ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


22.06.2010
செவ்வாய் கிழமை

நான் ஜனாதிபதியானால் என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டி வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் ஏன் போட்டி என்கிற பெயரில் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. அவர்கள் சில பழக்க வழக்கங்களை பாரம்பரியமாக கடைபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெற்றி பெற வேண்டிய முதல் 3 மாணவர்களை முன்கூட்டியே தீர்மானித்திருப்பார்கள். அந்த 3 பேரில் வாத்தியார் மகன் சுரேசும் ஒருவனாக இருப்பான். ஜீரணிக்கவே முடியாத இந்தக் கயவாளித்தனம் பற்றி நன்கு அறிந்திருந்தும், அதைப்பற்றி வெளியே கூற முடியாமல் அவர்களது சதி வேலையில் ஈடுபட வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு உட்பட்டு அசிங்கமாக தலையை தொங்கவிட்டபடி அந்தக் கட்டுரையை எழுதினேன்.

கட்டுரை :

நான் ஜனாதிபதியானால் ஒரு கட்டுரைப் போட்டியில் ஈடுபட விரும்பாத ஒரு மாணவனை வற்புறுத்தி ஈடுபட வைக்க நினைக்கும் ஒரு ஆசிரியரை 6 மாதம் சம்பளம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்வேன்.

அந்த மாணவன் ஏன் அந்தக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்பவில்லை என்பதை ஒரு கேசட்டில் பதிவு செய்து, அதை தினசரி நூறு முறை அந்த ஆசிரியர் கேட்க வேண்டும் என கடுமையாக எழுத்துப்பூர்வ உத்தரவிடுவேன். மேலும்,

மனைவி மட்டுமல்ல மாணவனின் உள்ளக் குமுறல்களுக்கும் மதிப்பளிப்பதைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி வைத்து அதில் கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்வேன் அந்த ஆசிரியரை.

(அந்த கட்டுரை நிச்சயமாக நன்றாக இருக்காது. அதெப்படி தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மையில் நல்ல படைப்பை உருவாக்க முடியும். நிச்சயமாக முடியாது. நன்றாக இல்லாத அந்தக் கட்டுரைக்கு தனி தண்டனை உண்டு)

மேலும், பள்ளிகளில் பரிசு கொடுத்து தரம் பிரிக்கும் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு (ஆசிரியர்களுக்கு) குற்றப்பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தண்டனை கொடுக்க வழிவகை செய்வேன்.

ஏனெனில் பரிசு கொடுப்பதால் பெறக்கூடிய உத்வேகம் வெறும் 3 பேருக்குத்தான். ஆனால் பரிசு கிடைக்காததால் பெறக்கூடிய தாழ்வுமனப்பான்மை ஏராளமானோரை பாதிக்கக் கூடியது. மகாத்மா காந்தி ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால், ஆயிரம் மாணவர்களுக்கு உத்வேகம் கிடைக்காமல் போகலாம். ஆனால் ஒரு மாணவன் கூட தாழ்வு மனப்பான்மை அடைந்து விடக்கூடாது.

மேலும்,……………

சீருடை அணிய மறந்துவிட்டால் இந்த கேள்வியை மட்டும் கண்டிப்பாக கேட்கக் கூடாது.

‘காலைல சோறு திங்கறதுக்கு மறந்தியா”

ஒரு ஆங்கில பேய் படத்தில் பார்த்திருக்கிறேன். அந்தப் பேயின் வாய் தைக்கப்பட்டிருக்கும், அந்தப் பேயை போல் தங்கள் நாட்டு ஜனாதிபதி தங்களை நடத்திவிடக் கூடாது என்று நிஜமாக நினைக்கும் பட்சத்தில், அந்த வார்த்தையை கூறுவதற்கு முன் ஒரு ஆசிரியர் நூறுமுறை யோசிக்க வேண்டும்.

கடைசியாக……………..

ஒரு ஆசிரியருக்கு எந்த மாணவன் முதலாவதாக வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கூட அறவே இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட மாணவனை வெற்றி பெற வைப்பதற்காக தனது திறமையை பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் வெறும் நீரைப் போல. அவர்கள் எந்தப் பாத்திரத்தில் ஊற்றப்படுகிறார்களோ, அந்தப் பாத்திரத்தின் வடிவத்தை பெறுகிறார்கள் என்பது நிச்சயமான உண்மை. அதனால் பாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு கடுமையாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இன்றோடு உங்களுக்கு ரத்தாகிறது. இச்சட்டத்தை மீறி வெற்றிபெறுபவர்களையும், தோல்வியடைபவர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆசிரியர்கள் மீது போலி கஞ்சா கேஸ் போடப்பட்டு உள்ளே தள்ளப்படுவார்கள்.

இப்படிக்கு
உங்கள் அனுபுள்ள மற்றும் மதிப்பு மிக்க
ஜனாதிபதி

ஆனால் குள்ளநரிகள் தோற்றுப் போயின. அவற்றிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார்கள் இந்த ஆசிரியர்கள். இந்த முறை சுரேசுக்கு இரண்டாம் பரிசு. முதல் பரிசுக்கு தகுதியானவன் நான்தானாம். அவர்கள் ஒரு ஜனாதிபதிக்கே பரிசு (லஞ்சம்) கொடுத்து அமைதி படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் சிறுவனிடம் பணிந்து போகவில்லை. ஒரு சிறுவனின் உண்மையான, கோபமான கேள்விகளுக்கு பணிய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களால் அவர்களது மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியவில்லை. நிலைமையை சரி செய்ய பரிசுக்குரியவனாக, பரிசை எதிர்ப்பவனை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த கேள்விகள் ஒரு அம்பை போல் அவர்களை நோக்கி நிற்கிறது. அந்த அம்பை அவர்கள் சமாதானப்படுத்தியாக வேண்டும். அல்லது ஒடித்துப் போட வேண்டும். நான் எதிர்பார்த்தது ஒடித்துப் போடுவார்கள் என்பது. ஆனால் அவர்கள் புத்திசாலிகள் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.

நான் என்ன சும்மாவா? இந்தியன் படத்தை தியேட்டரிலேயே 3 முறை பார்த்தவன். விஷச் செடி தன் மகனானாலும் சரி அல்லது ஒரு ஆசிரியரானாலும் சரி, கத்தியால் குத்தி அந்த இடத்தில் மாவு கிண்டுவது போல் கிண்ட வேண்டும். இதுதான் சங்கர் அங்கிள் சொல்லிக் கொடுத்த பாடம்.

ஆனால் பரிசாகக் கொடுக்கப்பட்ட அந்த ஜாமிட்ரி பாக்சை நினைத்துப் பார்க்கும் பொழுது…………..

நேற்று மல்லிகா அழுத அழுகைதான் நியாபகத்திற்கு வருகிறது. அவள் தனது ஜாமிட்ரி பாக்சை தொலைத்துவிட்டு கடந்த இரு நாட்களாக தனது அம்மாவிடம் மறைத்துக் கொண்டிருக்கிறாள்.

ஜீனியஸ் வள்ளுவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பொய்மையும், வாய்மையிடத்து என்று அவர் கூறியிருக்கிறாராமே?

நல்லவேளை அவசரத்துக்கு அவராவது உதவிக்கு வருகிறாரே. வள்ளுவரா? இந்தியன் தாத்தாவா? என எடைபோட்டுப் பார்த்ததில் வள்ளுவர் தான் வெற்றி பெற்றார். பின் மல்லிகாவின் கண்ணீர் துடைக்கப்பட்டது.

பின் குறிப்பு :

சுரேஷ் தனக்கு கிடைத்த இரண்டாம் பரிசை மல்லிகாவிடம் கொடுக்க முயற்சித்திருக்கிறான். தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், நிராகரிக்கப்பட்ட துக்கத்தில் அவன் அழுது வழிந்ததுதான். மல்லிகா புத்திசாலிப் பெண் என்பதில் எந்த சந்தேகமும் இல

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்

ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 2 – சைப் டைட்டில் : நித்திய சோதனை

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


சைப் டைட்டில் : நித்திய சோதனை

11ஃ06ஃ2010
வெள்ளிக் கிழமை

மல்லிகா………………………….. இந்த பெயரைக் கேட்டாலே என் எண்ணங்கள் வானத்தின் மேகங்களுக்கு மேலே மிதக்க ஆரம்பித்து விடுகிறது.

வைலட் பூ டிசைன் போட்ட வெள்ளை நிற பாவாடைச் சட்டையும், தலையில் இடது மற்றும் வலது கொண்டையை ஒரு பாலம் போல் இணைத்தபடி மல்லிகைப் பூவையும் அணிந்து கொண்டு வரும் மல்லிகாவை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவள் அடிப்படையான நான்கு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

1. யாரேனும் ரப்பர், பென்சில் எனக் கேட்டு வந்தால், உடனே எடுத்துக் கொடுத்துவிடக் கூடாது. ரப்பரும் பென்சிலும் பெண்களிடம் மட்டும் அல்ல, ஆண்களிடமும் உண்டு என்பதை சுட்டிக் காட்டி திருப்பி அனுப்பிவிட வேண்டும். குறிப்பாக அந்த சுரேஷிடம்.

2. யாரேனம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் ‘எங்க அம்மா யாருக்கும் குடுக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க” என்ற தாரக மந்திரத்தை கூறி தவிர்த்துவிட வேண்டும். அதையும் மீறி வற்புறுத்தினால், ‘நான் எச்சி வச்சு குடிச்சுட்டேன்” என்று கூறி அவமானப்படுத்த வேண்டும். குறிப்பாக சுரேஷ் கேட்கும் போது அவ்வாறு நடந்து கொண்டால் நான் கைதட்டி ஆரவரிப்பேன்.

3. வகுப்பில் முதல் ரேங்க் எடுக்கும் மாணவன்தான் திறமையானவன் என்று நினைத்து விடக் கூடாது. கால்பரீட்சையில் 7வது ரேங்கும், அரைப்பரீட்சையில் 15வது ரேங்கும் எடுத்த மாணவன் கூட திறமையானவனாக இருக்கலாம். காகிதத்தில் கத்திக் கப்பல் செய்வது, உண்டிவில்லால் குறிபார்த்து கொடுக்காபுளி அடிப்பது, பெரிய சைக்கிளில் அரைப்பெடல் போட்டு ஓட்டுவது, இவையெல்லாம் முதல் ரேங்க் எடுக்கும் மாணவனுக்கு தெரியாது. சுரேசுக்கு தரையில் கை வைக்காமல் பல்டி அடிக்கக் கூட தெரியாது. ஆகையால் அனைத்தையும் கணக்கிட்டு ஜாக்கிரதையாக முடிவெடுக்க வேண்டும்.

4. பிறகு ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என்கிற பாடலை நீ அடிக்கடி கேட்க வேண்டும். அதில் உள்ள கருத்தாழமிக்க வரிகளை ஆழ்ந்து யோசிக்க வேண்டும். திராவிட இனத்தின் நிறமே கருப்புதான். வெள்ளையர்கள் நம்மை என்ன பாடு படுத்தினார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளையர்கள் நம்மை தந்திரமாக மடக்கி ஆட்சி செய்தார்கள் என்று சமூக அறிவியல் ஆசிரியர் அன்று பாடம் நடத்தியதை நீ கவனிக்கவில்லையா? வெள்ளைத்தோல் சுரேஷிடமிருந்து உன்னை எப்படி காப்பாற்றுவது என்றுதான் எனக்குப் புரியவில்லை.

ஆனால் நீ புத்திசாலிப்பெண். நீ அனைத்தையும் புரிந்து கொள்வாய் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அன்று ஒருநாள் துணிக்கடையில் வைலட் நிறத்தில் பூபோட்ட சட்டை கேட்டு தனது தந்தையிடம் அடம்பிடித்த சுரேஷை பார்த்த பொழுதே நான் சந்தேகப்பட்டேன், அவன் உன்னை சைட் அடிக்கிறான் என்று.

‘பூ போட்ட சட்டையெல்லாம் பொம்பள பிள்ளைகளுக்குத்தான் வாங்குவாங்க, ஆம்ளப் பசங்க போடக் கூடாது” என சுரேஷின் தந்தை அடம்பிடிக்கும் அவன் தலையில் ஓங்கி கொட்டிய போது என் நெஞ்சம் இனிக்கத்தான் செய்தது. ஆனால் அதையெல்லாம் அவன் கேட்பவன் அல்ல. நீதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இனிமேல் உன்னை ட்யூசனிலிருந்து கூட்டிக் கொண்டு பத்திரமாக வீட்டில் கொண்டுவந்து விடுவதாக உன் அம்மாவிடம் சத்தியம் செய்துள்ளேன் (மனதிற்குள்ளாக). நான் தினமும் உனக்கு 50 காசுக்கு காபி பைட் சாக்கலேட் வாங்கித் தருகிறேன். என் தந்தைக்கு எங்கிருந்துதான் அந்த 25 பைசா கிடைக்குமோ தெரியவில்லை. அதை தினமும் எனக்கு பாக்கெட் மணியாக கொடுக்கிறார். மீதி 25 பைசாவுக்கு என்ன செய்வாய் என்று என்னிடம் கேட்காதே. அது எங்கள் வீட்டு சாமி அறையில் உள்ள உண்டியல், சமையல் அறையில் உள்ள அஞ்சறைப்பெட்டி, சென்ற மாதம் வரை உளுத்தம் பருப்பு டப்பா, இந்த மாதத்த்திலிருந்து மிளகாய் பொடி டப்பா இவற்றுக்கும் எனக்கும் உள்ள தொடர்பை பொறுத்தது. சிலநாள் ஒரு ரூபாய், சில நாள் 5 ரூபாய், சில நாள் 10 ரூபாய் என எனது வருமானத்தின் அளவுக்கு குறைவேயில்லை. ஆனால் 10 ரூபாயை தொடும் போதுதான் சிறிது மனம் நடுங்கும். அன்றொரு நாள் பாண்டியராஜன் படத்தில் பார்த்தேன். அடுத்தவர்களுக்கு தெரியாமல் எடுக்கும் பணத்தில் பாதியை பிள்ளையார் உண்டியலில் போட்டுவிட்டால், அவரும் பாவமன்னிப்பு வழங்குவார் என்று அதில் கூறப்பட்டிருந்தது. 10ல் பாதி 5 ரூபாயை அநாவசியமாக உண்டியலில் போட எனக்கு மனம் இல்லைதான். இருப்பினும் 2 ரூபாயை மனமுவந்து போட்டேன். பிள்ளையாருக்குத் தெரியாதா என்ன? எனக்கிருக்கும் கம்மிட்மென்ட்சை பற்றி.

பின் முழுப்பெடல் போட்டு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதும் உன்னை கண்டிப்பாக நடக்க விடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். சுரேசுக்கு அவ்வளவு திறமை பத்தாது. அவன் இன்னமும் 3 சக்கர சைக்கிள் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவன் புரிந்துகொண்டு படிப்பதில்லை. மொட்டை மனப்பாடம் செய்கிறான். மொட்டை மனப்பாடம் செய்கிறவர்கள் தான் முதல் ரேங்க் எடுப்பார்கள்.
புரிந்து கொண்டு படிப்பவர்கள் எப்பொழுதும் 7வது மற்றும் 15வது ரேங்க் தான் எடுப்பார்கள். ஏன் சில நேரங்களில் 25வது ரேங்க் கூட எடுக்க வாய்ப்புண்டு. ரேங்க் ஒரு சரியான அளவீடே கிடையாது. புரிந்து கொண்டு படிப்பதுதான் முக்கியம் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு விஷயத்தை உன் தலையில் அடித்து சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சுரேசுக்கு பம்பரம் சுற்றத் தெரியாது. நான் பம்பரத்தை தரையில் மட்டுமல்ல, கையில் கூட சுற்ற விடுவேன், வேண்டுமானால் உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். அவனிடம் ஒரு கொடுக்காபுளி அடித்துத்தரச் சொல் பார்ப்போம்.அவனால் முடியாது. 10 கற்கள் கொடுத்தால் கூட அவனால் அடிக்க முடியாது. எனக்கு 3 கற்கள் போதும் குறி பார்த்து அடித்து கீழே விழ வைப்பேன். கொடுக்காபுளி கூட அடிக்கத் தெரியாதவனிடம் உனக்கு பிரண்ட்ஷிப் தேவையா என்பது தான் என் கேள்வி. ஆழ்ந்து யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் மல்லிகா நீ. எனக்குத் தெரியும் நீ நல்ல முடிவைத்தான் எடுப்பாய் என்று.

பின் குறிப்பு:

அரைப்பரீட்சையின் போது சமூக அறிவியல் பரீட்சையில் சுரேஷ் காப்பி அடித்ததை நான் பார்த்தேன். பாவம் என்று நினைத்து அப்பொழுது விட்டுவிட்டேன். ஆனால் உன்னிடம் இதை நிச்சயமாக கூற வேண்டும். அவன் இப்படித்தான் முதல் ரேங்க் எடுக்கிறான் ஒவ்வொரு முறையும். ஞாபகத்தில் வைத்துக்கொள் திருட்டுப் பயல் அவன்.

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்

ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 1 (சைப் டைட்டில் : நித்திய சோதனை)

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட்

சப் டைட்டில் – நித்திய சோதனை

10ஃ06ஃ2010
வியாழக்கிழமை

இன்று நான் அந்த குண்டுதாத்தா கடை வழியாக நடந்து போய் கொண்டிருந்தேன். அவர் கடையில் போன வாரம் உப்பில் ஊற வைத்த நெல்லிக்காயும், மிளகாய்ப் பொடி தடவிய மாங்காய் கீத்தும் வாங்கித் தின்றது ஒரு குற்றம் என்று கூறி வழக்கமாக கன்னத்தில் அறையும் ஆசிரியர் ரத்தினம், அன்று முதுகில் ஓங்கி ஓங்கி குத்தினார். அவருக்கு பிடிக்காத உயிரினம் ‘ஈ” யாம். அது மொய்த்துவிட்டுப் போன நெல்லிக்காயை தின்றது தேசதுரோகக் குற்றமாம்.

முதுகில் குத்தும் போது நெஞ்சு பிடிப்பு ஏற்பட்டு ஒருவேளை நான் உயிரிழந்துவிட்டால், அதற்கு ஆசிரியர் ரத்தினம் தான் காரணம் என, ரெண்டுகோடு போட்ட அரைகுயர் நோட்டில் அழகாக எழுதி வைத்திருக்கிறேன். சென்னை கமிஷனர் ஆபிசில் உள்ள ராஜேந்திரன் அங்கிளுக்கு அனுப்புவதற்காக. ஆனால் முகவரி தெரியாத காரணத்தால் அதை கணக்கு புத்தகத்தின் நடுவில் மயில் தோகை வைக்கப்பட்டிருக்கும் 23ம் பக்கத்திற்கு அடுத்த பக்கத்தில் வைத்திருக்கிறேன்.

இந்த முரண்பாட்டை நான் யாரிடம் போய் கேட்டுத் தெரிந்து கொள்வது. முதல் நாள் வகுப்பில் ஜீவகாருண்யத்தை பற்றி வகுப்பில் பாடம் எடுக்கிறார்கள். எந்த ஒரு உயிரிணத்துக்கும் தீங்கு செய்யாதே என வள்ளலார் கூறியதாக கூறுகிறார்கள். மகாவீரர் நடந்து செல்லும் போது எந்த ஒரு உயிரினமும் காலில் மிதிபட்டு இறந்துவிடக் கூடாது என்பதற்காக மயில் தோகையால் கூட்டிக் கொண்டே சென்றதாக கூறுகிhர்கள். அன்று நான் கேட்ட சந்தேகத்திற்கு கூட சரியாக பதில் சொல்லவில்லை அந்த ஆசிரியர், அதாவது, மயில் தோகையால் கூட்டிக் கொண்டே சென்றவர் காலில் ஏதாவது உயிரினம் மிதிபட்டால் அது இறந்து விடாதா? இதை மகாவீரர் யோசிக்கவே இல்லைiயா என்று கேட்டது ஒரு குற்றமா? அதற்கு ஒரு அடி கன்னத்தில். நடத்துகிற பாடம் புரியவில்லை என்றால் தாராளமாக சந்தேகம் கேட்கலாம் என்று வாய் கூசாமல் வக்கனையாக வேறு கூறுகிறார் அந்த ஆசிரியர். ஆனால் ஈ போன்ற சிறு உயிரினங்களை மட்டும் வெறுக்கச் சொல்கிறார்கள். இந்த ஆசிரியர்களுக்கு சரியான கண்ணோட்டம் இல்லை. படிக்கிற காலத்தில் ஒழுங்காக படித்திருந்தால் இவ்வளவு முரண்பாட்டுக்கு அவர்கள் ஆளாகியிருக்க மாட்டார்கள்.

ஆனால் ஒரு விஷயம் எனக்கு மிக நன்றாக தெரியும். நான் பல மாதங்களாக வாங்கித் தின்னும் நெல்லிக்காய் மேல் ஈ உட்கார்ந்த விஷயம் இன்றுதான் இந்த ரத்தினம் ஆசிரியருக்கு உரைக்கிறது என்றால், அதன் உள்நோக்கம் என்னைப் போன்ற சிறுவர்களுக்கு புரியாது என்று நினைத்துவிட்டார். அன்று ஒருநாள் என் பக்கத்து வீட்டு பெண் மல்லிகா ட்யூசன் விட்டு வருவதற்காக காத்துக் கொண்டிருந்த போது, ஆசிரியர் ரத்தினத்தின் மனைவியும், குண்டுதாத்தாவின் மனைவியும் ’16 வயதினிலே” படத்தில் வரும் காந்திமதியைப் போல் விளக்கமாறை வானத்தை நோக்கி ஆட்டி ஆட்டி சண்டையிட்ட காட்சியை சற்றும் பயப்படாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். விசு படத்தில் வரும் வில்லி மனைவியைப் போல், இரவு நேரங்களில் குண்டுதாத்தாவின் வியாபாரத்தை கெடுக்கும்படி தனது கணவராகிய ரத்தினத்திடம் போட்டுக் கொடுத்திருப்பார் அந்த பெண்மணி, அதனால் அந்த ஒரே காரணத்தால் ஆசிரியர் ரத்தினத்துக்கு குண்டுதாத்தாவின் கடையில் நெல்லிக்காய் மேல் உட்கார்ந்திருந்த ‘ஈ” கண்களை உறுத்த ஆரம்பித்துவிட்டது. பின் என் உடல்நிலை மேல் வேற அநியாயத்துக்கு அக்கறை செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஆனால் முதுகில் குத்தும் போதும், கன்னத்தில் அறையும் போதும் மட்டும் அவர் வருத்தப்படுவதேயில்லை என் உடல்நிலை பற்றி.

இந்தியத் திருநாட்டில் மாடுகளை சாட்டையால் அடிப்பதையும், மாணவர்களை பிரம்பால் அடிப்பதையும், யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏதேனும் ஒரு சக்தியின் உந்துதலின்பெயரில் ஒரு முரட்டு ஆசாமியின் (ஆசிரியரின்) முரட்டு ஈகோ தாக்குதல் சந்திக்கு வரும் பட்சத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அதைப் பற்றி பெரிதாகப் பேசுவார்கள், பின் அவரவர் வேலையை பார்க்கச் சென்று விடுவார்கள். இங்கே எதிர்த்து தாக்க முடியாதவர்கள் சாதுவான விலங்குகளும், குழந்தைகளும் தானே. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்கிற ஆதங்கம் என் நெஞ்சத்தின் ஆழத்தில் கொதித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பின் குறிப்பு :

கமிஷனர் அலுவலகத்தின் முகவரி தருகிறவர்களுக்கு பாதி பைவ் ஸ்டார் சாக்கலேட் (பாதி நான் தின்று விட்டேன்) மற்றும் கணக்குப் புத்தகத்தின் 23ம் பக்கத்தில் உள்ள மயில்தோகை போட்ட குட்டி, மற்றும் குண்டு தாத்தா கடையில் ஒரு ரூபாய்க்கு நெல்லிக் காய் இவை அனைத்தும் இலவசம். முந்துபவர்களுக்கு முன்னுரிமை.

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்