பாஞ்சாலியின் துயரம்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

பூரணி


—-
அரசர்கள் சுயம்வரம் ஏற்படுத்துதல் தங்கள்
பெருமையைக் காட்டவேயன்றி
பெண்கள் சுயமாக வரன் தேட அல்ல,
மாலை கையிலேந்தி மண்டபத்தில் சிலைபோல
மெளனமாக நின்றிருந்தேன் நான்
எதிரே அரசர் கூட்டம்,
அந்தணர் வேடத்தில் ஐவர்;
புரிந்துவிட்டது எனக்கு
பாண்டவர்கள் அவர்கள் என்று.
அர்ச்சுனன் அழகன், வீரன்
என்றபோதிலும்
பெண்சபலம் கொண்ட அவனை
என் மனம் விரும்பவில்லை.
அழகும் வீரமும் நேர்மையும் உள்ள
கர்ணனை என் மனம் நாடினாலும்
தாய் தந்தை அறியாத் தேரோட்டி
வளர்ப்பு மகன்.
சங்கட மனநிலையில் நான்
செறுக்கோடு எழுந்தான் கர்ணன்
சட்டெனத் தடுத்தார்
‘போட்டியில் உனக்கு இடமில்லை ‘ யென்று
அவமானத்தால் முகம் வெளிறி
அமர்ந்தான்.
அர்ச்சுனன் வென்றான்
அந்தணன் வேடத்தில்,
மனம் வெறுத்தாலும் மணந்தேன்
மறுப்புச்சொல்ல வழியின்றி.
குந்தியவள் என்னை
சொந்தமாக்கிவிட்டாள் தன்
ஐந்து மகன்களுக்கும்.
பெரிய மகன் சூதாடி
அடுத்தவன் அரக்கியின் கணவன்
காண்டாபனுக்கோ கணக்கற்ற மனைவிகள்
எல்லோருக்கும் கீழ்ப்படியும்
சின்னப் பிள்ளைகள் நகுல சகாதேவர்கள்!
என் வாழ்வின் சோகத்துக்கு
இவைகள் போதாதா ?
____

nagarajan62@vsnl.net

Series Navigation

பூரணி

பூரணி