திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தேர்தல்

This entry is in the series 20030104_Issue

பிரியா ஆர்.சி.


இங்கு ஓரிரவில் உதிப்பது மேடைகள் மட்டுமா ?
கட்சிகளும் கூடத்தான்
திடாரென்று பூப்பது நம்பிக்கை மட்டுமல்ல
மூளையில் மறைந்திருக்கும் வேட்பாளர் முகமும் தான்

பலகோடி மக்கள் கொண்ட பரந்த தேசத்தில்
பாதி பேருக்கு வாக்களிக்க விருப்பமில்லை
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் பண்டிகையாக
தேர்தல் மாறிப்போனதில் யாருக்கும் வருத்தமில்லை

தேர்வு முடிவுகள் போல இங்கு தேர்தல் முடிவுகள்
பேச்சாற்றலை மையமாகக் கொண்ட போட்டி முடிவுகள்
ஜெயித்தவர் புகழ் பறைசாற்றும் பத்திரிக்கைகள்
நாளுக்கு ஒன்றாய் நேர்கானல்கள்
நாளடைவில் சருகாய் உதிரும் நினைவுகள்

வாடிக்கையாய்விட்ட இந்த அரசியல் கூத்தை
வேடிக்கை பார்த்து திரும்பும் கூட்டமாய்
சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்
சகலத்தையும் விதியாய் ஏற்று!

rcpriya@yahoo.com

Series Navigation

About பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...

View all 17 articles →

தேர்தல்

This entry is in the series 20010430_Issue

சேவியர்


இதோ
மீண்டும் ஒரு யுத்த காண்டம்
படைவீரனைக் கொன்று
அரசனைக் காப்பாற்றும் சதுரங்கப் போர்…

சுருக்குக் கயிரோடும்…
கண்ணி வலைகளோடும்
காத்திருக்கின்றன சுயநல சிங்கங்கள்
வெள்ளைப் பசுவின் தோல் போர்த்தி…

வருவாய்க் கணக்கை வகுத்து வகுத்து
சுவரொட்டிகளுக்குச் செலவு செய்யும்
முன்னாள் மந்திரிகள்…

முன்னுதாரணங்களின் முகவுரையுடன்
அரசியல் சந்தையில்
முதலீடு செய்யும் முதலாளிகள்…

சம்பாத்தியங்களுக்கு அடிப்படையில்
சட்டசபைக் கூட்டணியின்
தோள் துண்டு தரித்துக் கொள்ளும்
சந்தர்ப்பச் சிறுத்தைகள்….

எல்லா வல்லூறுகளும் அலகு திறந்து
குறிவைத்துக் காத்திருக்கின்றன
விரிந்து கிடக்கும்
விலா எலும்புகள் நோக்கி…

அறியாமையின் தெருக்கோடியில் இருக்கும்
ஏழைத் தொண்டர்கள்
அரசியல் எச்சில்களை
இரத்தம் தோய்த்து சுவர்களில் ஒட்டுகிறார்கள்

இந்த வேட்டை முடிந்தபின்
வழக்கம் போல
உணவுகொடுத்த கானகம்
உலைக்குள் திணிக்கப்படும்….

சீதை தீயிடப்படுவாள்…

கும்பகர்ணனின் கூட்டுக்குள்
கோப்புக்கள் குறட்டை விடும்….

அங்குசங்கள்
அயலானின் காது கிழிக்கும்…

ஓட்டுப் போட்ட ஒட்டிய வயிறுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
கனவுகள் எல்லாம்
ஒட்ட நறுக்கப்படும்…

பெட்டிகளுக்குள் அடைக்கப் படும்
தன்மானம்….
கோட்டைக்குள் சிறையிடப்படும்
மனிதாபிமானம்…

இந்த முறையேனும்
விடியுமெனும் நம்பிக்கையில்
விரல் நீட்டிக் கொண்டிருக்கும்
வாக்குச் சாவடி முன்
ஓர்
வறுமைக் கூட்டம்.

Series Navigation

About ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

View all 135 articles →