புத்தனின் இரண்டாம்வருகை

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

ஹெச்.ஜி.ரசூல்


தான் உட்கார்ந்து ஞானம் பெற்ற
போதிமரத்தடியில்
தூக்குமாட்டிச் செத்துப் போனவர்களைப் பற்றிய
கவலையிலிருந்தான் புத்தன்.
அரசவாழ்வை துறந்தபோதும்கூட
தனக்கு ஞானம் கிடைக்க வாய்த்தது
ஒரு அரசமரம்தானென்ற நினைப்பு
புத்தனை தொந்தரவு செய்தது.
ஒருவார்த்தை கூட சொல்லாமல்
நள்ளிரவில்
தூங்கிக் கொண்டிருந்த யசோதராவை
தன்னந்தனியே தவிக்கவிட்டு கிளம்பிய
புத்தனின் பயணம்
குற்ற உணர்ச்சியால் கசிந்தது.
குழந்தைக்கு தந்த முத்தத்தை
தன்னால்
யசோதராவுக்கு தர முடியாமல் போனதேன்
துக்கமும் கேள்வியும்
புத்தனிடன் இல்லாமல் இல்லை.
இருபது நூற்றாண்டுகால நீள்தூக்கம்
கலையவில்லை போதும்.
யசோதராவை காணும் ஆவல்
புத்தனுக்கு பெருக்கெடுத்து ஓடியது.
தெருவழியே வந்த புத்தன்
முழு நிர்வாண கோலத்திலிருந்தான்.
பரி நிர்வாணத்தை எய்துவதில்
சமணத்தில் கண்டடைந்த
சிக்கலாகக் கூட இது இருந்திருக்கலாம்.
தெருமுழுக்க வேடிக்கைப் பார்த்தது.
பெண்கள் கண்களை மூடிக் கொண்டனர்.
குழந்தைகள் கூவினர்.
திரிபிடகத்தின் பக்கங்கள்
கிழிந்து தொங்கின.
டைனமேட்டை செருகி
வெடித்துச் சிதறடித்த
கோணேஸ்வரியின் யோனிச் சிதிலங்களும்
ஓரத்தில் கிடந்தன.
எவனோ எறிந்த கல்லொன்று
புத்தனின் குறியை பதம்பார்த்தது
வெட்டிய சுண்டுவிரல்களை
மாலையாய் கோர்த்தணிந்த
அங்குலிமாலனும்
புத்தனை விரட்ட ஆரம்பித்தான்.
ஊளையிட்டு நாய்கள் துரத்தியபோது
புத்தன் ஓடத்துவங்கியிருந்தான்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்