இதய ஒலி.

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

முனைவர் சி.சேதுராமன்



முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

இனி என்ன இருக்கிறது?
எல்லாம் முடிந்து விட்டது
கனவுகள் நனவுகள்
நடப்புகள் கிடப்புகள்
வந்தது இருந்தது
போனது சென்றது
நினைப்பது நடப்பது
இருப்பது செல்வது
சொன்னது கேட்டது
கண்டது கடியது
அனைத்தும் இங்கே
பொய்யாயப் பழங்கதையாய்
போனதுவோ யாரறிவார்?
ஒன்றை நினைத்திருந்தேன்
நடக்குமென்று நானிருந்தேன்
நடக்கும் நடக்கும் என்ற
நனவும் கனவாயிற்று
இனி என்ன இருக்கிறது?
எல்லாம் முடிந்து விட்டது
வந்தோர் வராதோர்
அனைவரது நம்பிக்கையும்
அடியோடு போயிற்று!
இருந்தாலும் எனக்கிங்கே
இன்னுமொரு நம்பிக்கை!
இருக்கத்தான் செய்கிறது
எல்லாம் போனால் என்ன
என் நம்பிக்கை இருக்கிறது
எங்கோ ஒரு விடிவெள்ளி
என்னெதிரே தெரிகிறது
அதை நோக்கி என்பயணம்
இனிதே தொடர்கிறது
இருந்தாலும் எனக்கின்று
இதயம் கனக்கிறது
இனிமையாக வலம் வந்த
இனிமையான நாள்களும்
இலையுதிர் காலம்போல்
இல்லையென்று ஆயினவே!
இதயமில்லா மனிதர்களின்
இரக்கமற்ற செயல்களினால்
இதயம் கனக்கிறது
இருந்தாலும் எனக்கென்று
இருப்பதற்கு இடமொன்று என்
இதயத்தில் இருக்கிறது
அங்கு நான்மட்டும் வலம் வருவேன்
அதில் ராஜாங்கம் நடத்திடுவேன்
அகிலத்தில் எனக்கென்று
ஆயிரம் இடமுண்டு!
ஆயிரம் பேர் வந்தாலும்
எனக்கென்று இடமுண்டு!
இலவுகாத்த கிளிபோல
எத்தனையோ நாள்கள்
எண்ணி எண்ணிக் காத்திருந்தேன்!
அத்தனை நாள்களும்
கனவாகப் போனதனால்
என்னிதயம் கனக்கிறது
எனக்குப் பரிந்திங்கே பேசுவார் யாருமிலர்!
என்றாலும் என்னுள்ளே நம்பிக்கை சுரக்கிறது
என்னிருப்பைக் காட்டிடுவேன்
எக்காளமிடுவோர்கள்
என்னை நிமிர்ந்து பார்த்திடுவர்
என்னிதயம் நிறைந்துவிடும்
எல்லோரும் இன்புறவே
என்கடமை இருந்துவிடும்..
என்னின் ஒலியென்றும் இவ்வையத்தில் நின்றொலிக்கும்…..!

Series Navigation