சில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

திண்ணை குழு


சென்ற மாதங்களில் திண்ணையில் தொடர்ந்து வெளியான சில தொடர்கள் முடிவு பெற்றன. க அருள் சுப்பிரமணியம் எழுதிய ‘விடியும் ‘ நாவல் முடிவுற்றது. ஒரு வருடமாகத் தொடராக வெளிவந்த இரா முருகனின் ‘அரசூர் வம்சம் ‘ நாவல் முற்றுப் பெற்றது. 100 வாரங்களாக திண்ணை வாசகர்களுடன் தன் சிறுகதை வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பாவண்ணனின் தொடர் கட்டுரை முடிவுற்றது.

இரா முருகனின் ‘அரசூர் வம்சம் ‘ நாவல் நூல் வடிவில் விரைவில் வரவிருப்பதாய் அறிகிறோம். பாவண்ணனின் முதல் ஐம்பது கட்டுரைகளின் காலச்சுவடு வெளியீடாய் வெளிவந்துள்ளது. இரா முருகன் , மத்தளராயன் என்ற பெயரில் எழுதிய ‘வார பலன் ‘ கட்டுரைகளும் தொகுக்கப்படவுள்ளன. திண்ணையில் வெளியான பிற எழுத்தாளர்களின் படைப்புகளும் புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன, பெறவுள்ளன என்று அறிகிறோம். மகிழ்ச்சி. தமிழின் படைப்பாளிகள் உலகின் எந்தப் பகுதி எழுத்தாளர்களுக்கும் , படைப்பாற்றலிலும், சமூக உணர்விலும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை.

திண்ணை ஒரு தமிழ்ப்பத்திரிகையாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வாரந்தோறும் வெளிவருகிறது. அப்புறம் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டு சாதனைகளை(!) பட்டியலிடாமல் இருந்தால் எப்படி ? அதனால் இதோ திண்ணையின் சுய தம்பட்டம்.

தமிழின் மிக முக்கியமான விவாதங்களுக்குத் திண்ணை களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. சிறு பத்திரிகைகளும் சரி, பெரும்பத்திரிகைகளும் சரி தொடத் தயங்குகிற விவாதப் பொருட்கள் திண்ணையில் விவாதிக்கப் பட்டுள்ளன. இப்படி விவாதத்தளத்தை விரிவு படுத்துவதும், ஆழப்படுத்துவதும் அதில் பங்குபெறுவோரின் விரிவாழத்தினைப் பொறுத்தது. இப்படிப் பட்ட விவாதங்களின் தீவிரம் சிலருக்குச் சங்கடம் அளிக்கிறது என்றால் அதுவும் கூட விவாதத்தின் எதிர்பார்க்கப் பட்ட ஒரு விளைவு தான். விவாதங்களின் உண்மையை மனதில் இருத்தி புதிய சிந்தனைகளுக்குத் தடையற்ற ஒரு மனப் பாங்கை உருவாக்குவது தான் நம்மைச் செழுமைப்படுத்திக் கொள்ள உதவுமே அல்லாமல், முன்செல்ல இயலாத இறுகிய சிந்தனைகள் தேக்கத்திற்கே வழிவகுக்கும்.

திண்ணை மூலமாக பல புதிய எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். பல புதிய வாசகர்கள் தமிழுக்குக் கிடைத்துள்ளனர். முன்பே எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்களுக்கு வாசகத் தளம் விரிவு பெற்றுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விஞ்ஞானக் கட்டுரைகள், பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல் கட்டுரைகள் மட்டுமின்றி சமகால அரசியல், சமூகம், தமிழ்நாட்டின் வாழ்நிலை குறித்த கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. இவற்றை வெளியிடக் காரணமாய் இருந்த படைப்பாளிகளுக்கு திண்ணையின் முதல் வாசகர்களான திண்ணை குழு சார்பிலும் , மற்ற திண்ணை வாசகர்கள் சார்பிலும் நன்றிகள்.

***

திண்ணை எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே விவாதத்தில் ஈடுபடுவதும், அதில் குறிப்பிட்ட விஷயங்களுக்கும், தனி நபர்களுக்கும் அவர்களின் கருத்துகள் மீது எதிர்வினை எழுதுவதை திண்ணை தடை செய்வதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக திண்ணை எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி வரும் எழுத்துக்களுக்கு இடமளித்தால், எத்தனையோ வேலைகளுக்கு நடுவில் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள திண்ணைக்கு எழுதும் எல்லா எழுத்தாளர்களையும் இழிவு படுத்துவது போன்றது. அப்படி ஒட்டு மொத்தமாக திண்ணை எழுத்தாளர்களை இழிவு செய்யும் படைப்புக்களை திண்ணை பிரசுரிக்காது. அவ்வாறே வந்த சில கட்டுரை, கவிதைகளை திண்ணைக்குழு பிரசுரிக்கவில்லை.

***

திண்ணையில் வெளியாகும் படைப்புக்களுக்கு அந்த படைப்பாளிகளே முழுச் சொந்தக்காரர்கள். நீங்கள் அந்த படைப்புக்களை மறு பிரசுரம் செய்ய விரும்பினால், அந்தந்த படைப்பாளிகளிடமே அனுமதி பெறவேண்டும். படைப்பாளியிடம் அனுமதி பெறாமல் இப்படி பல கட்டுரைகள் வேறு தளங்களில் அச்சேறியிருப்பதாக பல படைப்பாளிகள் திண்ணையிடம் முறையிடுகிறார்கள். திண்ணையிடம் யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை. திண்ணையிடம் கோரினால், நிச்சயம் அந்த வேண்டுகோளை படைப்பாளிக்கே அனுப்பி வைக்கும். தயவுசெய்து படைப்பாளியின் உரிமையை மதியுங்கள்.

***

திண்ணையில் வரும் படைப்புக்களை எழுதியதாக வரும் மின்னஞ்சல் முகவரிகளின் உண்மை நிலைக்கு திண்ணை பொறுப்பல்ல. நம்பிக்கை மூலமாகவே திண்ணை நடத்தப்படுகிறது. திண்ணையில் வெளியாகும் அறிவிப்புக்களுக்கும் அறிவிப்பு வெளியிடுபவர்களே பொறுப்பு. திண்ணை இவற்றைச் சரி பார்க்க முடிவதில்லை. ஆகவே, எந்த அறிவிப்பையும் வேறொரு இடத்தில் பரிசோதித்துவிட்டே எந்த முடிவையும் எடுக்கும்படி திண்ணைக்குழு வாசகர்களைக் கோருகிறது.

***

படைப்புகளை டிஸ்கி, டேப் எழுத்துருக்களிலே அனுப்புவதை வரவேற்கிறோம். மற்ற எழுத்துருக்களை உருமாற்றம் செய்யும்போது ஏற்படு சிக்கல்கள் இதனால் தவிர்க்கப் படும்.

***

வாசக சுவாரஸ்யத்திற்காக வம்புச் சண்டைகளை ஊக்குவிப்பதையே இயல்பாகக் கொண்ட இணைய இதழுக்குப் படைப்புக்களை அனுப்பும் படைப்பாளிகளுக்கும், அதனைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கும் மீண்டும் எங்களின் நன்றிகள் .

திண்ணை குழு

Series Navigation

திண்ணை குழு

திண்ணை குழு