கரன்சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

கோநா


.

காலையில்
வெளியில் செல்கையில்
சாலையில்
வழியில் கிடந்தது
நான்காய் மடிக்கப்பட்ட
ருபாய் நோட்டொன்று

விட்டுச் செல்வதைப் பற்றியோ
எடுத்துக் கொள்வதைப் பற்றியோ
சற்றும் எண்ணவில்லை
சட்டென எடுத்துக் கொண்டேன்
யாரும் கவனிக்கிறார்களா என
கவனித்தபடி

என்னுடைய அதிர்ஷ்டமென
மனது
மார்தட்டிக் கொள்ளும்போதே
இன்னொருவன் அவஸ்தையென
தலையில் குட்டுகிறது
மனசாட்சி

எவருடைய அவசியமோ
எதற்கான சேமிப்போ
என்ன கனவோ
ஏதேனும் இருக்கக் கூடும்
உறுதியாய்

எடுத்த இடத்தில்
எவருடையதென்றால்
எல்லாக் கரங்களும்
எட்டி ஏந்தக் கூடும்
என்னுடையதென
மகாலட்சுமியை
மறுப்பதில்லை எவரும்

விசாரித்துச் சென்று தர
எந்தப் பணத்தின் மீதும்
குறிப்புகள் இருப்பதில்லை
நியாயமாய் அது
யாருக்குச் சொந்தமென

கிடைத்த இடத்திலேயே
கிடக்க விட்டுவிட்டால்
தொலைத்தவர்
தேடி வருவதற்குள்
கிடைத்தவர்
எடுத்துக்கொள்வர்
என்போலவே

எல்லாவற்றுக்கும் மேலாக
கண்டெடுத்த என்
கஷ்டங்களுக்கான
கடவுளின் பரிசாகவோ
தவறவிட்டவன் செய்த
தவறுகளுக்கான
தண்டனையாகவோ
இருக்கவும் கூடும்

தலை நிமிர்ந்து
கடை நுழைகையில்
கண்டெடுத்த பணம் வைத்த
கால்சட்டைப் பையிலிருந்து
ஒலியற்று நிறைந்து வழிகிறது
கரன்சிகளிலிருக்கும்
காந்தியின் சிரிப்பும்
அதற்கான காரணங்களும்.

Series Navigation

கோநா

கோநா