அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


முன்னுரை: 1944 ஆம் ஆண்டு உலகத்தின் முதல் அணுவியல் கழிவுச் சேமிப்பகம், அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உள்ள ஓக் ரிட்ஜ் நகரில் [Oak Ridge, Tennessee] இரண்டாம் உலகப் போர் நடக்கும் சமயத்தில் தோன்றியது. முதல் அணு ஆயுதங்களுக்கு வேண்டிய யுரேனியம்-235, புளுடோனியம்-239 ஆகிய எருக்களைத் தயாரிக்கவும், அவற்றைத் தூய்மைப் படுத்தவும் ஓக் ரிட்ஜில் அணு உலைகளும், அணு எருச் சுத்திகரிப்புத் தொழிற் கூடங்களும் அமைக்கப் பட்டன! அந்த முன்னோடிச் சேமிப்பகம் பயன்படுத்தப் பட்ட பிறகு அதில் பெற்ற அனுபவத்தால், பலவித முறைகளில் அது இன்னும் விருத்தி அடைந்தது! அதைப் போன்ற பல சேமிப்பகங்கள் மற்ற நாடுகளிலும் ஆரம்ப காலத்தில் கையாளப் பட்டன. ஆனால் தொட்டி போன்ற அந்த முன்னோடிச் சேமிப்பகம் வீரியக் கதிர்வீச்சுக் கழிவுகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வில்லை!

தற்போது ஆஸ்டிரியா, வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுத்துறைப் பேரவையின் [International Atomic Energy Agency (IAEA)] ஆலோசனைப்படி உலக நாடுகளில் கீழ்நிலை, இடைநிலை, உயர்நிலைக் கதிர்வீச்சுக் கழிவுகளுக்காக பலவிதக் குழிகளும், பாதாளக் கிடங்குகளும் அமைப்பாகி யுள்ளன. அம்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கீழ்நிலைச் சேமிப்புக் குழிகள் பயன்பட்டு வருவதோடு, 42 புதிய பூதளக் கிடங்குகளும் [Geological Repositories] டிசைன் செய்யப் பட்டு, விருத்தி யடைந்து தயாராகி வருகின்றன.

அகில நாடுகளில் அணு ஆயுதத் தயாரிப்பு, ஆராய்ச்சி அணு உலைகள், மின்சக்தி அணு உலைகள் இயக்கம், முதுமை எய்திய அணு உலைகள் முடக்கம், அணுவியல் எருக்கள் தனித்தெடுப்பு, சுத்தீகரிப்பு, எருக்கோல்கள் வடிப்பு [Fuel Fabrication], செறிவு யுரேனியத் தயாரிப்பு [Uranium Enrichment], தீய்வு எருக்கோல்கள் மீள் சுத்திகரிப்பு [Spent Fuel Reprocessing Plant] ஆகிய பல் வேறு பணிகளால் அனு தினமும் கதிர்வீசும் கழிவுகள் சேர்ந்து கொண்டே போகின்றன!

IAEA அகில நாடுகளின் அனுபவக் கூட்டறிவையும், பயன்படும் தனியறிவையும், முன்னேறும் நாடுகளுக்கும், தேவையான பிற நாடுகளுக்கும் அளித்து, அணுத்துறைக் கழிவுகள் பாதுகாப்பாக அடக்க மாவதற்கு உதவி செய்து வருகிறது. அணுமின் சக்தி உற்பத்திச் செலவில் பத்தில் ஒரு பங்கு செலவே, அதன் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைப்புக்குத் தேவைப் படுகிறது!

கதிர்வீச்சுக் கழிவுகள் அடக்கமாகும் புதைப்புத் தளம் தேர்ந்தெடுப்பு

புதைப்புத் தளம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், அது பல தகுதி விதி முறைகளை நிறைவேற்ற வேண்டும். 1. பூதளவியல் பண்பு [Geological Characteristics] 2. பூதள நீரோட்ட அமைப்பு [Hydrology or Hydrogeology]. 3. பூதள இரசாயனவியல் பாதிப்பு [Geochemistry]. 4. பூதள அதிர்வு அபாயம் [Tectonics & Seismicity]. 5. மேற் பரப்பு இயக்கம் [Surface Process]. 6. காலநிலைப் பாதிப்பு [Meteorology]. 7. மனிதர் தூண்டும் நிகழ்ச்சிகள் [Human-induced Events]. 8. கழிவுகளைக் கடத்த வாகனப் போக்குவரத்து வசதி [Transportation of Wastes]. 9. பூதளப் பயன்பாடு [Land Use]. 10. மக்கள் வசிக்கும் திணிவு [Population Density or Distribution]. 11. சூழ்வெளிப் பாதுகாப்பு முறைகள் [Environmental Protection]. 12. முக்கியமாக இறுதியில் பொதுநபர் அங்கீகாரம் [Public Acceptance]. இவற்றுடன் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு ஆகியவற்றின் அழுத்தமான உடன்பாடு, உறுதிப்பாடு, முடிவில் ஒப்பந்தம்!

தற்போது உலக நாடுகளில் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகள் சேமிக்க 17 இடங்கள் தேர்வாகிக் கட்டும் லைஸென்ஸ் பெற்றுள்ளன! மேலும் 17 நாடுகளில் 25 பூதளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த நாடுகளில் ஒன்று சைனா. சைனா கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் [Low Level, Medium Level Radioactive Wastes] சேமிக்க வடமேற்கு கோபி பாலை வனப் பகுதியில் இரண்டு, தெற்குப் பகுதியில் இரண்டாக நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

சில தேசங்களில் புதைப்புக் கிடங்குகள் அணுத்துறைச் சாதனங்களின் அருகே அமைக்கப் பட்டுள்ளன. உதாரணமாக இங்கிலாந்தில் டிரிக் [Drigg, U.K.], பிரான்ஸில் மான்ச் மையம் [Centre de la Manche], ஜப்பானில் ராக்கஷோ [Rakkasho, Japan], பின்லாந்தில் ஒகிலெளட்டு [Olkiluoto, Finland] போன்ற பூதளப் புதைப்பு இடங்கள் அணுவியல் கூடங்களுக்கு அருகிலே உள்ளன! பல நாடுகள் ஒன்றாக இணைந்து பொதுப் புதைப்புக் கிடங்குகள் [Regional Multi-national Repository] நிறுவிப் பயன்படுத்த ஐரோப்பிய நாடுகள் சில ஒப்புக் கொண்டு உள்ளன!

பூதளப் புதைப்பிடத்தின் சிறப்பு டிசைன் தேவைகள்

புதைப்பிடத் தேர்வு ஒரு நாட்டின் பூதள நீர், நில வளத்தையும், கீழ்த்தள நீரோட்டத் தன்மையும், அணுசக்திக் கட்டுப்பாடுப் பேரவையின் விதிகளையும் பொறுத்தது. அவற்றின் டிசைன் குறிக்கோள் 1. கதிர்வீச்சுத் தீண்டல் குறைப்பு அல்லது கதிர் அணுக்கருத் துணுக்குகள் கசிந்து உயிரியல் கோளத்தில் [Biospere] வெளியேறிப் பரவும் அளவுக் கட்டுப்பாடு 2. பொதுநபர், பணியாளிகள் ஆகியோருக்கு மிகக் குன்றிய கதிரடித் தாக்குதல் 3. மிகக் குறைந்த பராமரிப்பு வினைகள் 4. கண்காணிப்பு வசதிகள் 5. 24 மணிப் பாதுகாப்பு ஏற்பாடுகள்.

பூதள புதைப்பிடங்களின் கதிர்வீச்சுக் கழிவுகளுக்குக் கவசங்களாகப் பயன்படும் பல்லடுக்குப் பொறியியல் அரண்கள் [Multiple Engineered Barriers] அமைக்கப் பட்டுள்ளன. அவை யாவும் காங்கரிட் அரண்கள் [Concrete Vaults]. அந்த அரணில் மீள்நிரப்பிப் பண்டம் [Backfilling Material], இரசாயனத் தடுப்பி [Chemical Barrier], வாயு வெளி நீக்கி [Gas Vent], தளர்ச்சிக் களம் [Buffer Zone] போன்றவை இணைக்கப் பட்டுள்ளன.

அகில நாடுகளில் பலவிதப் புதைப்புக் கிடங்குகள் டிசைன் செய்யப் பட்டுள்ளன. அவற்றில் 62% அமைப்புகள் தரை மட்டத்துக்கு 34 அடிக்குக் [40 மீட்டர்] கீழ் உள்ளன. 18% எளிதான தரை மட்ட ஏற்பாடுகள். 7% சுரங்கப் பாதாளக் குழிகள். 4% 2000-4000 அடிக்குக் கீழான பூதளக் கிடங்குகள்.

அகில நாடுகளில் அமைந்துள்ள கழிவுக் கிடங்குகள்

அமெரிக்காவில் 1980 ஆம் ஆண்டு ‘கீழ்நிலைக் கதிர்வீச்சுக் கழிவு விதி ‘ [Low Level Radioactive Waste Policy] அமுலான பிறகு, புதிதாக எந்த இடமும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. எட்டு மாநிலங்களில் பூதளத் தேர்வு முன்னேறி வருகிறது. தேர்ந்தெடுக்கப் பட்ட நான்கு இடங்கள்: 1. நெப்ராஸ்காவில் மத்திய புதைப்பகம் [Nebraska (Central Interstate Compact)], 2. வட கரோலினாவில் தென்கிழக்குப் புதைப்பகம் [North Carolina (Southeast Compact)], 3. காலிஃபோர்னியாவில் தென்மேற்குப் புதைப்பகம் [California (Southwest Compact)], 4. டெக்ஸஸில் டெக்ஸஸ் புதைப்பகம் [Texas, (Texas Compact pending)] லைஸென்ஸ் பெறப் போகின்றன. கனெக்டிகெட்டில் [Connecticut] பொது நபர்களின் எதிர்ப்பைச் சமாளித்து, ‘பூதளத் தேர்வு, கட்டுப்பாடு ‘ [Choice & Contorl] ஆகிய இரண்டு முறைகளிலும் பொது மக்கள் ஈடுபட வசதி செய்யப் பட்டது!

ரஷ்யாவில் 1960-1970 ஆண்டுகளில் பல தரப்பட்ட கதிரியக்கக் கழிவுகளைப் புதைக்க பல விதக் கிடங்குகள் உருவாக்கப் பட்டன. அவற்றைப் போல மற்ற கிழக்கு ஈரோப் நாடுகளிலும் அமைக்கப் பட்டன. பூதளத்தின் கீழ் நீரோட்ட மட்டத்திற்கு 15 அடி மேலாக அவை யாவும் அமைய டிசைன் செய்யப் பட்டன. ஸெர்கீவ் போஸாட் [Sergiev Posad] என்னும் இடத்தில் ‘காங்கிரிட் அரண்கள் ‘ [Concrete Vaults] தரைக்குக் கீழ் கட்டப் பட்டன. இரட்டைக் காங்கிரிட் சுவர்கள் கொண்டு, பிட்டுமென் தார் [Bitumen Tar] அடுக்காய்ப் பூசப்பட்டவை. கழிவுத் திட்டுகள் [Waste Packages] அரணுள்ளே தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, செமென்ட் காரையால் நிரப்பப்படும். அரண் நிரம்பியதும் காங்கிரிட் ஊற்றி அடைக்கப்பட்டு, மேலே உறுதியாக்கப்பட்ட காங்கிரிட் உலோக மூடியால் மூடப்பட்டு, மேலும் செமெண்டால் இணைக்கப்படும்.

ஆஸ்திரேலியாவில் பொறி நுணுக்கமான ஒரு பூதளக் கிடங்கு தேர்வாகப் பொது மக்கள் முழுப் பங்கெடுக்க வாய்ப்பளிக்கப் பட்டது. கனடாவில் ரேடியம், யுரேனியம் சுத்திகரிப்புக் கழிவுகளைப் புதைப்பது பொது மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் தாமதமாகி, அரசாங்கம் முதல் பூதளத்தை நிராகரித்தது! பின்னால் தனியார் பணிக்குழு முன்வந்து அளித்த, நகராட்சி உறுப்பினர் பங்கு கொள்ளும் ஐந்து கட்டத் திட்டம் நிறைவேறிப் பூதளப் புதைப்பிடங்கள் தேர்வாயின.

ஹங்கேரியில் முதலிரண்டு இடங்கள் தடுக்கப்பட்டுக் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் சேமிக்க தேசீயப் புதைப்பிடம் ஒன்றை 1992 இல் ஹங்கேரி அணுத்துறைப் பேரவை [Hungarian Atomic Energy Commission] முடிவு செய்தது. அதைப் பின்பற்றி மக்கள் சமூகமே முன்வந்து, இன்னும் ஆறு புதைப்பு இடங்களைக் குறித்துத் தந்தது!

இந்திய அணுத்துறைக் கட்டுப்பாடு வாரியம் வெளிடாதவை!

இந்தியாவில் சென்னைக் கூடங்குளத்தில் உருவாகி வரும் ரஷ்யாவின் இரட்டை [1000 MWe ஆற்றல் கொண்ட] அணுமின் உலைகளில் ஒன்று ஓராண்டுக்கு முழு ஆற்றலில் இயங்கினால் சுமார் 100 கன அடிக் [cu.ft] மேல்நிலைக் கழிவு விளையும்! உயர்நிலைக் கதிர்வீச்சுக் கழிவான [High Level Radioactive Waste] அந்தக் கொள்ளளவில் 20 மில்லியன் கியூரி [curie] நீள் ஆயுள் கதிரியக்கம் [long Half Life Radioactivity] எழுகிறது! அவை 67,000 வாட்ஸ் [watts] வெப்பத்தை வெளியேற்றி நாளடைவில் குறைந்து கொண்டே வருகிறது. இரட்டை அணு உலைகள் 10 ஆண்டு இயங்கினால், 2000 கன அடிக் கழிவுகள் சேரும்!

இதுவரை 14 அணுமின் உலைகளும், சில ஆராய்ச்சி அணு உலைகளும் 30 ஆண்டு முதல் 2 ஆண்டு வரை இடை இடையே பாராமரிப்புக்கு நிறுத்தமாகி இயங்கி வந்துள்ளன! அத்துடன் மூன்று தீய்ந்த எரு சுத்திகரிப்புக் கூடங்கள் [Spent Fuel Reprocessing Plants], எருக்கோல் வடிப்புச் சாலைகள் [Fuel Bundle Fabrication Plants], யுரேனியச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்கள் [Uranium Separation Plants] ஆகியவை தினமும் கதிர்வீச்சுக் கழிவுகளை விளைவித்து வருகின்றன!

2001 ஆண்டு முடிவு அறிக்கையில் [2001 Annual Report] கூட உயர்நிலை, இடைநிலை, கீழ்நிலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் எத்தனைக் கன அடி, திரவக் கழிவுகள் எத்தனை காலன், திடக்கட்டி ஆக்கப்பட்ட கழிவுகள் எத்தனை டன் என்னும் விபரங்களைத் தவிர இந்திய அணுத்துறைக் கட்டுப்பாடு வாரியம் [Atomic Energy Regulatory Board] மற்ற நிகழ்ச்சிகளை வெளியிட்டிருக்கிறது! முக்கியமாக உயர்நிலைக் கழிவுகள் எங்கே, எப்படி நிரந்தரமாக அடக்கம் செய்யப் படுகின்றன என்னும் முக்கிய விபரங்கள் இந்திய அணுத்துறை அகிலவலை முகப்புகளில் எதனிலும் காணப்பட வில்லை!

இப்போது இயங்கி வரும் இந்திய அணுமின் உலைகள், ஆராய்ச்சி அணு உலைகள் யாவும் 220 MWe மின்னாற்றலை மிஞ்சியவை அல்ல! பாரதத்தில் கட்டப் பட்டு எதிர்காலத்தில் இயங்கப் போகும் புதிய பூத அணுமின் உலைகள்தான் [500 MWe, 1100 MWe] ஏராளமான அணுத்துறைக் கழிவுகளை வெளியாக்கப் போகின்றன! உலக நாடுகளில் உச்சமான 1300 MWe மின்னாற்றல் கொண்ட அணுமின் உலைகள் சில நாடுகளில் இயங்கி வருகின்றன! அகில நாடுகள் வெளியாக்கும் கதிர்வீச்சுக் கழிவுகளின் அளவை ஒப்பிட்டால், இந்திய அணு உலைகளின் அணுவியல் கழிவுகள் மிகவும் குறைந்தவை என்று சொல்லலாம்!

IAEA அறிக்கையின்படி பாம்பேயில் இருக்கும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் [Bhabha Atomic Energy Centre] அருகே ஆறு கீழ்நிலை, இடைநிலைக் கழிவுப் புதைப்புக் கிடங்குகள் உள்ளதாக தெரிய வருகிறது! அவை யாவும் உறுதியாக்கப் பட்ட காங்கிரிட் தொட்டிகள் [Reinforced Concrete Trenches], மற்றும் பல்வேறு விதமான கழிவுகளை அடக்கம் செய்யும் ஆழக் குழிகள் [Tile Holes]. காங்கிரிட் தொட்டிகள் யாவும் நீர்க்கசிவுகள் இல்லாதவை! அடுத்து மழைநீர் ஊடுறுவ முடியாதவை [Waterproof]. காங்கிரிட் மூடியால் அவை இறுக்கமாக மூடப் பட்டவை. கதிர்வீச்சு புறத்தே உள்ளவரைத் தாக்கா வண்ணம், அவைக் கவசமாகப் பெட்டியாகவும் உள்ளன. பேய் மழை கொட்டும் மழைக்காலச் சமயத்தில் நீர் இறங்காதபடி, நீரகற்றித் திரவங்கள் [Water Repellents] பூசப்பட்டவை. ஆழக் குழிகள் 15 அடி ஆழம் கொண்டவை. காங்கிரிட் தொட்டிகள் கதிர்வீச்சைக் குறைக்க முடியாத கழிவுகளும், ஆல்ஃபாக் கதிர்கள் [Alpha Rays] வீசும் கழிவுகளும் ஆழக் குழிகளில் புதைக்கப் பட்டன.

முடத்துவமான ஸ்பெயின் அணுமின் உலையின் கதிரியக்கக் கழிவுகள்

17 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய ஸ்பெயின் வாண்டெலாஸ்-1 [480 MWe மின்னாற்றலுள்ள Vandellos-1] அணுமின் உலையின் உயர் அழுத்த டர்பைன் கலத்தில் [High Pressure Turbine] 1989 இல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு 1990 இல் நிரந்தரமாக மூடப் பட்டது! இந்தியாவில் டெல்லிக்கு அருகில் இருக்கும் நரோரா அணுமின் நிலையத்தில் இதே போல்தான் 1993 இல் கீழ் அழுத்த டர்பைன் சுழலியில் தீப் பற்றிப் பெரும் சேதம் விளைந்தது! இந்த இரண்டு விபத்துக்களும் அணு உலைப் பாதுகாப்புச் சாதனங்களுக்கு இடையூறு விளைவித்தாலும், அணு உலையால் தீ விபத்துத் தூண்டப் படவில்லை!

கோடிக் கணக்கான நிதியைச் செலவு செய்து, நரோரா செப்பணிடப் பட்டுத் தற்போது இயங்கி வருகிறது! ஆனால் வாண்டெலாஸ் அணு உலைத் திரள்கரி மிதவாக்கியைப் பயன்படுத்தி வாயுவால் வெப்பம் நீக்கப்படும் [Graphite moderated & Gas cooled Reactor] செர்நோபிள் மாடலைச் சேர்ந்தது! 1986 இல் செர்நோபிள் வெடித்துச் சிதைந்து போன காரணத்தால், டர்பைனில் தீப்பற்றிய ஸ்பெயினின் திரள்கரி அணுமின் உலையும் மூடப்பட்டு, 1996 இல் முடத்துவ மானது [Decommissioned]!

1. வாண்டெலாஸின் எருக்கோல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, நீர்த் தடாகத்தில் [Storage Water Pool] சேமிக்கப் பட்டன. அணு உலைச் சாதன இயக்கங்களால் விளைந்த கீழ்நிலைத் திடக் கழிவுகள், கதிர்வீசும் உலோகத் துண்டுகள், சுத்தீகரிப்பு இரசாயனக் கழிவுகள் [Chemically treated Liquid Wastes], யாவும் உலோகத் தொட்டிகளில் காங்கிரீட் கட்டிகளாய்ச் சுருக்கப்பட்டன!

2. 200,000 திரள்கரி உறைகள், மிதவாக்கிக் கட்டிகள், தயாரான மூன்று காங்கிரிட் அரண்கள் ஒன்றில் அடைக்கப் பட்டன!

3. அமுக்கிச் சிறுக்கும் கழிவுகள் [Compactable Wastes] 200 லிட்டர் கொள்ளளவுள்ள 900 கலன்களில் அடைக்கப் பட்டு மூடப்பட்டன. அவற்றுடன் 492 கட்டுப்பாடு செய்யும் நியூட்ரான் உறிஞ்சிக் கோல்களும் [Absorber Rods] சேமிக்கப் பட்டன.

4. காங்கிரிட் அரண்களின் உள்ளே இருந்த கழிவுகளின் பேரளவு கதிர்வீச்சு, புறத்தே மணிக்கு 4 மில்லி ரெம் [4 mRem/hour] கதிரடி வீதத்தில் இருந்தது.

அமெரிக்காவில் பேரளவு கதிர்வீச்சுக் கழிவுகளின் சேமிப்பு!

சோவியத் யூனியன் பொதுடமைக்கு எதிராக ‘ஊமைப்போர் ‘ நிலவிய சமயத்தில் [Cold War (1952-1989)] அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை அடுக்கிக் கொண்டே போன போது, அமெரிக்கா மட்டும் 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளைத் [Nuclear Warheads] தயாரித்தது! அவற்றுக்கு அணு எருக்களாகப் பயன்பட்ட செறிவு யுரேனியம்-235 [90% மேல்], தூய்மையான புளுடோனியம்-239 ஆகியவற்றைத் தனித்தெடுக்க, செறிவாக்க, தூய்மைப் படுத்தும் வினைகளில் விளைந்த கழிவுகளின் கொள்ளளவு [114 அணுமின் உலைகளின் தீய்ந்த எருக்களின் கழிவையும் சேர்த்து] 52,000 டன்! புளுடோனிய திரவக் கழிவு மட்டும் 91 மில்லியன் காலன்!

பேரளவு கதிரியக்கக் கழிவுகளை கணக்கில்லாமல் விளைவித்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான டன் அளவுகளில் சேகரித்து வரும் முதல் நாடு அமெரிக்கா! அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவைச் சொல்லலாம்! 1945 இல் வாஷிங்டன் மாநிலத்தின் ஹான்ஃபோர்டு [Hanford, Washington State] அணு உலையில் முதல் அணு குண்டுகளுக்கு புளுடோனியம் தயாரிக்கப் பட்டது! 1989 இல் அந்த அணு உலை மூடப் படுவதற்கு முன்பு, அமெரிக்கா அணு ஆயுதங்களுக்காக 59 டன் புளுடோனியத்தை அங்கே தயாரித்துச் சேமித்தது! அருகில் ஓடிய கொலம்பியா ஆற்று நீரே அணு உலை வெப்பத்தைத் தணிக்கப் பயன் பட்டது. அணு உலையில் நுழைந்து ஆற்றுக்கு மீளும் நீரோட்டத்தில் கசிந்து, கதிர்வீசும் புளுடோனியம், ஸீஸியம், ஸ்டிரான்சியம், சோடியம், ஆர்செனிக் போன்ற நஞ்சு உலோகங்கள் காணப்பட்டன!

புளுடோனியக் குண்டுகளின் எச்சக் கழிவுத் திரவம் மட்டும் 45 பில்லியன் காலன் சேர்ந்து, கசியும் தொட்டிகளில் நிரப்பப் பட்டு, கொலம்பியா ஆற்றில் வழிந்தோடப் பயமுறுத்தியது! தற்போது 4 பில்லியன் டாலர் செலவில் திரவக் கழிவைக் கண்ணாடிக் கழிவாய்ச் சுண்டிப் புதைக்கப் பேரளவு ‘கழிவுக் திரட்சிக் கூடம் ‘ [Waste Vitrifying Plant] ஒன்று கட்டப் பட்டு வருகிறது!

அமெரிக்காவில் அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்களின் அருகே உள்ள பல புதைப்புக் குழிகளில் புளுட்டோனியம் தீண்டிய கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன என்று அமெரிக்க இந்தியச் சூழ்வெளி விஞ்ஞானி, அர்ஜுன் மக்கிஜானி [Arjun Makhijani. Ph.D. Environmentalist] கூறுகிறார். இதாஹோ மாநிலத்தில் [Idaho State] மட்டும் ஒரு டன் புளுடோனியக் கழிவுகள் மண்ணில் பரவி யுள்ளன என்று மக்கிஜானி தான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறார்.

‘தன்வினை தன்னைச் சுடும் ‘, ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘ என்பவை தமிழ்ப் பழமொழிகள். உலக நாடுகள் அனைத்தையும் தகர்த்துப் பொடியாக்கத் தகுதி பெற்ற 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளை [Nuclear Warheads], அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது! எண்ணற்ற மாந்தரை அழிக்க வல்ல [Mass Destruction] அந்தக் கோர ஆயுதங்களை ஆக்கிய அமெரிக்கத் தளங்கள், இப்போது தங்கிவிட்ட கதிரியக்கக் கழிவுகளால், அமெரிக்க மக்களுக்கே பல்லாண்டு தீங்கு விளைவிக்கும் விதைகளை பல மாநிலங்களில் கட்டுப்பாடு இல்லாமல் தெளித்துள்ளன!

தகவல்:

1. Radioactive Waste Disposal, Global Experience & Challenge, IAEA Bulletin 39/1 [www.iaea.or.at/worldatom/]

2. Nuclear Science & Society By: Bernard Cohen [1974]

3. Atomic Science, Bombs & Power By: David Dietz [1962]

4. The Careless Atom By: Sheldon Novick [1969]

5. Living With Radiation, National Geographic [April 1989]

6. Nuclear Waste By: National Geographic [July 2002]

7. Indian Atomic Energy Regulatory Board Bombay, Annual Report [2001]

*****************

jayabar@bmts.com

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts