நான்காவது கொலை!!! (அத்தியாயம் : ஐந்து)

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

ஜெயமோகன்


அத்தியாயம் : ஐந்து

கணேஷ் அந்த பிளாஸ்டிக் குறுவாளை எடுத்து இலச்சினையைப் பார்த்து . ‘ ஐஸ்வர்யா டாய் ஹவுஸ் .முப்பது ரூபாய் ‘ என்று படித்து ‘ கொஞ்சம் கலங்கிப் போயிட்டேண்டா ‘ என்றான்

‘கடைசி வரிதானே பாஸ் ,கொஞ்சம் மிகையா இருக்கிறதுல தப்பில்ல. முன்ன ஒரு தடவை நான்கூட இப்டி ஒரு தொடகதைல பாத்ரூம் கதவை திறந்து பாத்து உள்ள தண்ணியில்லைன்னு தெரிஞ்சு தலையிலே ஆயிரம் இடி சேர்ந்து இறங்கினது மாதிரி கலங்கியிருக்கேன் . ‘

சிரித்தபடி ஒரு குண்டு சேட்டு பையன் வந்து குறுவாளை பிடுங்கியபடி ‘ஷேம்! ஷேம் ! ‘ என்று கூவியபடி ஓடினான்.

‘டேய் , இப்ப இதுவரை நடந்ததையெல்லாம் தொகுத்துக்குவோம். நீ ஒவ்வொண்ணா சொல்றே. நான் லாட்டரல் திங்கிங் பண்றேன். ‘ என்றபடி கணேஷ் ஜட்டியுடன் சிரசாசனத்தில் நின்றான்.

வசந்த் ஆரம்பத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தான். ‘நாம இந்த ஓட்டலுக்கு வரோம் பாஸ். ரிசப்ஷனிஸ்ட் பிந்து பணிக்கர் நம்மை அழகா வரவேற்கிறா.. ‘

‘நாசமா போச்சு , அவளைப்பத்தி எப்டிரா லாட்டரல் திங்கிங் பண்றது ? கட்டுப்படியாவுமா ? கேஸைச் சொல்லுடா ‘

வசந்த் வரிசையாக நிகழ்ச்சிகளை சொன்னான் .கணேஷ் ‘யார் யார் மேல சந்தேகம் வர சான்ஸ் இருக்குன்னு பட்டியல்போடு ‘ என்றான்.

‘முதல்ல அந்த ஓட்டல் மேனேஜர் .அப்புறம் ரெண்டு பக்கத்திலெயும் தங்கியிருந்தவங்க .ரெண்டும் சேட்டு பாஸ். பொம்பிளைங்கல்லாம் தொண்ணூத்தெட்டு சைஸிலே இருக்குங்க .சூரத்திலேருந்து துணி வரவழைச்சு மொத்த வியாபாரம் பண்றவங்க .சிமன்பாய் ஸ்பெஷலா மலையாளிகளுக்காக டிசைன் பண்ன ஒரு டிரெஸ்ஸால பணத்த அள்ளிட்டிருக்கார் . டிரான்ஸ்பரண்ட் கெளபீனம். அதுல அல்பசங்கைக்கு ஜிப் வைக்க தோணின நிமிஷம் அவனோட குலதெய்வம் அருள்மிகு கந்துவட்டியாத்தா கண்திறந்திருக்கணும் . சூட்கேஸ் சங்கிலிகூட தங்கத்திலே வச்சிருக்கான் படவா ‘

‘அப்புறம்.. ? ‘

‘ வெயிட்டர்கள் ரெண்டுபேரு அந்த ஃபுளோருக்கு . சர்வோத்தமன் நாயர் பிறவி மாமா பாஸ். சாயா கொண்டுவரட்டேன்னு கேட்டாக்கூட நெளிஞ்சு குழைஞ்சு ஒருமாதிரி சிரிச்சுட்டு தாழ்ந்தகுரலிலே கேக்கிறான். மத்தவன் முரளிதரன். அவன் சகாவு ‘

‘என்னது ,ஜடாயுவா ? ‘

‘காம்ரேட் பாஸ். அதி உக்கிர சி பி எம். ‘ஸ்கி ‘ சேக்காம அவன் சொல்ற ஒரே பேரு அவன் அப்பாபேருதான். ‘

‘ரூமுக்கு யார் வந்திருக்காங்க ? ‘

‘யாருமே இல்லை , அந்த வெயிட்டர் மட்டும்தான் ‘

‘அந்த வாத்துநடைக்காரி அவ பேர் என்ன , அவளை விட்டுட்டியே ? ‘

‘ அவளா பூவு பாஸ் அவ . அவளைப் போய்.. ‘

‘ கொலையும் செய்வாள் பத்தினீம்பாங்க ‘

‘ இவ சித்தினி பாஸ். பத்மினி லலிதா ராகினி அத்தினி சித்தினி அப்டான்னு காமசூத்ரத்திலே சொன்ன லிஸ்டுல இவ… ‘

‘ அதென்னடாது ராட்சச சைஸ்லாம் சொல்றே ? ‘

‘தொப்பை பாஸ். சந்தேகப் பட் டியல்ல இவ்வளவு பேர்தான் . ‘

‘மொத்தம் இருபது பேர்மேல சந்தேகம் கொள்ள சான்ஸ் இருக்கு இல்லியா ? ‘

‘ஆமா ‘

கணேஷ் நிமிர்ந்தான் . ‘ கொலையாளி இவங்கள்ல யாருமே இல்லை வசந்த். எப்பவுமே துப்பறியும் நிபுணர் கொஞ்சம்கூட சந்தேகப்படாத ஒருத்தர்தான் குற்றம் செஞ்சிருப்பாங்க.இது துப்பறியும் சாஸ்திரத்திலே மூணாவது பொன்விதி . ‘

‘அப்ப இப்ப என்ன பண்றது ? ‘

‘ என்ன பண்ண ?இவங்களை சந்தேகப்பட்டு தகவல் துருவிக்கிடே இருக்கவேண்டியதுதான். யாரையாவது நெஜம்மா சந்தேகப்பட்டுட்டோம்னா அவன் குற்றவாளி இல்லாம ஆயி தப்பிச்சிருவான் . ஆனா எப்டியும் ஆசாமி கடைசி அத்தியாயத்துலே மாட்டிக்கத்தான் போறான். அதோட இப்ப நாம ரொம்ப அதிகமா சந்தேகப்படற ஆள் பொட்டுனு போயிருவான் , இதிலே யாரை பொலிபோடலாம்கிறே ? ‘ ‘

‘அந்த மாமாப்பயலை எனக்கு சுத்தமா பிடிக்கலைபாஸ். அவனும் அவன் சிரிப்பும்… ‘

‘சரி, அவன்மேல ஆதாரங்களை திரட்டுவோம் ‘ என்றான் கணேஷ் .

***

சாம்பு ஓட்டலுக்கு திரும்பியபோது ஒரே களேபரமாக இருந்தது .வெயிட்டர்களும் வெயிட் உள்ளவர்களும் எல்லாம் கலவரமாக தேடிக் கொண்டிருந்தார்கள் ‘என்ன தேடறேள் ? ‘ என்று சாம்பு ஏழெட்டு பேரிடம் கேட்டு எஸ். சுந்தரமூர்த்தி அய்யர் என்பவர் காணாமல்போயிருக்கிற விஷயத்தை அறிந்துகொண்டார் . ‘பாவம் எங்க போய் திண்டாடறதோ. பெரியவாளை கவனமா பாத்துக்கவேணாமோ ‘ என்ற் அங்கலாய்த்தபடி சாம்பு தன் அறையை அடைந்தபோது, வேம்பு ‘ வந்துட்ட்டேளா ? சுந்து மறுபடியும் காணாம போய்ட்டான்க.அய்யோ நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன்… ‘ என்றாள்

‘ ‘என்னது குழந்தையை காணுமா ?இப்பதான் கீழே சுந்தரமூர்த்தி அய்யர்னு ஒத்தரை காணும்னு சொல்லி தேடிண்டிருக்கா. என்ன நட்க்குது இங்க ? ஒண்ணுமெ புரியலையே ? ‘ என்றார் சாம்பு

‘ ‘அய்யோ அது நம்ப சுந்துதான்னா.அவனுக்கு உங்க அப்பா பேருதானே வச்சோம் மறந்துட்டேளா ? ‘ ‘

‘ ‘ஏண்டி தகவல் சொல்றச்சே தெளிவா சொல்லமாட்டியா ? ‘ என்றபடி பாய்ந்து சாம்பு ரிசப்ஷனுக்கு வந்து ‘ மிஸ் இல்லை மேடம் , ஒரு தப்பு நடந்துபோச்சு .மாத்தம் ரெண்டுபேர் காணாம போயிட்டா .இன்னொருத்தர் பேரு சுந்து , மூணுவயசு ‘என்றார்.

‘அய்யோ ஏன்னா உளற்ரேள் ? காணாமபோனது ஒத்தர் மட்டும்தான்னா ‘

‘அப்ப நம்ப சுந்து காணாமபோகலையா ?அப்பாடி ‘

‘ ‘அவந்தான்னா காணாம போனது ‘ ‘

‘ ‘அப்ப மத்தவர் ? ‘ ‘

‘ ‘அவர் காணாம போகலை. அய்யோ , எனக்கே குழப்பமா இருக்கே ‘ ‘

‘ ‘அப்பசரி ‘ சாம்பு ரிசம்ப்ஷனிஸ்டிடம் ‘ தப்பாசொல்லிட்டோம் மிஸ் , இல்லாட்டி மேடம். சுந்தரமூர்த்தி அய்யர்ங்கிறவர் காணாமப் போகலை . ‘

‘அய்யோ மசமசன்னு நிக்காம வாங்கோன்னா ,அந்தப்பக்கமா போயி தேடலாம் ‘

சாம்பு மனைவியுடன் முற்றத்தில் இறங்கி மறுபக்கமாக ஓடி சுற்றி வந்த போது ரிசப்ஷனிஸ்ட் ‘ மிஸ்டர் சாம்பு ஒரு சிக்கல் ‘ என்றாள் கதிகலங்கி

‘சொல்லுங்கோ ‘

‘எஸ் சுந்தரமூர்த்தி அய்யர் கிடைச்சுட்டார் . பார்க்கிங் செக்யூரிட்டி ஃபோன்லே கூப்பிட்டு சொல்லிட்டு கூட்டிட்டு வரார் ‘

‘அய்யோ கிடைச்சுட்டானா ? என் கோந்தை கிடைச்சுட்டானா ? பகவானே! ‘

‘ அவருதான் காணாமபோகவே இல்லியே ‘ ‘ என்றார் சாம்பு குழம்பி

மகிழ்ந்துபோன ஒரு கிழவருடன் செக்யூரிட்டி ஆசாமி வந்தான். ‘யெஸ் , நாந்தான் எஸ்.சுந்தரமூர்த்தி அய்யர் . சார் யாரு ? ‘ என்றார் கிழவர்

‘ சார் ஒருதப்பு நடந்துபோச்சு .நீங்க உண்மையிலேயே காணாம போகலை ‘

‘ அதெப்பிடி ? நீங்கன்னா கண்டுபிடிச்சிருக்கேள் , இப்ப இல்லேஎன்னா எப்டி ? ‘ என்றார் அவர்

‘ இல்லீங்க ஒரு சின்ன குழப்பம் ‘

‘சின்ன குழப்பமா என்னய்யா உளர்றே ? இப்ப என்னை மறுபடியும் தொலைக்கபோறியா ?வயசான காலத்துலே நான் தொலைஞ்சுபோயி அலையணுமாக்கும் ?

வேம்பு ஓடிவந்து ‘ ஏன்னா அங்க முழிச்சுண்டு நிக்காம கொஞ்சம் வாங்கோ .சுந்து போனவழி தெரிஞ்சுடுத்து ‘ என்றாள் .இருவரும் பின்கட்டுக்கு ஓடினார்கள். ‘ கேட்டேளா, சித்த முன்னாடி ஒரு கோந்தை இங்க ஒத்தர்கிட்டே நீங்க நல்லவரா கெட்ட்வரான்னு கேட்டிருக்கு . அவரு நல்லவர்னு சொல்லியிருக்கார். அப்பன்னா ஏன் நீங்க எனக்கு அச்சுவெல்லம் தரல்லேன்னு கேட்டு , கோங்கூன்னு திட்டியிருக்கு .சுந்து தான்னா அது… ‘

அந்த மனிதர் ‘ஆமாங்க, மகா கிருத்திருமக்காரப் பயல்ங்க .ஓடறான்.. ‘

சாம்பு ‘ அவன் போன வழியை மோந்துபாத்தாலே கண்டுபிடிச்சுடலாம்டா ‘ என்றபடி குனிந்தார் .

பின்பக்க படிக்கட்டுவழியாக போய் லிஃப்டில் ஏறி அவர்கள் ஓட்டலை சுற்றியபோது மீண்டும் அறிவிப்பு கேட்டது , எஸ் . சாம்பமூர்த்தி அய்யர் என்பவர் காணாமல் போயிருந்தார் .

‘பாருடா , இன்னோர்த்தர் கூட காணாம போயிட்டார். நேக்கு ரொம்ப பயமாஇருக்குடா ‘ என்றார் சாம்பு

‘ ‘அபிஷ்டு மாதிரி பேசாதீங்கோ .அது நீங்கதான்னா ‘ ‘ என்றாள் வேம்பு

‘ ‘நானா ,நான் எங்க காணாம போனேன் ? இங்கதானே இருக்கேன் ‘ ‘

‘ ‘ அழகுதான் போங்கோ, உங்களைக் காணும்னு யாரோ தகவல் குடுத்திருக்கா. ‘ ‘

ரிசப்ஷனில் சுந்து வாழைப்பழம் தின்றுகொண்டிருந்தது ‘அப்பா நீ எங்கே போயிட்டே ?நான் ரூம் முச்சூடும் தேடிட்டேனே ? ‘

ரிசப்ஷனிஸ்ட் ‘எங்க சார் போனீங்க ? பையன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டான் சார் ‘ என்றாள்.

வேம்பு ஆனந்த கண்ணீர் வடித்து , ‘ காலை ஒடிச்சு அடுப்பிலெ சொருகிப்போடுவேன் படவா .எங்கடா போனே, எழவெடுத்தவனே ? ‘என்றாள்

‘அப்பா ஒரு தாடித்தாத்தா இங்க வந்து வெல்லம் திருடிண்டு போறார் . ஒரு நாயையும் கூடவே வச்சிருக்கார் ‘ ‘

‘ஃபீல் பண்ரப்ப பையன் வாழைப்பழமா சாப்பிடறான் சார், இதுக்குள்ள ஏழுபழம் தின்னுட்டான்னா பாத்துடுங்க.. ‘

சுந்துவுடன் சாம்பு அறைக்கு திரும்பியபோது கோபாலன் அறைக்குள் புயல்போல பாய்ந்து வந்து சாம்புவை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்து ‘சாம்புசார் எப்டிசார் இப்படி துப்பறியறேள் ? மெய்சிலுக்குது பாருங்கோ. கரெக்டா சொன்னேள் , அந்த மேனேஜர்தான் சார் கல்பிரிட். இன்னும் முக்கிய ஆதாரம் கிடைக்கலை. குப்பைல போட்டுட்டாங்கன்னீங்களே அன்னிக்கு அப்டியெ கரெக்ட் சார். குப்பைகூடைய எல்லாம் ே தடிபாத்தப்ப இந்த கையுறை கிடைச்சது .பாத்தேளா இது யாரோடது ?

‘ வெல்லம் திருடியிருக்கான் ‘ என்றார் சாம்பு

‘ கைரேகை படாம இருக்கிறதுக்கு இதை யூஸ் பண்ணியிருக்கான் . ஆனா எங்கியும் படாத ரேகை இந்த கிளெளஸுக்குள்ளே கண்டிப்பா பட்டிருக்கணுமே .இத ஒரு நல்ல கைரேகை நிபுணர்ட்டே காட்டினோம்னா ஆளை கண்டுபிடிச்சுடலாம். என்ன சொல்றீங்க ? ‘

‘ என்னமோ அவன் ஆய்சுக்கு பலம் , கிடைச்சுடுத்து ‘ ‘என்றார் சாம்பு

‘ க்ளூ ‘ என்று கோபாலன் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிந்தது .

‘மாமா அப்பா காணாமபோயிட்டா ‘

‘இனிமேதான் நமக்கு வெலையே இருக்கு சாம்புசார், எல்லாம் உங்க ஆசீர்வாதம் ‘

‘வாழப்பழம் திங்கறதுக்குள்ள வந்துட்டா , மூக்குக் கோங்கு… ‘

***

ஓட்டல் வாசலில் கறுப்புநிற டாக்ஸி வந்து சரேலென்று நின்றது .செக்யூரிட்டிகள் சலாம் போட ஓட்டல் வாசல் பரபரப்படைந்தது . டிரைவர் இறங்கி பவ்யமாக பின் கதவை திறந்தான். உள்ளிருந்து ஒரு கருப்பு நிற ஷூ முதலில் வெளிவந்தது .உயர் ரக அமெரிக்க பாலீஷினால் நன்கு பளபளப்பாக்கப் பட்டிருந்த அது பரம்பரை ஆண்டியின் திருவோடுபோல ஜொலித்தது .அதற்குள்ளிருந்து தொடங்கி மேலேறிய காலில் அணியப்பட்டிருந்த உயர் ரக பிரெஞ்சு லினன் சூட் மெதுவாக தெரியவரலாயிற்று . அதற்கு மேல் [கண்டிப்பாக உயர் தர] ஓப்பன் கோட்டும் உள்ளே [மீண்டும் உயர்தர ] சட்டையும் அணியப்பட்டிருந்தன .கைகளில் விலைமதிப்பிட முடியாத ராடோ வாட்ச் கட்டப்பட்டிருக்காமல் இருக்க முடியாதாகையால் அதுவும் தெரிய வரலாயிற்று. அதன் பிறகு அழுத்தமான சிவந்த உதடுகளும் ,அதற்கு மேலே மீசையின்மையும் ,அதற்கு மேலே அணிகள் அணியப்பட வாய்ப்பற்ற மூக்கும் ,அவற்றுக்கு மேலே [கூரியதாக இருந்தாகவேண்டிய பார்வை மறைந்திருக்கும் ] ரேபான் கருப்புகண்னாடியால் பாதுகாக்கப்பட்ட கண்களும் , அதற்கும் மேலே [உயர்தர , சந்தேகமேயில்லை ] தொப்பியும் முறையே தெரிந்து கொண்டேயிருந்தன.கடைசியில் இவற்றின் ஒட்டுமொத்தமாக ஒரு மனிதர் தெரியவரலானார் .

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே வாசலில் கூட்டம் கூடியது நியாயமேயாகும். காரிலிருந்து இறங்கிய அந்த மர்ம நபரை அனந்தபத்மனாபன் நாயரே நேரில் வந்து வணக்கம் முகமன் குசலம் கூறி வரவேற்றார். ‘தாங்களை அறிமுகம் செய்து கொள்ளலாமா ? என்றார் .

‘ ‘சங்கர் லால் , துப்பறியும் நிபுணர் ‘ ‘என்றார் அவர். ‘ ‘இங்கு ஒரு கொலை நடந்திருப்பதாக தகவல் கிடைத்தது .இது என் அறுபதெட்டாவது அட்வெஞ்சர் .நான் வழக்கமாக ஐந்தாம் அத்தியாயத்தில்தான் வருவது ‘ ‘ என்றார் .

‘ரொம்ப சந்தோஷம் .துப்பறியும் நிபுணர்களுக்காகவே தனி சூட் வசதி உள்ள ஓட்டல் இது ‘ என்றார் நாயர்

சங்கர்லால் ‘நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை .எல்லா தகவல்களும் எனக்கு உடனடியாக தேவை . கொலைக்காரன் யார் என்பதை மட்டும்தான் நான் கண்டு பிடிப்பேன். ‘ ‘ என்றார்.

‘எல்லாம் தயாரக இருக்கிறது சார் ‘ என்றார் இன்ஸ்பெக்டர் ஃபல்குனன் பிள்ளா.

‘நான் என் அறை எண்னை தெரிந்து கொள்ளலாமா ? ‘ என்றார் சங்கர் லால் .

‘ நூற்று முப்பத்தெட்டு சார் ‘

‘ஓ , தட் மீன்ஸ் ஒன் ஹன்ட்ரட் ஆண்ட் தர்ட்டி எயிட் . நைஸ் ‘ என்று மர்மமாக சொல்லிவிட்டு சங்கர்லால் மோவாயை தடவினார் . ‘நான் உங்கள் விருந்தினர் பட்டியலை பார்க்கலாமா ? இஃப் யூ டோண்ட் மைண்ட் .. ‘

ரிசப்ஷனிஸ்ட் பேரேட்டை எடுக்கும் முன் சங்கர்லால் துப்பறியும் நிபுணர்களுக்கே உரிய அசாதாரண லாவகத்துடன் மேஜை மீதிருந்த ஃப்ளவர் வேஸின் அடியில் சிறு பட்டாணிகடலை அளவுள்ள ஒரு ஒலிப்பதிவு உளவறியும் கருவியை பொருத்தி விட்டது அவருடைய குணச்சித்திரத்துக்கு மிகவும் இயல்பானதே.

சங்கர் லாலின் பெட்டிகள் லிஃப்டுக்கு போயின. ‘ஒருவேளை நீங்கள் ஃபயர் எஸ்கேப்பை பார்க்க விரும்பக் கூடும் ‘ என்றார் அனந்த பத்மநாபன் நாயர் . ‘ வழக்கமான ஃபயர் எஸ்கேப்புகளுக்கு கூடுதலாக நாங்கள் துப்பறியும் நிபுணர்களுக்காக தனியாக ஒரு ஃபயர் எஸ்கேப்பும் கட்டியிருக்கிறோம்.. ‘

‘தேவைப்படும் ‘ என்றார் சங்கர்லால் துப்பறியும் நிபுணர்கள் மட்டுமே உதிர்க்க முடியும் அந்த மர்மப்புன்னகையுடன் .

‘ஸ்பைடர்மேன் தொங்கறதுக்கு ஸ்பெஷல் சீலிங் உள்ள சூட் இருக்கு . சூப்பர்மேனுக்கு மொட்டைமாடால தனி லாண்டிங் போர்ட் கூட வச்சிருக்கோம் ‘ என்றார் பட்லர் பரமசிவம்.

லிஃப்டில் நுழைந்ததும் சங்கர்லால் தன் பையில் இருந்து ஒரு சிறு ரிசீவரை எடுத்து அதை தன் கண்ணாடியின் காதருகே ஒட்டிக் கொண்டு மீண்டும் அணிந்தார் . அப்போது அவரது அதரங்களில் விரிந்த மர்மப்புன்னகை மறுகணமே சிதறுண்டதற்கு காரணம் அவர் ஃப்ளவர் வேஸ் என்று நினைத்தது கூஜா என்பதும் அது சமையற்கட்டுக்கு திரும்பிபோய்விட்டிருந்தது என்பதும்தான் . அவரது நரம்புகளை அதிரச்செய்தபடி பெரும் ஒலி ஒன்று கேட்டது ‘ சாதா தோசெ ஒண்ணேய் … ‘

[தொடரும் ]

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று )

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

ஜெயமோகன்


அத்தியாயம் : மூன்று

கோபாலன் தன் பென்சிலை கூர்மை செய்துகொண்டு மானேஜர் அனந்த பத்மநாபன் நாயரை மடக்கி கேள்விகளை தொடர்ந்தார் . அனந்த பத்மநாபன் நாயர் வழுக்கையையும் ஷூக்களையும் தொடர்ந்து பளபளப்பாக்கியபடி வெண்ணைபூசப்பட்ட ஆங்கிலத்தில் அளித்த பதில்கள் கீழ்க்கண்டவை .

‘பப்பன் . அதாவது பி .அனந்த பதமநாபன் நாயர் ‘ ‘ பி ஃபார் பார்கவன் பிள்ளா , ஆமாசார் பிள்ளா ‘ ‘இல்லை . ஹி ஹி ஹி நாயரும் பிள்ளையும் ஒன்றுதான் செர் ‘ ‘இல்லை செர். ‘ ‘ ஆமாம் செர் ‘ ‘ஆர்டிலரியில் காப்டனா இருந்தேன் செர். ‘. ‘ தாங்க்யூ செர் ‘ ‘

கோபாலன் சந்தேகத்துக்கு அடையாளமாக அடையாளக்குறி போட்டு ‘ மிஸ்டர் நாயர் , உண்மையை சொல்லிவிடுங்கள் . இது இந்த விடுதியில் எத்தனையாவது கொலை ? ‘

‘முதல் கொலை தான் சார் . ‘

‘அப்படியானால் இங்கு மேலும் கொலைகளை எதிர்பார்க்கிறீர்கள் இல்லையா ? ‘ கோபாலன் மனசுக்குள் ‘அப்படிப்போடுடா அரிவாளை, தேவன் வசனம்னா சும்மாவா ‘ என்று துள்ளிக் கொண்டார் .

‘இல்லை சார் .கண்டிப்பாக இல்லை சார் ‘

‘அதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் ? அப்படியானால் கொலை பற்றி மேலும் சில விஷயங்கள் உங்களுக்கு தெரியும் …மிஸ்டர் பத்மனாபன் , மரியாதையாக போலீஸிடம் உண்மையை சொல்லிவிடுவது உங்களுக்கு நல்லது ‘

படிப்படியாக அனந்த பத்மநாபன் நாயர் வம்ச கம்பீரங்களை இழந்து , முற்றாத தேங்காயில் அரைத்த சட்டினி போல ஆகி , ‘அறியாம்பாடில்ல பொன்னு சாரே ‘ என்று விம்மி அழுது மூக்கைசிந்த வைக்கப்பட்ட பின்பு சொல்லிய மொத்த கதையின்படி கொல்லப்பட்ட ராமசாமி அய்யர் அடிக்கடி அங்கு வந்து அறைபோட்டு தங்கி பெரிய மனிதர்களுடன் தொடர்பு கொள்வதுண்டு . நிறையபேர் கார்களில் வந்து சோதிடம் கேட்டுப்போவார்கள் . ‘ ஆமாம் சார் பெரிய இடத்து பெண்கள் கூட வருவதுண்டு ‘ . ‘சோதிடம் கேட்கத்தான் சார் ‘ . ‘ஹிஹி அதெப்படி சார் இந்தமாதிரி இடத்துக்கு அந்தமாதிரி பெண்கள் வராமல் இருக்க முடியுமா ?அவர்களும் வருவார்கள் . ஆனால் ஒரு தப்புதண்டா நடந்தது இல்லை . ‘ . ‘ ‘அய்யொ இல்லை சார் , அது தப்புதான் சார் , அதைத்தவிர வேறு தப்பு நடந்தது இல்லை என்றுதான் சொல்ல வந்தேன் ‘

கோபாலன் திரும்பி கடற்கரைப்பக்கமாக செல்லும்பொருட்டு வாசலுக்கு வந்த போது இரு வெள்ளையர்கள் நீளமான கோட்டும் கட்டம் போட்ட தொப்பியும் அணிந்தவர்களாக கடற்கரை நோக்கி போவது கண்டு ‘பத்மனாபன் , அவர்கள் யார் ? ‘ ‘

‘ அறை எண் அறுபத்தெட்டில் நேற்றுத்தான் வந்தார்கள் சார் . ஆயுர்வேத உழிச்சிலுக்கு வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் , அந்த கட்டையான ஆளுக்கு தாடையில் ஏதோ பிரச்சினை ‘

‘ ‘ அதுதான் பிரிட்டிஷ் மேனர்ஸ் . மூக்கை கார்த்திகை மாச நாய்மாதிரி தூக்குவது . எங்கேயோ பார்த்த முகம் . மாயாஜால வித்தைக்காரர்களா ? சர்வேயர்களா ? ‘ ‘

‘அந்த நீள முக ஆசாமி எறும்புகளையெல்லாம் ஒரு லென்சால் கூர்ந்து பார்க்கிறார் சார்… .. ‘

‘ ஆகா மர்மம் ! ‘ என்றார் கோபாலன் , ஆனால் இது சர்வதேச துப்பறியும் கதை போல போகிறதே ஆனந்த விகடனின் வாசக மாமிகளுக்கு புரியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது . சரி அதைப்பற்றி நமக்கென்ன, ஒருவேளை நடுநடுவே அப்பளம், அமிர்தாஞ்சன் பற்றியெல்லாம் வரும் போலும் என்று சமாதானம் செய்துகொண்டார் .

வெள்ளைக்காரர்கள் வெளியேசென்று தெருவோர குப்பைக்கூடை அருகே நின்ற கிழட்டுத் தெருநாயை கூர்ந்து கவனிப்பதை கோபாலன் கவனித்து துப்பறியும் நிபுணர்களுக்கே உரிய லாவகமான அசைவுகளுடன் பின்தொடர்ந்தார் . கிழட்டு நாய் குப்பைக்கூடையில் பலவருட அனுபவம் கொண்டு , கோட்டு போட்ட மனிதர்கள் போட்டிக்கு வரமாட்டார்கள் என அறிந்தது . இருந்தாலும் ஏதோ இரண்டுகால் பிராணி, போகட்டும் என்று வாலை சல்லிசாக ஒரு மூறை ஆட்டிவிட்டு அடிவயிற்றுப் பிராந்தியத்தில் மறைந்த உண்ணி ஒன்றுக்காக தேடுதல்வேட்டையில் ஈடுபட்டது .

****

‘ இது என்னவகை மிருகம் ஹோம்ஸ் ? ‘ வாட்சன் கேட்டார் .

‘இம்மாதிரி மிருகங்கள் பல உள்ளன .நாய், ஓநாய் , நரி ,கழுதைப்புலி . என்ன சிக்கல் என்றால் இதை என்னால் தெளிவாக வகுக்க முடியவில்லை . எல்லா மிருகங்களின் இயல்புகளையும் இது கொண்டிருக்கிறது. அத்துடன் இது வன மிருகமல்ல , மனிதர்களுடன் நன்கு பழகியது ‘

‘அற்புதம் ஹோம்ஸ் !எப்படி கண்டுபிடித்தீர்கள் ? ‘

‘ அடிப்படை விஷயம் வாட்சன் .அதன் பின்பகுதியில் கேள்விக்குறி போல இருப்பது அதன் வால் என எண்ணுகிறேன் . அதை நம்மை கண்டபோது இம்மிருகம் சற்று ஆட்டிக் காட்டியதை நீங்கள் நினைவுகொள்கிறீர்கள் என நம்புகிறேன். ‘

‘ஷ்யூர் ஹோம்ஸ் ‘

‘இந்த வம்சத்தை சேர்ந்த சில வகை மிருகங்கள் இவ்வாறு ஆட்டினால் நட்பான சைகை என்று பொருள் ‘

‘ஆமாம். அதன் கண்களிலும் நட்பு தெரிகிறது . ராணியிடம் மாட்சிமை தங்குவதாக . இது ஒரு வனமிருகமாக இல்லாமல்போனது நல்ல விஷயம்தான் ‘ வாட்சன் சொன்னார். ‘ நாம் இந்த பிராணியை பின்தொடர்ந்து போகப்போகிறோமா என்ன ? ‘

‘கண்டிப்பாக ‘ என்றார் ஹோம்ஸ் , ‘பைப்பிலே புகையிலை தீர்ந்துவிட்டது வாட்சன் , இங்கே புகையிலை வியாபாரி எவராவது இருக்கக் கூடுமா ? ‘

எதிரே வாழைகுலை சுமந்துவந்த கிழவரிடம் வாட்சன் ‘ இங்கே புகையிலை எங்கே கிடைக்குமென நான் அறியக்கூடுமென எண்ணுறீர்களா ? ‘ என்று கேட்கப்போக அவர் சாயிப்பே தன்னிடம் பேசிவிட்ட பரவசத்தில் மெய்மறந்து தன் கரிய பதினேழரை பற்களை காட்டி சிரித்தபடி ‘யெஸ் யெஸ் ‘ என்றார் .

வாட்சன் சிரித்து ‘ புகையிலை ! புகையிலை! ‘ என்றார் . ‘ கிழவர் பரவசத்தின் வீச்சு பெரிதாகியபடியே செல்ல ‘ யேஸ் ! யேஸ் ‘ என்று சொல்லி பின்பு போதாமையை உணர்ந்து ‘குட் மாணிங் சாயிப்பே ‘ என்றார் .

‘விசித்திரமான உலகம் ‘ என்றார் வாட்சன் , ‘ ஆச்சரியம்! அவர்கள் இன்னமும் மொழியையே கற்றுக் கொள்ளவில்லை ! ‘ கிழவர் , ‘ யேஸ் யேஸ் குட் மானிங்! ‘ என்று சிரித்தார் .

‘வாட்சன் அவர்கள் நாகரீகத்தின் குழந்தை நிலையில் இருப்பவர்கள் . மாட்சிமை தங்கிய அரசியாரின் நிலத்தில் கூட மொழியும் நாகரீகமும் தோன்றி வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளன என்று நினைவுறுங்கள் .நாகரீகமென்பது டூலிப் மலர்களின் நறுமணம் போன்றது, நம் வீட்டு சாளரத்தைதாண்டி அது எளிதில் வெளியே செல்வதில்லை ‘

‘கவித்துவமான் வசனம் ஹோம்ஸ் .மிஸ்டர் டாயில் எப்போதுமே சிறந்த சொற்களை எழுதுவதில் கவனம் கொள்கிறார் .இப்போது நாம் புகையிலைக்கு எங்கே போவது ? ‘ ‘

‘புகையிலைக் கடைக்கு விளம்பரம் எதற்கு என்று ஒரு பழமொழி இருக்கிறதே . மூக்கை பயன்படுத்துவோம் ‘

‘குட் மார்னிங் சாயிப்பே . ஒன் ,டூ ,த்ரீ ,போர் ,பைவ் … லெஃப்ட் ரைட் எபவுட் டர்ன் .ஏ பி சி டி .. ‘

இருவரும் பெட்டிக்கடைக்கு சென்றபோது ஒருவர் அவர்களை பார்த்தபடி வாயில் ஒரு தழையைச் சுருட்டி திணித்துவிட்டு அருகே நின்ற விளக்குக் கம்பத்தில் ஒரு குழூஉகுறியை தடவுவதை தன் துப்பறியும் கண்களால் ஹோம்ஸ் கவனிக்கத் தவறவில்லை .வாட்சன் புகையிலை வாங்கும்போது ஹோம்ஸ் தன் நுண்நோக்கியின் உதவியால் அதை கூர்ந்து அவதானித்து விட்டார் . இருவரும் புகையுடன் நடக்கையில் ஹோம்ஸ் ‘ நாம் கண் காணிக்கபடுகிறோம் வாட்சன் ‘ என்றார் .

‘ கிறிஸ்து சாட்சியாக ! உண்மையாகவா ? ‘

‘ஆம் . நமது நடவடிக்கைகளை கண்காணிக்க பலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் .அவர்கள் குழூகுறி மூலம் செய்திகளைபரிமாறிக் கொள்கிறார்கள் . அது கால்சியம் பை கார்பனேட் என்றால் நீங்கள் நம்புவீர்களா ? ‘

‘சாயிப்பே கைநீட்டம் தரணும் .. ‘

‘யாரையுமே நம்பக்கூடாது வாட்சன் , மர்மங்கள் நம்மை சுற்றி தங்கள் வலையை மெல்ல இறுக்கிக் கொண்டிருக்கின்றன ‘

‘குட் மார்னிங் சாயிப்பே . எ டிப்ஸ் . ஒன் மணி ‘

‘வாட்சன் அந்த மிருகம் ஒரு வளர்ப்பும்மிருகம் என்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் .கொலை நடந்த அறைக்கு வெளியே அது தன் அடையாளத்தை விட்டுவந்திருக்கிறது . .. ‘

‘இல்லேன்னா அதைச் சொல்லு சாயிப்பே , கோட்டு சூட்டு போட்டா போருமா ? என்றெ பழவங்ஙாடி கணபதீ , சாயிப்பிலும் உண்டோ எரப்பாளிகள் ? ‘

‘அது ஏவப்பட்டிருக்கலாம் என்கிறீர்கள் ஹோம்ஸ் ‘ வாட்சன் அந்த நாயை கூர்ந்து கவனித்தபடி சென்றார் .அது தெருக்கோடியில் இருந்த ஒரு இடிந்த கட்டிடத்துக்கு சென்று அங்கே படுத்திருந்த ஒரு கிழவனை கண்டு வாலாட்டிய பிறகு அவனருகே படுத்துக் கொண்டது .

‘வாட்சன் இதிலிருந்து என்ன ஊகிக்கிறீர்கள் ? ‘

‘அது ஒரு கிழவன்! ‘

‘பெரும்பாலும் , மிஸ்டர் வாட்சன் . அவரைச்சுற்றி மர்மத்தின் வலைக்கண்ணி இறுகுகிறது ‘

‘தொடரும் போட்டாக வேண்டிய வேண்டிய சொற்றொடர் ஹோம்ஸ் ‘ என்றார் வாட்சன்.

‘பரநாறி சாயிப்பே ….எரப்பாளீ…… ‘

***

‘பாஸ் , இவங்க பேரு நீலா . மிஸிஸ் நீலா இது எங்க பாஸ் , கணேஷ். அமெரிக்காவிலே எல்லாம் இப்ப எல்லாரும் இவரைப் பத்திதான் பேச்சு … ‘

‘டேய் விடுரா ‘ .

அந்தபெண் [மணி ?] கும்பிட்டு , ‘ரொம்பக் கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப சின்ன வயசா இருக்கீங்க ‘ என்று சொல்ல வசந்த் கணேஷிடம் ‘ நெட்டுலே இலக்கியப்பக்கத்திலே அம்பிகள் அச்சுபிச்சுன்னு டிஸ்கஸ் பண்றத வச்சு சொன்னேன் பாஸ் ‘ ‘ என்று முணுமுணுத்தான் . ‘ இவங்க கூடத்தான் ரொம்ப யங்கா இருக்காங்க .ஏன் பாஸ் , இவங்களை பாத்தா அசப்புலே லைலா சாயல் இல்லை ? ‘

அந்த மாமி வெட்கி ‘சிலபேர் அப்படி சொல்லியிருக்காங்க ‘ என்று கருகமணியை கடித்து மணலில் கோலம் போட்டது .

‘நீங்க எங்க இருக்கீங்க ? ‘ என்றான் கணேஷ் .

‘ ‘ என்ன பாஸ் அக்கம்பக்கத்துல யார் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதில்லையா ?இவங்க பக்கத்துல பாலகுமாரன் தொடர்கதைல இருக்காங்க . வீட்டுக்காரரோட சேந்து படுக்கையிலே படுத்துட்டு பட்டினத்தார் பாட்டெல்லாம் மேற்கோள் காட்டி என்னமாதிரி தத்துவம்லாம் எடுத்து விடறாங்க ! இப்பிடி கேட்டுட்டாங்க ‘

‘போங்க ‘ என்றாள் அந்த அம்மாள் மேலும் வெட்கி .

‘சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம் ‘ என்று கணேஷ் கைகூப்பினான் .

‘இவங்களுக்கு பெரிய பிரச்சினை பாஸ். பதினெட்டாம் அத்தியாயத்திலேயிருந்து இவங்க வீட்டுக்காரர் திடார்னு ரொம்ப ஆன்மீகமா உள்ள போயிட்டார் . ஒவ்வொரு வசனத்துக்கும் அந்தக்கால நாகையா மாதிரி கண்ணீர் மல்கறார். மிஸிஸ் நீலா அதென்ன பாட்டு , இருங்க , ஊத்தைகுழியினில்… ‘

‘டேய் ! ‘

‘ பாஸ் ,நெஜமாவே அந்த ஆள் பட்டினத்தார், சத்குரு அப்பிடான்னு போயிட்டான் . கதைக்கு டெம்போவே இல்லைன்னு இவங்க ஃபீல் பண்றாங்க. நாம வேணும்னா ஸ்டிக்கர்பொட்டு மர்மத்தை அங்ககொஞ்சம் எக்ஸ்டெண்ட் பண்ணலாம்னு நான் தான் கூப்பிட்டு வந்தேன் ‘

‘தபார்ரா, கதைக்குள்ள என்ன வேணுமானாலும் சரி, இந்தமாதிரி தொடர்கதைகளுக்குள்ள இடியாப்பம் சுத்தறதுக்கு எடிட்டர் ஒத்துக்க மாட்டார் ‘

‘அப்ப இவங்க எதிர்காலம் ? ‘

‘அங்கியே ஒரு தொடரும்போட்டுடசொல்லு . நமக்கு வேற வேல இருக்கு . ‘

‘மிஸிஸ் நீலா , என்னகேட்டா நீங்ககூட மஞ்சள் சேலை மகமாயீன்னு கெளம்புறது பெட்டர் . நான் அப்புறமா உங்களை பாக்கிறேன் ‘ வசந்த் அந்த அம்மாள் போவதை பார்த்து மனமுருகி, ‘கஜ ராஜ விராஜித மந்த கதி! ‘ என்றான்.

‘அதென்னாடாது மந்திரம் ? ‘

‘இது வள்ளத்தோள் பாட்டு , தேசியக் கவிஞர் பாஸ். என்ன சொல்றார்னா, இப்ப யானையை நடக்கிறப்ப பின்னலேருந்து பார்த்தோம்னு வச்சுக்குங்க … ‘

‘வால் தெரியும் , ஆளைவிடு .என்னாச்சுடா ஸ்டிக்கர் பொட்டு ? விசாரிச்சியா ? ‘

‘இந்த ஓட்டலிலே எட்டு பொண்ணுங்க ஸ்டிக்கர் பொட்டு வைக்குது பாஸ். ரெண்டு வெள்ளைகாரிங்ககூட கோணலா வச்சிருக்காங்க . அழகான கவிதை வரிக்கு அப்பாலே முற்றுப்புள்ளி வச்சாப்லே அப்டான்னு ஒருத்தி கிட்டே எடுத்து விட்டேன் ‘

‘என்ன சொன்னா ? ‘

‘ காண்டம் வச்சிருக்கியான்னுட்டா பாஸ் , ஜகா வாங்கிட்டேன் .உங்களுக்கு நம்பூதிரி ஜோக் ஒண்ணு சொல்லவா ? ‘ ‘

‘ரூமுக்கே போயிடலாம் வா. எனக்கென்னவோ இந்த ஸ்டிக்கர் பொட்டுல விஷயம் இருக்குன்னு படுது ‘

‘அஞ்சடிக்குமேல உயரத்திலே எங்கியுமே நான் ஸ்டிக்கர் பொட்ட பாக்கலை பாஸ். இந்த ஜோக்கை வெயிட்டர் பவித்ரன் சொன்னான் ‘

அவர்கள் அறைக்கு திரும்பியபோது அங்கே அவர்களை தேடி ஒருவர் காத்திருந்தார் .

[தொடரும் ]

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

நான்காவது கொலை!!! (அத்தியாயம் : இரண்டு)

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

ஜெயமோகன்


அத்தியாயம் : இரண்டு

வசந்த் மிரண்டு விட்டான் என்று தெரிந்தது ‘ யாருங்க அது , மரியோ மிராண்டோவோட தம்பிங்களா ? ‘ என்றான் .

துப்பறியும் சாம்பு தன் கார்ட்டூன் மூக்குடன் மந்தமாக புன்னகை செய்து ‘ பாத்ரூம் எங்கே ? ‘ என்று நேராக போய் பீரோ கதவை திறந்து , மீண்டும் மந்தஹாசம் புரிந்து தடுமாற , இன்ஸ்பெக்டர் ஃபல்குனன் பிள்ளா ‘ யார் சார் இது ? உங்க குமாஸ்தாவா ? ‘

‘இல்லீங்க . இவரு பெரிய …..பாஸ் எப்பிடி சொல்றது ? ‘

கூட்டத்திலிருந்து எண்ணை படிந்த பேசரியும் , இறுக இழுத்து கட்டிய கூந்தலில் மல்லிகையும், மடிசாருமாக ஒரு அம்மாள் இடையில் குழந்தையுடன் வழி பிளந்துவந்து ‘ அய்யோ , ஏன்னா இங்கேல்லாம் வரேள் ? உங்களுக்குத்தான் ரத்தத்த பாத்தாலே அல்பசங்கை வந்துடுமே . ஏன் தடுமாறரேள் , பாத்ரூமுக்கு அந்தப்பக்கமா போங்கோ. வாசனை வரது பாத்தேளா , அத வச்சு கண்டுபிடிச்சா என்ன ? ‘ என்றாள்.

‘பாஸ் இவங்கதான் வேம்பு மாமியா ? அங்கமுத்து மாதிரி இருக்காங்க ‘

‘ பின்ன , மும்தாஜ் ரேஞ்சுக்கு நினைச்சிருந்தியா ? ‘

சாம்பு ‘ இவ்ளோ கம்மியா வாசனயெ வச்சிருந்தா எப்பிடி கண்டுபிடிக்கிறதாம் ? ‘ என்று முணுமுணுத்தபடி உரிய கதவை கண்டுபிடித்துவிட்டார் .

‘அப்பா நேக்கும் மூச்சா வரது ‘ என்றது சுந்து .

புறந்தலையை கிட்டத்தட்ட ஷேவ் செய்திருந்த ஒரு மோட்டா ஆசாமி பழங்கால லாங்கிளாத் சட்டையும் கரிய ஷூக்களும் விடைப்புமாக ஆறரையடி உயரத்தில் வந்து இன்ஸ்பெக்டருக்கு ஒரு சல்யூட அடித்து ‘ நான் இன்ஸ்பெக்டர் கோபாலன் . மதறாஸ் மாகாண போலீஸ் ‘ என்றார்

ஃபல்குனன் பிள்ள அரண்டுபோய் அண்ணாந்து பார்த்து , ‘ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் . நீங்க எந்த கதையிலே.. . ‘ என்று தடுமாற கோபாலன் ‘ உள்ளே போயிருக்கிறது தான் சாட்சாத் துப்பறியும் சாம்பு . ரொம்ப பெரிய மூளை .பாக்கத்தான் வாழைப்பழம் மாதிரி இருப்பார் ‘

‘மாமா நேக்கு வாழைப்பழம் ? ‘

கோபாலன் கணேஷிடம் ‘ அவர் எப்ப என்ன செய்றார் என்ன நினைக்கிறார்னு நாம நம்ம புத்திய வச்சுண்டு கண்டுபிடிக்க முடியாது சார். பெரிய மேதை . படிச்சிருப்பேளே , ஆனந்தவிகடன்லே தொடரா வந்துட்டிருந்தார் . நீங்க என்ன பண்றேள் ? ‘

‘லாயர் . எம் பேரு கணேஷ் .இது என் அசிஸ்டெண்ட் வசந்த் ‘

‘ஹைக்கோர்ட்டில இருக்கேளா ? ‘

‘இல்லீங்க நாங்களும் தொடர்கதை, சீரியல்னு வரோம் … ‘

‘ வாழப்பழம் தரமாட்டியா , அப்பன்னா நீ கோங்கு ‘

‘நீங்கதான் கொலயை முதல் முதலா பாத்ததா ? ‘ என்றார் கோபாலன்

‘இல்லீங்க நாங்க பாத்தது பொணத்த ‘ வசந்த் அவர் சட்டையை பார்த்து ‘ அப்பல்லாம் எவ்வளவு பொத்தான் பாருங்க . எஸ் வி சகஸ்ரநாமம் மாதிரி இருக்கீங்கசார் ‘ என்று வியந்தான்.

‘அப்ப கொலையை யாரு பாத்தது ? ‘

‘தெரியலீங்க ‘

‘ கோங்கு !கோங்கு !வவ்வவ்வே! ‘

‘என்னப்பா ஒரே குழப்பமா இருக்கு ? சரி நீங்க என்ன பாத்தீங்க ? ‘ ‘

‘ இந்தாள் பெயர் ராமசாமி . செல்ஃபோனிலே சொன்னார் . ‘ என்றான் கணேஷ் .

‘பாஸ் இந்தாளுக்கு செல்ஃபோன்னா புரியுமா ? ஆப்செட்டுக்கு முந்தின காலத்து ஆள்…. ‘ ‘

‘அத கதை எழுதறவன் யோசிச்சுக்குவான், பாருங்க மிஸ்டர் கோபாலன் கொலைன்னு உடனடியா முடிவுக்கு வந்திட வேணாம் .எதுக்கும் முழுக்க விசாரியுங்க ‘

‘கொலைதாங்க .தற்கொலைக் கதையிலேயெல்லாம் துப்பறியும் சாம்பு வரதில்லை . அப்படி வந்தாக்கூட கடைசியிலதான் அது தற்கொலையா மாறும் ‘ கோபாலன் பென்சிலை எச்சில் தொட்டு குறிப்புகள் எடுத்தபடி ‘ நீங்க வரச்சே அவருக்கு உசிர் இருந்ததா ? ‘

‘பொணம்ங்க ‘ என்றான் வசந்த் ‘ முழுப்பொணம் ‘

‘ அத அப்பவே சொல்லிட்டாங்க . உங்க கிட்டே என்ன சொன்னார் ? ‘

‘எங்களைப்பத்தி என்னமோ அவசரமா பேசணும்னு சொன்னார் . ‘

‘இன்ஸ்பெக்டர் சார் , சித்த உள்ள போயி பாக்கிறேளா ,இவர் போயி ரொம்ப நாழியாயிடுத்தே , உள்ள எங்கியோ மாட்டிண்டு தவிக்கிறார்னு நெனைக்கிறேன் ‘ என்றாள் வேம்பு

கோபாலன் போய் பாத்ரூம் வாசலை திறக்க உள்ளே சாம்பு வாஷ் பேசின் அருகே பக்கெட்டை கவிழ்த்துப் போட்டு ஏறி நிற்பது தெரிந்தது . ‘சாம்பு சார் என்ன பண்றேள் ? கண்ணாடியிலே அப்படி சிரமப்பட்டு என்னதான் தேடறேள் ? ‘ என்றபடி கோபாலன் ஓடிப்போய் சாம்புவை இறக்கிவிட்டு கண்னாடியை கூர்ந்து பார்த்தார் .

‘ஹை அப்பா ! அப்பா , நானும் மூச்சா வரேன் ‘

கோபாலன் உள்ளே நுழைந்து கண்ணாடியை கூர்ந்து பார்த்து ‘ அடாடா ! அற்புதம்1 ‘ என்று சாம்புவை கட்டிக் கொண்டார் ‘ சாம்புசார் , எப்படி உங்களுக்கு இந்தக் கோணத்திலே யோசிக்க தோணித்து ? ‘

கணேஷும் இன்ஸ்பெக்டரும் உள்ளே எட்டிப் பார்த்தபோது கோபாலன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஒரு ஸ்டிக்கர் பொட்டை மெல்ல கத்தியால் கிண்டி பெயர்த்து எடுத்துக் கொண்டிருந்தார் . ‘பாத்தேளா சார் . இது எவ்வளவு பெரிய ஆதாரம் ?நம்ம கண்ணிலே இது படுமா ? ‘ என்றபடி அதை ஒரு பிளாஸ்டிக் பையில் பதனமாக வைத்தார் .

‘இது சாதாரண ஸ்டிக்கர்பொட்டு தானே ‘ என்றார் ஃபல்குனன் பிள்ளா .

‘ இல்லை . இங்க கொஞ்சம் லாட்டரல் திங்கிங் பண்ணிபாக்கணும் . ஸ்டிக்கர் பொட்ட பாத்தா நாம வழக்கமா பொண்ணுன்னு நினைப்போம் .ஏன் ஆம்பிளைங்க ஸ்டிக்கர் பொட்டு வைச்சுக்கக் கூடாது ? ‘ கணேஷ் அதை கூர்ந்து பார்த்தான் .

‘பிரில்லியண்ட் பாஸ் . இந்த ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கிற உயரத்த பாத்தா அந்தாளு ஆறரையடிக்குமேலே உயரம் . பொட்டு ஒட்டியிருக்கிற விதத்த வச்சு வலது கைக்காரன்னு தெரியுது . கொலைக்கு பிறகு அவன் கை கழுவியிருக்கான் . அதுக்கு இந்த லைபாய் சோப்பை பயன்படுத்தியிருக்கான் . இங்க துண்டு இல்லை .அதனாலே அவன் கண்டிப்பா பாண்ட் பாக்கெட்டுக்குள்ள கையை விட்டுத்தான் துடைச்சிருக்கணும் ‘

‘பரவாயில்லை உனக்கு கூட மூளை வேலை செய்றதுடா .. ‘

‘என்ன பாஸ் , என்னையே வார்றீங்க . இதெல்லாம் சும்மா . ஒரு ஸ்மிர்னாஃப் ஃபுல் அடிச்சேன்னா அப்டியே லெனின் டிராட்ஸ்கி லைனுக்கு போயிடுவேன் . அப்ப இப்ப நாம ஸ்டிக்கர் பொட்டைப்பத்தி விலாவாரியா தேடப் போறோமா ? ‘

கணேஷ் அந்த பாத்ரூமை கூர்ந்து பார்த்து , ‘ கொலைகாரன் இந்த பாத்ரூமிலேதான் இருந்திருக்கான். பின்னாலே ரொம்ப கிட்டத்தில இருந்து சுட்டிருக்கான் . தலையணை மாதிரி எதுவோ வச்சு முகத்தை அழுத்திக்கிட்டு சுட்டிருக்கலாம் . ‘

‘அந்த தலையணை எங்கே ? ‘ ‘ என்றார் கோபாலன் . ‘சாம்பு சார் நீங்க என்ன நினைக்கிறீங்க ? ‘

‘ சாம்பார் தானே ? ‘ என்றார் சாம்பு .

‘பாஸ் இந்தாளுக்கு காது மந்தம்னு நெனைக்கிறேன் . ‘

கோபாலன் தீவிரமாக ‘ சாம்பார் ? சாம்பார் ? ‘ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மோட்டுவளையை பார்த்தார் .

‘பத்ரூமிலே கொலைக்காரன் எப்படி வந்தான் ? ஒண்ணு இவருக்கு முன்னாடி தெரிஞ்சவனா இருக்கணும் .இல்லாட்டி பாத்ரூமுக்குள்ளே முன்னாடியே ஒளிஞ்சிருக்கணும். ‘

‘பாஸ் , நாம சக்கைப்பிரதமன் சேத்து ஒரு கேரளாச் சாப்பாடு அடிச்சாத்தான் மேற்கொண்டு புத்தி வேலை செய்யும்னு நினைக்கிறேன் . ‘

இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பும்போது வசந்த் ‘ பாஸ் , பேசாம காரே பூரேன்னு கலர்ல பூ போட்ட சட்டை எதுனா போட்டுட்டு தென்னைமர நிழல்ல பங்கியடிக்கிறது உத்தமம்னு படுது . நீங்க என்ன கஜகர்ணம் போட்டாலும் கடசீல சாம்புதான் ஜெயிக்கணும் ,அதான் கதையோட லாஜிக். அந்தாள் எவனாவது மொட்டையன் மேல முட்டிக்குவான் , கடைசி பத்தியில அவன்தான் கொலைகாரன்னு கோபாலன் கண்டுபிடிப்பார். எவ்வளவு பழைய கதை . ‘

‘இல்லடா , இங்க வேற விஷயம் இருக்கு . இந்தக் கதையை எழுதறவன் அதிகமா படிச்ச துப்பறியும் எழுத்தாளர்னா நம்மாளுதான் . மத்ததெல்லாம் சும்மா ஞாபகத்திலேருந்து எடுத்து உடறது . அப்ப நமக்கு ஒரு சான்ஸ் இருக்குண்ணு படுது பார்ப்போம் ‘

‘பாஸ் அது என்ன எஸ்பராண்டோ ? மூளையப் போட்டு பிராண்டோ பண்ணுது .. ‘

‘அது இண்டர்நாஷனல் செயற்கை மொழிடா . டாக்டர் லுட்விக் எல் சேமநேஃப் னு ஒரு போலிஷ் ஃபிசிஷியன் 1887 லே லத்தீன் ஜெர்மன் போலீஷ் எல்லாம் போட்டு செஞ்ச அவியல் .இப்ப சில பிரத்யேக சைண்டிஸ்டுகள் மட்டும்தான் அதை பேசறாங்கன்னு நினைக்கிறேன் . இந்த அம்மாஞ்சி அதை எங்க கேள்விப்பட்டுதுன்னு தெரியலை ‘

‘ஏன்பாஸ் இதெல்லாம் இங்க எங்க வருது இதிலே ? ‘

‘இது துப்பறியறதிலே முதல் பொன்விதிடா . சம்பந்தமிலாம கண்டபடி என்சைக்ளோபீடியால புடிச்ச விஷயங்களை எடுத்துவிட்டுட்டிருக்கிறது ‘

அவர்கள் படியிறங்கியதும் கோபாலன் சாம்புவிடம் ‘எனக்கு என்னமோ இவங்க மேலேயும் ஒரு சந்தேகம் இருக்கு. அந்த சின்னவக்கீல் முகரையே சரியில்லை . தஞ்சாவூர் மைனர் மாதிரி ஒரு சிருங்கார சிரிப்பு அவன்கிட்டே இருக்கு பாத்தேளா ? ‘

சாம்பு தலையை சொறிந்து ‘ அதானே ‘ என்றார் . ‘என் கையிலே ஒரு புஸ்தகம் வச்சிருந்தேனே , எங்க அது ? ‘

‘என்ன புஸ்தகம் ‘

‘இங்கதான் ரோட்டிலே வாங்கினது . முப்பது நாளிலே எஸ்பராண்டோ கற்பது எப்படான்னு ‘ . வேம்பு தன் அருகேவந்ததும் சாம்பு ‘என்னடி கிள்றாய் ? ‘ என்றார் .

‘எதுக்கு பக்கெட்டை கவுத்துபோட்டேள் ? ‘

‘அவன்தான் அவ்வளவு உயரமா வச்சிருக்கான் , எட்டவேயில்லை . பின்ன எப்படி போறதாம் ? ‘

‘அய்யோ ராமாராமா , அது கை முகம் கழுவற பீங்கான்னா . ‘

‘கை கழுவுறதா ? அதிலே நான்…. ‘

‘அப்பா மூச்சா வரது ‘

‘கத்தாம வாங்கோ .யாராச்சும் கேட்டா பிடிச்சு ஃபைன் போட்டுடப் போறா . என் தலையெழுத்து . பொண்ணுபாக்க குடும்பத்தோட வந்து பக்கத்தாத்து வாசலைத் தட்டினேளே அப்பவே மாங்காமாமி சொன்னா , வேம்பூ இது எங்கியோ ஒதைக்குதேடான்னு ‘

சாம்பு காற்று வெளியிடை காதலை எண்ணி களித்து , ‘ ஒதைக்குதா ? கள்ளி ,சொல்லவே இல்லியே ‘ என்று கன்னத்தை கிள்ளபோனார் .

‘ பேசாம வரீங்களா , அப்படியே கீழே குதிச்சுடுவேன். எனக்கு பைத்தியம்தான் புடிக்கபோறது உங்களோட ‘

‘அப்பா மூச்சா வரது ‘

சாம்பு கவனமில்லாமல் ‘ வந்தா போயிட்டு அப்புறமா வரச் சொல்லுடா ‘ என்றார் .

‘ இப்ப என்ன , கோவளம் பாக்கிற உத்தேசம் உண்டா இல்லியா ? பத்மனாபசாமி கோயில் , மிருககாட்சி சாலை ஒண்ணும் இதுவரைக்கும் பார்க்கலை . கொட்டாங்கச்சீல நல்ல அகப்பை செஞ்சு விக்கிறாங்களாம். ரெண்டு டஜன் வாங்கிண்டு வான்னு பக்கத்தாத்திலே சொல்லியனுப்பிச்சாங்க . இங்க அப்டி என்னதான் பாக்கிறாப்ல இருக்கோ . வெள்ளைகொரங்குமாதிரி பொண்ணுகள் வேகா வெயிலிலே ஒலரப் போட்ட கூழ் வடாம் மாதிரி மல்லாந்து படுத்துக்கிட்டு ,கண்ராவி …. ‘

‘சுந்து எங்கே ? ‘

‘ எங்க போச்சோ . அது உங்க ரத்தம்தானே ? எங்கியாச்சும் வேடிக்கைபாத்து வழிஞ்சுண்டு நிக்கப்போறது. அய்யோ அங்க பாருங்கோ , அசடு வராண்டாவிலேயே போயிட்டுது. ஏண்டா .. ‘

‘அப்பாதானெ போன்னு சொன்னா ‘

‘அப்பனுக்கு தப்பாம இரு .என் பிராணனை வாங்குங்கோ .ஏன்னா அங்க என்ன முழிச்சுண்டு இருக்கேள். வாங்கோ எஸ்கேப் ஆயிடலாம் .முன்னாடி இவனாலே குருவாயூர்லே ஐநூறு செலவு, ஞாபகமிருக்கோன்னோ.. ‘

‘ சாம்பாருக்கும் தலைகாணிக்கும் என்ன சம்பந்தம் மிஸ்டர் சாம்பு ? ‘

‘புஸ்தகம்தான் , வண்டால வச்சு தள்ளிண்டுபோனான் . பத்துரூபா சொன்னான்….. ‘

‘அப்பா அங்க பார் , சுந்து மூச்சாவெ ரெண்டு வெள்ளைக்கோங்கு மோந்து பாக்குது .. ‘

கோபாலன் முகவாயை தட்டியபடி யோசிக்க , சாம்பு ‘எஸ்பரான்டோ ‘ என்று சொல்லி பெருமூச்சுவிட்டார்

‘அப்பா வெள்ளைக்கோங்குக்கு வால் உண்டா ? ‘

***

‘ வெல் வெல் மை டியர் வாட்சன் .. ‘ என்றார் ஹோம்ஸ் . ‘ லண்டனில் 221, பி .பேக்கர் ஸ்ட்ரீட்டிலிருந்து இந்த இந்திய கோடை வாசஸ்தலத்துக்கு நாம் வந்தது இப்படி ஒரு சிக்கலான கேசில் மாட்டிக் கொள்வதற்காக அல்ல என்று எண்ணுகிறேன் ‘

‘ஷ்யூர் மிஸ்டர் ஹோம்ஸ் ‘என்றார் வாட்சன் . ‘ஆனால் நாம் எப்போதுமே துப்பறிந்தபடித்தான் இருந்தாகவேண்டும் .ஏனெனில் நீங்கள் ஹோம்ஸ் .நான் வாட்சன் , இந்த வெயில் தேசத்தில்கூட டார் ஸ்டாக்கர் தொப்பி , கிரேட் கோட் , கனத்த பூட்ஸ் ,புகையும் பைப் எதையுமே நீங்கள் விட்டுவிடவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது ‘

‘கிரேட் ஸ்காட்! ‘ என்று ஹோம்ஸ் அவரது வழக்கப்படி சாதாரணமாக வியந்தார் ‘ உண்மை .நீங்கள் கூட உங்களுக்கு அளிக்கப்பட்ட வேடத்திலேயே இருக்கிறீர்கள் . இப்போது இந்த திரவம் எந்தவகையானது என்று எண்ணுகிறீர்கள் ? ‘

வாட்சன் தரையில் சிந்திக்கிடந்த அந்த நீரடையாளத்தை மீண்டும் கூர்ந்து பார்த்து , ‘ சோடியம் குளோரைட் கலந்திருப்பது சுவையில் இருந்து தெரிகிறது . அமிலத்தன்மை சிறிது இருக்கலாம் . விஷத் திராவகமாக இருக்க நியாயமில்லை மிஸ்டர் ஹோம்ஸ் .காரணம் எறும்புகள் மொய்க்கின்றன. ‘

‘மேலும் நீங்கள் இப்போது உயிருடன் இருக்கிறீர்கள் . ‘ என்று ஹோம்ஸ் புகை விட்டார் ‘ மிஸ்டர் வாட்சன் இதை கவனியுங்கள் ,அது ஒரு மிருகத்தின் சிறுநீர் . ‘

‘அடக்கடவுளே , சரிதான் ‘ என்றார் வாட்சன் ‘ எப்படி கண்டுபிடித்தீர்கள் ஹோம்ஸ் ? ‘

‘ஆரம்பப்பாடம் மிஸ்டர் வாட்சன், இந்த வராண்டா இக்கட்டிடத்தின் வடக்கு எல்லை . சில குறிப்பிட்ட வனமிருகங்கள் தங்கள் எல்லையை இவ்வாறு சிறு நீர் மூலம் அடையாளப்படுத்துவதுண்டு . ‘

‘அப்படியானால் இந்த விடுதியில் ஒரு பயங்கர வனமிருகம் உலவுகிறது! ‘ வாட்சன் தொப்பியை சரிசெய்தபடி ‘ இதை என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை! ‘

‘ஆம் , அது நம்மிடையே வாழ்கிறது ‘ தீர்க்கதரிசிகளுக்கே உரிய ஆழமான குரலில் ஹோம்ஸ் சொன்னார் .

[தொடரும் ]

***

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்