அறிவியல் துளிகள்-18

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


69. விரல் நகங்கள் வளர்வது போன்று பற்கள் ஏன் வளர்வதில்லை ? 68

நகங்கள் வளர்வதற்கும், பற்கள் அவ்வாறு வளராததற்கும் அவற்றின் அமைப்புகளே காரணம். நகங்கள் தாவரங்களின் நுனிப்பகுதி போன்று தொடர்ந்து வளர்கின்றன. நகங்களின் அடிப் பகுதியில் அமைந்துள்ள உயிரணுக்களின் தொகுதியினால் (set of cells), உற்பத்தி செய்யப் படும் கெராடின் (Keratin)என்ற பொருள் மேற்கூறிய வளர்ச்சிக்குக் காரணமாக அமைகிறது. முடி, கொம்பு, நகம் ஆகியவற்றில் இப்பொருள் உள்ளது. ஆனால் பற்களோ பல் அரும்புகளில் (tooth-buds)இருந்து தோன்றுவன. இது பூக்கள் அரும்பில் இருந்து மலர்வதை ஒக்கும். பற்சிப்பி (enamel), பல்லின் கடினமான புறப்பகுதி, பல்லின் உட்பகுதி ஆகிய பல்லின் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட உயிரணுக்களின் தொகுதியினால் உருவாகுவன. குழந்தை பிறப்பதற்கு முன்பே மேற்கூறிய உயிரணுத் தொகுதிகள் உற்பத்தி செய்ய வேண்டிய பல்லின் பகுதிகள் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. குழந்தைகட்குத் தோன்றி விழுந்துவிடும் பால் பற்களாயினும் (milk teeth) சரி, பின்னர் உருவாகும் நிலைத்த பற்களாயினும் சரி மனிதர்கட்குத் தோன்றும் ஒவ்வொரு பல்லும் தனிதனிப் பல் அரும்பில் இருந்து தோன்றுகிறது. எனவேதான் ஒரு குறிப்பிட்ட பல் விழுந்தால் மீண்டும் அது முளைப்பதில்லை. ஆனால் எலி போன்ற சில உயிரினங்களில் பல் அரும்புகள் எப்போதும் உயிர்ப்புடன் விளங்குவதால் அவற்றின் பற்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். பற்கள் அளவுக்கு மீறி வளர்வதைத் தடுக்கவும், பற்களை குறிப்பிட்ட அளவுக்குள் ஒழுங்காக வைத்திருக்கவும் அவ்வுயிரினங்கள் எப்போதும் எதையாவது கொரித்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

70. ஒலிநாடாப் பதிவியில் (Tape recorder) பதிவு செய்யப்பெற்ற நமது குரல் நமக்கே புதிராக இருப்பது ஏன் ? 70

குரல்நாண்களில் (Vocal chords) இருந்து எழும்பி, காதுகளை அடைவதன் மூலம் நமது பேச்சை நம்மால் கேட்க முடிகிறது. இது இரு வழிகளில் நடைபெறுகிறது. காற்றலைகள் (air waves) வழியாகவும், தாடை எலும்பு, உட்செவி எலும்பு ஆகியவற்றின் அதிர்வு காரணமாகவும் நாம் பேசும் பேச்சு நம் செவியை அடைகிறது. எனவே நாம் பேசும் பேச்சொலியை மேற்கூறிய இருவகை அதிர்வுகளின் ஒருங்கிணைப்பால் நாம் கேட்கிறோம். ஆனால் பிறர் பேசும் ஒலியும், பதிவு செய்யப்பட்ட ஒலியும் மேற்கூறிய இரு வழிகளில் அல்லாமல், காற்றலைகள் வழியாக மட்டுமே நம் செவியை அடைகின்றன. எனவே பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பபடும் நமது பேச்சொலி, இயற்கையாக நாம் பேசும் ஒலியிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.

71. ஒரு கண் மட்டுமே திறந்த நிலையில் ஊசித் துளையில் நூலைக் கோர்ப்பது மிகவும் கடினமாக இருப்பது ஏன் ? 71

ஒரு கண்ணை மட்டுமே திறந்து மற்றொரு கண்ணை மூடிக்கொண்டு பார்க்கும்போது நூல் முனைக்கும், ஊசித்துளைக்கும் இடையேயுள்ள தூரத்தைச் சரியாகத் தீர்மானிக்க முடிவதில்லை. இரு கண்களையும் திறந்த நிலையில் நாம் பார்ப்பதை முப்பரும நோக்குப் பார்வை (Stereoscope vision) என்பர். ஒரு பொருளை இரு கண்களாலும் பார்க்கும்போது, அப்பொருள் முப்பருமனிலும், இயற்கைத்தன்மையிலும், சரியான தொலைவிலும் தெரியும். எனவே பொருள் எவ்வளவு தூரத்திலுள்ளது என்பதைச் சரியாக அறிந்துகொள்ள முடிகிறது. இதனால் இரு கண்களையும் திறந்த நிலையில் நூல் நுனியை ஊசித் துளையில் எளிதாகச் செலுத்த முடிகிறது. மாறாக ஒரு கண் மட்டுமே திறந்த நிலையில் இச்செயலைப் புரிவது கடினமாகிறது.

72. மின் இணைப்பைத் துண்டித்தவுடனே, சுழலுகின்ற மின்விசிறி ஏன் உடனடியாகச் சுழலுவதை நிறுத்துவதில்லை ? 72

சுழலுகின்ற எல்லாப் பொருட்களைப் போன்றே, மின் விசிறியும் நிலைமக் கோட்பாட்டிற்கு (Principle of inertia) உட்படுகிறது; அதாவது உராய்வினாலோ (Friction) அல்லது வெளி விசையினாலோ நிறுத்தப்படும்வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட விசிறியும் சுழன்று கொண்டே இருக்கும். மேசை விசிறி, தொங்கும் விசிறி இரண்டிலுமே விசிறியின் சுழலி (Rotor) மின் மோட்டாரினால் இயக்கப்படுகிறது. மேலும் சுழலியானது குண்டுத் தாங்கியில் (Ball bearing) பொருத்தப்பட்டு விசிறியின் பிற பாகங்களுடன் ஏற்படும் உராய்விலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதனால் விசிறி சுழலும்போது இரைச்சல் மிகுதியின்றி அமைதி யாகச் சுற்றுகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் விசிறித் தகடுகளுக்கும் சுற்றுச் சூழலிலுள்ள காற்றுக்கும் இடையே நிலவும் உராய்வு விசை மட்டுமே விசிறியைத் தாக்கும் ஒரே விசையாகும். இதன் காரணமாகவே மின் இணைப்பு இல்லாத நிலையிலும் விசிறித்தகடுகள் சிறிது நேரம் சுழன்று பின்னர் நிற்கிறது. அடுத்து குண்டுத்தாங்கி இல்லாவிட்டாலும்கூட விசிறி சிறிது நேரம் சுழன்று பின்னர் நின்றுவிடும்.

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

2193 V Cross K Block 2193 5ஆவது கிராஸ் கே பிளாக்

Kuvempu Nagar, Mysore 570023, India குவெம்பு நகர், மைசூர் 570023, இந்தியா

Email ragha2193van@yahoo.com தொ.பேசி: 91-0821-561863

Series Navigation