அத்தனை ஒளவையும் பாட்டிதான் – 4

This entry is part of 19 in the series 20011125_Issue

இன்குலாப் (ஒளவை ‘ யிலிருந்து)


வெள்ளிவீதியின் குரல் கேட்டார்களோ ?

(எயினர் குரம்பை. ஈந்தின் கீற்றுகளாலே ஆன குடிசை. அதில் ஒரு பெண், மான் தோலில் படுத்துக் கிடக்கிறாள். வெளியே விளாமரத்தில் ஒரு மான் கட்டப்பட்டுள்ளது. அருகில் பாறையால் ஆகிய உரல். குழந்தை அழும் சத்தம் அவ்வப்போது)

(அதைக் கடந்து சென்ற பாணர்கள் அங்குள்ள வேம்பு மர நிழலிலும் விளா மர நிழலிலும் தங்கியிருக்கின்றனர். எயினியர் தேக்கிலையில் சோறு வைத்து, சுட்ட மான்கறியை உணவாக வைத்துப் பாணர்களுக்குப் பரிமாறுகின்றனர்.)

எயினி-1 :எங்கள் உணவு இதுதான் ஒளவை. எங்கள் விளைநிலத்தில் இதுதான் விளைகிறது.

ஒளவை :இது என்ன ஈந்தின் விதைபோலச் சிவந்த அரிசிச் சோறு… (ஒரு வாய் சுவைத்து) நன்றாக இருக்கிறது.

எயினி-2 :பசித்த வாய் சுவையறியாது.

ஒளவை :பசி எங்களுக்குப் பழகியதுதான். இந்த அரிசி பெரிதாக இருந்தாலும் மலையடிவாரத்தின் மணம் இருக்கிறது.

எயினி-1 :நாம் கடந்து வரும்போது சில எயினர் குடிகளைப் பார்த்தோமே. இல்லையா ?

ஒளவை :ஆம்.

எயினி-1 :அவர்களுக்கு இதுகூடக் கிடையாது. அவர்களுக்கு விளைநிலமே கிடையாது.

ஒளவை :பிறகு…

எயினி :காலையில் கடப்பாரையுடன் காட்டுக்குப் போவார்கள். எறும்புப் புற்றை இடிப்பார்கள். அங்கு எறும்புகள் சேர்த்த புல்லரிசி… உவர்மண் ஊற்றில் ஒட்டிக்கிடக்கும் நீரை அள்ளி அதில் சமைப்பார்கள். சமையல் பானை கூட உடைந்த வாயுடையது. ஓவாய்ப்பானையாய் ஒழுகும்.

ஒளவை :அங்கு மான் தோலில் ஒரு பெண் படுத்திருந்தாளே…

எயினி-1 :ஆமாம். அவள் குழந்தை பெற்றிருக்கிறாள். அதனால் அவள் புல்லரிசி தோண்டப் போகவில்லை.

ஒளவை :அவர்கள் உங்கள் குடியினர் இல்லையா ?

எயினி-2 :எங்கள் குடிதான். ஆனால் நிலம் பிரித்துவிட்டது. இந்தப் புன்புலத்தை நாங்கள் கைப்பற்றிக்கொண்டோம். ஏதோ விளைகிறது. உண்கிறோம். இதுதான் எங்கள் அரண்மனை. இதுதான் எங்கள் விருந்து.

ஒளவை :பாணர்கள் எங்களுக்கு இன்னதுதான் உண்ணவேண்டும் என்றில்லை. கிடைப்பது அமிழ்து. நீங்கள் அன்போடு தருவது இன்னும் இனிது.

(பாணர்கள் உணவுண்டு எழுகிறார்கள். எயினர் ஒளவையின் அருகில் வந்து….)

எயினி :உன்னைப்போல் ஒருத்தி – பாடினி ஒரு நாள் தனியாக இங்கு வந்தாள்.

ஒளவை :எதற்கு ?

எயினி-1 :தன் காதலனைத் தேடி.

பாடினி-1 :காதலனைத் தேடி அதுவும் தனியாகவா ?

பாணர்-1 :ஒரு பெண் தன் காதலனைத் தேடி அலைவது முறையன்று.

ஒளவை :காதலிக்குக் காதல் மட்டுந்தான் முறை. அவளை இற்செறிப்பது இப்பொழுது வந்தது. அந்தக்காலம் காதலுக்குத் தடையில்லை… காதலன் காதலியைத் தேடி வருவான். காதலியும் காதலனைத் தேடி வருவாள். அன்பு செலுத்துவதற்கு என்னமுறை வேண்டிக்கிடக்கிறது ? நல்லது. அந்தப் பெண் யார் ?

எயினி-2 :வெள்ளிவீதி. அவள் பாடிய பாடலை நான் பாடிக்காட்டட்டுமா ?

பாடினி-1 :உனக்குப் பாட வருமா ?

ஒளவை :என்ன கேள்வி இது…யாருக்குத்தான் பாட வராது. குழந்தையின் அழுகுரல் கேட்கிறது ‘ பார் அந்த மகவு இசைக்கும் பாட்டுக்கு நிகராக நீ, நான்… யாராவது பாட முடியுமா ? நீ பாடு பெண்ணே.

எயினி-2 :நிலந்தொட்டுப் புகாரர் வானம் ஏறார்

விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரில்

கெடுநரும் உளரோ நம் காதலோரே.

ஒளவை :அருமையான பாட்டு. இனிமையாகப் பாடினாய்.

எயினி :அவள் பாடியது இருக்கட்டும். இதைக் கூத்தாக எங்களுக்கு ஆடியும் பாடியும் காட்டுவாயா ?

ஒளவை :அவ்வளவுதானே… தொகுசொற்கோடியா ‘ இந்தப் பாடலின் வரலாற்றைத் தொகுத்துச் சொல். பிறகு உன் கோட்டுக் கருவியை ஊது…

தொகுசொற்கோடியன் :அதாவது..வெள்ளிவீதி என்ற புள்ளிமான்….

ஒளவை :அவள் புள்ளிமானல்லள்.. பெண்.

தொகுசொற்கோடியன் :நீ குறுக்கிடாதே ஒளவை. ஒரு பெண் என்று சொன்னால் சுவையில்லை. புள்ளிமான் என்றால் தான் சுவை.

தொகுசொற்கோடியன் :வெள்ளிவீதி என்ற புள்ளிமான் காதல் வயப்பட்டாள். உறுதி சொன்ன காதலன் வராமல் போனதால் காடுமலை கடந்து தேடினாள் தேடினாள்…

(கோட்டுக்கருவியை ஊதப் பாட்டுக் காட்சி தொடங்குகிறது)

வெயில் வெறி தீர்க்கும் பாலைவெளிகளே

வெள்ளிவீதியின் குரல் கேட்பீர்களோ ?

துயரில் பாலையாய் நானும் எரிகிறேன்

துணையைத் தேடி ஊர் ஊராய்த் திரிகிறேன்

கரிந்து போன தளிரில் அரும்பில்

காதலர் முகமும் கரிந்து போனதோ ?

எரியும் மூங்கில் காட்டி எனது

இன்னிசைக் குழலும் எரிந்து போனதோ ?

கோடைக் காற்றில்.. வாகையின் நெற்றுகள்

ஆடுகளப் பறைபோல் ஆர்ப்பரிக்கும்

நீரிலாக் கரைகளை யானை வெறிக்கும்

வேங்கை அதனது குருதி குடிக்கும்

மண்ணில் புதைந்தால் கிழங்காய்க் கிடப்பான்

வானில் சுடரும் மீனாய் இருப்பான்

தண்ணீர்க் கடியில் முத்தாய்ச் சிரிப்பான்

தலைவன் எப்படித் தனியே நடப்பான் ?

நிலத்தில் தாமே புதைபவர் இல்லை

வானில் ஏறச் சிறகொன்றும் இல்லை

கடல் மேல் காலால் நடந்திடுவாரா ?

காதலர் என்ன தொலைந்திடுவாரோ ?

நாடு நாடாய் அயர்வின்றி நடப்பேன்

ஊர்ஊர் தோறும் பெயர்சொல்லிக் கேட்பேன்

வீடுவீடாய்த் தேடும்போது

ஓடிப்போகும் வழிதான் ஏது ?

Series Navigation