நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33

This entry is part of 42 in the series 20040819_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த

குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ

எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ

அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.

-மாணிக்கவாசகர்

அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் இடைவெளி குறைவு என்பதனை மாறன் மறுபடியும் கிட்டங்கியில் கண்டான். கடந்த மூன்றுநாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகளை, இந்த இரண்டுக்கும் இடையிலேதான் கவனமாகக் கூறுபோடவேணும்.

தொண்டைமாநத்தம் போனதிலிருந்தே ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. பொய்யாய்த் தன்னைக் காமாட்சி அம்மாள் என்று சொல்லித்திரிகின்ற பெண்மணி தேவராசன் அத்தையென அறியவந்தது ஆச்சரியம் என்றால், தேடிப்போன இடத்தில் வாணியைக் காண நேர்ந்தது இன்ப அதிர்ச்சி. தேவராசனைத் தொடர்ந்து குதிரையை அரியாங்குப்பம் ஆற்றுவரை விரட்டிச் சென்றது, ஆற்றங்கரை வளவு, அங்கு கூடிய மனிதர்களால் எழுகின்ற சந்தேகங்கள், அனைத்துமே ஆச்சரியப்படுத்துபவை, ஆனாலங்கே வேலாயுதமுதலியாரை வேவுபார்க்க துபாஷ் பலராம்பிள்ளையால் அமர்த்தப்பட்டிருந்த ஒற்றன் சன்னாசியைச் சந்திக்கநேர்ந்தது அனுகூல அதிர்ச்சி. அவனுடன் அர்த்த ராத்திரியில் கள்ளுக்கடைக்குப் போக நேர்ந்ததற்கும், கிட்டங்கியில் சிறைப்பட்டிருப்பதற்கும் காரணம் எதுவாயினும், அவை ஆச்சரியமான சங்கதிகள்தான். ஆனாலிங்கே, துபாஷ் பலராம்பிள்ளையும் பரிதாபமாக அடைபட்டுக் கிடப்பதைப் காண நேர்ந்தது எதிர்பாராத அதிர்ச்சி.

‘இங்கிருந்து தப்பியாகவேண்டும் ‘, இவன் காதருகே முணுமுணுக்கின்ற துபாஷின் வார்த்தைகளில், ஏதோ தீங்கொன்று நடக்கவிருக்கின்றது என்பதற்கான எச்சரிக்கை இருக்கின்றது. துபாஷ் பலராம்பிள்ளை, மாறன், சன்னாசி ஆகிய மூவரும் பெர்னார்குளோதனோடு சம்பந்தப்பட்டவர்கள் என்கின்றவகையில், எதிரிக்குக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் மற்ற மனிதர்கள், பத்துப் பதினைந்துபேர்களை அடைத்து வைத்திருக்கும் முகாந்திரமென்ன ?

பெரும்பாலோர் மொட்டை அடிக்கபட்டிருக்கிறார்கள். காலில் இரும்பு வளையமிருக்கிறது. கூட்டத்திலிருந்த சிலர் சோர்ந்துகிடக்கிறார்கள், சிலர் தூங்குகிறார்கள். விழித்தவர்களில் சிலர் இவர்களை அதிசயமாய்ப் பார்த்துக்கொண்டு எழுந்து உட்காருகிறார்கள். சிலர் இடையில் கட்டியிருந்த நாலுமுழத் துண்டைத் தரையில் விரித்து கோமணத்துடன் முழங்கையைத் தலைக்குக் கொடுத்து எதுவும் நடவாததுபோல நித்திரைகொண்டிருக்கிறார்கள். சிலர் துக்கித்திருக்கிறார்கள் சிலர் சந்தோஷமாகக் கதைக்கிறார்கள். இருவர் ஆடு புலி ஆட்டம் ஆடுகின்றார்கள். ஒருவன் வெற்றிலை குதப்பிக்கொண்டிருக்கிறான். மனிதர்களோடு சம்பந்தமில்லாத எலிகள், செத்த எலிகள், அவற்றின் கழிவுகள். எலிகளைக் குறுக்கும் நெடுக்குமாகத் துரத்தியோடும் பூனை, அதன் கழிவுகள் -ராட்ஷத பல்லிகள், அவற்றின் எச்சம்- இவற்றால் குமட்டும் வகையில் நாற்றம்.

‘துபாஷ்! நீங்கள் இங்கு வந்த விதமென்ன ? இம்மனிதர்கள் யாவர் ? இவர்களை அடைத்து வைத்திருக்கும் காரணமென்ன ? ‘

பலராம் பிள்ளை, மாறனருகில் நெருங்கி உட்கார்ந்தார். துபாஷ்த்தனம் குடியானவனிடம் நெருங்கி உட்காருகிறது. மாறனுக்குக் கூச்சமாயிருந்தது. வறுமையும், ஆபத்தும் சுலபமாய் மனிதர்களைச் சமன்படுத்திவிடுகின்றது.

‘இவர்கள் பிரெஞ்சுத் தீவுக்கு முறையற்ற வழிகளில் கடத்திச் செல்லப்படவுள்ள மனிதர்கள். கடந்த சில வருடங்களாகவே புதுச்சேரியிலிருந்து ஆட்களைக் கடத்துவது தொழிலாக நடக்கின்றது. ஆப்ரிக்கர் நாடுகளிலிருந்து கறுப்பின மக்களைக் கடத்துவதும், அவர்களை அடிமைகளாகப் பறங்கியர்களிடத்தில் விற்கப்படுவதும் மத்தலோக்கள் மூலமாக நான் ஏற்கனவே அறிந்திருந்திருக்கிறேன். ஆனால் புதுச்சேரி ஆட்களை கடத்துவதை, சன்னாசி சொல்லத்தான் எனக்குத் தெரியவந்தது. இப்போது அதனைக் கண்கூடாகப் பார்க்கலாச்சுது. ஒப்பந்தக் கூலிகள் வேண்டுமென்று, பிரெஞ்சுத்தீவுக் கும்பெனி அரசாங்கம், புதுச்சேரி கும்பெனிக்கு அவ்வப்போது எழுதுவதும், புதுச்சேரி கும்பெனி ஆலோசனை சபையைக்கூட்டி, சம்மதமெனில் அவர்களை அனுப்பிவைப்பதும் கிரமப்படி நடக்கின்றது. நமது சனங்களும் வயிற்றுப்பிழைப்புக்காகக் கும்பெனியுடன் சமரசம் செய்துகொண்டு கப்பலேறுகின்றார்கள். ஆனால் அங்கே அவர்களின் கதியென்னவென்று ஆர் அறிவார் ? ‘

‘அவர்கள் கஷ்டசீீவனத்தில் இருப்பார்களோ ? ‘

‘தெரியாது. உறவினர்களேயானாலும் ஒருவர் வீட்டில் உட்கார்ந்து அண்டிப் பிழைக்கும்போது அந்தஸ்தை எதிர்பார்க்கமுடியுமோ ? கடவுள்களிடத்திலே கூடப் பாகுபாடு இருக்கச்சே, அவனாற் படைக்கபட்ட மனிதர்களும் அந்தப்படிக்குத்தானே வாழக்கடமைப் பட்டுள்ளார்கள். பறங்கியர்கள் மகா புத்திசாலிகள். இங்கே என்ன நடந்திருக்கிறது என்று யோசித்துப்பார். நமது தேசத்தில் தங்கி வியாபாரம்பண்ண வேணுமாய் விண்ணப்பம் தாக்கீது செய்தார்கள். கும்பெனிக்கு நிதி நிலைமை சரியில்லையென்றுபோட்டு, கடன் கேட்டார்கள். காசு அடிப்பதற்கு தங்கசாலை அமைத்துகொள்ள உத்தரவு கேட்டார்கள். ஆற்காட்டு நவாபுகள், கடவுள்கள் வரம் கொடுப்பதுபோல கேட்டதெல்லாம் அட்டியின்றி கொடுத்தார்கள். காலம் மாறிப்போச்சுது. காற்று பறங்கியர் திசைக்கு வீசுகிறது. இன்றைக்குப் பீவிகளையும் பேகம்களையும் வெகுமானத்துடன் அனுப்பிவைத்து, நவாபுகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிகொள்ள கும்பெனி தயவுபண்னவேணுமென, காத்துகிடக்கலாச்சுது.

‘பெர்னார்குளோதன் போன்ற நல்ல பறங்கியர்களும் இருக்கலாமில்லியா ? ‘

‘இதுபோன்ற கற்பிதங்கள் வேண்டாமே. நமது ஊழியத்திற்கேற்ற விசுவாசத்தினை வைத்திருப்போம் தவறில்லை. பறங்கியர்களிடம் அதிகப்படியான விசுவாசம் வேண்டாம். நீ வாலிபன். உணர்ச்சியின் அடிப்படையில் விஷயங்களைப் பார்க்கிறாய். நான் அனுபவங்கள் ஊடாகப் பார்க்கிறேன். பாம்புகளில் வித்தியாசம் விஷ அளவில்தானுள்ளது. துப்ளெக்ஸ், லாபூர்தொனே, பிரான்சுவா ரெமி, பெர்னார்குளோதன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பேரு. நாகப்பாம்பு, கட்டுவிறியன், சாரைப்பாம்பு, கொம்பேரி மூக்கன் என்பதுபோல. நாமெல்லாம் தவளைகள் என்று தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எப்போதுவேண்டுமானாலும் நம்மை விழுங்கலாம். புசித்துப் பசியாறலாம். ‘

‘துபாஷ் வார்த்தைகளைக் காதில் வாங்கிக்கொண்டே, தனது மடியிலிருந்து வைத்திருந்த ஓலை நறுக்கொன்றையும், எழுத்தாணியையும் எடுத்தான். ‘

‘இவையென்ன ? ‘

‘ஓலை நறுக்குகள், எழுத்தாணி ‘

‘அவை என்னவென்று புரிகிறது; அவற்றை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்கிறேன் ‘.

‘நீங்கள் சொல்வதைப் பதிவு செய்யவேணும், எனக்கேற்பட்ட நேற்றைய அனுபவங்களை எழுதிவைக்கவேணும். ‘

‘ஆனந்தரங்கப்பிள்ளையிடமிருந்துத் தொற்றிக்கொண்ட பழக்கமா ? ‘

‘ஆமாம். அப்படித்தான் சொல்லவேணும். அவரது பாக்கு மண்டியில் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த எனது உறவினன் ஒருவன் வேலைசெய்கிறான். அவனிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, கேட்டது. அவர் புதுச்சேரியில் நடக்கின்ற சங்கதிகளை நாள் தவறாமல் எழுதி வைக்கின்ற பழக்கமாம். அதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கும் அவ்வாறு எழுதிவைத்தாலென்ன என்று தோன்றியது. அவர் அளவுக்கு எழுதவேணுமுண்ணு நினைத்ததில்லை. எனக்கேற்பட்ட அனுபவங்களைச் சொல்லவேணும். ‘

‘அப்படியா ? ‘

‘எழுதியவற்றைப் படித்துப் பார்க்கின்றபொழுது சுவாரஸ்யமாக உள்ளது. ‘

‘பத்திரப்படுத்திவை. வருங்காலத்தில் யாரேனும் படித்து ஆச்சரியப்படலாம்.

‘ஆனந்தரங்கப்பிள்ளை குறித்து என்ன நினைக்கின்றீர்கள் ? ‘

‘நினைப்பதற்கு என்ன இருக்கிறது. ஆனந்தரங்கபிள்ளையோ, கனகராயமுதலியாரோ, காட்டுகின்ற விசுவாசம் காளான்கள் விசுவாசம். இடம்பார்த்து முளைத்து, பெருகவேணும். கும்பெனிகளால் இவர்களுக்கு வரும்படி இருக்கின்றது. வேறென்ன வேணும் ? தமிழ்க்குடிகளிடத்தில் எஜமானர்களாகவும், பறங்கியர்களிடத்தில் அடிமைகளாகவும் இருக்கப் பழகியவர்கள். ஒரு ஷத்திரியனுக்குத்தேவை கும்பகர்ணனும், கர்ணனுமேயன்றி, செயிக்கிறவர்கள் பக்கம் சாயும் விபூடணனும் விதுரனும் அல்ல. புராணங்களையும், இதிகாசங்களையும் தவறாகப் புரிந்துகொண்டு, இவர்களையெல்லாம் தலையிற் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம்.. ‘

‘ஏதேதோ, நாம் பேசும்படி ஆகிவிட்டது. நீங்கள் இங்கு வந்துசேர்ந்த வயணத்தைச் சொல்லுங்கள். ‘

‘நீயெப்படி இங்கு வந்து சேர்ந்தாயோ, அந்த வழியிற்றான் நானும் வந்திருப்பேன். ‘

‘நாங்கள் எப்படி வந்து சேர்ந்தோமென்பதை, எனது சிநேகிதன் நொண்டிக் கிராமணிதான் சொல்லவேணும். சம்பவம் நடந்தபோது கள்ளைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தோம். அவன் மாத்திரமே போதையின்றி நித்திரை கொண்டவன். எழுந்தவுடன் விசாரித்தால், நடந்தது என்னவென்று தெரியும். நீங்களெவ்விதம் இவ்விடம் வந்து சேர்ந்தீர்கள் ? ‘

‘இரண்டு நாளைக்கு முன்னர் நீ தொண்டைமாநத்தம் புறப்பட்டுப் போக, நான் தெய்வானைப் பெண்ணைக் குறித்ததான தெலுங்கிலிருந்தத் தகவலின் அர்த்தமென்னவென்று தெரிந்துகொள்ள, பெர்னார் குளோதனிடம் உத்தரவு வாங்கிக்கொண்டுப் புறப்பட்டுப் போயிருந்தேன்.

புதுச்சேரியிலிருக்கின்ற ஒரு சில தெலுங்குமக்கள் மொழியைப் பேசமாத்திரமே அறிந்திருந்தார்கள். எல்லப்பிள்ளை எனப்பேர்கொண்ட எனது தாயாதியொருவர் முருங்கப்பாக்கத்திலே இருக்கிறார். அவரிடம் கேட்டதிலே, முருங்கப்பாக்கத்திலே இருக்கின்ற வீராநாயக்கன் என்பவனுக்கு, தெலுங்கு மொழி வாசிக்க வருமென்று சொன்னார்கள். அந்தப்படிக்கு மத்தியான போசனம் முடித்து, கொஞ்சம் நித்திரை கொண்டு, வெக்கை தணிந்தபிறகு நாலுமணிக்குமேலே புறப்பட்டுப் போனேன். இரண்டு கல் நடந்திருப்பேன். அங்கிருந்த நாவல் மரத்தடியில் சற்று இளைப்பாறிபோகலாமே என உட்கார்ந்தேன். அப்போது ஒரு குடியானவன் என்னருகில் உட்கார்ந்து வெற்றிலை போட்டான்.

‘ஐயா புதுச்சேரியிலிருந்து வருகிறீர்களா ? ‘ என்று கேட்டான்.

‘ஆமாமடா. உனக்குத் முருங்கப்பாக்கத்தில் வீரா நாய்க்கர் என்பவனைத் தெரியுமோவென கேட்டதற்கு, அவன் தம்முடைய குடிசைக்கு எதிரேதான் அவரது வளவு என்றும், உடன் வருவதாக இருந்தால் தானே அழைத்துபோவதாகவும் கூறினான். எனக்கு மகிழ்ச்சி ஆச்சுது. ‘உமக்குக் கோடிபுண்ணியமாகட்டும், அவர் வளவில் என்னைச் சேர்த்துப்போடு ‘, என்றேன். வெற்றிலையை வைத்துக்கொண்டு ‘ போடுகிறீர்களா, சாமி ‘, என்றான். நான் ‘ஓம் ‘ என்று சொல்ல அவனே வெற்றிலையும் சுண்ணாம்பும் கொடுத்தான். அதைபோட்டுக்கொண்டதுதான் தாமதம் என்னமோ மயக்கமாயிருந்தது. விழித்துப்பார்த்தால் இங்கிருக்கிறேன். ‘

‘…. ‘

அந்தக் குடியானவன் பெயர் பரமானந்தன் என்பதாக, இங்கே வைத்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. உன்னையும் என்னையும் இங்கே கொண்டுவந்து சேர்த்திருப்பது, பிரெஞ்சுத் தீவுக்குக் கள்ளத்தனமாக அனுப்புவதுமட்டும் காரணமாக இருக்கமுடியாது. அநேகமாக, அவர்களின் வேறு ஏதோ திட்டங்களுக்கு நாம் இடைஞ்சலாகவிருக்கலாம். ஒருவேளை அது பெர்னார்ட் குளோதன் -தெய்வானை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். ‘

‘எப்படிச் சொல்லலாச்சுது ? ‘

‘அந்தச் சம்பவத்தில் என்னிடமிருந்த ஓலை நறுக்குப் பறிபோயிருக்கிறது ‘

‘அய்யய்யோ, பெர்னார் குளோதன் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் ‘

‘மூலத்தை என் வீட்டில் பத்திரப்படுத்திவிட்டு, அதனைப் பிரதி எடுக்கச்செய்து, மடியில் கொண்டுபோனேன். ‘

‘இக்கிட்டங்கியைக் குறித்து வேறு தகவல்கள் உண்டா ? ‘

‘இருக்கின்றன. அங்கே உட்கார்ந்திருக்கின்றானே வைணவன், அவனைச் சாதாரணமாக எடைபோட்டுவிடாதே. அவனிடம் ஒரு பாரதம் எழுதுவதற்கான சேதிகள் உண்டு. பெயர் வரதாச்சாரி, .சொந்த ஊர் திருவந்திபுரம், புதுச்சேரிப் பறங்கியர்களிடம் உத்தியோகம் பார்க்கலாம் என்று வந்தவன், இவர்களிடம் சிக்கிக்கொண்டிருக்கிறான். அபிஷேகபாக்கத்தைச் சேர்ந்த ரெட்டியாருடைய ஆறுவயதுமகன் ஒருவனை பாவிகள் இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள். அந்தப் பாலகனைப் பிடித்துக்கொண்டுவந்தவன் இவர்களிடம் விற்றதை அந்த வழியாக வந்த மோர் விற்கும் பெண்மணி பார்த்துப்போட, அவளைக் கர்ப்பிணியென்றுகூட பாராமல் இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள் ‘

‘இவர்களுக்கெல்லாம் சூத்திரதாரி ஆர் ? ‘

‘வரதாச்சாரி சொல்வதை வைத்து பார்ப்போமென்றால், பிரெஞ்சுத் தீவுவரை போகவேணும். இக்கட்டிடத்திற்கு இப்போதையச் சொந்தக்காரன் முத்தியால்பேட்டை வேலாயுதமுதலி. ஆனால் முதலி இவ்வீட்டை கிரையம் பெற்றிருப்பது யாரிடம் தெரியுமோ ? ஒரு சில ஆண்டுகளுக்குமுன்னால் லாபூர்தொனேயிடம் வாங்கியிருக்கிறான். வீடென்னவோ பிரான்சுவாரெமியின் ஆட்கள் பொறுப்பில் இருக்கிறது. ஆக எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோவென அச்சமாயிருக்கின்றது. இங்கே அடிக்கடி வந்துபோகின்றவன் சூதே (Soude) என்கின்ற பறங்கியன். திருவந்திபுரம் வரதாச்சாரி சொல்கின்ற அங்க அடையாளங்களைப் கேட்கின்றபொழுது, லியோத்தனான் பிரான்சுவாரெமியும் வந்துபோவதாய்த் அறிகிறோம். உண்மையில் சூதே என்பவன், பிரான்சுவா ரெமியின் கீழ் உத்தியோகம் பார்க்கிறவன். இவர்களது பேச்சுப்படி ஆனி 25ந்தேதி சீமையிலிருந்து ஒரு கப்பல் வருகிறது. அக்கப்பலில் உன்னையும் என்னையும், இங்கேயுள்ள மற்றவர்கைளையும் சேர்த்து அனுப்ப உள்ளார்கள். ஆகக் கப்பற்பயனத்திற்கு நாம் தயாராயிருக்கவேணும். ‘

‘எனக்கும் கப்பலேறி போகவேணும் என்கின்ற ஆசையுள்ளது. பிரெஞ்சுத் தீவீல் பாறைகளுக்கீழே தங்கக்காசு கிடப்பதாக ஒரு தொப்பாஸ்(Topas)* என்னிடம் சொல்லியிருக்கிறான். ‘ விழித்திருந்த நொண்டி கிராமணி, துபாஷ் பலராம்பிள்ளைக்கும் மாறனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேட்டவன் சொன்னான்.

‘ஆகா அதற்கென்ன, அத்துடன் விரியன் பாம்பு முட்டைகளும் இருக்கின்றதாம். தாராளமாகப் புறப்படு. உன்னுடைய தொல்லை தாங்கமுடியாமல், என் தங்கை அதாவது உன் பெண்ஜாதி மூக்குசிந்துவதைக் கேட்க எனக்கும் அலுப்பாக இருக்கின்றது. ‘ என மாறன் பகடியைக் கேட்க, கிராமணியும் சூழ்நிலை மறந்து சிரித்தான். துபாஷ் பலராம்பிள்ளைக்கு எரிச்சலூட்டியது.

‘மாறன். நாம் நடக்க வேண்டியதைப் பார்ப்போம். இங்கே எப்போதாவது வந்து போகின்றவர்கள் என எடுத்துக்கொண்டால் சூதே என்பவனும், தேவராசனுமே. வெளியே இரண்டு காவலர்கள் உள்ளனர். உள்ளே இருப்பவர்களில் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்ட ஆண்கள்மாத்திரம், ஒன்பது பேர் இருக்கிறார்கள். மற்றுமுள்ள பேர்வழிகளிடமும் நிலைமைகளை விளங்கவைத்தால் நம்மோடு சேர்ந்துகொள்ளுவார்கள். எனவே தேவராசனையும் சூதேவையும் சாமாளிப்பது சுலபம். பிறகு இக்கூட்டத்தினர், ஆட்கடத்தலைக் கள்ளத்தனமாக செய்வதால், நிச்சயம் கும்பெனிக்குப் பயந்துதான் ஆகவேணும். நமக்கு அதிக சிரமங்கள் கொடுக்கமாட்டார்கள். ‘

‘முதலில் என் கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள் ‘, மற்றதைப் பிறகு ஆலோசிப்போம்.

சன்னாசி மாறனது கட்டுகளை அவிழ்க்கவும், வீட்டின் கதவுகளை உடைத்துக்கொண்டு சிப்பாய்கள் நுழையவும் சரியாக இருந்தது.

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation