எங்கே காஞ்சி பரமாச்சாரியாரை ஆர்.எஸ்.எஸ் பெருமைப்படுத்தியிருக்கிறது என்பதை கண்டுபிடித்து மீண்டும் ஒரு பாசிச சதியை வெளிப்படுத்தி முற்போக்குகளின் கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு மீண்டும் சாம்பியனாகிறார் பெண்ணிய ஷெர்லக்! என்ன, சில பாசிஸ்ட் வெறியர்கள், ஆணாதிக்க பிராம்மணிய கைக்கூலிகள் பின்வரும் தகவல்களை முன்வைக்கலாம். அதாவது ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிமுக்கிய விழாவான நாகபூரில் நடக்கும் விஜயதசமியில் தலைமையேற்றவர்களில் பெளத்த துறவிகள் உண்டு என்றும் ஏன் புகழ்பெற்ற கிறிஸ்தவ இறையியலாளரான ஜோஸப் புலகுன்னலும் ஆர்.எஸ்.எஸ் விழாவிற்கு தலைமைத் தாங்கியுள்ளார் என்றும் சில ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் ஊளையிடலாம். ஆனால் அதற்காகவெல்லாம் மசிந்து நாம் ‘நம் துப்பறிவாளர் கஷ்டப்பட்டு கண்டுபிடித்துள்ள ஆய்வுத்தகவல் உண்மையல்ல; ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாட்டை முழுமையாக நோக்க வேண்டும். அப்படி நோக்கினால் அது எந்த முற்போக்கு செமினார்வாலாக்களை விடவும் பரந்த ஏற்புத்தன்மையை வெளிக்காட்டுவதாக செயல்படுவது புரியும் ‘ என முடிவு கட்டிவிடக் கூடாது. ஞாபகமிருக்கிறதல்லவா! ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிஸ்ட் பூதநாகம், எப்போதுமே நாம் அதை எதிர்க்கும் முற்போக்கு ‘குட்டித்தேவதை ‘யுடன் நிற்கவேண்டுமாக்கும். இதேதடா இந்த ‘குட்டித்தேவதை ‘ ஈவெரா தாடியும், ஸ்டாலின் மீசையும், ஹிட்லர் வாத்து நடையுமாக இருக்கிறதே என்று கேட்கும் அவிசுவாசிகள் நித்திய நெருப்பு எரியும் நரகத்தில் ‘பாசிஸ நாசி மனநிலை கொண்ட ஆணாதிக்க பிற்போக்கு பிராம்மணீய மனுவாதி ‘ முத்திரையிடப்பட்டு (மூச்சு வாங்குகிறது ஏதாவது அடைமொழி விட்டுப்போயிருந்தால் பெரிய மனசு செய்து சேர்த்துக்கொள்ளுங்கள்) தள்ளப்படுவார்கள். ஹூம் என்ன செய்வது தற்போது சைபீரியா கைவிட்டுப் போனதே.

அப்புறம் ஆர்.எஸ்.எஸ்ஸின் கம்யூனிச எதிர்ப்பு பற்றியும் மிகச்சரியாக புலனாய்வு செய்து கூறுகிறார் மேற்படி துப்பறிவு. ஆர்.எஸ்.எஸ்ஸின் கம்யூனிச எதிர்ப்பு எந்த அளவுக்கு போயிருக்கிறதென்றால் அவர்கள் மரியாதையுடன் ‘பரம் பூஜனிய சர்சங்க சாலக் ‘ என அழைக்கும் ஸ்ரீ சுதர்சன்ஜி அவர்கள் இருக்கும் விஜயதசமி நிகழ்ச்சியிலேயே தலைமை தாங்க, கம்யூனிச நல்லாட்சியை எதிர்க்கும் பயங்கரவாதியான திபெத்திய நாடுகடத்தப்பட்ட அரசின் தலைவரை அழைக்கிற அளவுக்கு இவர்களது கம்யூனிச எதிர்ப்பு பாசிச வெறி தலைக்கேறியுள்ளது. அந்த பெளத்த துறவி என்ன யாசின் போல தற்கொலை குண்டு வெடிப்பு மூலம் பள்ளிக்குழந்தைகளை கொல்வது போன்ற முற்போக்கு முறைகளை பின்பற்றுகிறவரா இல்லையே கேவலமான நில உடைமை-சமுதாய பிற்போக்கு சக்திகளின் எஞ்சிய ஈனப்பிறவிகளான இவர்கள் ‘அகிம்சை மூலம் தேச விடுதலை ‘ என்கிற பூர்ஷ்வா கும்பல்களின், அமெரிக்க சிஐஏ ஏஜெண்ட். ஒருமுறை கும்பமேளா விழாவிலேயே அங்கு கூடுகிற அனைத்து துறவிகளுக்கும், சங்கராச்சாரியார்கள் உட்பட நடத்தப்பட்ட தர்மப்பேரவை கூட்டத்திற்கு தலாய் லாமாவை தலைமை தாங்க அழைக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு கம்யூனிச எதிர்ப்பு பாசிச வெறி கடுமையாகியுள்ளது. ‘அட நீங்க என்னவோ பிராம்மணிய மேலாதிக்க அமைப்பின்னீக, இவுங்க என்னென்னா சங்கராச்சாரியார்களுக்கு தலைமை தாங்க பெளத்த துறவியை அழைச்சதுக்காக சங்காராச்சாரியர்களுக்கிட்டேயிருந்தே வசை வாங்கியிருக்காங்க! எங்கயோ இடிக்குதே ‘ என்று சில சோம்பேறிகள் கேட்கலாம். ஆனால் ஞாபகமிருக்கிறதல்லவா – ‘பாசிஸ்ட் பூதத்திற்கு எதிராக குட்டித்தேவதை ‘ அந்த குட்டித்தேவதையின் வாத்துநடை அணிவகுப்பிற்காக எந்த பொய் என்றாலும் சொல்லலாமாக்கும், ஏனென்றால் அந்த பொய்களைச் சுற்றி வீசும் முற்போக்கு முடைநாற்றம் பொய்களின் அழகுக்கு அழகு சேர்க்கும். (மன்னிக்கவும் முடைநாற்றம் என்றா சொன்னேன், ரொம்ப மன்னிக்கணும், இந்த ஹிந்துத்வ பாசிஸ்ட் கழுதைக்கு தெரியுங்களா முற்போக்கு வாசனை.)

அப்புறம் மேற்படி ‘காட்சிகள்-ஸ்பெஷலிஸ்ட் ‘ சிந்து சமவெளி-ஆரிய படையெடுப்புக்கள் குறித்து அவிழ்த்துவிட்டுள்ள… மன்னிக்கவும், அதாவது ஆராய்ச்சி பூர்வமான பெண்ணிய கண்டுபிடிப்புக்கள் யாரையும் அசரவைக்கக் கூடியவை. என்ன அழகாக விஷயத்தை பிட்டுபிட்டு வைக்கிறார் பாருங்கள், ஆதாரம் என்ன எனக்கேட்க கூடிய அளவுக்கு ஆணாதிக்க வெறியர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என நம்புவோமாக. ஹரப்பா நாகரிக தளத்தில் பல அகழ்வாய்வுகளை நடத்திய அகழ்வாய்வாளரான பிஷ்ட் ‘அகழ்வாய்வு செய்யப்பட்ட இந்நகரங்களில் நடக்கையில் ரிக்வேத காலத்திய யதார்த்ததுக்குள்ளேயே மீள் நுழைவது போல உள்ளது ‘ எனக் கூறுகிற பாசிச பொய் பிரச்சாரத்தை நாம் நம் ‘குட்டித்தேவதை ‘ கை வீசி வரும் அழகுக்காக கடாசிவிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகத்தின் சடங்கியல் மற்றும் சமய வாழ்க்கையை காட்டும் முக்கிய முத்திரைகளான யோகி மற்றும் ஒற்றைக்கொம்பு மிருகம் ஆகிய இரண்டுமே தெளிவான ஆண் சின்னங்கள் எனும் ஆணாதிக்க உண்மையையும் நாம் தீயிட்டுக் கொளுத்தி விட வேண்டியதுதான். அட சோமபானச் சடங்கே ஹரப்பா நாகரிகத்தில் நிலவி வந்ததென்றும், இந்த சூழலில் ஆரிய படையெடுப்புச் சித்தாந்தத்தைக் காப்பாற்ற சோமபானச் சடங்கையே ‘ஆரியர்கள் ‘ ஹரப்பாவினரிடமிருந்துதான் கற்றனர் என்கிற அளவுக்கு போகக் கூடிய ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர். பொதுவாக இந்த ஆரிய இன/படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாட்டாளர்களுக்குள், ஒருவர் ‘அது மாடு ஓட்டி வந்தவர்களின் சடங்கு(அல்லது கடவுள்) இதுதான் ஒரிஜினல் உள்ளூர் திராவிட சடங்கு (அல்லது கடவுள்) ‘ என்பார். அதைச் சாக்காக வைத்து உள்ளூர் அரசியல்வாதிகளில் இரவல்-பெண்ணிய காட்சி-ஸ்பெஷலிஸ்ட் முதல் பூர்ண கும்ப மரியாதைக்கு ஏங்கும் மஞ்சள் துண்டு பகுத்தறிவு வரை படு ஜாலியாக ஹிந்து தர்மத்தை விமர்சிப்பார்கள். பிறகு பார்த்தால் இன்னொரு ஆசாமி ‘உண்மையில் இந்த சடங்குதான் (அல்லது கடவுள்தான்) உள்ளூர் திராவிடம் ‘ என்று 180 டிகிரிக்கு நேர்மாற்றிக் கூறுவார். பிறகு அதையும் பிடித்து ஒரு கூட்டம் உள்ளூர் அரசியல் பண்ணும். ஆக மொத்தம் பார்த்தால், அனைத்து ஹிந்து தேவதேவியரையும் ஒவ்வொரு ஆள் மாற்றி மாற்றி கைபர் போலன் கணவாய் வழியாக வந்ததாகவும், அல்லது ஹரப்பாவில் வழிபடப்பட்டவர்களாவும் கூறியுள்ளதை காணலாம். நீங்களே கொஞ்சம் யோசித்து உங்களூர் கோவிலில் அம்பாள் ஆரியக் கடவுள் என்றும் பெருமாள் திராவிடக் கடவுள் என்றும் பரிவாரத் தேவதைகளில் எவை எவை கைபர் கணவாய் வழியாக வந்தவை என்றும் எவை எவை ஹரப்பாவிலேயே உருவானவை என்றும் ஒரு கட்டுரை எழுதி அதை உள்ளூர் ஜாதி சங்கங்களின் செயல்பாடுகள் வரை முடிச்சு போட்டு உங்கள் கலை இலக்கிய பெருமன்றத்தில் வாசித்தால் வனமாமலையோ அல்லது வானமாமலையோ போன்ற ‘பெரிய ‘ ஆராய்ச்சியாளர் ஆகிவிட முடியும். ஒரு ஐந்து வருஷம் கழித்து அதே கட்டுரையையே நேர் மாற்றி வாசித்து மீண்டும் பிரபலமடையலாம். எனவே விரைவில் ‘ரிக்வேதம் ஓதிய ஆடுமாடு மேய்த்து திரிந்து வாழ்ந்த கூட்டம் ‘ உள்வாங்கி (அழித்த ?) விஷயங்களான ‘சாங்கியம், சிலைவழிபாடு ‘ இத்யாதிகளுடன் சோமபானச்சடங்கையும் நம் ‘காட்சிகள் ஸ்பெஷலிஸ்ட் ‘ சேர்த்துக்கொள்ள வேண்டும். என்ன எஸ்.ஆர்.ராவ், பி.பி.லால், பிஷ்ட், ஜியார்ஜ் டேல்ஸ், ஜிம் ஷாப்பர், மார்க் கென்னோயர் போன்ற அகழ்வாராய்ச்சியாளர்கள் என்கிற பெயரில் செயல்படும் ஆணாதிக்கவாதிகள் இந்த ‘படையெடுப்பு-அழிப்பு ‘ போன்றவற்றிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறிவிட்டால் ஆயிற்றா ? எதுவானாலும் ஹரப்பா நாகரிகத்தை ‘ரிக்வேதம் ஓதிய ஆடுமாடு மேய்த்து திரிந்து வாழ்ந்த கூட்டம் ‘ அழித்த காட்சியை மேற்படி ஆசாமி தனக்கு அடுத்து தெரியும் காட்சியின் மூலம் நமக்கு தெள்ளத் தெளிவாக கூறும்வரை தங்களிடமிருந்து விடை பெறும்

– மண்ணாந்தை

(அடுத்த வாரம் என்ன அர்ச்சனை விழப்போகிறதோ சாமி! Hell knoweth no fury…)

Series Navigation

மண்ணாந்தை

மண்ணாந்தை