கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

இராம.கி.


ஒவ்வொரு முறையும் ஓர்ந்துநான் பார்க்கிறேன்;
வெவ்வெறு தோற்றம் விளையவே காணோம்;

நயமா ? வீசை விலை ?யெனக் கேட்பதில்,
நயமன் றென்பது வியத்தகு பொதியில்1;

பத்தில் பன்னிரெண் டடிக்குளே எல்லாம்,
பற்றா தாகும் பொத்தாம் பொதுவெளி;

சந்தையில் கோழிச் சண்டைகள் போல,
நிந்தையில் முடியும் நொம்பல2க் காட்சி;

நீதியின் அரசர் அமரவே அரையவை;

மீதியில் குத்தியும் மேல்விழுந் தேறியும்
கிளறிக் குதறியும் சட்டத் துறுமியும்
குளறா வகையில் கூர்முனை கொண்டே
வக்கணை பார்த்துப் பொக்கெனப் பிடிக்கும்
கொக்கரச் சண்டைக் கோழிகள் இரண்டு;
ஒன்றுமற் றொன்றை உருட்டி வாரிட
நேரம் பார்த்திடும் காரிருட் கோழிகள்;

கத்தியைக் கட்டிக் களத்தில் இறக்கி
வித்திவிட் டிருக்கும் வினைமுத லாளர்கள்3;

விளங்கா நிற்கும் மறுவினைக் காரர்கள்4;

களங்களைக் கண்டு விளம்பரம் கொள்ள
முட்டியே பாய்ந்திட முனைந்திடும் இளவோர்5;

கட்சியைக் கட்டி வெட்சி6யை நாடுவோர்;

முன்முறை யீடோ7 ? மேல்முறை யீடோ8 ?
வன்முறை வழக்கோ ?9 சொம்முறைத் தவறோ ?10
தாழ்நிலை மன்றோ11 மேநிலை மன்றோ ?12
ஆழ்நிலைத் தரவோ13 ? அடுநிலை வரவோ14 ?

எத்தர வாயினும் இடைவிடாக் கூட்டம்,
இத்தரை எங்கும் விரவியே இயங்கும்;

குறுகுறுத் தூபம்; குசுகுசுக் குரலில்,
மறுகியே திகைத்து மலங்கிய பார்வைகள்;

வாடிச் சுருங்க, கூடவே15 வந்தவர்;

வேடித் திருக்கும்16 வெத்துவேட் டாளர்கள்;

அட்டியம் சொல்லி ஆட்டமே தொடங்க
கட்டியம் கூறும் காவற் சேவகன்;

ஐநுணுத் தத்தை17 அரைமணி யாக்கி
கூக்குர லிட்டு கொடுவதோர் கோழி;

மறுமொழி பாய்ச்சலில் இன்னொரு கோழி

இந்திலப் பேச்சு18 எங்கணும் நிறையச்
சந்தையைப் போல சடுதியில் முடிவு;

எப்படி இத்தகை இடைநிலை ஆணையை
வெப்புடன் கலந்து விரைவுடன் தந்தார் ?

‘ ‘இவருடைச் சொத்தை அவர் எடுத்து ஆளலாம்;
இன்றே, இன்னே பெற்றாள்19 நியமனம்; ‘

முதல்வினை யாளர் முகமெலாம் மகிழ்ச்சி;

அதனிடி பட்டவர் அத்தனை இறுக்கம்;

ஏழாண்டு முயற்சி எள்ளாய்ப் போனதோ ?
மூழத் தொலைந்து, முடங்கிப் போனதோ ?
ஏரணம்; வாதம் எல்லாம் தொலைந்ததோ ?
ஓரரை மணியில், உடைந்ததோ கனவு ?
விழலா ? பாழா ? விட்டெறி ஆடியா ?
தொழிலா ? சாலையா ? தொய்வதே ஆலையா ?

கோழிச் சண்டையைக் கோழியா தொடங்குது ?
கோழியைக் களத்தில் கொணர்ந்தவர் யாரோ ?

தோலின் பாவையை தொட்டு
ஆலியும் அடக்கியும் ஆட்டுவ தாரே ?

அன்புடன்,
இராம.கி.

1. பொதியில் = பொதுமன்றம்; இங்கே பொதியிலாக நயமன்று குறிக்கப் படுகிறது. நய மன்று =
நியாய மன்றம் = court of justice. நயம் நியாயம் என வடமொழியிற் திரியும்.
2. நொம்பலம் = துன்பம்
3. வினைமுதலாளர் = original applicant, one who starts the case
4. மறுவினைக்காரர் = respondent
5. இளவோர் = junior lawyers
6. வெட்சி = அரசனால் ஏவப்பெற்ற, நாட்டின் எல்லையில் உள்ள ஊரார், அயல்நாட்டின் கண் உள்ள
பசுக்கூட்டத்தைக் கவர்ந்து கொணர்ந்து பாதுகாக்க முயல்வது.
7. முன்முறையீடு = original appilcation
8. மேல்முறையீடு = appeal
9. வன்முறை வழக்கு = violence and here criminal case
10. சொம்முறைத் தவறு; சொம் = சொத்து. சொத்து பற்றிய தகறாறு; here civil case
11. தாழ்நிலை மன்று = lower court
12. மேநிலை மன்று = High Court
13. ஆழ்நிலைத் தரவு = a long drawn case
14. அடுநிலைத் தரவு = a case which is just nearer in time
15. கூடவே வந்தவர்; வழக்கு மன்றத்தில் இப்படிக் கூட வந்தவர் நிலை பார்த்துத்தான் அறியவேண்டும்.
சொல்லொணாத சோகம்.
16. வேடித்தல் = வேடிக்கை பார்த்து இருத்தல்
17. ஐ நுணுத்தம் = 5 minutes
18. இந்திலப் பேச்சு = தமிங்கிலம் போல இந்தியும் ஆங்கிலமும் கலந்த பேச்சு. இதுதான் இந்திய நய
மன்றங்களின் பொதுமொழி.
19. பெற்றாள் = பெறுகின்ற ஆள் = receiver

poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.