The School of Rock (2003)

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

மாது


ஐம்பதுகளிலிருந்து எழுபது வரை அமெரிக்க ராக் (Rock) இசையின் பொற்காலம் எனலாம். எழுபதுகளில் ஹிப்பித்தனம், ஹரே ராம ஹரே க்ருஷ்ணா, வியட்நாம் யுத்தம், போதை மருந்து இவையோடு ராக் இசை சேர்ந்து ஒருவித விநோதக் கலவை உண்டு பண்ணியது. மேடையில் இசைக்கும் ஒரு சில ராக் கலைஞர்களை (உ.ம். ஜிமி ஹெண்ட்ரிக்ஸ்) பார்த்தாலே போதும், கால்கள் தாமாகவே ஆட ஆரம்பித்துவிடும், கைகள் காற்று கிடாரை இசைக்க ஆரம்பித்து விடும். ராக் இசைஞர்கள் தங்கள் இசை, கட்டுகளை அறுக்கும் கருவி என உணர்ந்தார்கள். இசையால் எதையும் சாதிக்க முடியும், அதிகார வர்க்கத்தை மண்டி போட வைக்க முடியும் என்று நம்பினார்கள். இசைக்காகவே இசை, வியாபரத்திற்காக இல்லை என்றிருந்தார்கள். இசையோடு போதையும் போதையோடு இசையும் கலந்திருந்தது. காலச் சக்கரம் சுழன்றது. நிறைய கலைஞர்கள் காலத்தோடு சமரசம் செய்து கொண்டார்கள்.

இன்றும் ஒரிரு பேர் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல், இசைக்காகவே இசை என்று (உலகத்தின் கண்ணிற்கு) பிழைக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தோத்தாங்குளிகளில் ஒருவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் ஜாக் ப்ளாக் (Jack Black). மது விடுதிகளில் இரவு நேரங்களில் ராக் இசைத்து பிழைப்பு நடத்துகிறார். இரவு முழுவதும் இசைத்து விட்டு, பகலில் நண்பனின் (இசைக் கனவிலிருந்து விடுபட்டு வேறு வேலை செய்து வாழ்க்கை நடத்த முடிவு செய்த பிழைக்கத் தெரிந்த நண்பன்) அறையில் தூக்கம். இருந்த வேலையும் போய் விடுகிறது.

ஆள் மாறாட்டம் செய்து நண்பனுக்கு வந்த ஆசிரியர் வேலையை பெறுகிறார் ப்ளாக். பாட வகுப்பை இசை வகுப்பாக்கி வகுப்பை ஒரு இசைக் குழுவாக (School of Rock) மாற்ற ராக் இசை சொல்லித் தருகிறார். இதுவரை கதை தெரிந்துவிட்டதால், படம் பார்க்காத யாரும் கோபம் கொள்ள வேண்டாம். படத்தின் முக்கிய அம்சமே ப்ளாக் தன் வகுப்பு குழந்தைகளுக்கு (பள்ளியில் மற்ற யாருக்கும் தெரியாமல்) இசை சொல்லிக் கொடுப்பதுதான். இதை எழுத்தால் சொல்வது கடினம். ப்ளாக்கின் நடிப்பைப் பார்த்தால் தான் புரியும். ப்ளாக்கிடம் ஆயிரம் வாட் சக்தியைப் பார்க்க முடிகிறது. அவ்வளவு துடிப்புள்ள ஒரு நடிகரை வேலை வாங்குவது மிகக் கடினம். இயக்குனர் முரட்டுக் குதிரையை நன்றாக ஆண்டிருக்கிறார். ஜாக் ப்ளாக் போன்ற ஒரு இசை ஆசிரியர் அமைந்து விட்டால், என் போன்றவர்களும் வீட்டில் தூங்கும் பியானோ கொண்டு என்னென்னவோ செய்யலாம். படத்தில் மேலும் குறிப்பிடத் தக்கவர்கள் முசுட்டுத் தலைமை ஆசிரியையாக நடிக்கும் ஜோஅன் க்யூசாக்கும் (Joan Cusack), ஜாக் ப்ளாக்கின் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளும்.

‘சுபம் ‘ என்று முடித்து பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் படங்கள் பல இருக்கின்றன (feel good movies). இந்த ரகத்தைச் சார்ந்த படங்களின் முடிவை முதலிலேயே அநேகமாக யூகித்து விட முடியும். அதனால் பார்வையாளர்களிடம் பரபரப்பு சற்றுக் குறைவாக இருக்கும். அதை ஈடுகட்ட நிறைய இயக்குனர்கள் நவரசத்தையும் ஒரே படத்தில் பிழிந்து உணர்ச்சி வசப் படுத்தியிருப்பார்கள். அப்படிப்பட்ட எந்தத் தவறையும் செய்யாமல், நல்ல கதை மற்றும் சிறந்த நடிகர்களின் உதவியுடன் ஒரு சீரிய நகைச்சுவைப் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் ரிச்சர்டு லிங்லேடர் (Richard Linklater).

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம். ‘அப்பா…. எனக்கு கிடார் வாங்கித்தாப்பா ‘ என்று உங்கள் வீட்டு வாண்டு ஆரம்பித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

oooo0O0oooo

tamilmaadhoo@yahoo.com

Series Navigation

மாது

மாது