இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள்

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

பா. ரெங்கதுரை



உலக அளவில் முஸ்லிம்களின் மக்கள் தொகைப் பெருக்கம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி மேலைக் கிறிஸ்தவ நாடுகள் கவலைப்பட்டுப் பட்டுக்கொண்டிருப்பது தெரிந்ததே. அமெரிக்கா போன்ற எவாஞ்சலிக்கக் கிறிஸ்தவப் பெரும்பான்மை நாடுகள் இவ்விஷயம் தொடர்பாகப் பல கணக்கெடுப்புகளையும், கணிப்புகளையும் செய்து வருகின்றன. வானிலையைக் கணிக்க உதவும் கணித வடிவமாதிரி (mathematical model) போன்றே, முஸ்லிம்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கணிக்கும் மாடலிங் ஒன்றை மேலை நாடுகள் உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ப்யூ ஆய்வு மையம், (http://pewforum.org) 2030ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகைப் பெருக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி அண்மையில் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தக் கணிப்பின்படி, இன்னமும் 20 ஆண்டுகளுக்கு முஸ்லிம்களின் மக்கள் தொகைப் பெருக்கம் பிற மதத்தினரின் பெருக்கத்தைவிட இரு மடங்கு அதிகமாக இருக்குமாம். முஸ்லிம் பெண்களின் கல்வியறிவு, பெரு நகரங்களுக்குக் குடிபெயர்தல், வாழ்க்கைத் தரம் மேம்படுதல் போன்ற காரணங்களால் இந்த வித்தியாசம் படிப்படியாகக் குறைந்து, 2030ஆம் ஆண்டு வாக்கில் இஸ்லாமிய நாடுகள் அல்லாத பிற நாடுகளின் அளவை எட்டுமாம்.

இப்போது அஞ்சப்படுவது போல, யூரோப்பிய நாடுகள் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகளாக, அதாவது யூராபியாவாக மாறிவிடாது என்று இக்கணிப்பு தெரிவிக்கிறது. 2030ஆம் ஆண்டு வாக்கில் யூரோப்பாக் கண்டத்திலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை இப்போதுள்ள 6 (4.4 கோடி) விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக (5.8 கோடி) அதிகரிக்குமாம். பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் இஸ்லாமிய மக்கள் தொகை 10 சதவீதத்தைத் தாண்டும் என்றும், ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இது 10 சதவீதத்தை நெருங்கும் என்றும், பிரிட்டனில் இது 8.2 சதவீதமாக இருக்கும் என்றும் இக்கணிப்பு சொல்கிறது.

2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம். (சுமார் 26 லட்சம்.) இன்னும் இருபது வருடங்களில் இது 1.7 சதவீதமாக (62 லட்சம்) அதிகரிக்குமாம். இது அமெரிக்க யூதர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும்.

மேலும், சீனாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இஸ்ரேலில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இன்றைய 17.7 சதவீதத்திலிருந்து 23.2 சதவீதமாக உயருமாம்.

இன்றைய போக்கே தொடரும் பட்சத்தில், உலக அளவில் தற்போது 23.4 சதவீதமாக (160 கோடி பேர்) இருக்கும் முஸ்லிம் மக்கள் தொகை 2030 வாக்கில் 26.4 சதவீதமாக (220 கோடி) அதிகரிக்கும் என்றும் இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகை 2010ஆம் வருடத்தில் 690 கோடி என்றும், 2030இல் இது 830 கோடியாக இருக்கும் என்றும் இந்த ஆய்வு சொல்கிறது. உலக அளவில் இன்று கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 30 முதல் 33 சதவீதம் என்று வேறு பல ஆய்வு முடிவுகள் மதிப்பிட்டுள்ளன.

இந்த ஆய்வில், இன்றைய இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை 17.7 கோடி என்றும், 2030இல் இது 23.6 கோடியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று உலக அளவில் அதிக முஸ்லிம்களைக் கொண்ட இந்தோனேஷியாவைப் பின்னுக்குத் தள்ளி, 2030ஆம் ஆண்டு வாக்கில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துவிடும் என்றும் ஆரூடம் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுள் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம் (87 முதல் 90 சதவீதம்) இருப்பர் என்றும், ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் இரான் போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால், அப்பிரிவினரின் விகிதாசாரம் குறையக்கூடும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இக்கணிப்பில் ஈடுபட்ட ப்யூ நிறுவன ஆலோசகர்களுள் ஒருவர், யூரோப்பாவும் அமெரிக்காவும் விரைவிலேயே இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகளாகிவிடும் என்ற அச்சம் தேவையில்லாதது என்கிறார்.

இதன் முடிவுகள் கிறிஸ்தவப் பெரும்பான்மை நாடுகளான அமெரிக்காவுக்கும், யூரோப்பாக் கண்ட நாடுகளுக்கும் அவ்வளவு உவப்பாக இருக்காது என்பது நிச்சயம். இநதக் கணிப்பு அரபு நாடுகளின் மறைமுக நிதி உதவியுடன் நடத்தப்பட்டது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த ஆய்வு பிறப்பு விகிதத்தையும், குடியேறுதலையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணிப்புகளை மேற்கொண்டுள்ளது. மத மாற்றங்களினால் உலக அளவில் முஸ்லிம், கிறிஸ்தவர் எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களைக் கணக்கில் கொள்ளாதது இதன் முக்கியமான குறைபாடு. இந்தியாவிலும், உலக அளவிலும் இந்துக்களின் பெருக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் இந்த ஆய்வில் எதுவும் சொல்லப்படவில்லை.

rangadurai.blogspot.com

Series Navigation

பா. ரெங்கதுரை

பா. ரெங்கதுரை