ஞான குரு – கதை — 03

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

தமிழில் : நாகூர் ரூமி


ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்கு ஞானகுருவின் அருமைபெருமைகளைப் பற்றி பின்வருமாறு உபதேசித்தார்கள்.

‘அலீயே ! நீங்கள் அல்லாஹ்வின் அரிமா! துணிச்சலான வீரர். ஆனால் அதற்காக உங்கள் சிங்க மனத்தை நம்பியிருக்க வேண்டாம். நம்பிக்கை எனும் ஈச்சமர நிழலில் ஒதுங்கிவிடுங்கள். ஞானகுருவின் நிழலெனும் பாதுகாப்புக்குள் வந்துவிடுங்கள். அதன் பின் நேரான பாதையில் செல்வதிலிருந்து உங்களை யாரும் தடுக்க முடியாது.

‘ஞானகுருவின் குணாம்சங்களைப் பற்றி நான் பேசவேண்டுமெனில், இறுதித் தீர்ப்பு நாள் வந்தாலும் முடிக்க முடியாது. தெய்வீகச் சூரியன் தன்னை மனிதனிலே மறைத்துக்கொண்டான். இந்த மர்மத்தைப் புரிந்துகொள்ளுங்கள். எது சரி எது தவறு என்பதைப் பொறுத்த மட்டில் இறைவனே போதுமானவன்.

‘அலீயே ! பக்தியான செயல்பாடுகள் ஆயிரமாயிரம் உண்டு. ஆனால் அவற்றில் இறைவனின் அடிமைச் சேவகனாகிய ஞானகுருவின் நிழலை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

‘ஏதாகிலும் ஒரு பக்தியான செயல்பாட்டில் ஈடுபட்டு மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். நீங்கள் குருவின் நிழலில் அடைக்கலம் தேடுங்கள். அப்போதுதான் உங்களுக்கே தெரியாத உங்களின் ரகசிய எதிரிகளிடமிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.

‘குருவானவர் உங்களை ஏற்றுக்கொண்டபின், அவரிடம் முழுமையாக உங்களை ஒப்படைத்துவிடுங்கள். ஹில்ர் அவர்களிடம் மூஸா தன்னை ஒப்படைத்ததுபோல.

ஹில்ர் சொல்வதையெல்லாம், செய்வதையெல்லாம் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் கோபப்பட்டு, ‘போதும், இதுவே நமது பிரிவு ‘ என்று சொல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

‘அவர் படகைக் கவிழ்த்தாலும் சரி, குழந்தையைக் கொன்றாலும் சரி, ஒரு வார்த்தையும் பேசவேண்டாம். அவர்களுடைய கைக்கு மேலே இருப்பது தனதுகைதான் என்று இறைவன் சொன்னான். ஞானகுருவின் கையானது தனது கைதான் என்றும் அவன் அறிவித்துள்ளான்.

‘இறைவனுடைய கை குழந்தையைக் கொன்றால், மறுபடியும் அதற்கு உயிர் கொடுக்கும் அது. உயிர் என்பது என்றைக்குமே அழியாத ஒன்றுதானே ?

‘குருவின்றி, யாராவதொருவர், அரிதாக, சரியான பாதையில் பயணம் செய்வாராகில், அதற்கும் பல ஞானகுருக்களின் இதயங்களின் கருணைதான் காரணம். சிஷ்யர்களாக இல்லாதவருக்கே ஞானகுரு இவ்வளவு கண்ணியம் செய்வாராகில், நேரடியான மாணாக்கர்களைப் பற்றி நான் என்ன சொல்ல ? தங்கள் மாணாக்கர் குழுவில் இல்லாதவர்களுக்கும் ஞானகுருவானவர் ஆன்மீக உணவளிக்கையில், இருக்கும் சிஷ்யர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன ?

‘குரு தரும் ஒவ்வொரு வேதனையும் தங்கத்தைப் புடம் போடுவதைப் போன்றதாகும். கண்ணாடியைத் தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்துவதைப் போல. இல்லையெனில் உங்களிடம் எப்படித் தெளிவு வரும் ? ‘

இவ்வாறாக ஞானக்கோட்டையின் தலைவாசலாகிய அலீ அவர்களுக்கு ஞானக்கோட்டையாகிய பெருமானார் குருவின் அவசியத்தையும் சிறப்புக்களையும் பற்றி எடுத்துரைத்தார்கள்.

கஸ்வின் என்ற ஊர் மக்களிடையே ஒரு பழக்கமிருந்தது. தங்கள் உடம்பு முழுவதிலும், குறிப்பாக கைகளிலும் தோள்களிலும், நீல நிறத்தில் அவர்கள் பச்சை குத்திக்கொள்வார்கள். வேறு காயங்களின் வேதனை தாக்காமலிருக்க!

ஒரு நாள் அந்த ஊர்க்காரன் ஒருவன் பச்சை குத்திக்கொள்ளச் சென்றான்.

‘அழகாக கலை நுணுக்கத்தோடு எனக்கு பச்சை குத்திவிடு ‘ என்றான்.

‘வீரனே, எந்த உருவத்தை நான் உன்மீது பச்சை குத்த வேண்டும் ? ‘ என்று பச்சை குத்துபவன் கேட்டான்.

‘ஆக்ரோஷமான சிங்கம் ஒன்றை உருவாக்கு. எனது ராசியும் சிம்மம்தான். நீல நிறம் நன்கு தூக்கலாக இருக்கட்டும் ‘ என்றான் வீரன்.

‘எந்த இடத்தில் குத்த வேண்டும் ? ‘

‘தோளின்மீது சிங்கத்தின் கம்பீரத்தை எழுப்பு ‘

பச்சை குத்தத் தொடங்கிய உடனேயே, ஊசிகள் குத்தியதால் உண்டான வேதனை வீரனின் தோளில் இறங்க ஆரம்பித்தது. வீரன் முனங்கினான்.

‘ஐயோ, வேதனை என்னைக் கொல்லுகிறது. என்ன உருவம் போடுகிறாய் ? ‘

‘ஏன் வீரனே, சிங்கம்தானே போடச்சொன்னாய் ? ‘

‘சிங்கத்தின் எந்தப் பாகத்தில் தொடங்கினாய் ? ‘

‘வால் போட ஆரம்பித்துள்ளேன் வீரனே ‘

‘நண்பனே வால் வேண்டாம்! வலி பொறுக்க முடியவில்லை. வால் இல்லாத சிங்கம் போதும். உன் சிங்கத்தின் வால் என் மூச்சுக்குழலை நசுக்குகிறது. ‘

உடனே பச்சை குத்துபவன், கருணையோ கடுமையோ எதுவும் இன்றி, கருமமே கண்ணாயினனாய் தோளின் வேறோர் இடத்தில் பச்சை குத்தத் தொடங்கினான்.

‘இது எந்தப்பகுதியப்பா ? ‘

‘இது சிங்கத்தின் காது வீரனே ‘

‘ஐயோ காதுகளே வேண்டாம், சிங்கத்தை சுருக்கமாக முடி ‘

வேறோர் இடத்தில் குத்தத் தொடங்கினான். மறுபடியும் வீரன் வலியில் விறைத்தான்.

‘இது எந்தப் பகுதியப்பா ? ‘

‘இது சிங்கத்தின் வயிறு வீரனே ‘

‘சிங்கத்துக்கு வயிறே வேண்டாம் ‘, வேண்டினான் வீரன்.

பல கணங்கள் யோசித்துவிட்டு தனது உப கரணங்களை தூக்கி எறிந்தான் பச்சை குத்துபவன்.

‘இந்த உலகில் எங்காவது இப்படிக் கண்டதுண்டா ? வாலும் காதும் வயிறும் இல்லாத சிங்கத்தை ? இறைவனே இப்படி ஒரு சிங்கத்தை உருவாக்க வில்லை ‘ என்றான்.

சகோதரனே, ஊசிமுனையின் வேதனையை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் உன் நப்ஸுடைய விஷத்திலிருந்து நீ தப்பிக்க முடியும். இப்படித் தப்பித்தவர்களுக்கு சூரியன், சந்திரன் மற்றும் விண்ணகமனைத்தும் மரியாதை செய்கின்றது. அவர்களுடைய கட்டளைக்கு அடிபணிகிறது. தன்னை இழந்து இறைவனின் இணைந்த அவர்களுக்கு முள்கூட ரோஜாவினும் மென்மையாகிறது.

இறைவனை நாம் எப்படிப் புகழமுடியும் ? உன்னை ஒரு தூசியைவிடக் கேவலமாக எண்ணுவதுதான் வழி. தவ்ஹீதின் ஞானத்தை எப்படிப் பெறுவது ? அந்த ஒன்றின் முன் உன்னை நீ இல்லாமல் எரித்துக்கொள்வதன் மூலமாகத்தான்.

பகலைப்போல நீங்கள் ஒளிவிட வேண்டுமெனில் இரவைப் போன்ற உங்கள் நப்ஸை பொசுக்குங்கள். அதில் ஏற்படும் வேதனைகளை சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ஞானகுரு கொடுக்கும் வேதனைகள் உனக்கு சாதனைகள் தரும். ஆனால் நீ அந்தப் பச்சை குத்தச் சென்ற கஸ்வின் நகரத்தானைப்போல இருக்கலாகாது!

அருஞ்சொற்பொருள்

ஹில்ர் — மூஸா என்ற இறைத்தூதருக்கு சில விஷயங்களில் தெளிவை ஏற்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்டவர். ஹில்ர் என்பவர் மறைவாக இருக்கின்ற, தேவைப்படும்போதெல்லாம் தோன்றுகின்ற ஒரு இறைத்தூதர் என்றும் நம்பப்படுகிறது. எந்தக் கேள்வியும் கேட்காமல் வருவதானால் தன்னோடு வரலாம் என்ற நிபந்தனையின் பேரில் ஹில்ர் மூஸாவை தன்னோடு அழைத்துச் செல்வார்.வழியில் ஒரு படகைக் கவிழ்ப்பது, ஒரு சிறுவனைக் கொல்வது போன்ற காரியங்களைச் செய்வார். பொறுக்கமுடியாமல் மூஸா அவற்றுக்கு விளக்கம் கேட்பார். ஹில்ர் கடைசியில் விளக்கம் சொன்னவுடன்தான் ஹில்ரைவிட ஞானத்தில் தான் எவ்வளவு கீழே உள்ளோம் என்று மூஸா புரிந்துகொள்வார். அவருடைய ‘நான் ‘ என்ற உணர்வை அழிக்கும்விதமாக ஹில்ரின் காரியங்கள் இறைவிருப்பப்படி அமைந்திருக்கும்.

இங்கே ஹில்ர் ஒரு குருவின் குறியீடு.

நப்ஸ் — கீழான ஆசைகள்

தவ்ஹீத் — இருமையை மறுத்து, எல்லாவற்றிலும் இறைவனின் ஒருமையைச் சொல்லும் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.

***

ruminagore@yahoo.com

Series Navigation