திறந்த விழிகள்:கட்டுக்கோப்பான படைப்புமுறை நோக்கி: ஆர். ஆர். சீனிவாசனின் விவரணப்படங்கள்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

யமுனா ராஜேந்திரன்


*

கடந்த பத்தாண்டுகளில் சமூக மாற்றம் கருதிய விவரண்ப்பட குறும்பட இயக்கமொன்று தமிழில் உருவாகியிருக்கிறது. லெனின், ஆர்ஆர்.சீனிவாசன், அம்ஷன்குமார், எம்.சிவக்குமார், அருண்மொழி ,சொர்ணவேல் போன்றவர்கள் கணிசமாகவும் தொடர்ந்தும் படங்கள் கொடுத்து வருகிறார்கள். இவற்றில் அவரவர்களுக்கென தனித்தன்மைகள் உருவாகி வருவதையும் நாம் பார்க்கமுடிகிறது.

ஆர்.ஆர்.சீனிவாசன் சமகால வரலாற்றுக்கு மிகவும் நெருங்கியதான ஒரு அரசியல் விவரணப்பட இயக்குனராகப் பிரிமாணம் பெற்றிருக்கிறார். அவரது படங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக சமகலா அரசியல் சாரந்த விவரணப்படங்கள். இரண்டவதாக பண்பாட்டுக் கோலங்களைப் பற்றி படங்கள். மூன்றாவதாகத் துயர் குறித்த படங்கள்.

முதலாவது வகையில் அவருடைய நதியின் மரணம், தீண்டத் தகாதவர்களின் தேசம் போன்றவற்றைச் சொல்லலாம். இரண்டாவது வகையதான படங்களுக்கு சுழற்பாதை, காணாமல் போதல், பட்டின் பாதை போன்றவற்றைக் குறிப்பிடலாம். மூன்றாவது வகைக்கு விழிகளை மூடுங்கள், சிதைவுகள் என இரண்டு படங்களைக் குறிப்பிடலாம்.

இரண்டாவது வகையினதான படங்களில் சிதைவுகளை சோதனை பூர்வமான ஒரு படமாக, இலக்கியத்திற்கும் சினிமாவுக்கும் இடையிலான வகையினம் நோக்கிய முயற்சியாக அவதானிக்கலாம். வேறு எவரையும் விடவும் தொடர்ந்தும் தீவிரமாகவும் சமூக வெளியிலும் உள்வெளியிலுமாகப் பயணம் செய்கிற படஙுகள் சீனிவாசனுடையவை.

சீனிவாசனுடைய மூன்றாம் வகைப்படங்களை நாம் அதிகமும் சொந்தமனதின் அவலத்தை வெளியிடும் படங்கள் எனலாம்.

**

நதியின் மரணம் தாமிரபரணிப் படுகொலைகளை ஆவணமாக்கிய படம். தீண்டத்தகாதவர்களின் தேசம் 2001 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற நிறவெறிக்கு எதிரான சர்வதேச மாநாட்டுப் பார்வையாளர்களுக்கென திரையிடுவதற்க்காக தொகுக்கப்பட்ட படம். விழிகளை மூடுங்கள் ஒரு அந்தகப் பள்ளிக்கூடத்தின் அன்றாட வாழ்வைப் பதிவு செய்யும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

நதியின் மரணம் மூன்று பகுதிகளால் ஆனது. முதல் பகுதி தாமிரபரணிப் படுகொகைளைப் பதிவு செய்த நிலா தொலைக் காட்சிப்படத்தை அன்று வந்த பத்திரிக்கைச் செய்திகளுடன் அவ்வாறே முன்வைக்கிறது. இரண்டாம் பகுதி அந்த நிகழ்வில் பங்குபெற்று வன்முறைக்குள்ளாகியும் சொந்தங்களைப் பறிகொடுத்தும் அரற்றுகிற தலித் மக்களுடனான நேர்முகங்கள், அந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் உரையாடலக்ள போன்றவற்றின் வழி, இந்திய வாழ்வின் நீண்ட நெடிய வரலாற்றில் தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக மிக ஆதாரமான கேள்வி;களை முன்வைக்கிறது. மூன்றாவது பகுதி இந்த நிகழ்வு பற்றிய அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் நிகழ்வுகளுக்குப் பின்பான அபிப்பிராயங்களைப் பதிவு செய்கிறது.

ஒரு கட்டுக் கோப்பான படைப்பு முறை சார்ந்த விவரணப்படமாவதிலிருந்து தவிர்க்கிற நிலைமை, இந்த பலவீனமான மூன்றாவது பகுதியால் படத்திற்கு விபத்துப் போல் நேர்கிறது. முதலிரண்டு பகுதிகளும் தலித் மக்களின் வரலாறு நெடுகிலுமான துயரத்தையும் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய வன்முறையொன்றையும் மிக அசலாகப் பதிவு செய்திருக்கிறது. இந்தப் பிம்பங்கள் பாரக்கிற ஒரு பார்வையாளனது மனசாட்சியைத் தொட்டு உலுப்புகிறவை. பார்வையாளர் அனைவரையும் நிபந்தனையற்று இக்கொடுமைக்கு எதிராக நிறுத்துபவை. இவ்வகையில் இவ்விரண்டு பகுதிகளும் மிகக்கட்டுக் கோப்பான ஒரு படைப்பு வகை சார்ந்த விவரணப்படமாக ஆகிறது.

முதலிரண்டு பகுதிகளுக்கும் மூன்றாவது பகுதிக்கும் தொகுத்த முறையிலேயே நிச்சயமாக சீனிவாசன் வித்தியாசத்தைக் காண்பித்திருக்கிறார். ஆனால் மூன்றாவது பகுதி நதியின் மரணம் விவரணத்தின் ஒரு பகுதியாகிவிடமுடியாது என நினைக்கிறேன். இந்த மூன்றாவது பகுதியை இத்துடன் இணைப்பதனாது அந்தப் பகுதியின் அரசியல் தற்காலிகம் அல்லது அரசியல் பொய்மை போன்றவற்றோடு சேர்த்துக் காணும்போது ஆதாரமான விவரணப்படச் செய்தியும், அதனது காத்திரமான உள்ளடக்கமும் நீர்;த்துப் போகிற ஆபத்து இருக்கிறது என்பதை, விவரணப்படத்தை ஒரு வகையினமாக அதற்குரிய அழகியலோடு பொறுத்திப்பார்க்கிற வேளையில் சொல்ல வேண்டியிருக்கிறது.

தலித்மக்களின் துயரம், அவர்களது துன்ப வாழ்வு போன்றவை பற்றிச் சொல்கிற பெரும்பாலுமான கூற்றுக்கள், அன்றைய ஆட்சியாளர்களை தலித் மக்களின் கொலைக்குக் காரணமாகச் சொன்ன கூற்றுக்கள், பிற்பாடு அரசியல் லாபங்களுக்காக அந்தக் கொலைக் கரங்களோடு கோர்த்துக் கொள்கிற ஒரு நிலை உருவானபோது அர்த்தமிழந்து போகிறது. இவையெல்லாம் சமகாலத்தில் தாமிரபரணி நினைவுகளோடு பார்வையாளனின் மூளைக்குள் பதிந்திருக்கும் பிரச்சினைகளாகும். நதியின் மரணம் முதலிரண்டு பகுதிகள் மிகுந்த தனித்தன்மை வாய்ந்த அதனது உக்கிரத்துடன் கூடிய கட்டுக்கோப்புடன் கூடிய விவரணப்படமாகும். அதனை பிற்பாடான அரசியல் கோஷங்கள் கட்சித்திட்டங்களுடன் இணைத்துக் காண்பது அப்படத்தை மிகவும் பலவீனப்படுத்தக் கூடியவை என்பதுதான் உண்மை.

தீணடத்தகாதவர்களின் தேசம் தமிழகத்தில் நடந்த தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகளின் வரலாற்று ரீதியலான தொகுப்பு. இந்த விவரணப்படம் இரண்டு வகைகளில் ஆனது. ஓன்று சம்பவம் நிகழ்ந்த இடங்களுக்குச் சென்று அந்தச்சம்பவங்களில் தொடர்புள்ளவர்களின் நேர்முகத்துடன் அச்சம்பவங்களை விவரிக்கிறது. இரண்டாவதாக சாதிய உளவியல், வரலாற்று ரீதியில் சாதியத்தின் கொடுமை¢ போன்றவற்றை தமிழ்ச் சூழலில் இயங்கும் கோட்பாட்டுச் செயலில் ஈடுபட்டிருப்பவரக்ளின் நேர்முகங்களின் வழி முன்வைக்கிறது. முதலாவது பகுதிக் காட்சிகள் புவியியல் பிம்பங்களை அள்ளிவந்திருப்பதன் மூலம் மிகுந்த ஆவணத்தன்மையைக் கொணடிருக்கிறது. வெண்மணி, கொடியங்குளம் போன்ற சம்பவங்கள் ராஜ்கெளதமன் காஞ்சா அய்லய்யா போன்றவர்களின நேர்முகங்கள் எனப்படம் இயங்குகிறது.

படத்தில் தலித் பிரச்சினை பற்றிய கோட்பாட்டாளர்களாக, அந்தப்பிரச்சினை பற்றிப் பேசும் தகைமை உடையவர்களாக> ஒரு சிலரையே படம் முன்வைக்கிறது. இன்னும் இவர்கள் அனைவருமே இப்பிரச்சினை பற்றி சமீப காலத்தில்தான் தீவிரமாகப் பேசிவருகிறவர்கள் என்பதும் தெளிவு. நான் திரும்பவும் சொல்கிறேன்; : மிகத் தீவிரமாகப் பேசிவருகிறவர்கள். இதில் இன்னும் சிலர் தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர்கள். இந்தியாவிலும் தமிழகத்திலும் கம்யூனிஸ்ட்டுகளின் மீதும்> மார்க்சிஸ்டுகளின் மீதும் சாதியத்தின் அமைப்புமுறை பற்றி அதிகம் அக்கறை செலுத்தாதவர்கள் எனும் விமர்சனம் முன்வைக்ப்படுகிறது. இதில் மறுத்துப் பேச ஒன்றுமில்லை. அது அப்படித்தான் இருந்தது. இன்று அப்பிரச்சனை பற்றி மார்க்சியர்கள் அதிகம் அக்கறை செலுத்தி வருகிறார்கள் என்பது கண்கூடு.

ஆனால் காத்தமுத்து, சீனிவாசராவ், ப.மாணிக்கம், ஆர்.நல்லகண்ணு, து.ராஜா எனத் தலைமைப் பொறுப்புகளேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாரந்தவர்கள் தஞ்சையில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் போராட்டம் எனும் பதாகையின் கீழ் சாதியத்திற்கு எதிராகச் சளையாத போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இன்னும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்ச்ியின் தலைமை என்பது தலித்களையும் உள்ளிட்ட பிராமணரல்லாதவர்களின் தலைமைதான். தஞ்சையில் சாதியத்திற்கெதிரான முறைப்படுத்தப்பட்ட போராட்டங்களை நெடுங்காலமாக நடத்தி வருகிறவர்கள் அவர்கள்தான்.

இன்னும் வெண்மணிக் கொடுமைக்கு எதிராக சாதியத்திற்கு எதிராக வன்முறையை ஒரு கருவியாகக் கையாண்டு கோபாலகிருஷ்ணநாயுடுவின் அத்தியாயத்தை முடித்து வைத்ததும் இடதுசாரி; இயக்கம் சாரந்தவர்கள்தான். இவையெல்லாம் தமிழகத்தின் வரலாற்றில் பதிந்த பக்கங்கள். ஆனால் சாதியம் பற்றி எழுதத் தெரிந்தவர்கள்தான் இன்று தலித்தியப் போராட்டத்தின் தானைத் தலைவர்களாக வேஷங்கட்டுகிறார்கள். இன்னும் தமது சாதிகளை மட்டுமே மையப்படுத்துபவர்கள் இன்று கோட்பாட்டாளர்களாக ஆகியிருக்கிறார்கள். இது ஒரு வகையில் வரலாற்றை மறுக்கிற பார்வையாகும். தலித் சமூகத்தைச்சாரந்த தோழரும் எனது பிரியத்துக்குரிய நண்பருமான து. ராஜா இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். ஆகவே வரலாற்றைப் புரட்டுகிற மாதிரியான இம்மாதிரிச் சித்தரிப்புகள் படத்தின் ஆதாரத்தன்மையையும் நோககத்தையுமே கேள்விக்கு உள்ளாக்கிவிடக்கூடியதாகும்.

கிறித்தவத் தன்னார்வ நிறுவனங்கள் குறித்த கேள்விகளை இன்று அந்தந்த நாட்டு இடதுசாரிகள் மட்டமல்ல மேற்கத்திய இடதுசாரிகளும் எழப்பிவருகிறார்கள். பாரம்பர்யமாக சோசலிஸ்ட்டுகள் என்று சொலலப்படுகிற மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஆட்சியிலிருந்தவர்கள், வில்லி பிராண்ட போன்றவர்கள் அதற்கு முன்பாக இரண்டாவது அகிலத்தில் மாரக்சியர்களுக்கு எதிராக இருந்தவர்கள், இந்தியாவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் லோகியா போன்றவர்கள், மார்க்சியர்களின் சமூகப் போராட்டங்களுக்கு எதிராக நிதி தருவது என்றுதான் இந்தத் தன்னார்வ நிதிக் குழுக்களை உருவாக்கினர்கள். மேற்கிலிருக்கும் மாரக்சியர்களதும் இஜாஸ் அஹமது போன்ற இந்திய மாரக்சியர்களதும் விமர்சனங்கள் இவ்வகையில் அமைக்ின்றன. : மூன்றாம் உலக நாடுகளில் இயங்கும் தன்னார்வக் குழக்கள் தங்களது மேற்கத்திய நிதிகளை தேசிய அரசின் அதிகாரவரக்கக் கட்டுப்பாடுகள் உள்ள நிறுவனங்கள் மூலமே பெறுகின்றன. அவை பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் அதிருப்தியுற்ற அல்லது வலதுசாரி நோக்கம் கொண்ட குழக்களுக்கு வழங்கப்படுகின்றன. தேசிய அரசின் அதிகாரவர்க்க அமைப்புகளுடன் இறுக்கமான உறவுகளில்லாமல் இந்தக் குழக்கள் இயங்கமுடியாது என்கிறார்கள் அவர்கள்.

தன்னார்வக்குழக்களின் நோக்கம்; குறித்த அரசியல் கேள்விகள் நியாயமாகவே எழுப்பப்படவேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. என்கெளன்டர் பத்தரிக்கைக்கு அதன் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்த ஸ்டாபன் ஸ்பென்டருக்குத் தெரியாமலே சிஐஏ பணம் வந்து கொண்டிருந்ததை பிற்பாடு அவர் அறிந்தபோது, அதிலிருந்து விளகினார் என்பது வரலாறாக இருப்பதையும் நாம் மறந்து விடமுடியாது. இதன் அரத்தம் தன்னார்வக் குழக்களில் இயங்குகிற அனைவருமே வலதுசாரிகள் என நாம் சொல்கிறோம் என அர்த்தமில்லை..

இந்த விவரணப்படத்தின் அழகியலில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் நேரத்தியான படத் தொகுப்பு.. பொதுவாக சீனிவாசனின் எல்லாப்படங்களதும் சிறப்பான ஒரு அம்சம் இப்படங்களின் படத்தொகுப்பாகும். படத்தொகுப்பின் நேர்த்தியை நாம் நதியின் மரணம் படத்திலும் பார்க்கலாம். நிலா தொலைக் காட்சியின் பிம்பங்கள் படத்தின் பல இடங்களில் பார்வையாளர் மனத்தை உலுக்கும் வகையில் பாவிக்கப்பட்டிருக்கிறது. தலித் மகக்ளது கேள்விகளாலான உலுக்கும் நேர்முகங்கள் மிகச்சரியான இடங்களில் நிறுத்தப்பட்டு உக்கிரமான கேள்விகளை பார்ப்பவர்களிடம் எழுப்புகிறது. இந்த இரண்டு படங்களிலும் அரசியல் விவரணப்படத்திற்குரிய வேகம், சுறுக்கெனச் சொல்தல் போன்றவற்றை நாம் பார்க்க முடியும். ஐஸன்ஸ்டானின் பாட்டில்சிப் போதம்கினில் நம் நெஞ்சை உடைப்பதாக இருப்பது அந்த படத்தொகுப்பின் வேகம். அந்த வேகத்தை தீண்டத்தகாதவர்களின் நாடு படத்தில் ஆண்டுகள் ஓடிமறைந்து சம்பவங்கள் வெடிப்பறும் மனிதக்குரல்களோடு ஆரம்பிக்கும்போது தொடங்கிவிடுகிறது. இவ்வகையில் சினிவாசனுக்கு ஒரு அற்புதமான தொகுப்பாளராக ஜோன்சன் வாய்த்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

ஐஐஐ

பட்டின் பாதை படத்தின் பெயரையும் அது எடுத்துக் கொள்ளும் பிரச்சனையைக் கேள்வியுற்றபோது சீனிவாசனின் முந்தைய படங்களான சிதைவுகள், விழிகளை மூடுங்கள் போன்ற படங்கள் கொடுத்த எதிர்பார்ப்பில் அப்படத்தைப் பாரக்க மிகுந்த மனக்கிளரச்சி கொண்டிருந்தேன். பாரத்தபோது நான் அடைந்தது முழு ஏமாற்றம் என்றே சொல்லலாம். ஓரு வேளை என் எதிர்பார்ப்புப் பொய்யாகிப்போனதால் இப்படியிருக்கலாம். எப்படியாயினும் இது சீனிவாசன் வகைப்படமல்ல என உறுதியாகச் சொல்வேன். பட்டு நெய்யும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றும், பட்டு விற்பனையை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசு சார் நிறவனமும் என்ன நோக்கத்தில் இப்பிரச்சனையைப் பாரக்குமோ அந்த நோக்கிலிருந்து எடுக்கப்பட்ட விவரணப்படமாகத்தான் இந்தப்படத்தைக் குறித்துச் சொல்லமுடியும்.

ஒரு படைப்பாளியாக ஒரு குறைந்த பட்ச சமூக நோக்கம் கொண்டவனாக இருந்து இந்தப் பிரச்சினையின் தத்துவ அழசியல் அம்சங்களையும், சமூகம் சார்ந்த, நெசுவுப்பெண்களின் வாழ்வு சார்ந்த அம்சங்களையும் யோசித்துப்பாருங்கள். எத்துனை அற்புதமான படைப்பாற்றல் கொண்ட ஒரு சிருஷ்டி உருவாகியிருக்க வேண்டும் – சேரனின் பொற்காலம் படத்தில் வண்ண வண்ண நுால்களின் பிண்ணனியி;ல் வரும் பாட்டு பிற்பாடு கல்யாணம் தவறிப் போகும் சோகம் என்பதற்கு இடையிலான வாழ்வைக் கொஞ்சம் யோசித்துப்பார்க்க வரும் துக்கத்தைவிட, ஆயிரம் மடங்கு துக்கத்தை விவரணப்படம் எனும் அளவில் சீனிவாசனின் படம் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் சீனிவாசனின் படம் பயணிக்கும் திசை முற்றிலும் வேறானது.

எந்த விதமான மானுடப் பரிமாணமும் தததுவ அழகியல் பரிமாணமும் அற்றதொரு தட்டையான விவரணப்படம் பட்டுப்பாதை. பட்டு எப்படி பட்டுப் பூசசிகளை வெண்ணீரில் போட்டுக் கொல்வதிலிரு;து நுாலாகி வணண்ம் தோய்ககப்பட்டு பட்டுத் துணியாக உருவாகிறது என்பதைப்;படம் சொல்கிறது. அதில் பாவனையாளர்களின் நோக்குக்கு ஏற்ப, எப்படி மோஸ்தர்கள் தேர்ந்தெடுககப்படுகிறது எனச் சொல்கிறது. வடிவமைப்பாளர்கள் எவ்வாறு தமிழ் செவ்வியல் கலாச்சாரம் சார்ந்து மோஸ்தர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று இப்படம் விவரித்துச் செல்கிறது.

பட்டுப்பூச்சிக்கும் கலைஞுனுக்கும் இடையிலான உறவை விவரிக்கும் கார்ல் மார்க்சினது மேற்கோளை நினைத்துப்பாருங்கள். படைப்பைக் கொடுப்பதற்காக தான் மரணமுறுவது பட்டுப் பூச்சியின் இயல்பு. தன்னழிவில் தோன்றும் அழகு, கலைஞனின் படைப்பு. இங்கு அது பட்டுப் புடவைகளை நெய்யும் மனிதர்களின் பகட்டற்ற நிறநிறக் கனவுகள் அற்ற வாழ்வு, குறிபபாக நெசுவுப் பெண்களின் வாழ்வு. இந்த அழகும் அவலமுமான, எந்தத் துயர் சாரந்ததுமான அற்புதக் கணங்களுமே சீனிவாசனின் பட்டின் பாதையில் இல்லை. மனசுக்குள் போகாத நிறங்கள் மட்டுமே இப்படத்தில் என்னளவில் எஞ்சின என்பதைச் சொல்லத் துயரமாகத்தானிருக்கிறது.

சுழற்பாதையும், காணாமல் போதலும் திருவிழாக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள். மனிதர்களின் அசைவுகள்> அந்தச் திருவிழாவைச் சுற்றிலுமான அனைத்து வகைக் கோலாகலங்களின் அழகையும் அபத்தத்தையும் சீனவாசன் இப்படங்களில் பதிவு செய்திருக்கிறார். இனவரைவியல் படங்கள் என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். பிரான்சு நாட்டில் இந்த வகைப்படங்களக்கென திரைப்படவிழாவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இனங்களைப் பற்றிய ஆய்வுகள் அதிகரித்திருக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். பல்லின பல்மத கலாச்சாரப் பிரபஞ்சங்களைப் புரிந்து கொள்வதிலும், அதன் அழகிலும் அபத்தத்தில் ஈடுபடுதலிலும் ஆன ஆர்வம் இன்று உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இடப்பெயர்வும் குடியேற்றமும் உலகமயமாதலும் மேற்கில் உருவாகிிருக்கும் பல்லின சமூகங்களும் வெகுமக்களிடையிலும், அறிவாளிகளிடமும் இத்தகையதொரு அவாவையும் சாத்தியத்தையும் இன்று துாண்டியிருக்கிறது.

இம்மாதிரிப்படங்களில் ஒவ்வொரு குறிப்பிட்ட மக்களதும் கலாச்சாரத்தில் அவரவரது கலாச்சாரப் பிரபஞ்சத்தின் நிகழ்வுகளில், ஒரு தர்க்கத்தை அவதானிப்பது என்பது மானுடவியலாளர் லெவி ஸ்ட்ராஸின் தென் அமெரிக்க பூர்வகுடி மக்களின் தொன்மங்கள் பற்றிய ஆய்வுக்குப்பின் அதிகரித்துவருகிறது. சுழற்பாதை படம் பல்வேறு கலைநிகழ்வுகளில் அது பம்பரம் சுற்றதல், ராட்டினம் சுற்றுதல், கிண்ற்றுக்குள் மோட்டார்பைக் விடுதல் என எல்லா நிகழ்வுகளிலும் எவ்வாறு சுழல்பாதை ஒரு அம்சமாக இருக்கிறது என்பதை ஒப்பீட்டளவில் நிறுவுகிறது. வாழ்வு ஒரு சுழல்பாதையென்றோ, எமது விதி ஒரு சுழல் பாதையென்றொ> எமது எதிரக்ாலம் ஒரு சுழல்பாதையென்றோதான் நாம் ஒரு கலாச்சாரம் எனும் அளவில் அணுகுகிறோம் என இதனை வியாக்யானப்படுத்தலாம்.

அடுத்ததான எமது கீழைத்தேய வழிபாட்டிலும் ஆப்ரிக்க வழிபாட்டிலும் வன்முறையும>; வலிய நாம் அதனை நம் உடலின் மீது ஏற்படுத்திக் கொள்தலும் ஒரு அம்சமாக இருக்கிறது என்பதை மேற்கத்தியர்களும் அமெரிக்கர்களும் மானுடவியல் ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள்.

பிரெஞ்சுக்காரரான டாசேட் பாலுறவு உச்ச சந்தோஷத்திற்கும் வன்முறைக்கும் உறவைக்கண்டார். அவரது படைப்புக்களை அடியொற்றி இப்போது மேற்கிலும் அமெரிக்காவிலும் முழநீளத் திரைப்படங்களும் நுாற்றுக்கணக்கில் ஆவணப்படங்களும் உருவாகிவருகிறது. உடல்சித்திரவதையில் பாலுறவு இன்பம் காண்கிற நிலையங்களில் காசு கொடுத்து இன்று கனவான்கள் இன்பம் துய்ப்பதையும் இங்கு ஞுாபகம் வைத்துக் கொள்வது நல்லது. காரணங்கள் நோக்கங்கள் வேறு வேறாயினும் சுயசித்திரவதை மூலம் இன்பம் அல்லது மீட்சிநிலையை, விடுதலையை அடைவதற்கான சமூக உளவியல் பின்னணியை இம்மாதிரிப்படங்கள் சித்தரிக்கின்றன.

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதி; மக்களிடையில் இன்று எப்போதும் இல்லாத அளவில் தீ மிதித்தலும் காளிவழிபாடும், அலகு குத்திக்கொள்தலும் அதிகரித்து வருகிறது என்கிற விஷயத்தை காளியின் நடனம் (னயெஉந ழக மயடை) எனும் மானுடவியல் சார்ந்த விவரணப்படத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார் ஒரு அமெரிகக மானுடவியலாளர். இப்படம் லண்டன் சானல் நான்கு தொலைக்காடசி வரிசையில் பல்வேறு நாட்டுக் கலாச்சாரங்கள் பற்றிய படவரிசையில் காண்பிக்கப்பட்டது. இப்படத்தில் வன்முறைக்கான காரணமாக தம்மை தீ மிதிப்பில் ஆழ்த்தி சாட்டையில் அடித்துக் கொண்டு அலகு குத்திக் கொண்டு, தம்மை மக்கள் வருத்திக் கொள்வதற்கான காரணமாக, இன்று ஈழத்தில் அதிகரித்து வரும் சொந்தங்கள் காணாமல் போதல், அவர்களைக் கண்டுபிடிக்க இயலாத ஆற்றாமை போன்றவற்றிலிருந்தான வலி நீக்கமாகவே, வலியை ஏற்கிறார்கள் என அப்படத்தின் அறுதிச் செய்தி சொல்கிறது. வன்முறை மிகுந்த சமூகத்தில் வ்னமுறைக்கு எதிரான உணர்வை தம்மீது திருப்பிக்கொள்வதன் வழி மக்கள் விடுதலையை எய்தியதாகக் கருதுகிறார்கள என்கிறார் அவ்விவரணப்பட இயக்குனர்.

சினிவாசனின் படங்கள் இவ்விழா நிகழ்வுகள் குறித்த எந்தவிதமான விசாரனைக்கோ வெகுஜனங்களுக்கிடையிலான தம்தம் காரணஙுகள் கொண்ட கருத்துரீதியிலான ஊடாட்டத்தையோ நோக்கி நகரவில்லை. அவரது படங்கள் வெறுமனே நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது. இப்படத்தை மேற்கில் புலம்பெயர்ந்த சிலர் பார்த்தபோது தமது கடந்த காலத்திற்குத் திரும்பிப்; போன ஒரு அனுபவம் நேர்ந்தது என்றார்கள்.

ஒரு வகையில் நகரமயமாகிக் கொண்டிருக்கும் நம்காலத்தில் பின்திரும்பிப் பாப்பதாகவும், நனவிடை தோய்தலாகவும் இப்படங்கள் இயங்குகிறதோ தெரியவில்லை. எவ்வாறாயினும் சீனிவாசனின் பண்டிகை பற்றிய இப்படம் பதிவுகளை மட்டுமே செய்கிறது. வியாக்யானங்களை பார்வையாளனுக்கே முற்றிலும் விட்டுவிடுகிறது.

**

விழகளை மூடுங்கள் ஒரு அந்தகப் பள்ளியில் எடுகப்பட்ட படம். இப்படம் இரண்டு தளங்களில் இயங்குகிறது. அவர்களது வாழ்வை மறை¢ந்திருக்கும் மனிதனாக இருந்து காமெரா பதிவு செய்கிறது. இந்த வகையில் ஜீவன் ததும்பம் அவர்களது அன்றாட வாழ்வு பல இடங்களில் கவிதையின் நுட்பத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக காமெரா கையாள்பவர்களின் பிரசன்னம் அறிவிக்கப்பட்டு அந்தகக் குழந்தைகளினுடனான உரையாடலின் வழி பல விஷஙுங்களைப் படம் பதிவு செய்கிறது.

முதல் தளத்தில் இடம் துாரம் குறித்த அதி பிரக்ஞைபூர்வமான தர்க்கத்துடன் இயங்கும் குழந்தைகளின் நடவடிக்கை பதியப்படுகிறது. அவர்களுக்கிடையிலான ரகசியமான அந்நியோன்யமான சநதோஷத் தருணங்கள் பதியப்படுகிறது. விளையாட்டுகள் பாட்டுகள் எனப் பதியப்படுகிறது. அந்தக் குழந்தைகள் கதை சொல்கின்றன. பாட்டுப்பாடுகின்றன பொறுப்புடன் செஸ் விளையாடுகின்றன. இதனது நீட்சியாக இர்ண்டாவது கட்டமாக உரையாடல் நிகழ்கிறது. இந்த உரையாடல் அழகியலின் உச்சமாக அவர்களது கற்பனைகள் சிறகடிக்கும், இடங்கள். ஒரு பேய் வருவது, சமைப்பது, தங்களைக் கண்டதும் அது ஓடிப்போய்விடுவது என அற்புதமான படைப்பாற்றலுடன் அந்தகக் குழந்தைகளின் கதை விரியும் தருணம் அந்த இடம்.

சில காட்சிகள் சொல்லப்பட்டும், சில காட்சிகள் சொல்லப்படாமலும் எடுத்தாட்கொண்ட இரண்டு நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும். ஒரு பையன் ரொம்பவும் இயல்பாக மற்ற பையனுக்குத் தலைவாறி விடுகிறான். பின் தலையையும் முடிக்கற்றை அமைப்பையும் தடவித்தடவித் தன் நண்பனுக்குப் படிய வாரிவிடுகிறான் சிறுவன்.. இந்தச் சம்பவத்தில் நட்பும் தோழமையும் அடுத்த மனிதன் மீதான வாஞ்சையும் அந்தக நிலையையும் தாண்டிய மனிதத்துடன் செறிவுடன் வெளியாகிறது.

இன்னொரு காட்சி வெள்ளையாகப் பவுடர் அப்பிய அந்தகக் குழந்தையின் முகம் கேமெராவைத் தனக்கு முன்னான வெட்டவெளிக்காற்றில் துளாவித் துளாவி, முன்னும் பின்னும் போகிறது. அந்த முகத்துக்கு, தான் காமெரா முன்னால் இருக்கிறோமா, தான் படம் எடுகப்படுகிறோமா என்பது நிச்சயமில்லை. அந்தப்படத்தைத் தான் பாரக்கவும் போவதில்லை என்பது அந்தப் பிஞ்சு முகத்துக்கும் நிச்சயமாகத் தெரியும். படம் பிடிக்கப்போவது முன்பே சொல்லப்பட்டதால், அந்த முகம் தான் தீிருத்தமாக வரவேண்டும் என அக்கறையுடன் காமெராவைத் தேடித்திரிகிறது. இச்சம்பவம் ஒரு மிகக் கொடுமையான சம்பவம். யாருக்காக இந்தப்படம் எடுத்தே தீர வேண்டும் ? காமெரா வெறுமனே கத்தியாக ஆகிப் போய்விடுகிற, மனத்தை அறுக்கும் சம்பவம் இது. இந்தக் காட்சிக்குப்; பொறப்பேற்க வேண்டியவனும்> இக்காட்சியைக் கட்டுப்படுத்துகிறவனான இயக்குனர்தான். மனித வலியையைவிடவும் அம்மனிதனைச் சடமாக்கிய ஒரு துயர நிகழ்வு இச்சம்பவம்.

கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு பறவையுின் லயத்துடன் பாட்டு அடிகளுடன் இயங்கும் சிறுவனொருவன் சிறகு விரிக்கும் காட்சி> பரந்த மைதாணத்தின் மத்தியில் இரவில் தனித்து நின்றபடி தனக்குத்தானே ஆன லயத்துடன் மாணவனொருவன் அடிவைத்து ஆடும் காட்சி போன்றவைகளோடு ஒப்பிட இந்தச் சம்பவம் மனிதத்தை இழந்த அல்லது மனிதம் மறுத்த ஒரு சம்பவத்தைக் காமெராவுக்குள் சுருட்டிய சோகம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

*

சிதைவுகள் ஒரு புராதனக் கோயிலின் இடி;பாடுகளையும் சிதைந்த காதலொன்றையும் மொழி பிம்பங்கள் என ஒப்பீட்டு தளத்தில் முன்வைப்பதன் வழி> அது மனதிலும் வரலாற்றிலும் விட்டுச் சென்றிருக்கம் புராதன ஜீவித்தலையும் இடிபாட்டையும் பாசத்தையும்> மீட்கமுடியா அழிவையும் எழுப்பிச் செல்கிறது. மட்கிய வடிவிலேயே இருக்கும் எலும்புக் கூடுகள்> இடிந்த கோயில் சுவர்கள்> அந்தரத்தில் தொங்கியபடிக் கூட்டமாகச் சதா சிறகடித்துக் கொண்டிருக்கும் வெளவால்கள்> அந்தக் கோயில் வெளியுலகிற்கு வேண்டுமானால் இடிந்து போனதாக கைவிடப்பட்டதாக உயிரற்றதாக கடந்த காலத்திற்கு உரியதாகத் தெரியலாம்> ஆனால் அதற்குள்தான் எத்தனை முரண்பட்ட அம்சங்கள் — காமுறவைக்கும் முலைகள் நிமிர்ந்த பெண்சிலைகள்> கற்களின் இடையில் துளிர்க்கும் செடிகள்> சிதறிய எலுமபுக் கூடுகள்> சதா சிறகோசை எழுப்பும் வெளவால்கள்> சு+ரிய ஒளி ஊடுறுவும் சுவர் இடிபாடுகள>. அழிவு என்பதற்குள் உயிருடன் இருக்கும் எத்தனையோ அம்சங்கள். இப்படித்தான் உறவும காதலும் முடிந்து போவதாக> முடித்து வைக்கப்பட்டதாக ஊராரின் கவனத்திற்கு முற்றிலும் அற்றதாகத் தோன்றலாம். ஆனால் நினைவுகள் இருக்கிறது. கசப்பு பிரிவு அழிவு வேதனை நிராகரணம் என்பதற்கு அப்பாலும் நினைவுகள் இருக்கிறது. கோயில் எவ்வளவு புராதனமானதோ அவ்வளவு புராதனமானது காதலின் நினைவுகளும்.

விவரணப்படத்திலும் சரி குறும்படத்திலும் சரி காட்சிகளின் சிக்கனமும் பிம்பங்களின் சிக்கனமும் கையாளப்பட வேண்டியது மிக முக்கியமான அம்சமாகும். ஓஐ முழநீளப்படத்தினோடு ஒப்பிட> ஒரு பிம்பம் எடுத்துக் கொள்ளும் காலம் இடம் என்பது விவரணப்படத்திலும் குறும்படத்திலும் கண்ணிமைக்கும் நேரத்துக்கும் கொஞ்சம்தான் அதிகமென்று சொல்லலாம். அரசியல் படத்தில் கருத்தை வலியுறுத்துவதற்காகத் திரும்பத்திருமப இடம் பெறும் பிம்பங்கள்> மனித உறவு சார்ந்த சித்திரிப்பிற்குப் பொருத்தமில்லாமல் போகலாம். நதியின் மரணத்தில் திரும்பத்திரும்ம இடம் பெறும் ஆற்றங்கரைக் கொலைக் காட்சிகள் அவ்விரணப்படத்திற்கு ஒரு கருத்தொருமையையும் தொடர்ச்சியையும் தருகிறது. ஆனால் சிதைவுகளில் திரும்பத் திரும்ப வரும் சில பிம்பங்கள் பொறுத்தமற்றவை. காதல் ஒரு சம்பவமோ நிகழ்வோ அல்ல. அது ஒரு உணர்வு. அது ஒரு கணம் போல் மறுகணம் இருப்பதில்லை. அதில் ஒவ்வொரு கணமும் ஒரு முழுமை. இவ்வகையில் சிதைவுகள் காட்சிகளில் திரும்பத் திரும்பவும் இடம் பெறும் சில பிம்பங்கள் சலிப்பைத் தருகிற நிலைக்கு நம்மைக் கொண்டு போகிறது.

சிதைவுகள் பாணிப்படத்திற்கு தமிழ்சினிமா சரித்திரத்தில் அதனது வரலாற்றில் முன்னோடிகள் என்பது இல்லை. இவ்வகையில் தமிழில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான சோதனை முயற்சி இப்படம். இலக்கியம் குறித்து சதா அதிகம் பேசிக் கொண்டிருப்பவர்களின் கவனத்துக்குள் இப்படம் வராமல் போனதும் ஆச்சர்யமாக இருக்கிறது. சீனிவாசனது இதுவரைத்திய படங்களில் மூன்று கட்டுக் கோப்பான படங்களை என்னால் சொல்லமுடியுமானல், அரசியல்வாதிகள் பத்திரிக்கையாளர் நேர்முகம் தவிர்த்த நதியின் மரணம், விழிகளை மூடுங்கள் அடுத்ததாகச் சிதைவுகள் போன்ற படங்களைத்தான் சொல்லமுடியும்.

ஏஐ

சீனிவாசன் சினிமாவை வாழ்வாகவே வாழ்கிறவர். ஜான் ஆப்ரஹாமினால் ஆகர்ஷிக்கப்பட்டவர். கலை இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். தொடர்ந்து சினிமாவில் நடக்கும் சோதனை முயற்சிகள் தொடர்பாக, ஸ்கேன்டிநேவிய நாட்டு டாக்மா விவரணப்பட முழநீளப்பட இயக்கங்கள் உள்பட அவதானித்து வருபவர். அவருக்கு வாழ்வு குறித்த தத்துவச்சார்புகள் இருக்கிறதைப் போலவே அரசியல் சார்புகளும் இருக்கிறது.

தத்துவச்சார்பும் அரசியல்சார்புமே கலைஞனை இடையறாது இயங்கச் செய்யும் சக்திகள். சீனிவாசனின் அனைத்துப் படங்களுக்குமே அடிநாதமான பண்பாக இருப்பது பிற மனிதர் வலியுணர்தலும் அதைப் பரந்து பட்ட உலகத்தின் முன் வைத்தலுமே. சில படங்களில் அவரது நோக்கம் சிதறிப்போனதற்கான காரணங்களாக படத்தயாரிப்பாளர்களும், குறிப்பிட்ட படத்திற்காக நிதி ஆதாரம் தருபவர்களுமாக இருக்கலாம். உதராணமாக தீண்டத்தகாதவர் தேசத்தின் அரசியல் சார்பு நிலை, பட்டின் பாதையில் மானுட தரிசனமில்லாத தொழில்துறைப்பார்வை¢ போன்றவற்றுக்கான காரணங்களாக அதைக் காணமுடியும்.

கடந்த பத்தாண்டுகளில் உருவான தமிழ் குறும்பட விவரணப்பட வரலாற்றில் தோன்றிய ஒரு முக்கியமான விவரணப்பட இயக்குனராகச் சீனிவாசனைத் தயக்கமின்றி நம்மால் சொல்லமுடியும். விவரணப்படங்கள் என்பது நிச்சயமாகவே ஒரு அரசியல் வரலாற்றுக் கடமையை ஆற்ற முடியும். இன்னும் சினிமாவின் ஆதிக்கம், அரசியல் ஆதிக்கத்துடனும் அதிகாரத்துடனும் மிகப்பலமாக பிணைக்கப்பட்டிருக்கும்; தமிழ்ச் சு+ழலில் அரசியல் விவரணப்பட இயக்குனராகப் பரிமாணம் பெற்றிருக்கும் சீனிவாசனின் படங்கள் இன்றைய அரசியல் உரையாடலில் தவிர்க்க இயலாமல் இடையீடு மேற்கொள்ளும் என்பது திண்ணமாகும்.

இறுதியாகச் சொல்வதானால் சீனிவாசனின் மிக நல்ல படங்களின் கட்டுக்கோப்பான வெளிப்பாட்டுக்கு அவரது குழவில் இருக்கிற அவரது படத்தொகுப்பாளர் ஜோன்சன் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார் என்பதை இந்தச் சந்தரப்பத்தில் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

==

yamunarn@hotmail.com

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்