அறிவோர் கூடல் – குப்பிழான் ஐ. சண்முகன் உரை

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

பதிவு : சு. குணேஸ்வரன்


இலக்கியச் சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் மாதாந்தம்
நடைபெற்று வரும் அறிவோர் கூடல் 06.02.2011 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு
பருத்தித்துறையில் இடம்பெற்றது.

நிகழ்வில் எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் ‘நெஞ்சையள்ளும்
பாத்திரங்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

தொடக்கவுரையில் குலசிங்கம் அவர்கள் பேசும்போது அறிவோர் கூடல் எமக்கு பல
நண்பர்களைத் தந்துள்ளது. கடந்த பல வருடங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தபோது சுராவின் ‘காகங்கள்’
ஒன்றுகூடலில் கலந்துகொண்டதனால் நாங்களும் இதுபோல் செய்யலாமே என்ற எண்ணம்
ஏற்பட்டது. அதன் பயனாக 1982 இல் தொடங்கப்பட்ட அமைப்பு எமக்கு நல்ல
செயற்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளது. இளையவர்களும் கலந்து கொண்டு
உரையாடல்களை நிகழ்த்தவும் இலக்கியத்தின்மீதான நேசிப்பு மிக்க நண்பர்களைச்
சம்பாதிப்பதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது என்றார். மேலும்
புதிதாகச் செய்யவேண்டியுள்ள சில பணிகள் பற்றியும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து குப்பிழான் சண்முகன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது
உரையில் தமிழ் இலக்கியத்தில் தாம் ரசித்த கதாபாத்திரங்கள் பற்றிக்
குறிப்பிட்டார். காவியம், புராணம், சிறுகதை, நாவல், சினிமா ஆகியவற்றில்
தம்மால் மறக்க முடியாத பாத்திரங்கள் பற்றி அறிமுகமாகக் குறிப்பிட்ட
உரையாளர்; இலக்கியத்தில் ‘சிலப்பதிகாரத்தை’ தனது பிரதான உரைக்காக
எடுத்துக் கொண்டார்.

சிலம்பில் கண்ணகியின் பாத்திரச் சித்திரிப்பு அவர் பேச்சில் முதன்மையாக
அமைந்தது. கண்ணகி, கோவலனுக்கு முதல்முதல் உணவு பரிமாறும் காட்சி முதல்
பாண்டிய மன்னனின் அரசவையில் நீதிவேண்டி தலைவிரிகோலமாக இருந்த பகுதி வரை
இரசனையோடு உரையாற்றினார். உரையின் இடையில் இளங்கோவடிகளின் வரிகளை நயந்து
குறிப்பிட்டார்.

உரையின் பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் சு.
குணேஸ்வரன், ஆசான் ஆ. கந்தையா, இராகவன்,ம. அனந்தராசன்,செல்வி கயல்விழி,
து.குலசிங்கம், கண எதிர்வீரசிங்கம், கமலசுதர்சன், சி. விமலன்,ஆ. சிவஞானம்
ஆகியோர் பங்கெடுத்தனர். மாதவியின் பாத்திரம் பற்றியும் உரையாளருடன்
எதிராகவும் இணையாகவும் கலந்துரையாட முடிந்தது. இதேபோல குறிப்பிடத்தகுந்த
சிறுகதை, நாவல் மற்றும் நல்ல படங்களில் வரும் பாத்திரங்கள் பற்றியும்
உரையாடுவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும்
முன்வைக்கப்பட்டது.

இறுதியாக நன்றியுரையை கந்தையா ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தினார்

Series Navigation

பதிவு:- சு. குணேஸ்வரன்

பதிவு:- சு. குணேஸ்வரன்