என் ஊர்–அத்தாழநல்லூர்!

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

கவியோகி வேதம்


^^^^

ஆனைப் பிளிறலில், அழகனை,அத் ‘ திருமாலை ‘

வானில்சக் கரமுடனே வரவழைத்த தெங்கள்ஊர்!

..

‘அத்தி ‘யெனும் யானைதனை, ‘ஆழக் ‘ கசமுதலை*….(தாமிரவருணி ‘- ஆற்றுப்

பாறையில் மிக ஆழமான சுழிகள் நிறைக் கசம் நடுவே,முதலை,யானை

பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் நீர் காணலாம்)

முத்திபெற்ற சிற்பமதை முழுகிடின்நீர் கண்டிடலாம்!

..

எந்தவிதக் கோடையிலும் இளம்பெண்கள் படித்துறையில்

முந்தானை உள்மடிய முக்குளிக்கும் அழகையின்றும்

..

கண்டுகண் சொக்கிடலாம்!கனிவுடனே ஆற்றுமங்கை

வண்டலென ‘தாமிரத்தை ‘ வழங்குவதை,நீரென்றும்

..

வற்றாத வருணிஎன, வள்ளலெனப் பாடிடலாம்;

கற்றாழை,நாணல்கள் வளர்ந்ததிட்டுக் கரைமண்ணில்,

..

நாரைகளும்,பொறிவண்டும் நர்த்தனங்கள் பலஆடி

நீரை இ றைக்கும்சிறார் நிர்த்தூளித் தாளத்தை

..

அழகாக ரசிக்கின்ற அற்புதங்கள் பார்த்திடலாம்!

இழை-அலையில் ‘சில்-ஓடு ‘ விமானம்போல் ஏகியதை

..

எறிந்தெறிந்து ரசித்தஅந்த இளம்பருவம் மறப்பேனா ?

குறைகாணும் மாமியர்போல் ஓடுகளின் குறுக்கேபோய்

..

நீர்ப்பாம்பு சொன்னதையும் நினைவிலிருந் தழிப்பேனா ?

கார்காலம் வந்தவுடன் கரைமுட்டிப் பால்குடிக்கும்

..

கன்றுகள்போல் வாயில்நுரை கமழ்வெள்ளம் படித்துறையில்

வன்னக் கோடுகளாய் வரைந்ததுவை மறைப்பேனா ?

..

வெள்ளம் படியேறி மேல்அமர்ந்த சிறிய ‘சிலை ‘

வெள்ளை ‘நர சிம்மரையே ‘ விழுங்கிடுமோ ? எனப்பதைத்து,

..

அடிக்கடி வீடுவிட்டு, அரைநிஜாரில் வந்துகண்டு,

முடியாத வெள்ளத்தை முகம்சிணுக்கிக் கேலிபண்ணிச்

..

சிரித்தஅந்த பசும்நினைவைச் சிறுவரியில் வரையேனா ?

விரிந்தபெரும் மரக்கிளையில் மீன்பிடித்த வாயுடன்பல்

..

சன்ன-நீல மீன்கொத்தி ‘சட்டசபை ‘ நடத்தியதை

என்னமாய் அன்றுயான் (இ)ரசித்துளேன் ? மறப்பேனா ?

..

பஞ்சவர்ணக் கிளிகளெலாம் படுஜோராய்த் தம்அலகை,-

கொஞ்சுகிற சிறுகிளையில் கொத்திசுத்தம் செயுமழகும்

..

இன்றெனக்குக் கவிஎழுத இசைந்ததெண்ணிப் பூரித்தேன்!

இன்னும் எத்தனையோ ஞாபகங்கள்! நினைவலைகள்!

..

மிகப்பரந்த கற்கோட்டை! மிகப்பெரிய கற்தளத்தின்

சுகவெயிலை,மரநிழலின் துணையுடனே குறைத்துநின்ற

..

பெருமிதத்தில் கருவறையில் பெரும்-ஆள் ‘ஆதிமூலர்! ‘;-

கருணைபொங்கும் சுகிர்தத்தில் கவியானேன் யான்இன்று!

..

அவரது கைபட்ட தோள்சிலிர்ப்பில் அனைவரது

கவலையையும் நீக்கிக் கனிவுதரும் லக்ஷ்மியம்மை!

..

அந்தபெரும் விழா-நினைவு,ஆலமரப் பாண்டியாட்டம்,

சொந்தஒற்றைக் காளைவண்டிச் சொகுசோடு *வீரை ‘ சென்று…(*வீரவநல்லூர்)

..

படித்துக் கிழித்த பழையஎண்ணம்;வயல்சுற்றல்;

தடித்த திமிர்நினைவில் கள்ளமிலாத் தங்கைகளை

..

விளையாட்டில் அழவைத்த வேடிக்கைச் சீண்டல்கள்!

களைகட்டும் தான்!அவற்றைக் கவிவடித்தால்!

..

இங்குஇடம் வேண்டாமா ? கிராமத்தின் எழிலையெல்லாம்

பொங்கிவரும் சொற்களென்னும் சிமிழுக்குள் புதைப்பேனா ?

****(கவியோகி வேதம்)
kaviyogi_vedham@yahoo.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்