கணினி மேகம் Cloud Computing – Part 3

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

சித்ரா சிவகுமார், ஹாங்காங்


3

வெளியூரொன்றில் தாங்கள் விற்கும் பொருள் குறித்து பிரசென்டேஷன் தர இருவர் சென்றிருந்தனர். கிளப்ப வேண்டிய நேரத்தில் அவர்களுக்கிடையேயான உரையாடல்:

“தேவா.. என்ன பிரசென்டேஷனுக்குத் தேவையான சீடியை எடுத்து வச்சிக்கிட்டையா?”

“இதோ எடுத்து வைக்கிறேன்?”

தேவா தன் பெட்டியில் தேடினான். அது வைக்கப்பட்டிருந்த இடத்தில் இல்லாது கண்டு பயந்து போய் பெட்டி முழுக்க தேட ஆரம்பித்தான். பெட்டியைத் துழாவுவதைக் கண்ட சங்கர், “என்ன தேவா.. என்னத்தை அப்படித் தேடறே..”

“சீடியத்தான். அதக் காணல.. இப்ப என்ன செய்யறது” என்று வருத்தப்பட்டான்.

“காணலையா.. எடுத்து வைச்சது ஞாபகம் இருக்கா?”

“நிச்சயமா எடுத்து வச்சேன். ஆனா இப்ப எங்கேன்னு தெரியல.. போச்சு போச்சு.. எல்லாமே போச்சு.. இப்ப பிரசென்டேஷனை எப்படிச் செய்யறது?” என்று தலைகுனிந்தான்.

“விடு.. சீடியில்லைன்னா பரவாயில்ல..”

“சீடியில்லாமே பிரசென்டேஷனா?” என்று அதிர்ந்தான்.

“பிரசென்டேஷன் பவர்பாயின்ட் பைலை நான் மேகத்தில சேவ் செய்திருக்கேன். நாம் போற இடம் இன்டர்நெட் கனெக்ஷன் இருக்கற இடங்கறதால எந்தப் பிரச்சனையுமில்ல.. கவலைப்படாதே!” என்று ஆறுதலளித்தான் சங்கர்.

அதிகம் பயணம் மேற்கொண்டு கோப்புகளையும் ஆவணங்களையும் சீடிக்களையும் கணினியையும் சுமந்து கொண்டு அலையாமல், செல்லும் இடத்தில் இருக்கும் கணினியைக் கொண்டே வேண்டியத் தரவுகளைப் பெற்று பணியினைச் செய்து திருப்புவோருக்கு மேகம் ஒரு வரப்பிரசாதம்.

மேகக் கணிப்பால் பல வேலைகளை எளிதாகச் செய்யலாம். மேகக் கணிப்பால் யார் யாருக்கு லாபம்?

குழுவாகச் செயல்படுபவர்களுக்கு அதிக லாபம். எந்தவொரு பணியையும் ஒருவர் மற்றவருக்கு கூட்டம் போட்டு எடுத்துக் கூற வேண்டிய அவசியமில்லாமல் அனைத்துத் தகவல்களையும் இணையம் வழியாகத் தரலாம். ஆவணங்களைப் பொதுவாக்கி, அவ்வப்போது இருக்கும் மாற்றங்களை உடனுக்குடன் காணும்படிச் செய்யலாம். ஒரு நிறுவனத்திற்குள் மட்டுமில்லாமல், ஒரு நாட்டிற்குள் மட்டுமில்லாமல் இந்தக் குழு உலகம் முழுவதும் பரந்து விரிந்திருந்தாலும் இது சாத்தியமாகும்.

சிக்கனத்தில் குறியாக இருப்போருக்கு இதில் லாபம் அதிகம். வன்பொருள், மென்பொருள் இரண்டிலும் கணிசமாக மிச்சம் பிடிக்கலாம். இணையத்தில் இருக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி பணியைச் செய்ய முடிந்தால், தனியாக மென்பொருளை வாங்கி தங்கள் சொந்தக் கணினியில் நிறுவ வேண்டிய அவசியமிருக்காது. இப்போது பல பல்கலைக்கழகங்கள் மென்பொருள் முதலீட்டைக் குறைக்க கூகுள் பயன்பாடுகளை பயன்படுத்த முயன்று வருகின்றன.

தகவல் நுட்பத் துறையினர், நிர்வாகத்தின் செலவுகளைக் குறைக்க, மேகக் கணிப்பை நாடுகின்றனர். சக்தி வாய்ந்த பெரிய கணினி மையங்களுக்குப் பதிலாக, இணையான சக்தியைத் தரும் மேகச் சேவையகங்களைப் பயன்படுத்தினால், செலவை கணிசமாகக் குறைக்கலாம் என்ற எண்ணம் கொண்டு பலரும் செயல்பட்டு வருகின்றனர்.

தேவை அதிகரித்துக் கொண்டே போகும் பயனர்களுக்கும் இது வரப்பிரசாதம். சேமித்து வைக்கும் ஆவணங்கள் அதிகரிக்க அதிகரிக்க, வன்பொருள் தேவை அதிகமாகும். அதற்கான செலவுகளையும் செய்ய வேண்டும். அத்தகையவர்கள் மேகச் சேவையைப் பயன்படுத்தலாம்.

தற்போது மேகத்தில் எத்தனை புகைப்படங்களும் வீடியோப்படங்களும் இருக்கின்றன என்று கணக்கிட்டுக் கூற யாராலும் முடியாது. இந்த டிஜி;டல் உலகில் டிஜிடல் படங்கள் கோடிக்கணக்கில் மேகத்தில் கொட்டிக்கிடப்பதற்குக் காரணம் ஒரு பைசா செலவில்லாமல் நம்மால் அந்தப் படங்களை மேகச் சேவையகத்தில் சேமித்து வைக்கலாம் என்று நிலை ஏற்பட்டதால் தான். அதேப் போன்று தான் யூடியூப்பில் இருக்கும் வீடியோப்படங்களும்.

மேகத்தைத் தொட முடியாதவர்கள் யார் யார் என்றும் தெரிந்து கொள்வோமே!

இணையத் தொடர்பு கிட்டாத இடத்தில் வாழ்பவர்களுக்கு மேகம் பயனற்றது.

இணையத் தொடர்பை நாடாமல் தனி நபர் கணினியை மட்டுமே பயன்படுத்துவோர்க்கும் இது பயனற்றது.

தரவுகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்க்கும் இது பயனற்றது. சேமிக்கப்பட்டு இருக்கும் தரவுகளும் ஆவணங்களும் பற்பல பெயர் தெரியாத கணினிகளில் பாதுகாக்கப்படுவதாலும், மற்றாரின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாலும், தரவுகளின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படலாம். அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்படலாம்.

தற்போது இருக்கும் பயன்பாடுகளுடன் மிகுந்த ஒட்டுதல் உள்ளவர்களுக்கும் மேகம் பயன்படாது. மைக்ரோசாப்ட், மேக் மென்பொருள்களுக்கு அடிமையானவர்களால் இணையப் பயன்பாடுகளைப் பயன்படுத்துதல் சற்றே கடினமானது. அவற்றில் இருக்கும் மிகச் சிறந்த செயல்பாடுகளும் அம்சங்களும் இன்னும் தற்போதைய இணையப் பயன்பாடுகளில் வரவில்லை. அதனால் அத்தகையோருக்கு மேகம் பலனளிக்காது.

பொதுவாக மேகம் என்ன என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். மேகம் என்னென்ன சேவைகளைத் தருகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

மேகம் முக்கியமாக மூன்று வகையான சேவைகளைத் தருகிறது.

படம் 3-1

சேவையாக கட்டமைப்பு (இன்பிராஸ்டக்சர் அஸ் எ சர்விஸ் ஐயயளு)
சேவையாக மேடை (பிளாட்பார்ட் அஸ் எ சர்விஸ் Pயயளு)
சேவையாக வன்பொருள் (சாப்ட்வேர்; அஸ் எ சர்விஸ் ளுயயளு)

கட்டமைப்புச் சேவை கணினி வன்பொருட்கள் (சேவையகம், வலை நுட்பம், சேமிப்புக்கலன் மற்றும் தரவு மையத்திற்கான வெளி) தரும் சேவை. இது வளங்களை நிர்வகிக்க இயக்குதளம் மற்றும் மறைமுக நுட்பம் (வெர்சுவல் டெக்னாலஜி) ஆகியவற்றைக் கூடத் தரும்.

கட்டமைப்புச் சேவையில், நுகர்வோர், கணினி வளத்தைப் பயன்படுத்த வாடகைத் தொகையை கட்டினால் போதுமானது. பயன்பாட்டிற்கு ஏற்ப அது அமையும். இன்று அதில் வெற்றிகரமாக செயல்படும் நிறுவனம் அமேசான் நிறுவனம். அது இலாஸ்டிக் கம்பியூட் கிளவுட் இசி2 என்ற வியாபாரத்தில் தங்கள் முத்திரையைப் பதித்து முன்னோடியாகத் திசழ்கின்றனர்.

இசி2 நுகர்வோருக்கு வலையக முகப்பைத் தந்து, தங்கள் மறைமுகச் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கின்றனர். பயன்படுத்தும் நேரத்திற்கு ஏற்ப வளங்களுக்கு தொகை நிர்ணயிக்கப்படுகின்றன. பயனர்கள் தங்களுக்கு வேண்டியதை தொகையைக் கட்டி பெற்றுக் கொள்ளலாம். பயனர் தனக்கு அளித்திருக்கும் வளங்களைக் கூட்டிக் கொள்ளவோ குறைத்துக் கொள்ளவோ செய்யலாம். அதனால் தான் இந்தச் சேவைக்கு இலாஸ்டிக் என்ற பெயரை இணைத்துள்ளனர். எடுத்துக்காட்டிற்கு பயனர் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சேமிப்புக்கலன் அளவை அதிக தரவுகளை ஆய்வு செய்யும் போது, வேண்டிய அளவிற்கு அதிகரித்துக் கொள்ளலாம். பின்னர் ஆய்வு முடிந்ததும் அதைக் குறைத்துக் கொள்ளலாம்.

ஆராய்ச்சிக் கூடங்களில் நடத்தப்படும் மிகப் பெரிய ஆய்வுத் திட்டங்களுக்கு இத்தகைய கூட்டவும் குறைக்கவும் வசதி படைத்த கட்டமைப்பு பெரிதும் உதவும். அறிவியல் மற்றும் மருத்துவத் துறையினருக்கு இது பெரிய வரப்பிரசாதம்.

அடுத்தது சேவையாக மேடை. இந்தச் சேவை கட்டமைப்பிற்கு ஒரு படி மேலே. இது சொல்யூசன் ஸ்டாக் – தீர்வு அலமாரி என்று கூறும் வகையில், ஒரு குறிப்பிட்ட வன்பொருளை உருவாக்க, பயன்பாட்டை (அப்ளிகேஷன்) உருவாக்க என்னென்ன வேண்டுமோ அனைத்தையும் தரும்.

இதன் முக்கியாம்சம், ஒரு பயன்பாட்டை உருவாக்கவும், அதை பரிட்சித்துப் பார்ப்பதற்கும், பின் அதை நிறுவுவதற்கும் மேகத்திலேயே இடம் அளிக்கப்பட்டுவிடும். அமைப்பு வடிவமைப்பு (சிஸ்டம் டிசைன்) தொடங்கி, அமைப்புத் தொடரின் (சிஸ்டம் லைப்சைகிள்) அனைத்து அங்கங்களையும் பணிகளையும் மேகத்தின் துணை கொண்டே செய்து முடித்து விடலாம்.

உருவாக்கப்பட்ட வன்பொருளோ, பயன்பாடோ தேர்வு செய்த சேவையைச் சார்ந்து இருக்கும். சேவை மையத்தை மாற்றும் எண்ணம் கொண்டால், அதனால் பிரச்சினைகள் எழலாம். வன்பொருள் புதிய சேவையகத்தில், மேடை புதிதானதென்பதாலும் பலதரப்பட்ட மாற்றங்களாலும் செயல்பட முடியாது போகலாம். இதைத் தவிர்க்க இப்போது ஓபன் மேடைச் சேவை உருவாக்கப்பட்டு வருகிறது.

கூகுள் ஆப் என்ஜின்(புழழபடந யுpp நுபெiநெ), மைக்ரோசாப்ட் அசர் (ஆiஉசழளழகவ யுணரசந), ஆப்ஜெட், போர்ஸ்.காம் போன்றவை அத்தகையச் சேவையைத் தருகின்றன.

அடுத்தது என்ன? வன்பொருள் சேவை தான்.

இது தொழில் பயன்பாடுகளை நிறுவத் தேவையான சேவையகத்தைத் தருகிறது. இது தற்போது பிரபலமாக இருக்கும் எ.எஸ்.பி (அப்ளிகேஷன் சர்விஸ் பிரொவைடர்) போன்றது. பயன்பாட்டை எந்த நிறுவனத்தினலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கள் தரவுகளை ஏற்றி ஆய்வு செய்து கொள்ளலாம்.

சி.ஆர்.எம் – நுகர்வோர் உறவு நிர்வாகம் (கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மென்ட்) பயன்பாடு இணையகத்தில் பல சேவை நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில்
ஒன்றைத் தேர்வு செய்து நம் நிறுவனத்தின் தரவுகளை அதில் ஏற்றிக்கொண்டு பயன்படுத்தலாம். அதற்காக ஒரு தொகையை கட்ட வேண்டும். நம் தரவுகள் தனியாக சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

இவை வி.பி.என் மறைமுகத் தனிநபர் வலை (வெர்சுவல் பிரைவேட் நெட்வொர்க்) மூலமாகச் செயல்படும். பொது வலையகத்தில் தனிநபர் வலையகம் உருவாக்கப்படுவதே இதன் அம்சம். இது தரவுகளை பத்திரமாக அனுப்பவும் பெறவும் உதவும். யாஹ_ மெயில், லோட்டஸ் லைவ், மைக்ரோசாப்ட் லைவ், ஜொஹோ போன்றவை அத்தகையச் சேவையைத் தருகின்றன.

மேகச் சேவையில் இருக்கும் இந்த மூன்று விதமான உருவங்கள் தான் இன்று பயனர்கள் அனைவரையும் பெரிய உலக உருண்டையில் நெருக்கமாக இருக்கும் தன்மையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

மூன்று சேவைகளையும் மேகச் சேவை பயன்பாடுகள் நிர்வகித்து ஆண்டு செயல்படுவது தான் மேகக் கணிப்பு. நிர்வாக மென்பொருளை உருவாக்குவது எவ்வளவு கடினமான செயலோ அதை விடவும் கோடிக்கணக்கான பயனர்களின் தேவைகளை நிறைவு செய்வது கடினமானது. நாளுக்கு நாள் அவர்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப வலையும் விரிந்து கொண்டே செல்கிறது. இது எங்கு கொண்டு போய் விடும் என்பதை யாராலும் எளிதில் கணித்து விட முடியாது. கற்பனைகள் அனைத்தும் உரு பெற்று வரும் நிலை இன்று.

Series Navigation

சித்ரா சிவகுமார் - ஹாங்காங்

சித்ரா சிவகுமார் - ஹாங்காங்