நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி

This entry is part of 44 in the series 20110109_Issue

தமிழநம்பி


நெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள
நினைத்தி ருப்பான்!
நெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள்
நெஞ்சம் நொய்வாள்!
படுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான்
படர்த ணிக்க!
கடுந்துன்பில் தலைவியவள் கனிவுரைக்கும் ஆற்றாதாள்
கலக்கம் மாறாள்!

செந்தமிழின் இலக்கியங்கள் செழியன்பு செருமறத்தின்
சீர்மை சொல்லும்!
சிந்தையுறு நுண்ணுட்பச் செய்திகளைத் தெரிவிக்கும்
தெருட்சி மாட்சி!
இந்தநெடு நல்வாடை இன்னன்பும் மறச்சிறப்பும்
எடுப்பாய்க் கூறி
தந்தவகை அன்புமறம் தமிழினகப் புறச்சிறப்பை
தகவி ளக்கும்!

பாட்டு நலம்

பாட்டுநலம் அனைத்தையுமே பாராட்டல் எளிதன்று
பலநி கழ்வை
ஏட்டினிலே இயல்பின்பம் எள்ளளவும் மாறாதே
எழுதி யுள்ளார்!
காட்டும்வா னியற்சிறப்பும் கணியறிவும் ஓவியமும்
கனியத் தந்தே
தீட்டியுள அழகியற்கை தேன்சுவையாய் உயிரியக்கம்
திகட்டா இன்பம்!

சிறப்புரைக்கும் ‘மருவினிய கோலநெடு நல்வாடை’
செப்பக் கூற்று!
திறஞ்சான்ற பொருள்வளமும் தேர்ந்தெடுத்த உவமைகளும்
செஞ்சொற் சீரும்
மறஞ்சான்ற மன்னவனின் மதித்தொழுகும் பொதுவுணர்வும்
வழங்கும் பாட்டு
விறலார்ந்த நாகரிகம் விளங்கவுரை நக்கீரர்
வெற்றிப் பாட்டாம்!

——————————————————————-

Series Navigation