அத்தனை ஒளவையும் பாட்டிதான்

This entry is part of 16 in the series 20011104_Issue

இன்குலாப் (ஒளவை ‘ யிலிருந்து)


(மேடையின் மையப்பகுதியில் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து கொன்றை வேந்தனை ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுமி ஒருத்தி நடுவில் நின்று கொன்றை வேந்தனின் வரிகளைச் சொல்ல ஏனையோர் திருப்பிச் சொல்கின்றனர்.)

1-சிறுமி : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

ஏனையோர் : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

1-சிறுமி : ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

ஏனையோர் : ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

1-சிறுமி : இல்லறம் அல்லது நல்லறம் அன்று

ஏனையோர் : இல்லறம் அல்லது நல்லறம் அன்று

1-சிறுமி : ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஏனையோர் : ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

1-சிறுமி : உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு

ஏனையோர் : உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு

2-சிறுமி : உண்டி மிகுதல் ஆண்களுக்கு அழகோ ?

சட்டாம்பிள்ளை : பாடம் படிக்கும்போது கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

2-சிறுமி : பெண்களுக்கு ஏன் உண்டி சுருங்கணும் ?

சிறுவன்-1 : அதிகமாகச் சாப்பிட்டா நீ குதிரு மாதிரி ஆயிடுவே ?

2-சிறுமி : சாப்பிடாம நெத்திலிக் கருவாடு மாதிரி காயவா சொல்றே ?

சட்டாம்பிள்ளை : நான் சொல்றேன்….. பொம்பளைப் புள்ளைகள் கேள்வியே கேட்கக் கூடாது.

2-சிறுமி : அப்போ சாப்பிடக்கூடாதுங்கறே. இப்போ கேள்வியே கேட்கக்கூடாதுங்கறே…. நாங்க என்னதான் செய்யுறது ?

சட்டாம்பிள்ளை : எதுவும் பேசாதே….. போடுறதை சாப்பிட்டிட்டு சொல்றதைக் கேட்டுக்கிட்டு அடங்கிக் கெட.

2-சிறுமி : போடுறதைத்தான் சாப்பிடுறோம்.

3-சிறுமி : சொல்றதைத்தான் கேட்கிறோம்.

4-சிறுமி : அடங்கித்தான் கிடக்கிறோம்.

சட்டாம்பிள்ளை : அதுதான் பொண்ணுக்கு இலட்சணம். சரி, மேலே பாடத்தைப் படி.

1-சிறுமி : ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

(சிறுமி-2, 3, 4 – எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்கின்றனர்)

சிறுவன்-1 : ஏன் பாடத்தைத் திரும்பச் சொல்லலை ?

2-சிறுமி : நீ தானே அடங்கிக் கெடக்கச் சொன்ன ‘

சட்டாம்பிள்ளை : எங்களை எதுத்துப் பேசக்கூடாது. மத்தபடி நாங்க சொல்றதைத் திரும்பச் சொல்லணும்.

2-சிறுமி : கிளிப்பிள்ளை மாதிரி.

சட்டாம்பிள்ளை : சொல்றதையே திரும்பச் சொல்றதுனாலே தான் பாலும் பழமும் கொடுத்துக் கொஞ்சுறோம்.

3-சிறுமி : அதுவும் கூண்டுலே வச்சி.

சட்டாம்பிள்ளை : கூண்டுதான் கிளிக்குப் பாதுகாப்பு.

2-சிறுமி : கூண்டு இல்லாட்டா ?

சட்டாம்பிள்ளை : பூனை புடிச்சிக்கிட்டுப் போயிடும்.

3-சிறுமி : பூனை புடிக்க வந்தா கிளி பறக்காதா ?

சட்டாம்பிள்ளை : கூண்டுக் கிளிக்கு இறக்கை வளர வளர வெட்டி விட்டுருவோம். ‘

2-சிறுமி : ஏன் வெட்டணும் ?

சட்டாம்பிள்ளை : அப்பத்தான் கூண்டுலே கெடக்கும்.

2-சிறுமி : கூண்டுலே கெடக்குற கிளியைத்தான் கொஞ்சவும் முடியும் இல்லியா ?

3-சிறுமி : இறக்கை வெட்டுன கிளியைத்தான் பூனையும் புடிக்கும்.

சட்டாம்பிள்ளை : காலம் கெட்டுப் போச்சி…. பொம்பளைப் புள்ளைகள் ரொம்பக் கேள்வி கேட்குதுகள்…. ஏய் (முதல் சிறுமியை நோக்கி ) நீ ஒளவையார் பொம்புளைகளுக்குச் சொன்னதை மட்டும் சொல்லிக்கொடு.

சிறுமி : நான் வரிசையாய்ச் சொல்கிறேனே…..

சட்டாம்பிள்ளை : நான் எப்படிச் சொல்றேனோ அப்படித்தான் சொல்லணும்.

சிறுமி : கற்பெனப்படுவது சொல்திறம்பாமை.

அனைவரும் : கற்பெனப்படுவது சொல்திறம்பாமை.

சிறுமி-1 : காவல்தானே பாவையர்க்கழகு

(சிறுமி-2,3,4- எதுவும் சொல்லாதிருக்க )

ஏனையோர் : காவல்தானே பாவையர்க்கழகு.

சட்டாம்பிள்ளை : பொண்ணு கூண்டிலே கிளிமாதிரி இருக்கணுங்கிறதைத்தான் ஒளவையார் சொல்றாங்க. புரியுதா ? ம்… மேற்கொண்டு சொல்லு.

(அப்பொழுது மேடையின் இடதுபுறத்தில் தடி ஊன்றி நடக்கும் சத்தம். டக்… டக்… )

சிறுவர் சிறுமியர் : அதோ ஒளவையார் வந்தாச்சி….

ஒளவையார் வரும் திசைநோக்கி…. வெள்ளுடை…. கையில் தடி…. நெற்றியில் நீறு…. நரைத்த தலை…. டக்…. டக்… ஒலி.

சட்டாம்பிள்ளை : பாட்டி…. ஒளவைப் பாட்டி….. இப்போ நீ எங்கிருந்துவரே ?

குரல்-1 : மெரினா பீச்சிலிருந்து…..

குரல்-1 : இல்லை. ஸ்டுடியோவிலிருந்து

ஒளவை : மெரினா பீச்சா…. ? ஸ்டுடியோவா ? எனக்கு ஒண்ணும் புரியலையே…

இந்தக் காலத்து இளைஞர்களுக்கு வேற ஒளவையா ? அப்போ எத்தனை ஒளவையார்….

குரல்-1 : நம்பர் ஒன் : அவ்வை சண்முகி

ஒளவை : அவ்வை சண்முகியா ? அது யார் ?

குரல்-1 : கமல்ஹாசன்

குரல்-2 : நம்பர் டூ. அவங்க தாத்தா. டி.கே.சண்முகம்.

சிறுவன் : டி.கே. சண்முகமா ?

குரல்-3 : நம்பர் த்ரீ.கே.பி. சுந்தராம்பாள்.

சிறுவன் : இந்தக் காலத்திலே இத்தனை ஒளவயாரா ?

குரல் : ஆமாம்..

எத்தனை ஒளவை பிறந்தாலும்..

எந்தக் காலம் ஆனாலும்

அத்தனை ஒளவையும் பாட்டிதான்…

எல்லாருக்கும் பாட்டிதான்…

உனக்கும் பாட்டி. எனக்கும் பாட்டி

பாட்டிக்கும் பாட்டி, பாட்டனுக்கும் பாட்டி

ஒளவையாரு பாட்டி தான்..

ஜெமினி படத்திலும் பாட்டி தான்..

மெரினா பீச்சிலும் பாட்டி தான்…

பிறந்த போதும் பாட்டி தான்…

வளர்ந்த போதும் பாட்டி தான்..

ஒளவையாரு பாட்டி தான்…

புத்தி சொல்லும் எந்தப் பொண்ணும்

எந்த வயசிலும் பாட்டிதான்.

எல்லாருக்கும் பாட்டி தான்.

சிறுவன் : பாட்டி… நல்லவேளை நீ வந்துட்டே…. உன்னுடைய கொன்றைவேந்தனை தான் நாங்க படிக்கிறோம். பாட்டி.. இந்தப் பொண்ணுக, நீ சொன்னதையே எதிர்த்துக் கேக்குறாங்க.

ஒளவை : அப்படியே ? எதை எதிர்த்துக் கேட்கிறார்கள் ?

சிறுமி-2 : உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகோ ?

சிறுமி-3 : காவல்தானே பாவையருக்கு அழகோ ?

சிறுமி-4 :பேதைமை என்பது மாதருக்கு அணிகலனோ ?

சிறுமி-2 : நாங்க நல்லா சாப்பிடக் கூடாதா ?

சிறுமி-3 : நாங்க வீட்டுக்குள்ளேதான் அடைஞ்சி கெடக்கணுமா ?

சிறுமி-4 : நாங்க எதையும் படிக்காம பேதையா இருக்கணுமா ?

ஒளவை : அடடா ? இந்தக் காலத்து பெண்கள் எவ்வளவு பேசுகிறார்கள்.. நல்லது. பெண்ணுக்கு உலகம் வீடுதான்.

அவள் தந்தைக்கும் கணவனுக்கு மட்டுமல்ல. வயசான காலத்துலே மகனுக்குக் கூடக் கட்டுப்பட்டு கெடக்கணும். அப்பத்தான் ஆண்கள் மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.

சிறுமி-2 : அப்போ இந்த வயசில உன் மகனுக்கு அடங்கித் தான் கெடக்குறியா ? அப்படான்னா இப்படி ஊர் ஊராப் போறியே. உன் மகன் கண்டிக்க மாட்டானா ?

ஒளவை : எனக்கு மகனே இல்லை.

குழந்தைகளே.. பெரியவர்களுக்குச் சிறியவர் அடங்கி நடக்க வேண்டும் என்று உன் வயதுச் சிறுமி சொன்னால், … பெரியவர்கள் உன்னைக் கண்டிக்கமாட்டார்கள். பாராட்டுவார்கள்.

பெரிய சாதிக்காரனுக்குச் சின்ன சாதிக்காரன் அடங்கி நடக்கவேண்டும் என்று சின்ன சாதிக்காரன் சொன்னால்… பெரிய சாதிக்காரன் அப்படிச் சொல்ற சின்ன சாதிக்காரனைப் பாராட்டத்தான் செய்வான்… அது போலத்தான், ஆண்களுக்குப் பெண்கள் அடங்கி நடக்கவேண்டும் என்று உன் வயதுச் சிறுமி சொன்னால் கூட ஆண்கள் அப்படி சொல்லும் சிறுமிகளைக் கண்டிக்க மாட்டார்கள்…. பாராட்டத்தான் செய்வார்கள். இதுதான் உலகம்…உலகத்தோடு ஒட்டவாழ் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்…. புரிந்ததா ?

4-சிறுமி : ஒண்ணுமட்டும் புரியுது பாட்டி….

ஒளவை : என்னது ?

4-சிறுமி : பூம் பூம் மாடா இருந்தா நமக்குப் பூமாலையா விழும் என்பது புரியுது…

ஒளவை : அப்படியே இருந்துவிட்டுப் போயேன்… அதனால் ஆபத்து இல்லை. பூம் பூம் மாட்டுக்காரன் யாராவது சாட்டையோடு வருகிறானா ? பார்…. தோளில் ஒரு மேளம்… ஒரு குச்சி… உன்னை அடிப்பதற்கு இல்லை. மேளத்தை உருவ… உனக்கு முதுகில் ஒரு பட்டுத்துணி…. கழுத்தில் ஒரு பூமாலை…. உனக்குக் கொம்பிருப்பதை அவன் இந்த அலங்காரங்களிலேயே மறக்கடித்து விட்டான்…. உன்னை இவ்வாறு நீ மறந்திருப்பது அவனுக்கும் நல்லது. உனக்கும் நல்லது. பெண்ணே ‘ பூம்பூம் மாடுகளை குறித்துக் கேவலமாகப் பேசாதே.

சட்டாம்பிள்ளை : பாட்டி… பூம்பூம்மாட்டை அடிக்கக்கூடாதுன்னா மத்த மாட்டை அடிக்கலாமா ?

ஒளவை : அடிக்கக்கூடாதுன்னு சொல்லலை…. அடிக்கத்தேவை இல்லைன்னு சொல்றேன்…. மத்த மாடுகளை அலங்காரம் பண்ணுறதில்லே… அது நமக்கு வேலை பார்த்தாகணும்… அதனால அதை அடிச்சித்தான் வேலை வாங்கணும்.

சட்டாம்பிள்ளை : நான்…. இந்தப் பொண்ணு…. அந்தப் பையன் எல்லோரும் சின்னப் பசங்கள் தானே…. எல்லோருக்கும் பொதுவா எப்படி விளையாடணும்… எப்படி பாடம் படிக்கணும் என்று சொன்னா என்னா ? ஏன் பெண்களுக்கு மட்டும் தனியா நீ புத்தி சொல்றே ?

3-சிறுமி : அதுவும் நாங்க பணிஞ்சு போகணும்னு….

சட்டாம்பிள்ளை : நாங்க பெரியவங்களா ஆனப்புறம் சொல்லக்கூடாதா ?

ஒளவை : இல்லை. இப்பவே உங்களை வளைக்கணும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ? ஆத்திச்சூடியும் கொன்றைவேந்தனும் உங்களுக்காகத்தான் இளமையில் கல். இப்போ இருந்தே இதை எல்லாம் நீங்க கற்றுக் கொள்ளனும். அப்பதான் குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாய், கணவனுக்கு ஏற்ற மனைவியாய் இருக்க முடியும்.

சிறுவன் : அதைவிடு பாட்டி…. உன்னை இப்பத்தான் பார்க்கறேன்…. ஒரு கதை சொல்றாங்களே… நீ அந்த மாடு மேய்க்கிற பையனிடம் ஏமாந்துட்டியாமே….

ஒளவை : சுட்டபழம் சுடாதபழம் கதைதானே… அது நான் இல்லே… எனக்கு முன்னாலே ஒருத்தி…. என் மாதிரி ஊர் ஊராய்ப் பாடிக்கிட்டு இருந்தாளாம்… அவள் பேரும் ஒளவைதானாம். அதுவும் ஏமாத்துனவன் மாடு மேய்க்கிற பையன் இல்லை… எம்பெருமான் முருகனே அந்தக் கோலத்தில் வந்து அந்தப்பாட்டியை ஏமாத்துனானாம்…. மாடு மேய்க்கிற பையன் எல்லாம் எங்களை மாதிரி ஆள்களை ஏமாத்த முடியுமா ?

சிறுவன் : கடவுள் தான் ஏமாத்துவாரு.

சிறுமி : அதை உடு பாட்டி. இளமையாய் இருந்த நீ புள்ளையாரைப் பாடித்தான் கிழவியானியாமே ?

ஒளவை : ஓ… (சிரிப்பு)

சிறுவன் : அப்போ நீ ஒண்ணு செய். பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை, நாலும் கலந்துனக்கு நான் தருவேன் அப்படான்னு எதையாவது ஒண்ணைப் பாடேன்.

ஒளவை : சரி பாடுறேன். பாடி என்ன செய்ய ?

சிறுமி : குமரியா இருந்த உன் பாட்டைக் கேட்டுட்டு, பிள்ளையாராலே உன்னைக் கிழவியாக்க முடியும்னா, கிழவியா இருக்கிற உன்னை, மறுபடியும் ஏன் குமரியா மாத்த முடியாது….

ஒளவை : (சிரிக்கிறாள்)

சிறுவன் : அதை உடுபாட்டி. அதியமான் சாகாம உயிர் வாழ்ற கனி ஒண்ணை உனக்குத் தந்தானாமே.. அவன் கூட அதைச் சாப்பிடலியாமே…

ஒளவை : அந்த ஒளவையும் நானில்லை. அவள் ரொம்பக் காலத்துக்கு முந்திப் பொறந்தவ.

சிறுவன் : அதியமானிடம் நெல்லிக்கனி சாப்பிட்டது முருகனிடம் நாவல்பழம் சாப்பிட்டது. எல்லாம் நீதானு சொல்றாங்களே ‘

ஒளவை : அப்படி யாரு சொன்னா ?

சிறுமி : ஜெமினி வாசன் அப்படிச் சொன்னாரு. இப்படி ஒரு கலவை ஒளவையாரைத்தான் மெரினாவிலே சிலையாவும் செஞ்சி வச்சிருக்காங்க.

ஒளவை : அவ்வளவு ஏன்… அந்த அதியமான் மரபில் வந்தவன் என்று இன்றும் ஒரு குறுநில மன்னன் கூறிக் கொள்கிறானாம்.

சிறுவன் : அப்படியா….

ஒளவை : அதுமட்டுமில்லை….அந்த அதியமான் மரபினன் தன்னை நாடி வருகிறவர்களுக்கு ஒரு தட்டில் பரிசை வைத்துக் கொடுக்கிறானாம்….

சிறுவன் : என்ன பரிசு அது ?

ஒளவை : நெல்லிக்கனி… நெல்லிக்கனி மட்டுமே…

சிறுவன் : வெறும் நெல்லிக்கனியையா ? நீ போய் அதை வாங்க மாட்டியா ?

ஒளவை : வெறும் நெல்லிக்கனியை மட்டும் யார் வாங்குவார் ? அதற்கு ஒரு நடை நடந்து யார் போவார் ? அந்த ஒளவையே அதியமான் தந்த நெல்லிக்கனியை அவன் போரில் மடிந்த சமயத்திலே சொல்லிப் பாடலை… அவளே அதை மறந்து விட்டாள்.

சிறுவன் : அப்படியா ? அதியமான் செத்தபோது அவள் எதைச் சொல்லித்தான் பாடினாள் ?

ஒளவை : அது ஒப்பாரிப் பாட்டு… ஒளவைக்குப் பிடித்தமானதை எல்லாம் சொல்லிப் பாடுறா.

சிறுவன் : பிடித்தமானதுன்னா என்ன ? மாம்பழமா ? பலாவா ? வாழையா ?

ஒளவை : எதுவுமில்லை….

சிறுவன் : பிறகு என்ன ?

ஒளவை : அது உனக்கு அவசியம் தெரிஞ்சாகணுமா ?

சிறுவன் : கொஞ்சம் சொல்லேன்.

ஒளவை : அந்த ஒளவை என்னைப் போல் இருந்திருக்க மாட்டாள்.. இப்படி அவள் கூந்தல் நரைத்திருக்கமாட்டாள்… இப்படி நெற்றியில் நீறு இருந்திருக்காது.. இப்படி வெள்ளுடை அணிந்திருக்கமாட்டாள்… இப்படி முதுகும் கூன் விழுந்திருக்காது. எல்லாத்துக்கும் மேலே இப்படி போதனை செய்யுறவளாகவும் இருந்திருக்க மாட்டாள்.

சிறுமிகள் : அப்போ அந்த ஒளவை எப்படி இருந்தாள்…. ?

குரல்-1 : ஒளவையின் தொன்மை வடிவம்…..எது ?

குரல்-2 : அவள் கைத்தடியைத் தூர எறி..

குரல்-3 :அவள் கூன் முதுகை நிமிர்த்து…

குரல்-1 : காலத்தின் திரைகளுக்குப் பின்னால் புதைந்து கிடந்த ஒளவையே…எங்கே உன் முகம் ?

Series Navigation