உறைந்த கணங்கள்

This entry is part of 44 in the series 20110109_Issue

வருணன்கருப்பு வெள்ளைகளில்
உறைந்து கிடக்கும் மரித்த
கணங்கள் பார்ப்பாரின்றி
உறங்குகின்றன அலமாரிகளிலும்
தூசுகளுண்ணும் பரண்களிலும்.

கணிணிகளின் முகத்தில்
உறைந்த நினைவுகளைச்
சொடுக்கும் காலத்தில் மதிப்பிழந்தன
வண்ணம் துறந்த அந்நினைவுகள்.

பாட பாரங்கள் அழுத்தாத
விடுமுறை காலங்களில்
குழந்தைகள் விடாது நச்சரிக்கின்றன
விளையாட்டு காட்டும் அக்காள்களிடமும்
கதை சொல்லும் பாட்டிகளிடமும்
அப்பழைய கணங்களை காட்டுமாறு

காலாவதியானதாய் தம்மைக் கருதிய
அவை மீண்டும் உயிர்க்கின்றன
அம்மழலைகளின் பார்வைகளுரசும்,
தளிர்கரங்கள் வருடி சிலாகித்திடும்
ஒவ்வொரு முறையும்.

– வருணன்

Series Navigation