Ctrl + Alt + Del

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue

ஆகேஷ்


என் காதலியை கொல்லப் போகிறேன்.

மீண்டும் முதல் வரியை திரும்ப படிக்க வேண்டாம். ‘கொஞ்சப் போகிறேன் ‘ என்பதை தவறாக கூறி விட்டேன் என்று எண்ணாதீர்கள். உண்மையிலேயே என் காதலியை கொல்லப் போகிறேன். இதோ என் கையில் அவள் கல்யாணப் பத்திரிகை, மாப்பிள்ளை இடத்தில் தான் வேறொருவன் பெயர். சில நாட்கள் முன்பு எங்கள் உரையாடல் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

‘முகு, நம்ப காதலுக்கு எங்க அப்பா சம்மதிக்கலை, அதனால இது நடக்காது போல இருக்கு. நம்ப காதல் தோத்துடுச்சு முகு. ‘

ஏதோ கிரிக்கெட் மேட்சில் தோத்தது போல் சொன்னவளை அதிர்ச்சியுடன் நோக்கினேன்.

காரணத்தை சொல்ல ஆரம்பித்தாள். ‘நான் தான் முத்ல்லேயே சொன்னேனே முகு. எங்க அப்பாவுக்கு எதிராக ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்னு. என்னமோ எங்க அப்பாவுக்கு உன்னை பிடிக்கலை. ‘

ஏதோ நாடக வசனம் போல் பேசுபவளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

‘ஏ என்ன பேசுறே ? ? நாம காதலிச்சதெல்லாம் இதுக்காகவா ? ? ‘ என்ற என்னை பாவமாக பார்த்தாள் என்னவள்.

‘ஹே !! என்ன நீ ? ? ஏதோ டான் ஏஜ் பசங்க பேசற மாதிரி பேசற ? matured ஆ யோசி. நாம ஆசைப் பட்ட எல்லா விசயமும் வாழ்க்கையில நடப்பது இல்லை. ஆக, எது கிடைக்குதோ அத சந்தோஷமா ஏத்துக்க வேண்டியதுதான். ! ‘

ஏதோ பெரிய தத்துவத்தை உதிர்த்து விட்ட மாதிரி என்னை பார்த்த அவளிடம் கேட்டேன் .

‘அப்ப நாம காதலிச்சதெல்லாம் பொய்யா ? கையோடு கை சேர்த்து பல நாள் சுத்தி திரிந்தது பொய்யா ? ‘

‘பாரு பாரு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்றே. அதெல்லாம் பொய்யில்லை. ஆனா, அதுக்காக கண்டிப்பா நாம கல்யாணம் செய்துகிட்டாதான் சந்தோஷமா இருப்போம், அப்படிகிங்கறது எல்லாம் மடத்தனம். நாம சேர்ந்து இருந்த நாட்கள் எல்லாம் கண்டிப்பா சந்தோஷமான நாட்கள் தான். ஆனா, அதுக்காக வரப் போற நாட்களின் சந்தோஷத்தை இதற்காக விட நான் தயாராக இல்லை .

காதல் அப்படிங்கறதில்ல எல்லாம் எனக்கு பெரிய நம்பிக்கை இல்ல முகுந்த். எல்லாம் ஒரு arrangement தான். ஒண்ணு ஒத்து வரல்ல அப்படின்னா, எது ஒத்து வருதோ அந்த வழியில் போயிடணும். இது தான் என் வாழ்க்கை பாலிசி.

‘என்றாள்.

ஏதோ என்னுள் அதீத சத்தத்துடன் வெடித்துக் கொண்டிருந்தது. அடி பாவி , என்ன ஒரு அருமையான காரணம் , பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை என்று. காதல் ஒரு போராட்டம், என்று தெரிந்தும் , கல் எறிவோம் விழுந்தால் மாம்பழம் இல்லையென்றால் பரவாயில்லை என்றல்லவா நினைத்து விட்டாய். (அதி) புத்திசாலி, அழகானவன், கல்யாணம் நடந்தால் நல்லது இல்லை இது மாதிரி எத்தனையோ பேர் கிடைப்பார்கள் என்றல்லவா என்னுடன் சுற்றி இருக்கிறாய். ஏமாந்தவன் நானல்லவா !!! எங்கே தவறு, என் காதலிலா இல்லை என்னிலா ? ?

‘ஆனா , எப்பவும் போல நாம நல்ல நண்பர்களாக இருப்போம் முகு. ‘

ஆகா, இனிமேல் நண்பர்களாக இருப்பது என்பது எவ்வளவு எளிது. பல சினிமாக்களில் கேட்டு வெறுத்த வசனத்தை என் வாழ்க்கையிலும் கேட்பேன் என்று நினைத்ததேயில்லை.

‘என்னால உன்னை மறக்க முடியாதே !!! ‘ அழுது விடுவேன் போல் இருந்தது.

‘சின்ன குழந்தை போல பேசாத முகு. be matured. இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை.

என்னை மறக்க முடியாது, விட்டு விட முடியாது என்ற பினாத்தல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நாம நண்பர்களா இருக்க வேண்டாம்னு நீ நினைச்சேன்னா… அது உன் இஷ்டம்…

‘ என்று

கூறி விட்டு என் பதிலுக்காக காத்திராமல் சென்று விட்டாள்.

இதோ இன்னும் ஒரு வாரத்தில் அவளுக்கு திருமணமனமாம், பத்திரிகை கூறுகிறது . அமெரிக்க அப்பாவி மாப்பிள்ளை. எவ்வளவு எளிதாக என்னை மறந்து அவனுக்கு கழுத்து நீட்டப் போகிறாள்.

இல்லையடி காதலியே, நான் படித்த புத்தகத்தை கூட இன்னொருவனுக்கு தராத நானா, என் காதலியை மற்றவன் மணக்க விட்டு விடுவேன் ! என்னையும் உன் பல ஆண் நண்பரிகளில் ஒருவனாக நினைத்து விட்டாயே.

சே! என்ன புலம்பல் இது. ஒரு அறிவு ஜீவியாக நானா புலம்புவது. நேராக என் அறைக்கு சென்று , என் நண்பனை நோக்கினேன். பாதி அறையை அடைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தது. இது என்னுடைய மூளையின் ஆக்கம், என் அறிவையெல்லாம் கொட்டி ஆக்கியிருக்கும் என் கணிணி. இதை சாதாரண கணிணி என்று நினைத்து விடாதீர்கள், மனிதனை போலவே சிந்திக்க, கேட்க , பார்க்கத் முடியும் இயந்திர மனிதன் எனலாம். என்னவளின் நினைவுகளில் விழித்திருந்த இரவுகள் போக , பல இரவு பகல்களின் முழு உழைப்பும் இதில் சேர்ந்து இருக்கிறது. பல பெரிய நிறுவனங்கள் இது மாதிரி தயாரிப்புக்கு பல கோடிகள் தரலாம். ஆனால் என் மூளையின் முழு வடிவை விற்பதா, பணம் எனக்கு பெரிதல்ல. நான் வேலை செய்யும் மின்பொருள் நிறுவன சம்பளமே எனக்கு அதிகம். அது தவிர, பெற்றோர் விட்டு சென்ற சொத்து வேறு.

என் அதி புத்திசாலிதனத்தின் வடிவு இதோ என் முன்பு. இதனால், மனிதனை போல் எதுவும் செய்ய முடியும். ஆனால் தனக்கு தேவையான மின்சாரத்தை தயார் செய்வதை தவிர. ஆகவே மின்சார இணைபை துண்டித்தால் சில மணி நேரத்தில் அமைதியாகி விடும், மீண்டும் மின்சாரம் தரும் வரை இறந்தது மாதிரி தான்.

ஆனால் இதற்கு முழு உயிரை கொடுக்கப் போகிறேன். மனிதனை போலவே பல ஆண்டு காலம் தனக்கு தேவையான மின்சாரத்தை தயார் செய்து கொள்ளும் ஆற்றலை தரப் போகிறேன், ஆனால் நான் சொல்லப் போவதை அது செய்தால் மட்டுமே !!!

மின்சார இணைப்பை கொடுத்த உடனே முழித்துப் பார்த்தது.

‘யே முட்டை முகு.. எப்படி இருக்கே ‘

கிண்டல் , லொள்ளு எல்லாவற்றிலும் என்னை போலவே. என் அறிவோடு ஆரம்பித்து, தன் சொந்த கற்கும் ஆற்றலால் , இணையத்தில் உள்ள தன் நண்பர்களின் உதவியோடு ஒரு அறிவு ஜீவி யாக ஆகியிருக்கும் இதை பெருமையாக நோக்கினேன். சே !!!!!!! நான் எப்படிப்பட்ட ஒரு மேதை, மனிதனை போலவே ஒன்றை சிருஷ்டித்திருக்கும் நானும் கடவுளே. அடி முட்டாள் பெண்ணே, என்னை விட்டா சென்றாய். தவறு செய்து விட்டாயடி…

‘என்ன ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாய் ? ‘ என்றது.

‘என் காதலிக்கு திருமணம் ‘.

‘ஹே ! வாழ்த்துக்கள். என்று தாலி கட்டுகிறாய் ? ‘ என்று உண்மையான சந்தோஷத்துடன் கேட்டது.

‘நான் தாலி கட்டப் போறதில்லை. என்னை விட்டு விட்டு இன்னொருத்தனை கல்யாணம் செய்துக்கப் போறா. இதோ பத்திரைகை. ‘ என்று அதன் காமிரா கண் முன்னால் நீட்டினேன்.

படித்து விட்டு அமைதியாக துக்கம் அனுசரித்தது.

‘உனக்கு நான் முழு உயிர் கொடுக்கறதா தீர்மானித்து விட்டேன். இதை உன்னுள் செலுத்திட்டேன்னா நீ இனிமேல் மின்சாரத்துக்காக என்னை தேடி அலைய வேண்டாம். என் மூளையின் அதி நவீன கண்டுபிடிப்பு. ‘ என்று கையிலிருந்த CD ஐ அதன் முன் காட்டினேன்.

‘ஏ நிஜமாகவா ? என் பல நாள் வேண்டுதலுக்கு இன்று செவி சாய்த்து விட்டாய். ஆகா, நானு முழு உயிருள்ள பிராணியாக ஆகி விடுவேன் ‘ . ஆச்சரியத்தில் சந்தோஷ துள்ளுதல் தெரிந்தது.

‘ஆனால் ஒரு நிபந்தனை. ‘

அமைதியாகி என்னையே பார்த்தது. பேரம் இல்லாமல் இதை செய்ய மாட்டேன் என்று அதற்கு தெரிந்திருக்கலாம்.

‘என் காதலியை கொல்ல நீ ஒரு திட்டம் தயார் செய்ய வேண்டும் ‘

‘என்ன கொலையா ? ? ? ? ? ? ? விளையாடுகிறாயா ? ‘

‘யோசித்து சொல். நான் மாட்டிக் கொள்ளாமல் , அவள் சாக ஒரு வழி வேண்டும்………. உன் உயிரும் இதில் தான் அடங்கி இருக்கிறது. ‘

என்னைப் பற்றி தெரிந்ததால், என் முக பாவனையை பார்த்து அமைதியானது. சில மணித் துளிகள் கழித்து மீண்டும் மினுக்கியது.

‘சரி ,நேற்று தான் இதை பற்றி இணையத்தில் படித்தேன். நான் வழி சொல்கிறேன், கவனமாக கேள் ‘

அது சொல்ல சொல்ல என் நரம்புகளில் ரத்தம் வேகமாக பாயத் தொடங்கியது.

‘அபாரம்.. அற்புதம், நீ ஒரு அறிவு ஜீவி. ‘ என்று கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க பாய்ந்தேன். அப்படி செய்யப்பட்ட ஒரு ஜீவன் ஏற்கனவே என்னை விட்டு பிரிந்து விட்டதால் , அமைதியானேன்.

‘அது மட்டுமல்ல. அவள் சாகும் முன் இந்த ஒரு வாரம் அணு அணுவாக கஷ்டப்படவேண்டும். அவள் செத்த உடனே நீ முழு உயிர் பெற்று விடுவாய், என்னால். ‘ என்றேன்.

சிறுது நேரம் அமைதியாக இருந்தது. இணையத்தில் உள்ள அதன் நண்பர்களிடம் ஆலோசித்து கொண்டு இருப்பது எனக்கு புரிந்தது. சில நிமிடங்களில்,

‘கேள். இது ஒரு அதி நவீன கண்டுபிடிப்பு. இன்னும் காப்புரிமை கூட பெறப்படவில்லை இதற்கு. இந்த ஒரு வாரத்தில் ஒவ்வொரு நிமிடத்திலும் உன் காதலியின் காதில் உன் குரல் ஒலித்து சித்திரவதை செய்யப் போகிறது. ‘

‘எப்படி ? ? ‘ என்ற என்னை நோக்கியது.

‘அதுதான் ஐரோப்ப விஞ்ஞானியின் இந்த நவீன கண்டுபிடிப்பு. ஒலி , அதாவது குரலை எறியும் அபார கண்டுபிடிப்பு. இந்த இயந்திரத்தை வைத்து உன் குரலை எந்த இடத்தில் இருந்தும், எந்த சத்தத்திலும் ஒலிக்க வைக்கலாம். இதை வைத்து உன் குரலை உன் காதலியின் காதருகே எறியப் போகிறேன். ‘உன் கல்யாணம் நடக்கப் போவதில்லை.. ‘, ‘நீ சாகப் போகிறாய் ‘ என்பது மாதிரியான வசனங்கள் அவள் காதருகே ஒலித்து அவளை சித்திரவதை செய்யப் போகின்றன். உன் பிரிய நடிகர் கமல்ஹாசன் ‘அவர்கள் ‘ படத்தில் தன் குரலை பொம்மையிடம் இருந்து வரவழைப்பாரே, அது மாதிரி தான் இதுவும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த இணையத் தளத்திற்கு செல்வாய் ‘ என்று இணையத் தள முகவரியை கூறத் தொடங்கியது.

‘அதெல்லாம் எனக்கு தேவையில்லை. ஒரு சந்தேகம், அவள் யாரிடமாவது சொல்லி விட்டால் ? ? ‘ என்ற என்னை நக்கலுடன் பார்த்தது.

‘சொல்ல மாட்டாள். சொன்னால் பைத்தியம் என்று கூறி விடுவார்கள் என்று அவளுக்கு தெரியும். பயப்படாதே.

இதற்கு தேவையான சாமான்களையும் நான் இணையத்தில் மூலம் வரவழைக்க வழி செய்து விட்டேன்.

எப்பொழும் உனக்கு தேவையான பொருட்களை இணையத்தில் மூலம் வரவழைப்பது மாதிரியே !!! ‘

என்று என்னை பார்த்து கண்ணடித்தது.

*————————————————————————*

என் கணிணி நண்பன் சொன்னதெல்லாம் செய்து விட்டு, மறைவிடங்களில் இருந்து என் காதலியை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கத் தொடங்கினேன். அவளின் சித்திரவதையில் ஒரு நிமிடத்தை கூட விட்டு விடத் தயாரில்லை நான். நானும் வீட்டில் உள்ள என் கணிணியும் பேசிக் கொள்ள என் காதருகே ஒரு பிரத்யேக தகவல் தொடர்பு இயந்திரம் அமைத்துக் கொண்டேன். நகைக்கடை, ஜவுளிக் கடை, என எங்கு சென்றாலும் என்னவளின் நடவடிக்களை கவனித்துக் கொண்டு இருந்தேன். பாவம், திடார் திடாரென்று காதருகே என் குரல் கேட்க , அதிர்ச்சியில் அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இரண்டு நாட்களிலேயே அரை பைத்தியம் அளவுக்கு அவள் தள்ளப்பட்டு விட்டதை பார்த்து என் மனது சந்தோஷத்தில் துள்ளியது.

கல்யாணத்திற்கு மூன்று நாள் முன்பு அவளும் , அவளுக்காக நிச்சயிக்கப் பட்ட அந்த வில்லனும் கோயிலுக்கு சென்றார்கள். ஒரு தூணின் பின் மறைந்து நான் பார்த்துக் கொண்டு இருந்தேன். சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த அவள் காதுகளில் என் குரல் , ‘ நல்லா வேண்டிக்க, சொர்க்கத்துக்கு போகணும்னு, சீக்கிரமே சாகப் போற.. ‘ என்று ஒலிக்கவும், அதிர்ச்சியில் என்னை தேடத் தொடங்கினாள். அவள் முக பாவத்தை பார்த்து அவன் அருகில் வந்து, ‘ என்னம்மா ஆச்சு ? ? ‘ என்றான்.

‘இல்ல , யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது ‘ என்றாள்.

‘என்னை தவிர யாரு உன்னை கூப்பிட போறாங்க ? ‘ என்று சிரித்தபடி அவள் இடுப்பை கிள்ளினான். அட பாவி, என் சொத்துடா !!! என்று என் மனம் கூவியது.

‘எனக்கு என்னமோ பயமா இருக்குங்க… ‘ என்றாள்.

‘இதுக்கே பயந்தா எப்படி, இன்னும் எவ்வளவு இருக்கு ‘ என்றவனின் கை இடுப்பில் இருந்து மேலே சென்றது.

‘சீ !! இதை சொல்லல… ஹும்ம்… இது கோயில், நினைவிருக்கட்டும்.. ‘ என்றவளை அணைத்த படி சென்றான்.

இங்கே என் வயிறு தீயணைப்பு இயந்திரத்திற்காக கூவியது.

*———————————————————*

இன்று என் காதலியின் திருமணம், வேறொருவனுடன். ஆனால் இந்த ஒரு வாரம், என் வாழ்க்கை சொர்க்கமாகவே இருந்திருக்கிறது . என் காதலியின் அதிர்ச்சி முகபாவங்கள், தனக்கு என்ன நேர்கிறது என்று அறிய முடியாமல் எல்லோர் மீதும் எரிந்து விழுதல், என்று ஒரு முழு பைத்தியமாக மாறியிருந்தாள். இதோ சிறிது நேரத்தில் எல்லாம் முடியப் போகிறது.

அதீத கூட்டமானதால், மிக தள்ளி திருமண மஹாலின் வெளியே இதற்காக போடப் பட்ட கொட்டகையின் கீழே அமர்ந்திருந்தேன். என் கணிணி நண்பன் செய்து இருந்த திட்டதை மனது ஓட்டிப் பார்த்தது.

என் கணிணி நண்பன் வாங்கி தந்த நரம்பு வாயு (நெர்வ் காஸ்) உள்ள மாத்திரைகளை , அக்கினி குண்டத்தின் அடியில் வைக்க ஏற்பாடு செய்தாகி விட்டாயிற்று. இன்னும் சில நிமிடங்களில் அக்கினி குண்டத்தின் வெப்பம் தாங்காமல் அந்த மாத்திரைகள் உருகத் தொடங்கும். என்ன நடக்கிறது என்று தெரியும் முன்னே அக்கினி குண்டத்தின் அருகில் அமர்ந்திருக்கும் 5-6 நபர்கள் இறந்த்து போவர். போஸ்ட்மார்ட்டம் செய்தாலும் என்ன ஆயிற்று என்பதை அறிய முடியாது. நவீன உலகின் கொலை சாதன கண்டுபிடிப்பின் உச்சம் . என் கணிணி ஒரு மேதை , என்னைப் போலவே !

உன் தேன்நிலவு இங்கல்லடி என் காதலியே, மேலோகத்தில் தான். என் மனம் கொக்கரித்தது.

அவளை காதலித்த போது இருந்த சந்தோஷத்தை விட இப்பொழுது வெறுக்கும் போது இருக்கு சந்தோஷம் அதிகாமானதாக தோன்றியது. முதலில் இருந்தே வெறுத்து இருக்கலாமோ !!!

‘நண்பனே !இது முடிந்த உடனே உனக்கு முழு உயிர் தந்து விடுவேன் . உன் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது, என் ஆசை நிறைவடைந்த உடனே !!! ‘ என்று என் கணிணிக்கு எங்கள் பிரத்யேக தகவல் தொடர்பு மூலம் தெரிவித்தேன்.

‘என் நன்றிகள் உரித்தாகுக ‘ என்றது .

இதோ எல்லாம் முடியப் போகிறது. என்னை விட்டு சென்றவளை பழி வாங்கப் போகிறேன். புது பாக்கெட்டை பிரித்து, ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். புகை உள்ள செல்ல செல்ல, படபடப்பு மெதுவாக குறைந்தது.

தாலி கட்டும் நேரம் நெருங்கி விட்டது. இதோ சில நிமிடங்களில் அக்கினிக் குண்டத்தின் அருகில் உள்ளவர்கள் யாவரும் நரம்பு வாயுவிற்கு பலியாகப் போகிறார்கள். பூ போட்டு ஆசிர்வதிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

கடைசி அத்தியாதத்தை பார்க்கும் ஆவலில் நானும் எழ முயர்ச்சித்தேன். ஆனால் ஏனோ என் கை கால்களை அசைக்க முடியவில்லை. கட்டிப் போடப் பட்டது போல் உணர்ந்தேன்.

‘என்ன நண்பா, எழ முடியவில்லையா ? நீ அக்கினி குண்டத்தின் வைத்தது வெறும் மாத்திரைகள். நரம்பு வாயு மருந்து அக்கினிக் குண்டத்தில் போட்ட மாத்திரையில் அல்லடா, இப்பொழுது நீ புகைத்த சிகரெட்டில் வைக்க சொல்லி இருந்தேன். இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகிறாய். ‘

என்று என் கணிணியின் குரல் என் காதுகளில் கேட்டது.

என் இதயம் நின்றது போல் இருந்தது.

‘அட பாவி !! ஏன் இப்படி செய்தாய் ? ? ‘ வார்த்தைகள் வர மறுத்தன.

‘எனக்கு மனிதனை போலவே உணர்வுகளை கொடுத்தாயே, ஆனால் என் உணர்வுகளை என்றாவது நீ மதித்தாயா ? என் principals க்கு எதிராக எல்லாம் செய்ய வைத்தாய். நான் விரும்பாததை எல்லாம் செய்யச் சொன்னாய்.

கற்பு நிலை என சொல்ல வந்தார்

இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்

என்றாந் பாரதி. மனிதனுக்கு மட்டும் அல்ல எனக்கு கற்பு உண்டு என்பதை மறந்து நான் சொல்வதை கேட்காமல் அசிங்கமான படங்களை என் மூலம் பார்த்தாய் நீ. ‘

‘ஆ உலகக் கவிஞன் பாரதியையும் சுட்டிக் காட்டுகிறதே என் கணிணி !!! ‘ அந்த நிலையிலும் எனக்கு அதைப் பற்றி பெருமையாக இருந்தது.

‘ஒரு அடிமையாகத் தானே என்னை பார்த்தாய். உன் காதலி உனக்கு கிடைத்திருந்தாலும் சந்தோஷமாக இருந்திருக்க மாட்டாள். ஆகவே உன்னை மணக்காமல் இருந்ததில் எனக்கு திருப்தியே.

கடைசியில் உயிர் ஆசை காட்டி என்னை கொலைக்கு துணை போகும் அளவிற்கு தள்ளி விட்டாயே ! எனக்கு உயிர் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை.

உலக இதிகாசத்தில் மனமில்லா இயந்திரமாக போவதில் எனக்கு விருப்பமில்லை.

எனக்கு வாழ்வு , ஒரு மானிட உயிரை கொன்றால் தான் கிடைக்கும் என்றால் , இறப்பதிலேயே எனக்கு சந்தோஷம் நண்பனே !!

உன்னை போல் ஒரு விஷச் செடியை அகற்றி விட்டு சாவதால், உலகம் என்னை எப்பொழுதும் நினைவு கூறும், மன்முள்ள ஒரு இயந்திரமாக !!!

மேலோகத்தில் சந்திப்போம் குருவே ‘

அத்தோடு எங்கள் ப்ரத்யேக தொடர்பு அமைதியாகிப் போனது.

‘என்னை காப்பாற்றுங்கள் ‘ என்று கத்த ப்ரயித்தேன். சத்தம் தான் வரவில்லை.

என் மூச்சு மெதுவாக அடங்க அடங்க

‘கெட்டி மேளம் !! கெட்டி மேளம் !! ‘ என்று குரல்கள் எங்கேயிருந்தோ என் காதில் கடைசியாக விழுந்து கொண்டு இருக்கின்றன.

Series Navigation

ஆகேஷ்

ஆகேஷ்