சினுவா அச்சேபே எழுதிய ‘விஷயங்கள் உதிர்ந்து விழுகின்றன ‘ நாவல்

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

Chinua Achebe (1930-) and ‘Things Fall Apart ‘ novel


நாவலாசிரியரும் கவிஞருமான சினுவா அச்சேபே, மிகவும் முக்கியமான வாழும் ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் ஒருவர். இப்போது ஆங்கிலத்தில் எழுதிவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவராகவும் கருத்தப்படுகிறார்.

ஆல்பர்ட் சினுவாலுமோகோ அச்சேபே என்ற மூலப்பெயர் கொண்ட சினுவா அச்சேபே கிரிஸ்தவ மதபோதகர்களான பெற்றோருக்கு ஓகிடி கிராமத்தில் இக்போலாந்தில் கிழக்கு நைஜீரியாவில் பிறந்தார். முதல் படிப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும், காலனியாதிக்கத்தின் கீழும், இக்போ பாரம்பரியம் சுற்றியும் இருக்க வளர்ந்தார். இபடான் பல்கலைக்கழகத்தில் இலக்கியமும் மருத்துவமும் பயின்றார். படிப்பு முடித்ததும், லாகோஸ் நகரத்தில் நைஜீரிய ஒலிபரப்பு நிறுவனத்தில் வேலைபுரிந்தார். Things Fall Apart (1958) என்ற ‘விஷயங்கள் உதிர்ந்து விழுகின்றன ‘ என்ற நாவல் அவரது முதல் நாவல். இது சுமார் 45 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது 80 லட்சம் பிரதிகள் உலகெங்கும் விற்றிருக்கிறது.

1950இல் ஆரம்பித்து, நைஜீரிய மக்களின் வாய்மொழி இலக்கியம் சார்ந்த நைஜீரிய பழங்குடிகளின் பாரம்பரியத்தை ஆதாரமாகக் கொண்ட புதிய நைஜீரிய இலக்கிய இயக்கத்துக்கு மையமாக இருக்கிறார். பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதினாலும், நைஜீரிய மக்களின் வார்த்தைகளையும், அவர்களது கதைகளையும் தன்னுடைய உருவாக்கங்களுக்குள் இணைத்து எழுத முயற்சித்து வருகிறார்.

பையாபரன் போரின் போது நடந்த உள்நாட்டுக் கலவரத்தின் போது தன் வேலையை 1966இல் விட்டார். ‘மக்களின் தலைவன் ‘ என்ற அவரது நாவல் நைஜீரியாவின் முதலாவது ராணுவ புரட்சிக்கு காரணமாக இருந்தது என்று நினைத்த போர்வீரர்களிடமிருந்து ஆச்சரியமாக உயிர்தப்பினார். நைஜீரியப் பல்கலைகழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளராக பதவி பெற்று தனது கல்விசார்ந்த வேலையை அடுத்த வருடத்திலிருந்து தொடங்கினார்.

நைஜீரிய கவிஞரான கிரிஸ்டோபர் ஓகிக்போ அவர்களுடன் இணைந்து அதே வருடம் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். ஓகிக்கே என்ற நைஜீரிய இலக்கிய பத்திரிக்கைக்கு ஆசிரியரானார். இக்போ இன மக்களின் கலாச்சார வாழ்க்கையை பதிவு செய்யும் ஆர்வத்தோடு இவா ன்டி இபோ என்ற இருமொழிப் பத்திரிக்கை ஒன்றை தோற்றுவித்தார். 1985இல் சிறப்பு பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். உலகமெங்கும் உள்ள பல்கலைக்கழங்கள் கொடுத்த கெளரவ டாக்டரேட் விருதுகளோடு, மஸாசூசெட்ஸ் பல்கலைக்கழத்திலும் கனெக்டிகட் பல்கலைக்கழத்திலும் பயிற்றுவித்தார். நைஜீரியாவின் மிக உயர்ந்த விருதையும் பெற்றார். புக்கர் பரிசுக்கு அவரது ‘ஸவான்னாவின் எறும்புகுன்றுகள் ‘ (Anthills of the Savannah) என்ற நூல் பரிந்துரைக்கப்பட்டது.

1960லிரிந்து அச்சேபே நைஜீரிய அரசியலில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது பெரும்பாலான நாவல்கள் நைஜீரியாவின் சமூக அரசியல் பிரச்னைகளைப் பேசுகின்றன. காலனியாதிக்கத்தின் காரணமாக நடந்த காயங்களையும் அதன் பக்க விளைவுகளையும் பேசுகின்றன. இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். பார்ட் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு இன்னும் இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படாதது பலர் குறைக்கூறும் ஒன்று.

‘விஷயங்கள் உதிர்ந்து விழுகின்றன ‘ என்ற நாவல்

(Things Fall Apart)

சினுவா அச்சேபே எழுதிய முதல் நாவல் அவருக்கு நைஜீரிய பழங்குடியினர் கலாச்சாரத்தில் இருந்த ஆர்வத்தை தீவிரப்படுத்தியது. அவர் நைஜீரியாவின் ஓக்டி கிராமத்தில் வளர்ந்தவர். இவரது தந்தையார் கிரிஸ்தவ மதபோதக பள்ளியில் ஆசிரியராக இருந்தார். கிரிஸ்தவ மதம் எப்படி இக்போ மக்களுக்கு நல்லதும் அழிவும் கலந்த சிக்கலான கலவையை அளித்தது என்பதை நேரடியாகப் பார்த்தார். 1950இல் புது இலக்கிய இயக்கம் தோன்றி வளர்ந்தது. ஐரோப்பிய இலக்கிய முறைகளைக் கையாண்டு, நைஜீரிய வாய்மொழி பாரம்பரியதிலிருந்து வரும் கதைகளை மறு உற்பத்தி செய்து புதிய இலக்கியமாக, ஆங்கிலத்தில் எழுதப்படும் ஆப்பிரிக்க இலக்கியமாக உருவாக்கியது இந்த இலக்கிய இயக்கம். 1958இல் வெளியிடப்பட்ட இந்த நாவல் 20ஆம் நூற்றாண்டு ஆப்பிரிக்க நாவல்களில் தலையானதாகக் கருதப்படுகிறது.

நாவல் 1890இல் அமைக்கப்பட்டிருக்கிறது. இது வெள்ளைமனிதன் நைஜீரியாவுக்கு வந்த காலகட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் இந்த நாவல், பெரும்பாலான ஐரோப்பிய இலக்கியங்களில் ஆப்பிரிக்கர்கள் குரங்குகளைப்போலவும், புத்தியற்ற காட்டுமிராண்டிகள் போலவும் காட்டப்பட்டதற்கு எதிர்ப்பு போல இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் இறுதியில் வரும் மாவட்ட கமிஷனர் வெள்ளையர்கள் எவ்வாறு ஆப்பிரிக்கர்களைப் பார்த்தார்கள் என்பதை மிகத்தெளிவாக வெள்ளையர்களுக்கே அடையாளம் காட்டுகிறது. இவர் ஆப்பிரிக்கர்களை காட்டுமிராண்டிகள் என்றும், இக்போ இன மக்களின் வாழ்க்கையில் இருக்கும் சிக்கலான கலாச்சார வளமையை உதாசீனம் செய்தும் பேசுகிறார்.

நேராகக் கதை சொல்லாமல், பல விஷயங்களைச் சொல்வது அச்சேபே அவர்களது முக்கியமான உபாயம். நாவலின் ஆதார கதை ஒக்வோங்கோ-வின் சோகக்கதையாக இருந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம், அதனை விட்டுவிட்டு பக்கத்து சிறுகதைகளையும், மூன்றாம் நிலை நிகழ்ச்சிகளையும் பேசுகிறார். நாவல் ஒரு வகையில் விவரணப் புத்தகம். ஆனால், அச்சேபே அவர்களது உயிரோட்டமுள்ள கதை சொல்லும் முறையால், இது ஒரு மானுடவியல் பாடப்புத்தகத்தை படிப்பது போலல்லாமல் இருக்கிறது. இக்போ பழங்குடியினரை அவர்களது கண்களாலேயே பார்க்க அனுமதிக்கிறது. அவர்கள் தங்களது பல்வேறு பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் நிகழ்த்துவது அவர்களது வாழ்க்கைக்கு எப்படி முக்கியமானது என்பதை காட்டுகிறது.

இக்போ பழங்குடியினரை மாபெரும் சமூக நிறுவனங்கள் கொண்டவர்களாக அச்சேபே வரைகிறார். அவர்களது கலாச்சாரம் வளமையானது, எல்லோர் மனத்திலும் மரியாதையை தோற்றுவிக்கும் அளவுக்கு சமூகப் பொறுப்பு வாய்ந்ததும் ஆகும். அவர்களது சடங்குகளும், சட்டங்களும் எல்லோருக்கும் நீதியையும், சமத்துவத்தையும் கொடுக்கும் ஒன்று. மக்கள் அரசரால் நிர்வகிக்கப் படாமல், எளிமையான ஜனநாயகமுறையால் நிர்வகிக்கப்படுகிறார்கள். ஊரின் எல்லா ஆண்களும் ஒரு இடத்தில் குழுமி எல்லோரும் ஒப்புக்கொண்டு முடிவெடுக்கிறார்கள். ஆனால், ஜனநாயக நிறுவனங்களை உலகெங்கும் பரப்பப்போவதாகக் கூறிக்கொண்டு வந்த ஐரோப்பியர்களே இப்படிப்பட்ட மக்கள் கூட்டங்களை நடக்கவிடாமல் செய்ய முயற்சி செய்கிறார்கள். இக்போ மக்களும் சமூக அந்தஸ்து நோக்கிய வளர்ச்சியையும் அங்கீகரிக்கிறார்கள். மனிதர்கள் தங்கள் தந்தையரின் சொத்து சார்ந்து மரியாதை செய்யப்படுவதில்லை. உயர்ந்த மரியாதையும் பதவியும் எல்லா சுதந்திர இக்போவுக்கும் அடையக்கூடிய ஒன்று என்று அச்சேபே வலியுறுத்துகிறார்.

ஆனால், இக்போ சமூகத்தில் இருக்கும் அநியாயங்களை தன் எழுத்துக்களில் வரையவும் அச்சேபே தயங்குவதில்லை. அதேகாலத்திய விக்டோரிய இங்கிலாந்து போன்றே, இக்போ சமூகமும் தந்தை வழிச் சமூகமாக இருக்கிறது. இரட்டைக்குழந்தைகளுக்கு பயப்படுகிறார்கள். அப்படிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை காட்டில் போட்டு பட்டினியில் கொன்றுவிடுகிறார்கள். வன்முறை அவர்களுக்குத் தெரியாததல்ல. ஆனால், ஐரோப்பியர்களின் அளவுக்கு வன்முறையை அவர்கள் சிந்திக்ககூட இயல்வதில்லை.

ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கர்களை காட்டுமிராண்டிகளாக வரைந்ததை ஓரளவுக்கு எதிர்த்து மறு ஓவியம் தீட்ட விழைகிறது. ஆனால் இந்த மீட்டெடுப்பும் ஞாபகத்திலிருந்தே வருகிறது. அச்சேபே பிறப்பதற்கு முன்பே, வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவுக்குள் வந்து அதன் கலாச்சாரத்தையும் மொழியையும் ஆன்மீகத்தையும் இன்னும் பல கலாச்சாரக்கூறுகளையும் அழித்துவிட்டார்கள்.

***

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்