…. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

– கி. சீராளன்


மழைவிட்டு போயிடுச்சே

மெட்ராஸு நாறிடுச்சே

போட்ட குழாய் காத்தடிக்க

கார்ப்பரேசன் முழிமுழிக்க

மேகத்துல ஈரமில்ல

தாகத்துக்கும் தண்ணியில்ல

வீராணம் குழாபோட்டு

கண்டலேறு தண்ணீவந்து

குடமெல்லாம் நீர்நிரம்பி

கொழாச் சண்டை தீருவதெப்போ ?

குடுமிப்பிடி ஓய்வதெப்போ ?

கொடமெல்லாம் வரிசைபோட்டு

வெயிலெல்லாம் தலைகாய

வாயெல்லாம் நாவறல

வர்ர வழிதெரியலியே

தண்ணிலாரி மவராசன்

வருணபகவானே

வந்திறங்கும் லாரியடா

வழியின்றி போனாக்க

எமனுக்கு தூதனடா

மழைத்தண்ணி சேகரிக்க

வெட்டிவைச்ச குழியெல்லாம்

மாட்டிக்கொள்ள நீபயந்து

வந்துவிட மறுத்தாயோ

வருண மவராசா

காசுள்ள மனுஷரெல்லாம்

புட்டிதண்ணி வாங்கிடுவான்

போதவில்லை என்றாலும்

லாரிதண்ணி வாங்கிடுவான்

வள்ளலுன்னு பேரெடுத்த

வருண மவராசா

நீவணிகனாகி போனதெப்போ

கஞ்ச மவசாரா.

ரோடெல்லாம் குழிவெட்டி

குழாய்போட்ட கவர்மெண்டு

நீ வர்ரவழி தெரியாம

வானம்பார்த்து காத்திருக்கு

ராவெல்லாம் முழிச்சிருந்து

நடுசாமம் தண்ணிவந்து

குளிச்சு துணிதொவைச்சு

தூங்கப்போனோம் விடிகாலை.

அரைக்கல்லு செங்கல்லு

அட்டைபெட்டி தகரடப்பா

வரிசையில பாத்ததுண்டா

பிளாஸ்டிக் குடமெல்லாம்

பேருவச்சு கேட்டதுண்டா.

தண்ணியா செலவழிச்சு

தன்ணிய கொண்டுவர

தண்ணியில எழுதிவச்ச

தர்மவான் வாக்குறுதி

தண்ணியிலே போயிடுச்சே

தண்ணிப்பஞ்சம் தீரலயே.

—-

கி. சீராளன்.

(punnagaithozhan@yahoo.com)

Series Navigation

கி.சீராளன்

கி.சீராளன்