சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் – 5

This entry is part of 29 in the series 20060303_Issue

கரு.திருவரசு


பெயர்சொல் – பெயர்ச்சொல்

பெயர்சொல் என்பதும் பெயர்ச்சொல் என்பதும் ஒருபொருள் சொற்களா ?

இல்லை. ‘பெயர்சொல் ‘ என்பதன் இடையே ‘ச் ‘ எனும் ஒற்று மிகுந்தால் ஒரு பொருளும் ஒற்று மிகாமல் இயல்பாக இருந்தால் ஒரு பொருளும் தரும்.

சொற்புணர்ச்சிப் பொருள் மாறுபாட்டு விளக்கம் காண்பதற்கு முன் பெயர், சொல் எனும் இரு சொற்களின் பொருள்களைக் கண்டு தொடர்வோம்.

‘பெயர் ‘ என்பது ஒரு பொருளின் அல்லது ஒரு மனிதரின் பெயரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் அடையாளச் சொல். காட்டாக: வீடு, குழந்தை என்பனபோல.

‘சொல் ‘ எனும் சொல் பெயர்ச்சொல்லாக வரும்போது, பேச்சு, வாக்கு என்பன போன்ற பொருள்களைத் தரும். அதுவே வினைச் சொல்லாக வரும்போது தெரிவி, அறிவி, குறிப்பிடு. பொதுவாக ‘வாயால் வெளிப்படுத்து ‘ என்று பொருள்படும்.

உங்களை ஒருவர் உங்கள் பெயரைச் சொல்லி அழைத்தால் போதும் என நீங்கள் கருதும்போது, ‘நீங்கள் என்னைப் பெயர்ச்சொல்லிக் கூப்பிட்டால் போதும் ‘ என எழுதுவதோ, பேசுவதோ தவறு.

‘பெயர்சொல்லிக் கூப்பிட்டால் போதும் ‘ எனக் குறிப்பிடுவதே சரி.

தமிழில் சொற்களை இலக்கணம் நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் பெயர்ச்சொல். (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்) அதாவது, பொருளைக் குறிக்க வழங்கும் சொல்.

‘தமிழில் பெயர்சொல் என்பது நால்வகைச் சொற்களில் ஒன்று ‘ என எழுதுவது தவறு.

‘தமிழில் பெயர்ச்சொல் என்பது நால்வகைச் சொற்களில் ஒன்று ‘ என எழுதவேண்டும்.

பெயர்சொல் = பெயரைச் சொல்

பெயர்ச்சொல் = பொருள்குறிக்கும் அடையாளச்சொல்.

—-

Series Navigation