பாலூட்டும் பூச்சிகள்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


பொதுவாக, பூச்சிகளின் இனப்பெருக்கம் முட்டை வைத்து, குஞ்சு பொரிப்பதுதான் (Oviparous). இந்த முறையில், கலவியை முடித்தபின், பெண்பூச்சிக்குள் அனுப்பப்பட்ட விந்தணுக்கள் பெண்பூச்சியின் முட்டை அணுவுடன் சேர்ந்து கருவுறுதல் நடைபெறும். இந்த கருவுடன், அதன் வளர்ச்சிக்குத் தேவையான உணவுப்பொருள்களையும் வைத்து, மொத்தமாக ஒரு கடின ஓட்டினால் மூடிவிடும். பிறகு, முட்டைகளைக் குவியல் குவியலாகவோ, தனித்தனியாகவோ, நல்ல பாதுகாப்பான இடத்தில் வைக்கும். இந்த இடங்கள், பெரும்பாலும் முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்களின் உணவுப்பொருளாகவோ, அதற்கு அருகிலோ இருக்கும். ஏனெனில், முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் உணவுப்பொருளைத் தேடி, வெகுதொலைவிற்குப் போக இயலாது. ஆக, இந்த Oviparous முறையில், முட்டைகளை வைத்த பிறகு, தாய்க்கும் சேய்க்குமான உறவு எதுவுமேயில்லை.

ஆனால் குட்டி போட்டு பால் கொடுக்கும் (Viviparous) உயிரிகளில் நிலைமையே வேறு. இந்த முறையிலும், கலவியை முடித்தபின், பெண் உயிரிக்குள் அனுப்பப்பட்ட விந்தணுக்கள் பெண் உயிரியின் முட்டை அணுவுடன் சேர்ந்து கருவுறுதல் நடைபெறும். இந்த கருவின் வளர்ச்சிக்குத் தேவையான உணவு ஆதாரம், தாயின் உடலிலிருந்து தொப்புள்கொடி மூலம் அனுப்பப்படும். ஆக, இந்த Viviparous முறையில், தாய்க்கும் சேய்க்குமான தொப்புள்கொடி உறவு குறிப்பிட்ட காலம் வரையிலும் தொடர்கிறது. பெரும்பாலும் குட்டி போட்டு பால் கொடுக்கும், Viviparous முறை, நன்கு பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்குகளில்தான் இருக்கும். ஆனால் அதிசயமாக, Viviparous முறை, ஒரு சில பூச்சி இனங்களிலும் உண்டு.

ஆப்பிரிக்க தூங்கும் வியாதி (African Sleeping Sickness or African trypanosomiasis) என்று ஒரு வியாதி உண்டு. இது புரோட்டாசோவாக்களால் வரும் வியாதி. ஆனால் இந்த புரோட்டாசோவாக்கள் தாங்களாகவே பரவ முடியாது. அதற்கு ஒரு வாகனம் தேவை. அவர்தான் ட்செட்சு ஈக்கள் (Tsetse Flies). இவர் ஆப்பிரிக்க தூங்கும் வியாதி புரோட்டாசோவாக்களால் பாதிக்கப்பட்டபின் , நம்மைக் கடித்தால், நமக்கும், இந்த வியாதி வந்துவிடும். ஆண்டுக்கு 3,00,000 – 5,00,000 ஆப்பிரிக்கர்கள் இந்த வியாதியால் பாதிக்கப்படுகின் றனர். அது என் ன ‘ ‘ட்செட்சு ‘ ‘ ஈ என்கி றீர்களா ? இவர் பறக்கும்போது, ட்செட்சு ட்செட்சு என சத்தம் வரும். எனவே, இப்படி ஒரு காரணப்பெயர்.

இந்த ட்செட்சு ஈக்கள், கி ளாசினா (Glossina) என்ற இனத்தைச் சேர்ந்தது. இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே குட்டி போட்டு பால் கொடுக்கும் பூச்சிகள்தாம்!! இவர்களைக் குட்டி போட்டு பால் கொடுக்கும் பூச்சிகள் என் பதைவிட, பாலூட்டி குட்டி போடும் பூச்சிகள் என் பதே சாலப் பொருந்தும்.

சற்று விரிவாகவே சொல்கிறேனே!!!

மற்ற பூச்சிகளைப் போலவே, ட்செட்சு ஈக்களிலும், கலவியை முடித்தபின், பெண்பூச்சிக்குள் அனுப்பப்பட்ட விந்தணுக்களில் ஒன்று, பெண்பூச்சியின் முட்டை அணுவுடன் சேர்ந்து கருவுறுதல் நடைபெறும். ஆனால் கருவுற்ற முட்டையை வெளியில் வைக்காது. மாறாக, கருவுற்ற முட்டை தாயின் கருப்பையிலேயே வெடித்து வெளிக்கிளம்பும். இப்படி வெளியில் வரும் புழு, தாயின் கருப்பையிலேயே வளர ஆரம்பிக்கும். பாலூட்டிகளில் பிரசவித்த பிறகு, தாயின் மார்பகங்கள் சுரக்குமல்லவா ? அதைப் போலவே, ட்செட்சு ஈக்களிலும், புழு கருப்பைக்கு வந்த பிறகு, கருப்பைக்கு வெளியில் உள்ள பால் சுரப்பிகள் (Milk glands) சுரக்க ஆரம்பிக்கும். இந்த பால் சுரப்பிகளின் நுனி கருப்பைக்குள் திறக்கும். கருப்பைக்கு வரும் புழு, இந்த பால் சுரப்பிகளின் நுனியில் தங்கள் வாயைப் பொருத்திக்கொண்டு, அதிலிருந்து வரும் சுரப்பினை உண்டு வளரும். குறிப்பிட்ட காலக்கெடுவின் முடிவில், புழு (Larva) கூட்டுப்புழு (Pupa) வாகும் தருணத்தில், தாய் சேயை ஈன்றுவிடும். பிறகு, தாய்க்கும் சேய்க்குமான உறவு முடிந்துவிடுகிறது.

அது சரி, ஆண்கள் இல்லாமல் பெண்கள் கருவுற முடியுமா ? முடியும் என் கின்றன பூச்சிகள்!!!

அதைப்பற்றி தொிந்து கொள்ள வேண்டுமா ? …. அடுத்த வாரம்!!

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்