எல்லாம் மாயா

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

கோமதி நடராஜன்



”என்ன பர்வதம் என்ன ஆச்சு ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கே…”சபாபதி ,டெலிபதியாகி போட்டோவுக்குள்ளிருந்து பேசினார்.
”ஒண்ணுமில்லீங்க …கொஞ்சநாளா உடம்பு முடியலை…வேலையே ஓட மாட்டேங்குது…”
”வயசாச்சு இல்லையா அப்படித்தான்…”
”அப்படி என்ன வயசாச்சு…”
இதான் இந்த பொம்பளைங்களுக்கே உண்டான ஒவ்வாமை..
அது என்ன ஒவ்வாமை
ஒத்துக்கொள்ளாதத் தனம்..
போதும் போதும் அங்கே போயும் உங்க தமிழ் வாத்தியார் பேச்சை விடலையா…
ஊனோடு கலந்திருந்தா போகும் .,இது உயிரோடு கலந்ததாச்சே, எப்படிப் போகும்?
ஐயா சாமி ஆளை விடுங்க….
இந்த வசனம் அடிக்கடி பர்வதம் அவரிடம் சொல்லுவது.
ஆளை விட்டுத்தானே வந்துருக்கேன்..
”இப்படி சொல்லிச் சொல்லித்தான் என்னை விட்டுட்டுப் போய்ட்டீங்களா?”கண்ணீர்மல்க கேட்டாள்
இப்படித்தான் , தன் கணவனின் பட்த்துக்கு அருகே இருந்து ,கொஞ்சம் முன்னோட்டம் கொஞ்சம் பின்னூட்டம் என்று கலந்துரையாடல் செய்து மகிழ்ச்சி அடைவாள் பர்வதம்..
”இருக்கும் போது எலியும் பூனையும்,இழந்தபின்னே வலியும் வேதனையும்”
என்று அவர் எழுதிய குறுங்கவிதை, உண்மையானதை எண்ணி எண்ணி மனம் கலங்கியவளாய் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்குக் கொஞ்ச காலமாக இதயத் துடிப்பு ,நிற்கவா அடிக்கவா என்று கேட்பது போல் துடிக்கத் தொடங்கியது.
”என்ன வாழ்க்கை இது? இப்படி வேலைக்குப் போகும் ,இந்தக்காலத்து எந்திரத் தம்பதிகள், குழந்தைகள் என்னடான்னா,,,பெற்றோரின் வேலைபளுவைத் த்த்தம் தலையில் தாங்கும் சுமைதாங்கிகள் என ,வலம் வரும் அவலம்,
அம்மா அப்பா என்ற வார்த்தையில் மிளிரவேண்டிய , ,பாசமும் நேசமும் ..,கண்டிப்பும் கட்டளையுமாக மாறின சோகம்,இப்படியே போனால் எதிர்காலக் குடும்ப சூழ்நிலை என்னவாகுமோ.
கூட்டுக்குடும்பம் இல்லைன்னு இப்போ புலம்புறோம் இனிவர காலத்தில் ,குடும்பமே இல்லாம போய்விடுமோன்னு அச்சமாத்தான் இருக்கு.. இந்த பிள்ளைங்களைப் பாருங்களேன்..அதுகளுக்கும்,.அம்மா அப்பா கூட விளையாடணும் வெளிலே போகணும்னு ஆசை இல்லாமலா இருக்கும்.?..முடியாதுன்னு தெரிஞ்சுதானே இப்படி டீவியும் வீடியோ கேமும்ன்னு நேரத்தை ஓட்டுதுகள்..
நல்ல ஸ்கூல் கிடைக்கணும்,ஸ்கூலுக்குத் தகுந்த ரேங்க் வாங்கணும்,அப்புறம் காலேஜ் சீட்,
ஐ.டிலே வேலை…பாஸ்போர்ட் விசா அயல்நாட்டுப் பயணம்,கிரீன் கார்டு… என்று வரிசையாக அலையடிக்கும் சாகரமே வாழ்க்கையாகிப் போச்சு. . இப்படி வளத்தூ ஆளாக்கின பிள்ளைங்களை ஏதோ ஒரு நாட்டுக்குத் தத்து கொடுத்துட்டு இங்கே தனிமரமா நிக்கணும்..”
புலம்பியபடியே குழந்தைகளின் வரவுக்காக்க் காத்திருந்தாள்.”
ஜனா,சம்பத் இருவரும் ஸ்கூல் வேனிலிருந்து இறங்கி ,மடமடவென்று உள்ளே நுழைந்தார்கள்..ஷூ ஒரு பக்கம்,பை ஒருபக்கம் என்று வீசியபடியே,கையில் டீவி ரிமோட் சகிதம் சோஃபாவில் சாய்ந்தனர்…
இருவருக்கும் தான் ஆசையாய் செய்துவைத்திருந்த டிஃபனைக் கையில் மேஜையில் வைத்து,,பக்கத்தில் பூஸ்ட்,காம்ப்ளான் வைத்தபிறகு,கண்ணுங்களா சீக்கிரம் கை காலெல்லாம் கழுவீட்டு வாங்க, மெதுவாக இருவரையும் உடை மாற்றி,டிஃபனைச் சாப்பிட வைத்தாள்
6 மணிக்குக் கரெக்டா ஹோம் ஒர்க் பண்ண வந்துடணும் ….சரியா செல்லங்களா?
ஓகே பாட்டி
அப்படி இப்படி என்று மணி 9 காட்டியது .மகனும் மருமகளும் அலுப்புடன் உள்ளே நுழைந்தனர்.
”..நாளைக்கு டெஸ்ட் இருக்குன்னு சொன்னாளே…ஜனா படிச்சாளாம்மா ,இந்த வாண்டு நல்ல படுத்தியிருப்பானே?
என்றபடி இருவரும் களைப்புடன் அறைக்குள் நுழைந்தனர்
அவளும் பாவம்!, புருஷனுக்கு சப்போர்ட்டா இருக்குமேன்னு ,வேலை வேலைன்னு உழைக்கிறா..இந்த காலத்திலே ரெண்டுபேரோட சம்பளம் இல்லாம, வாழ்க்கையை ஓட்றது முடியாது போலிருக்கே….சொல்லப்போனா ,அன்றாடங்காய்ச்சிகள்தான் ஆனந்தமா இருப்பாங்கன்னு தோணுது..
பாவம் குழந்தைகள் .நான் ஒருத்தி இருக்றதாலே எல்லாம் சுமுகமா ஓடுது..நமக்கு ஒண்ணு ஆச்சுதுன்னா…திண்டாடிப் போயிடுமே..
பிள்ளைகளை அனுசரணையா நான் பாக்கப் போயி நிம்மதியா வேலைக்குப் போறாங்க…எனக்கு ஏதாவது ஆச்சுன்னா…நினைச்சுப் பாக்கவே முடியலையே….”
இந்த கோணத்தில் அவள் யோசிக்க ஆரம்பித்து ஒரு சில ஆண்டுகள் ஓடியிருக்கும்.
தன் உடல் நிலை ,கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஆட்கொள்ள அதுவே அவளுக்கு எமனாக மாறியது போல்,ஒரு நாள் படுக்கையில் விழுந்தவள்,கொஞ்சநாள்,வீட்டில் சிகிச்சை,பிறகு ஆஸ்பத்திரியில் சில வாரங்கள் என்று கிடந்தவள்,எழுந்திருக்காமலேயே விடை பெற்றாள்.
விண்ணுலகில் அவளுக்காக்க் காத்திருந்த சபாபதியின் ஆத்மா,முகம் மலர வரவேற்றது..அவரைச் சுற்றிலும் தனக்கு முன் வந்து அடுத்த ஜென்ம்ம் எடுக்காத, குடும்பத்து அனைத்து அங்கத்தினரும் நிற்க …”ஓஹோ!நாம் எதிர்பார்த்த கூட்டுக் குடும்பம் ,இங்கே அமோகமாக நடைமுறையில் இருக்கிறதே…”என்று ரசித்தபடி எல்லோருடனும் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ள முயற்சி செய்தவாறு நின்றாள்.
என்னதான் கணவன் பெற்றோர் ,தன் அண்ணன் தம்பி மாமா மாமி என்று பலரையும் சந்தித்தாலும் தான் விட்டு வந்த தன் மகனும் ,அவன் குடும்பமும் தான் இல்லாமல் எப்படி பாடு படப் போகிறதோ..என்ற ஏக்கமே ,அவளை விண்ணுலகம் வந்தும் ,கொன்று கொண்டிருந்தது.
அவளது ஆத்மா நிம்மதி இல்லாமல் இருப்பதைக் கண்ட சபாபதியின் ஆத்மா.அவளது அறியாமை இன்னமும் அவளை விட்டு அகலாததைக் கண்டு ,வியந்து நின்றது.
,”இதுதான் வாழ்க்கை ,உன் கடமை அங்கே முடிந்து விட்ட்து ,நீ நினைத்தாலும் ஒரு விநாடி கூட உனக்கு அதிகப்படியாக அந்த இறைவன் தரமாட்டான்,ஏன் அவனே நினைத்தாலும் கூட இயலாது..உன் கடமை உன் செய்கை உன் இயக்கம் எல்லாமே இங்கே நிர்ணயிச்சு உறுதியான விஷயம் நீ எதையும் அதிகப்படியா செஞ்சிருக்க முடியாது..என்று விளக்கினார்,
என் அம்மா போனப்ப நீ எத்தனை நாள்ம்மா அழுதுட்டு இருந்தே… தொடச்சுப்போட்டுட்டு வேலையப் பார்க்கலியா..?அவளோட புடவை நகைன்னு பங்கு போட்டு எடுக்கலையா… உன் அம்மாவை எத்தனை நாள் மனசிலே வச்சு சோகத்தோட இருந்தேன்னு சொல்லு..உனக்கொரு நியாயம் அடுத்தவளுக்கு ஒரு நியாயமா?என்ற ரீதியில் எவ்வளவோ சொல்லியும் ,பர்வதம் ,சமாதானம் ஆகாமல் ,ஏக்கத்தில் இருப்பது தொடர்ந்த்து.
பூலோகக் கணக்கில் பல மாதங்கள் ஓடிப்போயிருந்தன.
சபாபதி மெதுவாக ,பர்வதத்துக்கு ‘இதுதான் உலகம் ‘என்ற யதார்த்த்த்தை உணர்த்த முற்பட்டார்.
இதோ பாரும்மா..பூலோகம் தெரியுதா,
ஆமாங்க உலகம் உருளுது..
உருளுதா ?அதில் நம்ம கண்டம் தெரியுது பார்,,
அடுத்து நம்ம நாடு ,,அப்படியே கீழே பார் ,சென்னை,மயிலாப்பூர்,4வது குறுக்குத் தெரு 56ம் நம்பர் வீடு…
யாரோட வீடுங்க அது ?அப்பாவியாக்க் கேட்டாள் பர்வதம்.
அடி அசடே அது நம்ம வீடுதான்..அது கூட மறந்து போச்சு .இப்பவாவது புத்தியோட யோசிக்கப் பழகேன்.
உள்ளே பாரு உன் மகனும் மகளும் பேரப் பிள்ளைகளும்…என்ன பண்றாங்கன்னு ..
அங்கே
என்ன்ங்க நம்ம லட்சுமி வேலைக்குப் போகாமல்,சமையல்கட்டுக்குள்ளே இருக்கா..ஆச்சரியமடைந்தவளாய் கேட்டாள்,
அவள் மகனிடம் பேசுவது காதில் விழ ,ஸ்தம்பித்துப் போனாள்
இவ்வளவு நாளா அம்மாவுக்காக அவங்க சுதந்திரமா வீட்டுப் பொறுப்பைப் பார்க்கட்டுமேன்னு, நான் வேலைக்குப் போய்கொண்டிருந்தேன்.. ஏதோ பார்த்துக்றதுக்கு அம்மா இருக்காங்களே ,முடியும்வரை ஓடட்டுமேன்னுதான் வேலைக்குப் போனேன்..
வீட்டிலே இருந்து உங்களையும் பிள்ளைகளையும் கவனிக்காம அப்படி என்ன வேலைன்னு அலுப்பாதான் இருந்துச்சு..என்ன பண்றது..நானும் வீட்டிலே இருந்து ,ஒருத்தருக்கு ஒருத்தர் சரிப்பட்டுவராம ..எதுக்கு இந்த வம்பெல்லாம்ன்னுதான் அம்மா கையிலே எல்லாத்தையும் விட்டுட்டு இருந்தேன்.இப்போதான் நிம்மதியா அக்கடான்னு இருக்க முடியுது..அதுக்காக அம்மா போனது நிம்மதின்னு சொல்ல வரலை..
அடப்பாவி நான் இத்தனை நாளா உன்னைத் தொந்தரவு பண்ணிட்டுதான் இருந்தேனா…நான் என்னமோ உனக்கு உதவியா துணையா ,தூணா,சப்போர்ட்டா இருக்றதா நினைச்சுட்டு மாங்கு மாங்குன்னு கவனிச்சுக்கிட்டேனே…
அத்தனையும் எனக்காக நீ விட்டுக் கொடுத்த வேலைதானா…இது தெரியாம என்னமோ நான்தான் எல்லாமா இருந்து பாத்துட்டு வரேன்னு இருந்தேனே..நான்தான் எல்லாம்னு இருந்தேனே..அதெல்லாம் வெறும் மாயைதானா..
அந்த அதிர்ச்சி யிலிருந்து அவள் மீழ்வதற்குள்,
.”..இந்த ஆஸ்பத்திரி செலவு ,அம்மாவுக்கு மருந்துன்னு எக்கச்சக்கமா ஏறிட்டே இருக்குதே தம்பிகளும் தரமாட்டானுங்க, அண்ணனும் கைவிரிப்பான் ..ஏதோ நம்ம பாட்டை பார்க்றமாதிரி ஓரளவு செட்டில் ஆகியிருக்கு..காரியத்துக்கு ஆன செலவைக் கூட இன்னும் செட்டில் பண்ணாம ஊரைப்பாக்கப் போய்ட்டாங்க…
நீயுமா மகனே…அதற்கு மேல் புலம்ப அவள் ஆத்மா இடம் தரவில்லை…என்ன இருந்தாலும் பெற்று வளர்த்த பிள்ளையாச்சே..
இவர்கள் இப்படியென்றால் குழந்தைகளோ ,
ஜனா,…ஐய்ய்ய்யா இப்போ பாட்டி ரூம் எனக்குத்தான்,நீ நம்ம ரூமை எடுத்துக்கோ…
இல்லை பாட்டி ரூம் எனக்குத்தான் என்று இரு பேரக் குழந்தைக
ளும் சண்டை போட்டுக் கொண்டிருக்க,தன் இல்லாமை ,அவர்களுக்கு இயலாமை என்றிருந்த உண்மை தெரியவந்த போது ,பர்வத்த்துக்கு அதிர்ச்சியாக இருந்த்து.
”அம்மா இனிமேல் வேலைக்குப் போகாம வீட்டிலே இருப்பாங்க,பாட்டிமாதிரி சுண்டலும் கொ ளுக்கட்டையுமா செய்யாம கட்லெட்,நூடுல்ஸ்,சாண்ட்விச்னு அம்மா வகை வகையா செய்வாங்க…”
”அடச் செல்லங்களா நீங்களுமா…என்னை அவ்வளவு சுலபமா தூக்கி போட்டுட்டீங்க…”

இப்படியாக ,தான் இல்லையென்றால் கஷ்டப் படுமே குழதைகள் ,என்று புலம்பியவாறு,தனக்கென எந்த சந்தோஷமும் வேண்டாம் என்று இருந்த பர்வதம் ,இவ்வளவு நாளாக ஒரு வேண்டப்படாத விருந்தாளியாகத்தான் இருந்திருக்கிறாள் ,என்ற அதிர்ச்சியான உண்மை வெளிப்படும் பொழுது ,காலம் கடந்து போயிருந்த்தை காலனின் பிடிக்குள் வந்த பின் உணர்ந்தாள்.
நேற்றிருந்தார் இன்றில்லை எனும் பெருமை படைத்த்து இந்த உலகம் என்று கூறிய வள்ளுவர்,நேற்றிருந்தார் இன்றில்லை எனும் பெருமை படைத்த்து இந்த மனது என்றும் சொல்லியிருக்கலாம்.சுத்தமா துடைச்சு போட்டுட்டாங்களே.
புத்தியோடு பிழைக்க அடுத்த ஜென்மத்துக்காக்க் காத்திருக்கத் தொடங்கினாள்
அந்த பிறவியில் அவள் தலையில் என்ன எழுதி அனுப்புவானோ அந்த இறைவன்..
————————————————————————————-

Series Navigation