நாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

நாச்சியாதீவு பர்வீன்01 மனவெளியின் பிரதி.

வானவெளி உடைவுகளுக்குள்
அடைகாத்த கனவுகள்
குஞ்சுகள் பொறித்து
குதுகலமாக வெளியேறிய
சிதைவடைந்த நாட்களாக
இன்றைகள் ஆகிப் போயின

நறுமனமிழந்த பூக்களை
கொறித்து துப்பி
அணில் வேடமிட்ட
ஆலாக்களின் கால்களில்
காலத்தின் சாவிகள்
தொங்குவதை சகிக்க முடியவில்லை

மரங்களின்
நிழல் தேடி அலையும்
ஒரு மைனாகுஞ்சி போல
மனம் அலைந்து அழுகிறது

தும்பி பிடிக்க
தூண்டில் இட்டு
வண்ணத்திப் பூச்சிகளை
வேட்டையாடும் அரசியல்
யாருக்குத் தெரியும்

கெட்ட கனவாய்
மறந்து எல்லாம்
ஒன்றுமில்லை என்று
நினைக்க
என் நொண்டிக் கனவுகளுக்கு
கால்கள் இல்லை
என்னை விட்டு ஓடிவிட.

௦௦ 02 காலத்தின் போர்வை

வேகம் குறைந்த
காற்றின் வெப்பம்
உஷ்ணம் அருந்தி பயணப்படுகிறது

ஒன்றுமே இல்லாத ஒன்றின்
உந்துதல்
நம்பிக்கை மீதான
எதிர்பார்ப்பை விதைக்கிறது

உறங்காத உலகத்தின்
உறங்கும் மனிதர்களில்
அநேகருக்கு நிம்மதி
இதயத்திலில்லை …

வெறும் சமாதனச்சிரிப்பில்
காலம் நகர்த்தும்
மண்புழு வாழ்க்கை
இவர்களில் யாரும் சந்தோஷமாக இல்லை

காலத்தின் போர்வைக்குள்
ஒரு போர்க் குற்றவாளியாக
இன்னும் எதற்காக
இவர்களின்…ஜீவித நீடிப்பு

நாச்சியாதீவு பர்வீன்.
இலங்கை.

Series Navigation

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.