பொறித்துளி வளர்கிறது

This entry is part of 45 in the series 20110227_Issue

சாமிசுரேஸ்


தேசம் விடிகின்றவாயிலில் நின்றோம்
பூக்கள் உதிர்வதாய் சேதிவருகிறதே

ஏ வரலாறே
என்னசெய்யப்போகிறாய்

எம் கதறும் இரத்தத்துளிகளின் வலி
ஈழமண்ணின் குரல்வழையினூடே சிதறுகிறதே
பாருங்கள் எங்கள் கண்ணீரில் வழிவது
ஈழத்தின் உயிர்

இரவின் மத்தியபுள்ளியில்
குரல்வளைத்துண்டின் கதறல் நெஞ்சை அறுக்கிறது
இனத்தின் கடைசித்துரும்புவரை
கருகிக்கொண்டிருக்கிறதே
என் செய்வோம்

பேய்களின் காலடித்தடங்களை உள்வாங்கி
ஈழநிலம் சிதம்புகிறது

இயற்கையின் முகத்தில்
இரத்தத்துளிகளின் கொடூரம்

ஏ உலகமே இன்னும் என்ன செய்ய உத்தேசம்
இனம் கரைந்து முடியும்வரை காத்திருக்கப்பொகிறாயா

ஏல்லாம் முடிந்த பின் வாருங்கள்
தமிழீழச் சாம்பலின் மேல்
நாற்காலிபோட்டு பேச்சுவார்த்தை பாடலாம்

அலைந்து திரிந்த தேசக்காற்றே
எங்கே பதுங்குகிறாய்
அழுகுரலும் மரணஓலங்களும் சிதறிய சதைத்துண்டங்களும்
உனை இறுக்குகிறதோ
பார்
உன் செவிப்பறையிலிருந்து நிண நீர் வடிகிறது

ஓர் மூலையில் இன்னும் காலம் காத்திருக்கிறது
நெருப்புக்குளிருந்து நீரின் மூச்சு
கசியத்தொடங்குகிறது

விடுதலை வரும்
இரத்தத்துளிகளால் இறுகிய இந்த
ஓலங்களின் கருவிலிருந்து
விடுதலையின் பாடல் பிறக்கும்

அறுந்து துடிக்கும் புல்லின் நுனியிலுருந்து
ஆயிரம் வேர்களாய் படர்வோம்
ஏனெனில்
நாம் இயற்கையின் குழந்தைகள்

Series Navigation