…கதைசொல்லும் தீபாவளி

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

’ரிஷி’


உடலின் உபாதை மனதைப் பேதுறச்செய்கிறதோ….
மனதின் வேதனை உடலைப் பிடித்தாட்டுகிறதோ……
இருந்தாற்போலிருந்து
இனமறிந்தும் அறியாமலுமாய் ஒரு இருண்மையில்
குரல்வளைக்குள் திரளும் கண்ணீர்…

இன்று புதிதாய் பிறக்கவே விரும்பினாலும்
காலப்புழுதி மண்டித் தடமழித்துக் கிடக்கும் கடந்தகாலமும்
கடக்கவேண்டிய காலமும்,அவ்வப்போது வாழ்வின் காலடியில்
தொடர்ச்சியை விரித்துநீட்டத் தவறுவதில்லை.

தீப ஒளித் திருநாளின் முன்னும் பின்னும் மூச்சுமுட்டச் செய்யும்
ஒளி-ஒலியில் திணறியழுதுகொண்டிருக்கும் அன்றைய சிறுமி
தன்னை யெதிரொலித்தவாறு அழுதுகொண்டிருக்கும்
இன்றைய குழந்தைகளின் செவிகளிலெல்லாம் மென்பஞ்சை
இதமாய்ச் செருகும் பெருவிருப்பிடம் தஞ்சமடைந்திருக்கிறாள்.

சுனாமியை நகைச்சுவையாக்கும் ’விவரமான குரூரக்கலைஞர்கள்’ ஒருபுறமென்றால்
குழந்தையை அவமானப்படுத்துகிறோம் என்பது புரியாமலே அதன் அழுகையில் ஆனந்தங்காண்பவர்கள் எத்தனையெத்தனை…

வெடிகுண்டுகளின் பிடியில் உழன்று அதையே கனாக்கண்டிருக்கும் குழந்தைகள்
பட்டாசுச் சப்தத்திற்கு என்னவிதமாய் எதிர்வினையாற்றும்?

போன வருட தீபாவளிக்கும் இந்த வருட தீபாவளிக்கும் இடையே
உருண்டோடிய தலைகள் எத்தனை?
இறந்துவிட்ட தலைமுறைகள் எத்தனை?
மெய்யுருவில் இருப்பதைவிட தெய்வ உருவில் வலம் வருவதே
நலம் பயப்பது என்பதை அறியாதவர்களல்லவே அரக்கர்கள்…

வியாபாரத்தந்திரங்கள் தெரியாதுதான் என்றாலும்
ஒரு பட்டாசுக் கடை விரிக்கும் பெருவிருப்பு
எனக்குள் விசுவரூபமெடுக்கிறது.
அதில் வாங்கப்படும் பட்டாசுகளின் திரிகளில் தீயிட, பீறிட்டுக் கிளம்பும்
இன்னிசையில் மனம் வெளுக்க வழிசெய்திருப்பாள் முத்துமாரீ!
மத்தாப்புகளின் வர்ணஒளிர்வில் துலங்கும் ஞானக்கண்கள் !
ஏழைச் சிறுவனின் கையில் தொங்கிக் கொண்டிருக்கும் ’சாட்டை’யின்
கீழ் நுனி தகதகத்து எரிய இன்னும் எரியாதிருக்கும் பகுதி
நீண்டுகொண்டே போகும் !
ஒரு இன்சொல்லுக்கும், புன்சிரிப்புக்கும் இலவசமாய்த்
தரப்படும் தின்பண்டங்கள் !

விறுவிறுவென ஏறும் ஜன்னியாகும் எண்ணங்கள்
இன்னும் பலவாய்….
இன்னும் பலவாய்….

உடலின் உபாதை மனதைப் பேதுறச்செய்கிறதோ….
மனதின் வேதனை உடலைப் பிடித்தாட்டுகிறதோ….
இருந்தாற்போலிருந்து
இனமறிந்தும் அறியாமலுமாய்
ஒரு இருண்மையில்
குரல்வளைக்குள் திரளும் கண்ணீர்…

0
ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

ரிஷி

ரிஷி