காவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

தாஜ்


***

காவு
—–
மூப்பனை
எங்கள் குடும்பத்தார்
கொடைசாமி
என்பார்கள்
பந்துக்கள்
படையலிட்டு
காத்தவராயா என
சிலிர்த்துப் போவார்கள்
காவல் தெய்வமென
உருகினால்
நினைந்த நாழிக்கு
ஜெயமாம்
பொம்மைச் சாமியாய்
கண்டு
நகைப்போரெல்லாம்
அறை பட
இரத்தம் கக்க நேருமென்பது
வழக்கு

உச்சி வெயிலுக்கு
உதவும் நிழலால்
அதன்மீது
பிரியமானேன் நான்
பிதுங்கிய விழியும்
முறுக்கு மீசையும்
கேள்விகள் எழுப்ப
சுட்ட மண்ணாலான
பிரமாண்டச்
சிற்பம் தவிர்த்து
எந்த சாமியுமில்லை எனக்கு

ஊரில் உலா வந்த மூப்பன்
வேண்டி முணுமுணுத்ததாக
எல்லோரும்
என்னைப் பார்க்க
பூசாரிப் பட்டம் கட்ட முயன்றார்கள்
குடும்பத்தின்
மகிழ்ச்சி புரிபட
எனக்கு நானே புதிரானேன்

மூப்பனைச் சுற்றி
அச்சமூட்டிய
புதர்க் காடுகளை
அகற்றினேன்
அழகுச் செடிகளை
பதியமிட்டு நிழலுக்கு
மரங்கள் வளர்த்தேன்
சுற்றிச் சுவரெடுத்து
வண்ணம் பூசி
இரவிலும் ஒளி வளர்த்தேன்

போதை நெடி விலக்கி
இரத்த வாடையும் அற்று
வசீகரமாய்
ஸ்தலம் பேண
ஐயன் ஐயனார் என
பலரும் சகஜம் பாராட்டினர்
குழந்தைகளுக்கும்
பூத பயம்
விலகியோட
மூப்பனின் முகம்
மாறிவிட்டது

புன்னகை கொண்டு
வலம் வந்த மக்களிடம்
அரண்டுபோன அது
கும்பிட வருவோரிடமெல்லாம்
பூசாரி விளங்காதவன்
வெட்டிக்கொண்டு வந்து
சாய்க்காதவனெனப் புகார்

சாமி அப்படி பேசாதென
வாளாதிருந்தேன்
இரத்தக் காவு கேட்பதாக
பந்துக்களும்
மிரண்டனர்
பூசாரியின் இரத்தமே
அதுவென
அசரீரியாய்
கேட்கவும் கலங்கினர்

எல்லைச் சாமியை
கண்டுவிட
எல்லைக்கே போனேன்
அதன் கையிலிருந்த
கொடுவாளை
கை மாற்றிக்கொண்டு
கழுத்தருகே பிடித்தேன்
நிகழ்வின்
உச்சக் கனவு விடுபட
எழுந்து
பேனாவை உருவி
அதன் கூர்மையை
காகிதத்தில் தீட்டினேன்
அன்புடன் மூப்பனுக்கு
இரத்தம் தெறிக்க
தலையெழுத்து
அங்கே உருண்டது

(நன்றி : காலச்சுவடு)

***

மெளனத்தின் குரல்
——————-
மரங்களிடம் பேசுவது அபத்தம்
மந்தைகளிடம்
ஒதுங்குவதே புத்தி
வானுக்கு குரல் எட்டாது
நதிகளுக்கோ சங்கம வேகம்
மலைகளும் மடுவுகளும்
எதிரொலிக்கும் தொல்லை
கடலருகில் நகர்ந்தால்
துகளாகிப் போகும் அபாயம்
மலர்களுக்கு
எப்பவும் எதற்கும் சிரிப்பு
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
தேன்தான் சுவைக்கிறது
பட்சிகள் பறந்துவிடுகின்றன
விலங்குகள் அன்னியம்
வளர்ப்புப் பிராணிகள்
ஏற்கனவே வாலாட்டுகின்றன
காற்றின் சலனங்களை
கண்டு கொள்ளாதவரை
இப்பவும் குரலெடுத்துப் பேச
குளம் குட்டை
படிக்கட்டுகளே
தடைகளற்ற வசதி

***

நிலைப்பாடு
————
குடும்பத்திற்குள்
நடந்து பழக
வயசு போதாது
எந்நேரம் அசந்தாலும்
தலைவாசலின்
மேல் நிலை
உச்சத்தைக் கிறங்கடிக்கும்
கீழ் நிலை எப்பவும்
காலைப் பதம் பார்க்கும்
குனிந்தே நிமிர வேண்டும்
படுக்கை அறைக்கு
நுழையும் அவசரத்தில்
பக்க வலமாய் இடிபட
விண்ணென விலா நோகும்
சமையலறைக் கதவை
இழுத்துத் திறக்கிறபோது
திரும்பவும் மூடிக்கொள்ள
நிலை தடுமாற வைக்கும்

பார்த்துப் பார்த்து
நடந்தாலும்
உள்கட்டு
வெளிக்கட்டு
கழிப்பறைப்
படிக்கட்டும்
தடுக்கி வழுக்க
குப்புறத் தள்ளும்
காற்றுக்காகத் திறக்கும்
ஜன்னல் நிலைக்கதவும்
கையைக் கடித்துவிடும்

(நவீன விருட்சம் / ஜனவரி 1999)

tajwhite@rediffmail.com

Series Navigation

தாஜ்

தாஜ்