குறிஞ்சிவேலனுக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

This entry is part of 61 in the series 20040805_Issue

அறிவிப்பு


அமரர் சரஸ்வதி ராம்னாத் அறக்கட்டளையும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்குரியவராக திரு.குறிஞ்சிவேலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இந்த அறக்கட்டளைகளின் முதல் விருதாகும்.

குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள மீனாட்சிப்பேட்டை என்னும் சிற்றுாரில் 30.06.1942ல் பிறந்து தன் அயராத மொழிபெயர்ப்புப்பணிகள் மூலம் இலக்கிய வாசகர்களின் கவனத்துக்குரியவரானவர் குறிஞ்சிவேலன். இவரது இயற்பெயர் ஆ.செல்வராசு. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பலரது எழுத்துகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்த ‘தீபம் ‘ சிற்றிதழே இவருக்கும் தன் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்தது. மலையாளத்திலிருந்து பல முக்கியமான படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க இக்களம் அவருக்கு உறுதுணையாக அமைந்தது. தீபத்தில் தொடராக வெளிவந்த ‘முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள் ‘ என்னும் படைப்பு இவருக்குப் பரவலான வாசக கவனத்தை உருவாக்கித் தந்தது. எஸ்.கே.பொற்றெக்காடு அவர்களுடைய ‘விஷக்கன்னி ‘ என்னும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக சாகித் திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்க்கான விருதைப் பெற்றார். தகழி, பஷீர் போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகளின் ஆளுமையைப் புரிந்துகொள்ளும்வண்ணம் அவர்களைப்பற்றிய தொகைநுால்களை மொழிபெயர்த்தளித்தார். சல்லிவேர்கள், பாரதப்புழையின் மக்கள், இரண்டாமிடம், பாண்டவபுரம், நெட்டுர்மடம் ஆகிய நாவல்கள் இவருடைய மற்ற மொழிபெயர்ப்பு நுால்கள். இந்திய மொழிகள் அனைத்திலிருந்தும் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டுவரும் முயற்சியாக முழுக்கமுழுக்க மொழிபெயர்ப்புப்படைப்புகளைத் தாங்கிய ‘திசையெட்டும் ‘ என்னும் காலாண்டிதழைக் கடந்த ஓராண்டாக நடத்திவருகிறார். இவரது இலக்கியச் சாதனையைப் பாராட்டி இந்த விருது அளிக்கப்படுகிறது.

விருதளிக்கும் விழா 07.08.04 அன்று மாலை ஆறுமணியளவில் தமிழ்ச்சங்கக் கட்டிடத்தில் திருவள்ளுவர் அரங்கத்தில் நடக்க உள்ளது.

செய்தி: பாவண்ணன்

Series Navigation