அன்னையும் தந்தையும்

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

பசுபதி


அன்னை பூமி இந்தி யாவின்

. . அழகு மயிலை ஊரடா!

தந்தை நாடு என்றன் வாழ்வில்

. . தண்மை சூழும் கானடா!

பெற்ற மக்கள் பளுவில் விழிகள்

. . பிதுங்கும் அன்னை நாடடா!

கற்ற குடிகள் ஏற்றம் செய்து

. . கைகள் நீட்டும் கானடா!

மணலில் தமிழை எழுதி அறிவை

. . மலர வைத்த தாயடா!

கணினி மூலம் கவிதை யாக்கும்

. . கல்வி தந்த கானடா!

தொன்மை யான சங்கம் ஈன்ற

. . சொன்ன அன்னை நாடடா!

என்றும் புதுமை மதுவை ஊட்டி

. . இன்பம் சேர்க்கும் கானடா!

ஆன்ம ஞானம் ஒளிர வைக்க

. . அன்னை வேண்டு மேயடா!

மேன்மை தாழ்வு பார்த்தி டாது

. . மெச்சும் தந்தை கானடா!

வேலை யின்பம் கான டாவில்

. . வெல்ல மென்றி னிக்குதே!

மாலை தன்னில் பாழும் நாசி

. . வாச மல்லி தேடுதே!

கயிலை என்று கீரன் கண்ணில்

. . காட்சி தந்த காளத்தி;

மயிலை என்று கான டாவும்

. . மாலை வேளை மாறுமோ ?

அன்னை மடியில் பாதி வாழ்வு;

. . தந்தை முதுகில் மீதியோ ?

இன்னும் ஈசன் தந்த மிச்சம்

. . எந்த நாட்டில் தீருமோ ?

Series Navigation

author

பசுபதி

பசுபதி

Similar Posts