இலக்கியத்தில் வாழ்வின் தரிசனங்கள் :எனக்குப் பிடித்த கதைகள் -வாசிப்பனுவபம்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

ஜெயஸ்ரீ


‘இலக்கியம் என்னசெய்துவிடப் போகிறது ? சும்மா கதைகளையும் நாவல்களையும் படித்துக்கொண்டிருப்பதன் பயன் என்ன ? ‘ பொருளியல் வேட்கைகளால் மனத்தை நிரப்பிக்கொண்டிருப்பவர்களிடமிருந்து இப்படிப்பட்ட கேள்விகள் கணைகளாகத் தொடுக்கப்படுவதை வாசிப்புப் பழக்கமுள்ள அனைவரும் ஏதோ ஒருவகையில் எதிர்கொண்டிருக்கிறோம். வாழ்க்கை வேறு, இலக்கியம் வேறு என்று நினைத்துத் தனித்தனியாக ஒதுக்கிவைக்கிறவர்களிடமிருந்தே இத்தகு கேள்விகள் எழுகின்றன. மானுட வாழ்க்கையின் வெவ்வேறு தடங்களைப் பதிவு செய்துவைத்திருக்கும் தொகுப்பையே இலக்கியம் என்கிறோம். நாம் செல்லவோ காணவோ வாய்ப்பேயில்லாத உலகின் பல மூலைகளில் வாழந்த வாழ்கிற மனிதகுலத்தின் வாழ்க்கையின் பதிவுகளை இலக்கியம் தாங்கியிருக்கிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கிற மக்களும் ஏதோ ஒரு கேள்விக்கான பொருளை வாழ்வில் தேட முயற்சி செய்தவண்ணமே உள்ளார்கள். இத்தேடலும் விடைகளும் கலைமுயற்சிகள் வழியாகவே வெளிப்பட்டபடி இருக்கின்றன. இவற்றை அறிந்துகொள்வது என்பது வாழ்க்கையை அறிந்துகொள்வதாகும். இலக்கியத்தை அறிந்து ஆழ்ந்து தோய்ந்தவர்களால் மட்டுமே அது எவ்வளவு மனவிரிவைத் தரக்கூடியது என்பதை உணர முடியும். இதன் நிரூபண ஆவணமாக பாவண்ணன் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள ‘எனக்குப் பிடித்த கதைகள் ‘ தொகுதி விளங்குகிறது.

‘எனக்குப் பிடித்த கதைகள் ‘ தொகுதியில் பாவண்ணன் தனக்குப் பிடித்த ஐம்பது கதைகளைப்பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். இக்கதைகளை எழுதியவர்கள் 27 பேர் தமிழ்ப்படைப்பாளிகள். 23 பேர் இந்திய, உலகமொழிகளில் எழுதியவர்கள். ஒவ்வொரு சிறுகதையைப்பற்றி எழுதும்போதும் அக்கதைக்கு தன் மனத்தில் நீங்காத இடம்தந்ததற்கான காரணத்தை சிறுகதைக்கே உரிய அழகோடும் நளினத்தோடும் சொல்கிறார். தன் சொந்த வாழ்வில் நடந்த சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் இலக்கியப் படைப்புகளோடு அவர் பொருத்திப்பார்த்து உணர்ந்துகொள்கிற விதம் மிக அழகாக இருக்கிறது. கதையின் மையத்தை எளிதில் விளங்கிக்கொள்ளும் வண்ணம் அழகான சொற்றொடர்களில் தலைப்பிட்டுக் காண்பிப்பது கூடுதல் அழகு. வாசகர்கள் இலக்கியத்தை அணுகவேண்டிய முறைகளைப்பற்றியும் அவற்றை ஒவ்வொரு கணமும் மனத்தில் ஏந்தியபடி எதார்த்த வாழ்வைப் பரிசீலித்தபடி முன்னகரவேண்டிய நிலைகளைப்பற்றியும் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருப்பதை இத்தொகுதி தெளிவாக உணர்த்துகிறது. கரு, சொல்முறை, படிமங்கள், உவமைகள், நிலக்குறிப்புகள், புறத்தகவல்கள், உணர்வெழுச்சிகள் என எல்லாக் கோணங்களிலிருந்தும் ஒரு ஆராய்ச்சியாளனைப்போல அவர் ஒவ்வொரு சிறுகதையையும் அணுகிப் பேசும் விதம் மனத்தைக் கவர்கிறது. புதுமைப்பித்தனுடைய ‘மனித யந்திரம் ‘ கதையைப்பற்றிச் சொல்லும்போது யந்திரத்தின் இயக்கத்தையும் மனிதர்களின் வாழ்க்கை இயக்கத்தையும் எளிமையாக இணைத்துக்காட்டும் விதம் புதிதாக இருக்கிறது. பொதுவாக எல்லாருடைய கவனமும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நடவடிக்கைகளை யந்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து எடுத்துரைப்பதிலேயே இதுவரை இருந்துவந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். முதலாளியையும் யந்திரமாகக் கண்டுபிடிக்கும் பாவண்ணனுடைய அணுகுமுறை வாசகர்களுக்குக் கூடுதலான புரிதலுக்கு வழிவகுக்கிறது.

இந்த நுாலுக்கு பாவண்ணன் எழுதிய முன்னுரைக் குறிப்புகள் மிகவும் முக்கியமான ஓர் உண்மையை முன்வைக்கிறது. அவரும் அவருடைய இளம்பருவத்துத் தோழனும் ஒரு புத்தகத்தைப்பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும்போது தற்செயலாக அவர்கள் வெளிப்படுத்திய வாக்கியங்கள் ஆப்தவாக்கியத்தைப்போல சுருக்கமாகவும் தெளிவாகவும் ஆசையுடன் மனம் உள்வாங்கி ஏந்திக்கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளன. ‘இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவது இலக்கணம், அப்படி இருக்கமுடியாமல் போவதன் அவஸ்தைகளைப் பேசுவது இலக்கியம் ‘ என்ற அவ்வரிகள் ஒரு மந்திரத்தைப்போல நீங்காத இடம்பிடித்துவிடுகின்றன. அவ்வாக்கியங்களை உள்வாங்கிக்கொண்ட வேகத்தில் மனத்தில் பீறிட்டுக் கிளம்பும் எண்ணங்களுக்கு அளவே இல்லை.

அன்பையும் அன்பின்மையையும் உலக உருண்டையை ஏந்தியிருக்கும் இரண்டு கைகள் என்று சொல்லலாம். கருணை, இரக்கம், உதவி, நட்பு அனைத்தும் அன்பிலிருந்தே பிறக்கின்றன. வக்கிரம், வெறுப்பு வன்முறை, கொடுமை, தண்டனை அனைத்துக்கும் அன்பின்மையே ஊற்றுக்கண். ஒரு நதியைப்போல மனத்தில் பரவி எங்கெங்கும் நேசமென்னும் ஈரம் பரவியிருக்கத் துாண்டியபடி இருக்கிறது அன்பு. எவ்விதமான தயக்கமும் யோசனையுமின்றி தான் நினைப்பதை நிகழ்த்திக்காட்டுகிறது அன்பின்மை. அற்காக வருத்தமோ கவலையோ அதனிடமிருந்து வெளிப்படுவதில்லை. அன்போ எல்லாக் காலங்களிலும் எல்லா விஷயங்களும் சரியாக நடக்கவேண்டுமென்று ஆற்றாமையுடன் தவித்தபடி இருக்கிறது. பிறழ்வுகளைப்பற்றிக் கவலைப்படுகிறது. குற்றஉணர்வு பெருக தடுமாற்றம் கொள்கிறது. அடுத்தவர்களைத் துன்புறுத்தவும் நோகடிக்கவும் தயங்குகிறது. தான் கற்றுத் தேர்ந்த நீதிகளுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவே கிடந்து ஊசலாடுகிறது. இந்த மனத்தவிப்புகளை காலம் காலமாக இலக்கியங்கள் பதிவுசெய்தபடி வந்துள்ளன. சங்க இலக்கியங்களில் இந்த மனத்தவிப்புகளின் கோட்டுச் சித்திரங்கள் எங்கெங்கும் காணக்கிடைக்கின்றன. காவியங்களில் இது ஒரு சுவையாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நுாற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கிய வடிவமான சிறுகதைகளில் இது நுட்பமான அளவில் பதிவு காணப்படுகிறது.

அன்பின் பயணத்தை முற்றிலுமாக அறிந்துகொள்ள இயல்வதில்லை. அன்பின் ஊற்றுக்கண்ணான மனம் ஒரு விசித்திரப்புள்ளி. விசித்திரப்புள்ளியால் வடிவம் பெறும் கோலங்களை இலக்கியப்படைப்புகள் ஓரளவு துல்லியமாகப் படம்பிடிக்க முயற்சி செய்கின்றன. அப்புள்ளியில் அன்புக்கும் மரபுக்கும் நிகழும் போராட்டங்கள் எண்ணற்றவை. நாகரிகமடைந்த ஒவ்வொரு சமூகமும் பின்பற்றவேண்டிய சில விதிகளைத் தொகுத்துச் சொல்கின்றது மரபு. அன்புகொண்ட உள்ளம் மரபுகளை உடைத்து அன்பை நிலைநாட்ட நினைக்கிறது. கட்டுப்பாடுகளுக்கும் மீறல்களுக்குமான இடைவெளியில் இலக்கியம் தன் கடமையை ஆற்றுகிறது. தாண்டும் விழைவையும் தாண்டமுடியாமையின் ஆற்றாமைகளையும் இலக்கிய முயற்சிகள் வழியாக அறிந்துகொள்கிறோம்.

வாழ்வியல் அனுபவங்களோடு கதையைச் சொல்லும்போது நடைமுறை வாழ்க்கையை இப்படியும் எதிர்கொள்ளலாம் என்கிற பார்வை உருவாகிறது. புத்தகப் பக்கங்களிடையே ஒளித்துவைத்திருக்கும் மயிலிறகுகளாகச் சிறுவயது ஞாபகங்கள் ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் பல நிகழ்ச்சிகள்ட நிறைந்திருக்கும். அவையனைத்தும் மகிழ்ச்சி தரக்கூடியதாகவோ கண்ணில் நீர் வரவழைக்கக்கூடியதாகவோ, கசப்பானதாகவோ, நெகிழ்ச்சியூட்டுவதாகவோ, நினைக்கும்தோறும் நெஞ்சை இனிக்கவைப்பதாகவோ, திகைப்பில் ஆழ்த்துபவையாகவோ, அச்சமூட்டுவதாகவோ இருக்கக்கூடும். அப்போதைக்கு அவை வெறும் காட்சிப் பதிவுகளாகவே மனத்தில் தங்குகின்றன. எவ்விதமான சிந்தனையையும் துாண்டுவதில்லை. இலக்கியத்தின் பல வடிவங்களைத் தேடிப் படிக்கும்போது நீரில் அழுத்தப்பட்ட தக்கைகளாக அந்நினைவுகளும் பதிவுகளும் மனஆழத்திலிருந்து மேலெழுந்து மிதக்கத்தொடங்குகின்றன. தன்னையறியாமல் தன் வாழ்வினை அதில் தேடிப்பார்க்கிறது மனம். விடையறியா கேள்விகளுக்கு விடை கிடைக்காதா என்று ஏங்குகிறது. ஆழ்ந்த வாசிப்பனுபவம் மட்டுமே இதைச் சாத்தியமாக்க முடியும். தன் சின்ன வயதில், கல்லுாரி வாழ்வில், வேலைதேடிய நாள்களில், வேலை அனுபவத்தில் என்று நடைமுறை வாழ்விலேயே பாவண்ணன் அதைக் கண்டுகொள்ளமுடிந்திருப்பது இலக்கியத்தின்பால் அவருக்குள்ள ஆழ்ந்த ஈடுபாட்டையே காட்டுகிறது.

ஒரு குழந்தையைப் பலவிதமான பொம்மைகள் விற்கப்படும் கடையில் கொண்டுபோய் நிறுத்தி பிடித்த பொம்மையை எடுத்துக்கொள்ளச் சொல்லும்போது அக்குழந்தைக்கு எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் துடிப்பும் ஆர்வமும் தோன்றிவிடுகிறது. அழகாகவும் வைத்திருக்கத் தகுதியான பொம்மையின் பெருமைகளை எடுத்துச்சொல்லித் தேர்ந்தெடுக்கக் குழந்தைக்கு உதவவேண்டியிருக்கிறது. இப்புத்தகத்தை வாசிக்கும்போது அத்தகு ஒரு சித்திரமே மனத்தில் எழுகிறது. இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டு, வாசிக்க அலையும் புதிய இளம்வாசகர்களுக்கு சிறுகதைத் தளத்தில் படிக்கவேண்டிய ரசிக்கவேண்டிய கதைகளைப்பற்றி வந்திருக்கும் இத்தொகுப்பு தாகத்துக்குத் தண்ணீர் போன்றது.

சாவில் பிறந்த சிருஷ்டி, பறிமுதல், ஆற்றாமை, ஸர்ப்பம், இனி புதிதாய், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள், மோகினி, முட்டாள் கிம்பெல், ஐஷூக்குட்டி, மன்னிப்பு ஆகிய கதைகளில் இயங்கும் உள்உலகத்தைப் புரிந்துகொள்ள பாவண்ணன் மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது. எந்த முன்முடிவுமின்றி ஒரு பாத்திரத்தை அணுகுகிற பாங்கும் கதைக்குள் விவரிக்கப்படும் குறிப்புகளையொட்டி அப்பாத்திரம் இயங்கும் விதத்தைக் கண்டறியும் நுட்பமும் அவருக்கு அழகாகக் கைவந்திருக்கிறது. இரண்டு கைகளாலும் தண்ணீரைத் தள்ளியபடி நீந்திநீந்தி முன்னேறிச் செல்கிற நீச்சல் வீரனைப்போல ஆழத்தைக் கண்டறியும் கலைப்பயணத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஒரு கதையை எவ்விதத்தில் அணுகுவது என்கிற பயிற்சியை ஒவ்வொரு இளம் வாசகனுக்கும் இக்கட்டுரைகள் அளிக்கின்றன. ஒரு சாதாரணக் குறிப்பின் வழியாக கதையில் இயங்கும் அழகியல் தன்மையை அறியும் பயிற்சியையும் இவை அளிக்கின்றன.

சுந்தர ராமசாமியின் ‘பள்ளம் ‘ சிறுகதையைப்பற்றிய சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை. தற்செயலாக நிகழ்ந்துவிடும் ஒரு சின்னச்சம்பவத்தின் மூலம் ச்முகவிமர்சனத்தை நிகழ்த்தும் ஆற்றலைப் பாவண்ணன் அடையாளப்படுத்துகிறார். தாய் என்பவள் அன்பானவள்தான். தன் குழந்தையைத் தவிர வேறு எண்ணம் இருக்கமுடியாது என்பதே காலங்காலமாக அறியப்பட்டு வந்தாலும் அதையும் மீறி வேறு ஒன்றின்மீது மோகம் கொண்டு தன் பிள்ளையின் கண்ணை அறியாமல் தோண்டிவிடும் அளவுக்குச் செய்வது எது ? பிறன்மனை நோக்காமை பேராண்மை என்றபோதும் ‘அதிசயக்காதல் ‘ ஏன் நிகழ்கிறது ? குரு என்பவன்தான் உயர்ந்தவன், சீடன் அவனுக்குப் பணிவானவன் என்கிற விதி மாறி சீடனையே குருவாக நினைக்கத் துாண்டுவது எது ? இப்படியான கேள்விகள் மனத்தில் எழுந்தவண்ணம் உள்ளன. ‘தபால்கார அப்துல் காதர் ‘ சிறுகதை மனிதஉறவுகளை விலக்கிவிலக்கிக்கொண்டு வாழத்தொடங்கிவிட்ட நம் காலத்தின் துரதிருஷ்டத்தை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது. தபால்காரர் மட்டுமல்ல, வங்கிகள் மற்றும் பிற அலுவலகங்கள் எல்லாமே இயந்திரமயமாக்கப்பட்டுவரும் சூழலில் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இருந்த பரஸ்பர உறவும் நெருக்கமும் கரைந்துபோகின்றன. எல்லாத் தளங்களிலும் மனிதர்கள் வாழ்ந்தும் மனித உறவே இல்லாத நிலை எவ்வளவு பெரிய கொடுமை. எந்திரமயமாக்கலுக்கு நாம் கொடுத்துக்கொண்டிருக்கும் மிகப்பபெரிய விலை இது.

அசோகமித்திரனுடைய ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘ பற்றிச் சொல்லும்போது அம்மாவின் கடமையுணர்வு தவறாக உள்ளத்தைப் படம்பிடிக்கிறார் பாவண்ணன். பிளாஸ்கில் காப்பியை எடுத்துவைத்துவிட்டு ந்த அம்மா சினிமாவுக்குக் கிளம்பத் தயாராக இருந்திருக்கக்கூடும். ஆயினும் மகன் தாமதமாக வந்ததால் தன் ஆவல் நிறைவேறவில்லை என்பதை அவள் துளியும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. எதையும் பெரிதுபடுத்தாமல் மெளனமாகவே தன் உணர்வுகளை வெளிக்காட்டியும் காட்டாமலும் வாழும் தாய்மார்களின் உள்ளம் தனியான ஆய்வுக்குரியது.

தேசமும் மொழியும் கலாச்சாரமும் எதுவாக இருந்தாலென்ன ? வானம் எல்லா இடத்திலும் நீலமாக இருப்பதைப்போலவே குழந்தைகளும் எல்லா இடத்திலும் ஒரேமாதிரியாகவே இருக்கிறார்கள். அகிலனின் ‘காசுமரம் ‘ காவேரியும் மக்சீம் கோர்க்கியின் ‘சிறுவனின் தியாகம் ‘ கொலுஷாவும் குடும்பத்தின் வறுமையைப் போக்க தம்மையே உயிர்த்தியாகம் செய்கிறார்கள். எவ்வித பயமோ தயக்கமோ இன்றி தான் நினைத்ததைச் சாதித்துவிடும் குழந்தைகள் மனத்துக்கு இணையாக நம்மால் எதையும் சுட்டிக்காட்ட முடிவதில்லை. காவேரி அறியாமையால் உயிரையே மாய்த்துக்கொள்கிறாள் கொலுஷாவோ அறிந்தே தாங்கிக்கொள்கிறான். இரண்டிலும் நோக்கம் ஒன்றே. இக்கதைகளைப் படிக்கும்போது எவ்வளவு கனத்த இதயம் உள்ளவர்களும் கலங்காமல் இருக்கமுடியாது.

இதைப்போலவே நெஞ்சை உருகவைக்கும் இன்னொரு கதை அந்தோன் செகாவின் ‘வான்கா ‘. இன்றும்கூட பிணைக்கைதிகளாக குழந்தைத் தொழிலாளிகளாக அவதிப்படும் எத்தனையோ குழந்தைகளின் பிரதிநிதியாக வான்கா நம் மனக்கண் முன் நிற்கிறான். முழுக்கதையையும் படித்துமுடித்ததும் வண்ணதாசனின் ‘நிலை ‘, பி.டி.ஜான்னவியின் ‘கொடி ‘ ஆகிய சிறுகதைகள் வான்கா சாயலில் வந்து போகின்றன. வான்கா மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தன் தாத்தாவுக்குக் கடிதமெழுகிறான். மெழுகுவர்த்தியையே வான்கா போன்ற குழந்தைகளின் படிமமாக அடையாளப்படுத்திக் காட்டுவது ஒரு கதையில் சுட்டிக்காட்டப்படும் பொருள்கள் வெறும் வர்ணனைக்காகவோ அப்படியே பொருள் கொள்ளவோ மட்டுமல்ல என்ற புரிதலை ஏற்படுத்துகிறது.

முல்க்ராஜ் ஆனந்தின் ‘குழந்தைமனம் ‘ குழந்தையின் தவிப்பைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது. வெறும் குழந்தையின் தவிப்பாக மட்டுமல்ல, இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே என்னும் தத்துவார்த்த விசாரணையின் விவரிப்பாகக்கூட கதையை எடுத்துக்கொள்ளலாமோ என்று தோன்றுகிறது. நாம் ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் எது இன்பம் என்று புரிபடாமலேயே அலையும் குழந்தைகள்தாம் என்று தோன்றுகிறது.

பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘யைப்பற்றிச் சொல்லும்போது பாவண்ணன் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியாக கதையை அடையாளப்படுத்துகிறார். இறந்துபோனது ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் குடிப்பதற்காகக் காசுக்கு அலைகிறவனுக்கு போதைதான் முன்நிற்கிறதே தவிர இறுதிச்சடங்கு முக்கியமற்றதாகப் போய்விடுகிறது. இப்படி ஒரு பார்வையைத் துாண்டிவிடுவதும் கதையை எடுத்துச் சொன்னவருக்கு வெற்றிதான்.

வண்ணதாசனின் ‘தனுமை ‘ சிறுகதையும் அலெக்ஸான்டர் குப்ரினுடைய ‘அதிசயக்காதல் ‘ சிறுகதையும் ஒரே சாயலுள்ள இருவேறு மனிதர்களைப் பார்ப்பதைப்போல உள்ளது. ஓடும் ஆற்றில் அமிழ்ந்து மூச்சடக்கி இருப்பவர்களால் ஆற்றின் ஒலியை உணரமுடியும். அதை அனுபவிப்பதும் இன்பமானதாகவே இருக்கும். ஆனாலும் எத்தனைநேரம்தான் மூச்சடக்கி இருக்கமுடியும் ? மேலெழுந்ததும் அந்த இசை கரைந்துவிடுகிறது. காதலிலும் இதே நிலைதான். ஒருவர் மறந்துவிடுகிறார். மற்றொருவரோ குற்றஉணர்விலும் ஊற்றெடுத்தபடி இருக்கும் காதலிலுமாக தவிக்க நேரிடுகிறது. நம் மனத்தில் எழும் ஒருதலைக்காதலை வெளிப்படுத்துவது சரியா ?

ஐஸக் பாஷ்வெல் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ சிறுகதையையும் தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ சிறுகதையையும் படிக்கும்போது மனத்தை இயக்கும் சூத்திரப்புதிரின் திசைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. விடை தெரியாத கேள்விகளின் விடையைத் தேடியடைய விரும்பும் எவரும் பாவண்ணனுடைய இத்தொகுப்பைப் படிக்கும்போது தேடலின் வேகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். இத்தொகுப்பின் சிறப்பம்சங்கள் ஏராளம். தமிழ்வாசகர்களுக்காக பாவண்ணன் மேற்கொண்டுள்ள முயற்சி ஆழ்ந்த நன்றிக்குரியது.

( எனக்குப் பிடித்த கதைகள்- பாவண்ணன். வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில்- 629 001.விலை ரூ125)

—-

jayashriraguram@yahoo.co.in

Series Navigation

ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீ