நரம்பறுந்த நிலம்..

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

தேனம்மை லஷ்மணன்


******************************

நின்ற இடம்
அமர்ந்த இடம்
இருந்த இடம்
கிடந்த இடம்

மண்சரிவில்
புதைந்த இடம்
மனிதர் வாழ்ந்த
உயிர்த்தடம்..

அணு வீச்சு.,
ஆழ்துளை.,
கதிர் அறுத்து செருகிய
நூற்றுக் கட்டிடங்கள்..

முரணோடு
இயற்கை பேர்த்து
உயிர் சுழற்சிச்
சக்கரம் நிறுத்தி

கண்டத்திட்டுகள்
நரம்பறுந்து
நகர்ந்து சென்று
நூலில் ஆடும்
பொம்மைகளாய்..

நீர் சரிந்து
மண் சரிந்து
உயிர் செறிந்த
நீர்ச்சமாதி..

யாழறுந்த வீணை
அபஸ்வரமாய்
பெருகுவதாய்
நரம்பறுந்து
நைந்த மகள்..

நிலம் எனும் நல்லாள்
அறியாதோர் ஆக்கிரமிப்பில்
அகலத் தோண்ட நகும்
ஆழத்தோண்ட வெகும்.

Series Navigation